ஏழு : துளியிருள் – 1
நள்ளிரவில் அரண்மனையில் இருந்து சிற்றமைச்சர் சந்திரசூடர் வந்து துயிலில் இருந்த பிரலம்பனை எழுப்பினார். அவன் ஏவலனின் அழைப்பை துயிலுக்குள் கேட்டுக்கொண்டிருந்தான். அன்னை அவனை அழைப்பதாகவே தோன்றியது. வழக்கமாக காவல்பணிக்கு அவன் செல்லவேண்டிய பொழுது அணையும்போது அன்னைதான் அவனை தட்டி எழுப்புவாள். பெரும்பாலும் அது இளங்குளிர் போர்வையை கதகதப்பாக்கியிருக்கும் முன்விடியல். அவன் உடலை சுருட்டிக்கொண்டு முனகுவான். அவள் குரலில் எரிச்சல் ஏறிக்கொண்டே இருக்கும். அவன் சொற்களை புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது வசையென ஆகிவிட்டிருக்கும்.
சினத்துடன் அவன் கால்களைப் பிடித்து இழுத்து “எழுந்திரு மூடா, வெயில் எழுந்துவிடப்போகிறது. பிந்திச் செல்வதாக உன்னைப்பற்றி நூற்றுவர்தலைவர் பலமுறை குறைசொல்லியிருக்கிறார். சவுக்கடி பட்டால்தான் உனக்கு அறிவு வருமா?” என்பாள். அவன் அச்சொல்லிலேயே சவுக்கோசையைக் கேட்டு எழுந்து அமர்வான். அதன்பின் வெந்நீர் கொட்டப்பட்டவன் போல துள்ளுவான். “எங்கே என் வாள்? என் கச்சை எங்கே? எதையுமே நான் வைத்த இடத்திலிருந்து அகற்றக்கூடாதென்று சொல்லியிருக்கிறேனே!” அன்னை “எல்லாம் அங்கேதான் இருக்கிறது” என்பாள்.
அவன் விழித்துக்கொண்டு ஏவலனைக் கண்டதும் ஆழ்ந்த ஏக்கத்தை அடைந்தான். அன்னையின் முகமே சற்று கலைந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றியது. “அமைச்சர் சந்திரசூடர்” என்று ஏவலன் சொன்னதும் பாய்ந்தெழுந்து கச்சையை கட்டிக்கொண்டான். வாயைத் துடைத்து தலைப்பாகையைத் தேடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கையிலேயே சந்திரசூடர் உள்ளே வந்துவிட்டார். “வணங்குகிறேன், அமைச்சரே” என்றான். அவர் கையசைத்து வாழ்த்திவிட்டு “இளவரசர் என்ன செய்கிறார்?” என்றார். “துயில்கிறார்” என்றான். “எழுப்பவா?”
“வேண்டாம், ஆனால் எழுந்ததும் நான் சொன்னவற்றை நீரே சொல்லும்” என்றார் சந்திரசூடர். “புலரியில் அரசர் நகர்புகவிருக்கிறார்.” பிரலம்பன் சில கணங்களுக்குப்பின் அதை புரிந்துகொண்டு “இன்றா?” என்றான். உடனே குழம்பி “நாளையா?” என்றான். “ஆம், இருட்புலரியிலேயே அவர் நுழைவார்.” பிரலம்பன் “நகர் விழாக்கோலம் கொள்ளவேண்டுமே? அனைத்து ஏற்பாடுகளும்…” என தொடங்க அவர் கையசைத்துத் தடுத்து “ஆணை சற்று முன்னர்தான் வந்தது. எந்த ஏற்பாடுகளும் செய்யக்கூடாதென்றும், அரசமுறையாக அவர் வரவு அறிவிக்கப்படவும் கூடாதென்றும் சொல்லியிருக்கிறார்” என்றார்.
பிரலம்பன் தலையசைத்தான். “நாளை அவர் நகர்நுழையும்போது நகர்வீதிகள் ஒழிந்து கிடக்கும். இங்கே இரவுகள் மிகவும் பிந்தி அணைபவை. ஆகவே பகல்கள் மிகவும் பிந்தி தொடங்குகின்றன. அதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை. யவனர்களின் சூரியவணக்கநாள் அது. அன்று அவர்கள் பணிபுரிவதில்லை என்பதனால் துறைமேடையிலும் பிற இடங்களிலும் அலுவல்கள் பத்திலொன்றாக குறைந்திருக்கும்.” பிரலம்பன் “ஆம்” என்றான். “அவர் அறியவிரும்புகிறார், மக்களின் மெய்யான எதிர்வினை என்ன என்று” என்றார் சந்திரசூடர்.
