அயினிப்புளிக்கறி- கடிதங்கள்

ayani

அயினிப்புளிக்கறி கதை

அன்புள்ள ஜெ,,

இயற்கையுடன் தனிமனித பிரக்ஞையும் சேரும் பொழுதே தனக்கேயுரிய ஆன்மீகதன்மையை அல்லது அழகை இயற்கையிடம் கண்டுகொள்கிறான் மனிதன்.அயனிமரம் கணேசனுக்கு நான்கு லட்சம் மதிப்புள்ள வெறும் மரம் மட்டுமே ஆனால் ஆசானுக்கு அது தன்னுடைய எல்லையற்ற காதலின் சாட்சியாக உள்ளது,தனக்காக கனிந்து காத்திருக்கும் ஆச்சியாகவும் தெரிகிறது.

வயதான காலத்தில் நினைவுகளால் மட்டுமே பெரும்பாலான மனிதற்கள் வாழ்கிறார்கள் அந்த நினைவுகளின் சுவடுகள் திடீரென அழிக்கப்படுதல் தன்னுடைய இறப்பிற்க்கு மற்றும் ஒட்டு மொத்த புறக்கணிப்புக்கு சமம் அதனால் அவர் அயனி மரத்தை விட்டு தனியாக செல்கிறார் அவருடைய நினைவுகளில் அது இன்னும் வீழ்த்தப்படவில்லை.

“அவர் நீரில் இறங்கி முகம் கழுவிக்கொண்டார்.எருமை நீரில் தலைமட்டும் தெரிய மூழ்கிக்கிடந்தது.அதன் காதுகள் படகின் துடுப்புகள் போல நீரைத்துழாவின.”

நீரில் தெரியும் எருமையின் தலை போன்றதுதான் பரு வெளியில் தெரியும் நினைவுகளின் சின்னங்கள் அவற்றில் தன் நினைவுகளை கொண்டு துழாவும் போது அவை வேறு ஒரு பொருள் கொள்கின்றன.அயனி மரம் அயனிப்புளிசேரியையும்,ஆச்சியையும் ஞாபகப்படுத்துகிறது.உடனே அயனிப்புளிசேரி சமைக்கிறார் ஆசான்.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி கொண்டுள்ளது.ருசிகளுக்கிடையான சமரசமே சமையல்.புளிசேரி சரியாக அமையவில்லை புளிப்பு கூடிவிடுகிறது உடனே ஆச்சியை புரிந்துகொள்கிறார் ஆசான். மறுநாள் உள்ளத்தின் விழைவு காரணமாக ஆச்சியை சந்திக்க செல்கிறார்.ஆச்சி வேலியைத்தாண்டி ஆசானுடன் வந்துவிடுகிறார்.வேலியைத்தாண்டாமல் ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்ள இயலாது.

ஆச்சியை கனிய வைத்தது என்னவென்று இரண்டு நாட்களுக்கு மேலாக யோசிச்சேன் ஆசான்.நேற்று கன்னி மேரியை பற்றி சிந்திக்கும்போதுதான் புரிந்தது.தாய்மையே ஆச்சியை கனிய வைத்தது,தாய்மையே எல்லையற்ற காதலையும் கருணையும் கொண்டுள்ளது.பெரிய தத்துவங்கள் தேவையில்லை பெண்களுக்கு தாய்மையே போதும் கனிவதற்க்கு.

இப்படிக்கு

தி .ஜினுராஜ்.

***

முந்தைய கட்டுரைபணமதிப்புநீக்கம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇளவெயிலும் பனித்திரையும்