பொதுவாகவே தமிழகத்திற்கு வெளியே உள்ள இலக்கியப்போக்குகளை நாம் கூர்ந்து கவனிப்பதில்லை. பெரும்பாலும் அங்குள்ள அரசியலை ஒட்டியே அவர்களின் இலக்கியத்தையும் பார்க்கிறோம். ஏனென்றால் இங்கே செய்திகளாக வந்துசேர்வது அரசியல்தான். ஆனால் இலக்கியத்திற்கு அரசியல் மிகச்சிறிய ஒரு பேசுபொருள்தான். அதன் ஒர் எல்லை மானுடம்தழுவியது. மறு எல்லை மிகமிக நுட்பமான அன்றாட அனுபவம் சார்ந்தது.
ஈழ இலக்கியத்தை இங்கே அறிமுகம் செய்தவர்களில் முதன்மையானவர் கைலாசபதி. இலக்கியவிமர்சகர் ஆயினும் இலக்கியமறியாதவர். அரசியலைக்கொண்டு இலக்கியத்தை மதிப்பிட்டவர். ஆகவே அவர் இங்கே அரசியலையே இலக்கியம் என அறிமுகம் செய்தார். அவருடைய பாதையில் சென்றவர் சிவத்தம்பி.
ஈழத்தின் ‘இலக்கியத்தை’ அறிமுகம் செய்தவர் என்று பத்மநாப அய்யரைச் சொல்லவேண்டும். அவர் ஈழத்தின் மெய்யான இலக்கியத்தை இங்கே அதை உணரமுடிந்தவர்களிடம் எடுத்துவந்தார். அதன்வழியாக ஒரு பெரிய மாறுதலையே உருவாக்கினார். சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் , ஞானி போன்ற இலக்கிய விமர்சகர்களிடையே ஈழ இலக்கியம் குறித்த கவனத்தை அவரே உருவாக்கினார்.
அதன்பின்னர் ஈழ இலக்கியத்தை நாம் ஈழப்போர் வழியாகவே அறியநேர்ந்தது. அந்த அரசியலைக் கடந்து அங்குள்ள இலக்கியத்தை நோக்கியவர்கள் சிலரே. இந்த நூல் அதற்கான முயற்சி என்று சொல்லலாம். ஈழப்போர் வழியாகவே ஈழ இலக்கியம் சார்ந்த இதழ்கள் உருவாயின. அவையே ஈழ இலக்கியம் இங்கே பரவலாக அறிமுகமாக வழிவகுத்தது.
இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப்பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப்படைப்பாளிகளைப்பற்றியத் தனிக்கட்டுரைகளாயினும் அவர்களை ஈழ இலக்கியம் என்னும் ஒட்டுமொத்தப்பரப்பில் வைத்து ஆராயும்போக்கு கொண்டவை. ஈழத்தின் கவிதையை சேரன், ஆகியோர் வழியாகவும் ஈழத்தின் சிறுகதையை அ.முத்துலிங்கம் ஆகியோர் வழியாகவும், ஈழத்தின் இலக்கிய சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி ஆகியோர் வழியாகவும் ஆராய்ந்திருக்கிறேன்
இன்னமும்கூட எழுதவேண்டியிருக்கிறது. தெளிவத்தை ஜோசப் பற்றி எழுதிய கட்டுரைகள் உள்ளன. மு.தளையசிங்கம்,அ.முத்துலிங்கம் ஆகியோருக்குப்பின் ஈழ இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவராகிய ஷோபா சக்தி குறித்து விரிவாக எழுதும் எண்ணம் உள்ளது. பிறிதொரு தொகுப்பாக அது அமையலாம்.
இந்நூலின் முதல்பதிப்பை வெளியிட்ட எனி இண்டியன் பதிப்பகத்தின் நண்பர்களுக்கும் இதை மறுபதிப்பாக ஆக்க உதவிய ஹரன்பிரசன்னாவுக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கும் நன்றி. எப்படியோ ஈழ இலக்கியம் சார்ந்த எந்த ஒரு சிந்தனைக்கும் நான் ‘காலம்’ செல்வத்திற்குக் கடன்பட்டிருக்கிறேன். எப்போது நினைத்தாலும் முகமும் அகமும் மலரச்செய்யும் நண்பர்களில் ஒருவர் அவர்
அன்புடன்
ஜெ
(கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் ஈழ இலக்கியம் ஓரு விமர்சனப்பார்வை [இரண்டாம்பதிப்பு]க்கான முன்னுரை)
***