பிரலம்பன் “ஒருவேளை…” என்றான். “என்ன?” என்றார் சந்திரசூடர். “ஒருவேளை யாதவர்கள் தங்கள் எதிர்ப்பை ஒருங்கிணைந்து காட்டக்கூடும் என அவர் எதிர்பார்க்கிறாரா?” சந்திரசூடர் “அவர் அதை அஞ்சுவாரா என்ன?” என்றார். “அஞ்சமாட்டார். ஆனால் எதிர்ப்புகள் எப்போதுமே எளிமையாக சிலரால் தொடங்கப்படுகின்றன. எளிய மக்கள் விரைவுடன் செய்யப்படுவனவற்றை பின்தொடர்கிறார்கள்.” சந்திரசூடர் அவனை சற்றுநேரம் நோக்கியபின் “ஆம், அவர் எதிர்ப்புகளையே அஞ்சுகிறார். ஆனால் மக்களிடமிருந்தல்ல” என்றார்.
“எதுவானாலும் நாளை இளவரசர் அவருடனிருக்கவேண்டும். அவர் இளவரசரைக் கண்டால் மட்டுமே நிறைவடைகிறார். பிற அனைவருமே அவருக்கு எவ்வகையிலோ மெல்லிய ஒவ்வாமையை அளிப்பவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள்” என்றபின் “இளவரசர் ஒருவரிடமே அவர் ஏதேனும் தனிச்சொல்லை கூறமுடியும். பிறரிடம் அவரை மட்டுமே தூதனுப்பவும் முடியும்” என்றார். பிரலம்பன் “அமைச்சரே, அத்தனை தனித்துவிட்டாரா இளைய யாதவர்?” என்றான்.
“ஆம், வரும் வழியிலேயே மைந்தருக்கும் அவருக்கும் பூசல் எழுந்துவிட்டது என்கின்றனர் ஒற்றர். பிரத்யும்னர் உடனடியாக அநிருத்தரை பட்டத்து இளவரசராக முடிசூட்டவேண்டும் என்று சொன்னாராம். இளவரசர்களில் மூத்தவர் பானு. ஆனால் இளவரசர் மைந்தர்களில் அநிருத்தரே மூத்தவர். அவருக்கு பட்டம்சூட்டினால் எவரும் எதுவும் கேட்கமுடியாது என்றாராம். அதற்கு இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. சினம்கொண்டு சொல்லாடியபின் பிரத்யும்னர் தனியாக கிளம்பிச் சென்றுவிட்டார். இப்போது அவர் கூர்ஜர எல்லையில் இருக்கிறார். நாளையோ மறுநாளோ அவர் இங்கு வருவார் என்கிறார்கள். வராமலும் போகக்கூடும்” என்றார் சந்திரசூடர்.
“அவர் நேராக மதுராவுக்குச் செல்லக்கூடும் என எதிர்பார்க்கிறார்கள் அமைச்சர்கள். மதுராவில் மூத்த யாதவர் யாதவப்பெருங்கூட்டுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதற்கு கிருதவர்மர் வருவது உறுதியாகிவிட்டது. வாசுதேவரின் வாழ்த்தும் சூரசேனரின் ஒப்புதலும் அமைந்துவிட்டது.” பிரலம்பன் “சூரசேனரா?” என்றான். “குந்திபோஜரையே அழைத்திருக்கிறார்கள். யாதவர் எவரையும் விலகவிடக்கூடாது என்பது பலராமரின் ஆணை.”
