தேவதை -கடிதம்

Fire angel

தேவதை

 

கோபுரங்களைக் காணும் பொழுதெல்லாம் அது உடைந்து சிதறி ஒன்றுமில்லாமல் ஆகுவதை ஏங்கி நிற்கிறேன்.  நவகாளியின் ரத்தச்சகதியில் கிழவன் தனியனாக வருகையில், அந்தப் பிணங்களின் சுளித்த பார்வையின் முன் கிழவன் எதை உணர்ந்திட்டான். கேலியிலும் வசைகளிலும் கல்லடிகளிலும் மத்தியில் அவன் திரும்பத் திரும்ப தேட முயன்றது அந்தத் தோட்டாக்களினால் தன் நெஞ்சு பிளக்க வேண்டும் என்பதைத் தானா? அவனது ஆன்மபலம் வடிந்து கொண்டிருக்கக் கூடும். அவனது இறுதிக் கண்ணிகள் உடைந்திருக்கும். ஆனால் அவன் அதை நம்பவில்லை. இல்லையேல் அவன் அப்படி நம்புவதை விரும்பவில்லை. எளிய மானுடர்களின் நீசத்தனம் அங்கு பிணக்குவியல்களாய்க் கிடப்பதை எங்கனம் அவன் மீள் செய்யப்போகிறான். விரட்ட விரட்ட அந்த மக்களின் முன் சமாதானம் செய்விக்க அவனது அகம் மறுதலிக்க முயற்சித்திருக்குமா? எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட முனைந்திருக்குமா? இல்லை! இல்லை! ஆனால் நான் அதைத் தான் அங்கு எதிர்பார்த்து காத்திருந்தேன். இறைச்சிக்காக அலந்து நிற்கும் நாயைப் போல. கண்ணைக் கூசும் அந்த உயரத்தை சிதைக்க.

 

காமம் அனிச்சையாக குற்ற உணர்விடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. உடல்கள் உடல்களாக மட்டுமே நிலைக்கும் இடத்தில். அம்மணம் அதற்கான வழிகளைக் கண்டு கொண்டிருக்கும். நிர்வாணமாக இருக்கும் 77 வயது அபாச்சேயின் உடல் பெண்மையை விலக்கி விட முடியுமா? கிறுஸ்துவம் இந்த மூர்க்கத்தினுள் ஒடுங்கும் பொழுதெல்லாம் ஒரு தூய ஆன்மாவை நாடுவதாய் பிதற்றும் அந்த கிழவனின் பாவனையைத் தான் அறிகிறேன். அவன் தன்னை புனிதன் என்று அறியப்பட்டான், உணர்ந்தும் கொண்டதாய் நினைக்கையிலேயே புழுவாக சிலுவையின் முன் நெளிவதைத் தவிர என்ன செய்து விட முடியும். தன் புனிதத் தன்மையை அங்கு அடகு வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அது ஒரு வெற்று அகங்காரம் தானே. கிறுஸ்துவை சோதித்துப்பார்க்க முயலும் போது இந்த உடலின் காமத்தின் நீட்சியில் கணக்கற்ற குறிகள் அவனது சிலுவையின் முன் அவிசாக்கபட்டுக் கொண்டே இருக்கிறது. அவனிடம் அதற்கு பதில் இருந்ததா! அன்பை மட்டுமே மறுவினையாகக் கொண்ட மனித குமாரனிடம் நாம் எதிர்பார்ப்பது, அகங்காரத்தின் மகுடத்தை அல்லவா? அங்கு வெறும் முள்களால் நெற்றிச்சதை பிளக்க வெறித்து நிற்கும் அவனது பாலைவன நிலத்தில் உண்மையில் காமத்திற்கான தீர்வுகள் உண்டா? உடலையே அழித்துக் கொண்டு விடத்தான் அவன் சொல்கிறானா? பிதாவின் முன் அவன் தளர்வடைந்து ஆறுதலுக்காக ஏங்கி நிற்கும் அந்தக் கணத்தை எப்படி விரும்பினேன். பார்! பார்! அவன் மனிதன் தான் என்று. அன்றிலிருந்து உயிர்தெழுதலை நான் வெறுக்கவும் செய்தேன்.

 

அவளறியாமலேயே கிழவனை ஈர்த்தாளா? அதை, அந்தக் கணத்தை அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆம். உயரங்கள் சிதைக்கப்படுதல். அவர் சோதித்தறிய உய்த்தது கிறுஸ்துவை அல்ல. கிறுஸ்துவத்தைத் தானே. பாவங்களின் முன் குற்ற உணர்வுகளை உண்டாக்குவது. ஆனால் அபாச்சா உணர்ந்தது கிறுஸ்துவை. கிறுஸ்துவை சோதிப்பதென்பது கிறுஸ்துவாகவே மாறுதல் தான். கிறுஸ்துவின் அதே சிலுவையையும் தோள்களில் தாங்கிக் கொள்ளுதல் அது. அதன் பின் அவனுக்கு மரணித்தலில்லை அவன் நித்தியன் ஆக்கப்படுவான். ஆனால் மனம் தீமையினிடம் செல்லவே விரும்புகிறது. அவன் எளிய மானுடந்தான். கீழ்மையின் உழல்பவன் தான். பெண்ணை சுகிக்க எண்ணிய வீணன் தான் என்று. ஆம சொந்தக் கீழ்மையினுள் மண்டிக்கிடக்கும் வலு மெல்ல எம்பி அவனைச் சுட்டி எக்களிக்கிறது. கிறுஸ்துவை அறிபவர்கள் காலந்தோறும் சிலுவையில் அறையப்பட வேண்டியவர்களே!

 

ஆனால் சாத்தானின் முன் இன்னொரு சாத்தானுக்கு பதிலாக கிறுஸ்துவைத் தானே நாம் தேடி நிற்கிறோம். மனிதத்தில் நம்பிக்கை இழக்காத அந்த அபயக்குரல் ஒரு பலி நாளாக இல்லாமல், ஒரு தேவதையின் உயிர்த்தெழுதலுக்காக காத்திருக்கும் நாளாக மாறிடும் பொழுது, லட்சிய வாதம் தோற்கடிக்கப்படும் ஒவ்வொரு தருணங்களிலும், சிலுவைகளினால் மென்மேலும் அடையாளங்களை மட்டுமே உருவாக்கிக் கொண்டு வழிபட்டு நகர்கிறோம். அங்கு ஓ! ஜீசஸ் களும், ஹே ராம்களும் மந்திரங்களாக, வெற்றுப்பிரசங்கங்களாக ஓதப்பட்டுக் கொண்டே இருக்கும்.

 

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

 

நந்தகுமார்.

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56
அடுத்த கட்டுரைஅயினிப்புளிக்கறியும் அ.முத்துலிங்கமும்