பிரலம்பன் “அவரால் இத்தனை செய்ய இயலுமென எவரும் எண்ணியிருக்கமாட்டார்கள்” என்றான். சந்திரசூடர் புன்னகைத்து “அவர் தன் ஆணைகளை அகத்தறையில் இருந்து பெறுகிறார். அரசி ரேவதி புவியாள விழைகிறார். எட்டரசியருக்கும் மேலாக அவருடைய குலக்கொடி பறக்கவேண்டும் என்று அவர் அவையில் சொன்னதாகச் செய்தி” என்றார். “இளவரசரை எதற்காக அரசர் இங்கே வரும்படி சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் அமைச்சர் ஸ்ரீதமர் அது உபயாதவர்களை ஒருங்கிணைப்பதற்காகத்தான் என நம்புகிறார். உபயாதவர்களில் எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் இன்று இளவரசர்மேல் பெருங்காதல் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அவர் திரட்டமுடியும்…” பிரலம்பன் தலையசைத்தான். “நீர் அதை நம்பவில்லையா?” என்றார் சந்திரசூடர். “நான் நம்பாவிட்டால்தான் என்ன? எளிய வீரன், அரசியலறியாதவன்” என்றான் பிரலம்பன்.
அபிமன்யூ புரவியில் சலிப்புடன் சற்றே சரிந்து அமர்ந்து “அவர் எங்கு வந்திருக்கிறார் என ஒற்றர்கள் எவருக்கேனும் தெரியுமா?” என்றான். “விடியலில் வருவார் என்றார்கள். தோரணவாயிலின்மேல் உள்ள காவல்மாடத்தில் இருப்பவர்கள் நெடுந்தொலைவு நோக்க முடியும். பாலையில் அவருடைய படை அணுகுவதை அறிவது மிகமிக எளிது” என்றான் பிரலம்பன். “அவருடைய படை நேற்று மாலை எங்கிருந்தது?” என்றான் அபிமன்யூ. “மாளவத்திலிருந்து வரும் மையத்தடத்தில்தான்… அந்த விரைவின்படி அவர்கள் இன்று வெயிலெழுகையில் இங்கே வந்துவிடவேண்டும்… வந்துகொண்டிருப்பதாகவே செய்திகள்.”
அவர்கள் கோட்டைக்குள் நின்றிருந்தனர். விடியற்காலையின் வான்ஒளியில் காட்சிகள் சாம்பல்நீல நிறத்தில் அழுத்தவேறுபாடுகளாகத் தெரிந்தன. முப்புடையை இழந்து எண்ணைக்கறைகள் ஒன்றன்மேல் ஒன்றெனப் பதிந்ததுபோல கோட்டையும் காவல்மாடங்களும் குவைமாடமுகடுகளும் மரங்களும் யானைகளும் புரவிகளும் காவல்வீரர்களும் விழிப்புலப்பாடு கொண்டனர். ஓசைகள் உளமகல்கையில் அகன்றும் உளம்கூர்கையில் அணுகியும் விளையாடின. “நாம் வெளியே சென்று நோக்குவோம்” என்றான் அபிமன்யூ.
அவர்கள் புரவியை மெல்ல நடக்கவிட்டனர். சூழ்ந்து நிகழ்ந்துகொண்டிருந்த உடலசைவுகளை நோக்கியபோதே அங்கு எதுவுமே தெரியும்படி செய்யப்படவில்லை என்றாலும் அனைவரும் அரசரின் வருகையை அறிந்திருந்தனர் என்றும் சாலையோரங்களும் கோட்டை முகப்புகளும் அதன்பொருட்டு ஒருக்கப்படுகின்றன என்றும் தெரிந்தது. “படைக்கலத் துரு அகன்றிருக்கும். பதின்மூன்றாண்டுகால தூசு துடைக்கப்பட்டிருக்கும். மறந்துபோன சொற்கள் மீள்நினைவு கொள்ளப்பட்டிருக்கும்” என்றான் அபிமன்யூ, அவன் எண்ணியதை அறிந்ததுபோல. “ஆம்” என்றான் பிரலம்பன். “ஆனால் பெரிய இடர் இங்கே எவரை நிற்கச்செய்வதென்பது. இளையோர் அவரை குலமூத்தார் சொற்களினூடாகவே அறிந்திருப்பர். அறிந்த மூத்தவர்கள் முதிர்ந்து நரைகொண்டிருப்பார்கள்” என்றான் அபிமன்யூ.
பிரலம்பன் “அவர் மைந்தர்களே அவரை பெரிதும் அறியாதவர்கள்தான் என உணர்ந்தேன்” என்றான். “ஆம், அவர் இங்கிருந்து அஸ்தினபுரிக்குக் கிளம்பும்போது மூத்தவர் பானுவுக்கு அகவை பதின்மூன்று. எண்பதின்மரில் இளையவரான சத்யகருக்கு ஐந்துமாதம். லக்ஷ்மணை அன்னையும் காளிந்தியன்னையும் கருவுற்றிருந்தார்கள்” என்றான் அபிமன்யூ. “அவர் இங்கிருக்கையில் தன் மைந்தருக்கு அணுக்கமானவராக இருந்தார். மைந்தருடன் மைந்தராகவே விளையாடினார். அவர்களுக்கு தன் குழலை மட்டுமே காட்டினார், ஆழியை அவர்கள் அறிந்திருக்கவேயில்லை.”
“அவர் செய்த பிழையும் அதுவே” என்றான் பிரலம்பன். “அவர் பிழை செய்வார் என்று எண்ணவே அச்சமாக உள்ளது. ஆனால் மகளிர்மாளிகையில் இருந்த மைந்தரை அவர் மகளிரின் ஒருபகுதியாகவே எண்ணினாரோ என ஐயம்கொள்கிறேன். ஏனென்றால் எண்பதின்மரில் எவருமே அவரை அறிந்திருக்கவில்லை. என்னிடம் மூத்தவராகிய சுபானு தன் தந்தை நல்லூழ் கொண்டவர் என்றார். அவர் என்ன எண்ணுகிறார் என என்னால் உய்த்துணர இயலவில்லை. நான் தங்கள் சொல் புரியவில்லை இளவரசே என்றேன்.”
“அவர் தன் தந்தையின் கூர்ஜரத்து வெற்றி வெறும்நல்லூழ் என்று விளக்கினார். அணுகுதற்கரிய பெருநிலம் கூர்ஜரம். அதனாலேயே அதை எவரும் படைகொண்டு தாக்கியதில்லை. ஆகவே அவர்கள் காவலை கருத்தில் கொள்ளவுமில்லை. அதன் எல்லைகள் தலைநகரிலிருந்து மிகத் தொலைவிலிருந்தன. ஆகவே எளிதில் இளைய யாதவரால் அதன் கருவூலத்தை கொள்ளையிட முடிந்தது. அதில் அவர் எண்ணியிராத பெருஞ்செல்வம் கிடைத்தது. அன்று அங்கே மேலும் ஒருமடங்கு கூர்ஜரர் இருந்திருந்தால் அப்போதே யாதவப் பேரரசு என்னும் கனவு கலைந்திருக்கும் என்றார்.”
“அது அரசியல்விளையாட்டின் ஒத்திசைவன்றி வேறல்ல என்று உடனிருந்த இளவரசர் ஸ்வரபானு சொன்னார்” என பிரலம்பன் தொடர்ந்தான். “அவர் சொன்னது இதுதான். அன்று கூர்ஜரத்தின் அலைநிகுதியும் கலநிகுதியும் மிகையாக இருந்தன. நாள்தோறும் சிந்துவிலும் தேவபாலபுரத்திலும் வணிகம் பெருகிக்கொண்டிருந்தது. நிகுதியின் கொள்தொகை பெருகுகையில் வகுதி அளவு குறையவேண்டும். மிகச் சிறிய அளவில் தேவபாலத்திலும் கங்கையிலும் நீர்வழி வணிகம் நிகழ்ந்தபோது நூற்றிலெட்டு வகுதி அமைக்கப்பட்டது. அன்று ஒவ்வொருவருக்கும் அது சிறிய தொகை. ஆனால் பெருங்கலங்கள் கரையணைந்து ஒவ்வொருவரும் பேரளவில் வணிகம் செய்கையில் அது பெருந்தொகை. அப்பெருந்தொகையை ஒவ்வொருமுறையும் அளிப்பது அவர்களுக்கு வழிப்பறி என்றே தோன்றிக்கொண்டிருந்தது.”
“சோனகநாட்டிலும் பீதர்நாட்டிலும் இருந்த நிகுதியளவுக்கு அது மும்மடங்கு பெரிது. படகில் பொருட்களை கொண்டுவருபவர்களிடம் அலைநிகுதி கொண்டு அதை வாங்குபவர்களிடமும் கலநிகுதி கொண்டனர். விற்கையிலும் அவ்வாறே. ஒரு பொருளுக்கு இரு நிகுதி என்பது கண்ணெதிரே நிகழ்ந்தது. அக்குமுறலை சென்று உரைக்கவேண்டிய அரசனின் அவையோ மிகத்தொலைவில், அணுகவே இயலாத பாலைநிலங்களுக்கு அப்பால் கூர்ஜரத்தின் தென்னகத் தலைநகரான கோபபுரியில் அமைந்திருந்தது. இங்கிருந்த நிகுதிகொள்வோன் அரசகுடியைச் சேர்ந்தவன் ஆயினும் நிகுதியைக் குறைக்கும் பொறுப்பு அற்றவன், அதற்கான துணிவும் இல்லாதவன். ஆகவே யவனரும் பீதரும் சோனகரும் காப்பிரியரும் தேவபாலத்துக்கு நிகரான ஒரு துறைநகர் கடல்முகத்தில் அமைய விரும்பினர். அவர்களின் செல்வமும் படைவல்லமையும்தான் துவாரகையை உருவாக்கியது.”
“உலகெங்கும் சிறுநகர்கள் வணிகர்களால் உருவாக்கப்பட்டு வெற்றியும் செல்வமும் பொலிய சிலகாலம் நின்றிருந்ததுண்டு. அதைச் சூழ்ந்திருக்கும் பெரியநாடுகள் தங்களுக்குள் பூசலிட்டுக்கொண்டு அதை ஒருங்கிணைந்து தாக்காதிருக்கையில் ஒன்றுடன் கைகோத்து பிறிதொன்றை எதிர்கொள்ளும் அரசாடலைக் கொண்டு அந்நகர்நாடு நீடிக்கவும்கூடும். ஆனால் அது நிலைவெற்றி அல்ல. செல்வத்தையும் படையையும் வளர்த்துக்கொண்டு முறையான அரசியல்கூட்டுக்கள் வழியாக வெல்லற்கரிய நிலமாக தன்னை அது விரித்துக்கொண்டாலொழிய அதனால் நீடிக்க முடியாது என்றார் ஸ்வரபானு.”
“அது உண்மை” என்றான் அபிமன்யூ. “உண்மையின் ஒரு தோற்றம். அதை இங்கே சென்ற பதினான்காண்டுகளாக செதுக்கிச் செதுக்கி முழுமையடையச் செய்திருக்கிறார்கள். ஆகவேதான் அது அவர்களை அத்தனை சூழ்ந்து ஆட்கொண்டிருக்கிறது.” பிரலம்பன் அவனுடன் புரவியில் சென்றுகொண்டே “அதை ஒட்டி அவர்கள் மேலே செல்கிறார்கள். இன்று துவாரகை அடுத்த கட்டத்திற்கு செல்லவிருக்கிறது என்றார் பானுமான். இதுவரை இளைய யாதவரை எவரும் வெல்லமுடியாது என்னும் நம்பிக்கையையும் அச்சத்தையும் சூதர்பாடல்களினூடாக பரப்பி குடிகளை ஒருங்கிணைத்து எதிரிகளை அச்சுறுத்தி துவாரகையை நிலைகொள்ளச் செய்தார்கள். அது நல்ல சூழ்ச்சியே. ஆனால் விரைவிலேயே போர் எழும். பாரதவர்ஷத்தின் அரசர்களில் எவர் முதல்வர் என முடிவாகும். அதன்பின்னர் பூசல்சூழலைப் பயன்படுத்தி முளைவிட்டு நிலைகொண்டிருந்த அத்தனை அரசுகளும் படைகொண்டு வெல்லப்படும். அப்போது துவாரகை தன் நாவன்மையால் நிலைகொள்ள முடியாது. வணிகன் வழித்துணை அல்ல என்பது முதுசொல். அவர்கள் தங்கள் வணிகநலன்களை விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்றார்” என்றான்.
“ஆகவே வெல்லும் தரப்பில் சேர்ந்துகொள்வது மட்டுமே எளிய அரசுகளின் வழி என்றார் பானு. அதைத்தான் மூத்த யாதவர் செய்கிறார், இளையவர் தன்னைப்பற்றிய சூதர்பாடல்களை தானே நம்பி வழிபிறழ்ந்துவிட்டார் என்றார்” என்று பிரலம்பன் தொடர்ந்தான். “அத்தனை ஷத்ரியர்களும் ஓரணியில் திரள்கிறார்கள். அவர்கள் பெண்கொடையாலும் எல்லைப்பூசலாலும் நெடுங்காலம் பகைகொண்டிருந்தவர்கள். வேதம் காக்க எழுகிறோம் என்பது அவர்கள் பகைமறந்து ஒருங்கிணைய ஒரு நல்வாய்ப்பு. அதை உருவாக்கியவர் எவராயினும் பேராற்றல் கொண்ட சூழ்ச்சியாளர். அவர்கள் பாரதப்பெருநிலத்தை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வார்கள். சென்ற நூறாண்டுகளில் உருவாகி கருவூலம்நிறைத்து விரிந்திருக்கும் புதுநிலங்கள் மேய்ந்து கொழுத்த மான்கள். வேங்கைகள் புல்லுண்பது குருதியின் வடிவில்தான் என்றார்.”
“ஒரு நல்ல தலைவனுக்குரிய சொற்களும் எண்ணங்களும்” என்றான் அபிமன்யூ. “ஆனால் வெல்லும் அரசர்கள் இவ்வெல்லையையும் கடந்து எண்ணக் கற்றவர்கள். இவர் எளிய யாதவ குலத்தலைவர் மட்டுமே.” பிரலம்பன் “ஆம், நானே அதை எண்ணினேன். அலைமேல் மலைநகர்வதுபோலச் செல்லும் பெருங்கலங்களை அவற்றின் பாய்களே கொண்டுசெல்கின்றன என்று எவருக்கும் விழியே சொல்லிவிடும். ஆனால் ஒவ்வொரு பாயையும் ஒன்றுடன் ஒன்று இசைவடையச் செய்து அதன் திசைவழியை நிகழ்த்தும் சூத்திரக்கயிறுதான் கலத்தைச் செலுத்துகிறதென்று அறிந்தவனே மாலுமி. இளைய யாதவர் இல்லையேல் இவை எதுவும் நிகழ்ந்திருக்காது என அறியாதவரால் போரின் வெற்றியையும் தோல்வியையும் எப்படி கணிக்கமுடியும்?” என்றான்.
அபிமன்யூ எதையோ எண்ணி விழிகள் விரிய நிலைத்தபின் “அவர் இவ்வழியே வரப்போவதில்லை” என்றான். “ஏன்?” என்றான் பிரலம்பன். “எட்டு மைந்தர்நிரைகளும் அவர் வருவதை அறிந்திருப்பார்கள். ஆகவே இவ்வழியில் வெவ்வேறு இடங்களில் அவர்கள் நின்றிருப்பார்கள். தோரணவாயிலை ஒட்டி அவர்கள் நிற்பார்கள் என இப்போதே நோக்கமுடிகிறது. அவர் அவர்களை தவிர்ப்பார்.” பிரலம்பன் “ஆம், நானும் அவர் இங்கே வரமாட்டார் என உள்ளுணர்ந்துகொண்டிருந்தேன்” என்றான். “அவர் துறைமுகம் வழியாகவே வருவார். சிந்துவின் பெருக்கினூடாக.”
“ஆனால் அது கூர்ஜரத்தின் நிலம்” என்றான் பிரலம்பன். “அவரால் எல்லைகள் அனைத்தையும் கடக்கமுடியும். எதிரிப்படைகளிலேயே அவருக்கு ஆதரவாளர் மிகுதி” என்ற அபிமன்யூ புரவியைத் திருப்பி “துறைமுகப்புக்குச் செல்வோம்” என்றான். அவர்கள் மெல்லிய குளம்போசை எழ சீர்நடையில் புரவிகளை செலுத்தினர். அங்காடிகளைக் கடந்து சரிவுச்சுழல்பாதை துறைமேடைகளை நோக்கி செல்லத் தொடங்கியது. கடலில் நின்றிருந்த பெருங்கலங்களின் சாளரங்கள் ஒளிகொண்டிருக்க திரையிலாடிய பெருநகர் ஒன்றென தோன்றியது துறை. “அவர் துறைமேடையை அணுகிவிட்டார்” என்று அபிமன்யூ சொன்னான். “எப்படி தெரியும்?” என்று பிரலம்பன் கேட்டான். “தெரியும்” என்று அபிமன்யூ சொல்லி உடனே சிரித்து “ஏனென்றால் அவர் நானே” என்றான்.
இளைய யாதவரின் பீலிதான் பிரலம்பனுக்கு முதலில் விழிப்புலனாகியது. அவன் உள்ளத்தால் கைகூப்பினான். மெல்லென்று வழிப்பலகையில் ஒற்றி ஒற்றி அணுகிய கால்களை பின்னர் குனிந்து பார்த்தான். நீலத்தில் இருபது வெண்முல்லை விழிகள். அவன் உள்ளம் அதிர்ந்தது. ஒரு விழி மூடியிருந்தது. மீண்டும் அவன் அதையே நோக்கினான். அதை முன்னர் நோக்கியிருந்தான் என்றாலும் அப்போதே அதை உளமுணர்ந்தது. முழுமையை அஞ்சிய சிற்பி அமைத்த குறையா? அதுவும் முழுமையடைந்திருந்தால் அவர் இங்கு இவ்வண்ணம் இருந்திருக்க மாட்டாரா?
அபிமன்யூ அவரை அணுகி கால்தொட்டு வணங்கி முகமன் உரைக்க அவர் அவனை வாழ்த்தினார். பிரலம்பன் தயங்கி பின்னால் நின்றான். மாலுமிகளும் துறைக்காவலரும் சுமையரும் துலாநிலையரும் அவர் வருவதை எதிர்பார்க்கவில்லை. அவர் அவ்வண்ணம் அறிவிக்காமல் வந்திறங்கினால் வாழ்த்துக் கூவலாகாதென்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர் கைகளைக் கூப்பியபடி நடந்துவந்தார். கைகூப்பி அவரை அணுகி கால்தொடக் குனிந்த காவலர்தலைவனின் தலையில் கைவைத்து ஓரிரு சொற்களை உரைத்தார். அவரை வணங்கிய அனைவரிடமும் பெயர் சொல்லி இன்சொல்லாடி நடந்து வர அவருடன் அபிமன்யூ இயல்பாக இணைந்து வந்தான்.
அவரைச் சூழ்ந்துகொண்ட வீரர்களால் பிரலம்பன் பின்னுக்குத் தள்ளப்பட்டான். அவன் விலக விலக மேலும் மேலும் அப்பால் சென்றான். அவர்கள் அவரைச் சூழ்ந்து அலைவிளிம்புபோல கொப்பளித்தனர். பெரும்பாலானவர்கள் விழிநீர் வழிய விம்மிக்கொண்டும் மெல்ல விசும்பிக்கொண்டுமிருந்தனர். அவன் அருகே நின்றிருந்த முதிய காவலர் “விண்ணவனே, விண்ணளந்தவனே” என அரற்றிக்கொண்டிருந்தார். அரைவெளிச்சத்தில் ஈரம்வழிந்த கன்னங்களும் கண்களும் மின்னின. காவலர்தலைவன் “அரசருக்கு வழிவிடுக! அவர் அரண்மனைக்குச் செல்கிறார்” என்றான். அவர்கள் மெல்ல அகன்று விலக அவர் தேரை நோக்கி சென்றார்.
தேரில் அவர் ஏறிக்கொள்ள அபிமன்யூ உடன் ஏறினான். அவர் திரும்பி உதடுகளில் பிரலம்பன் என்னும் பெயர் அசைய விழியோட்டி அவனை நோக்கினார். அத்தனை இருளில் அத்தனை நெரிசலில் மிகச் சரியாக எப்படி அவர் தன்னை நோக்கினார் என அவன் திகைத்தான். புன்னகைத்து வருக என கைகாட்டினார். வழி உருவாக அவன் தேர் நோக்கி சென்றான். “ஏறிக்கொள்!” என்றார். “அரசே, இது…” என்று அவன் தயங்க “ஆம், அரசத்தேரேதான். ஏறுக!” என்றார். அவன் அதில் ஏறிக்கொண்டதும் பாகனிடம் “செல்க, மந்தரா!” என்றார். “ஆம் அரசே, இந்நாளே என் முழுமை” என்று அவன் சொன்னான்.
அவர் தேரின் பீடத்தில் அமர பிரலம்பனும் அபிமன்யூவும் இரு பக்கங்களிலும் நின்றனர். தேர் மெல்ல சுழல்பாதையில் மேலேறத் தொடங்கியது. அவர் திரும்பி பிரலம்பனிடம் “பிரம்மம் தன்னில் ஒரு குறையை உருவாக்கிக் கொண்டது. அதுவே ஜீவாத்மாக்களாக ஆகியது” என்றார். அவன் திடுக்கிட்டு “அரசே” என்றான். ஓசை வெளிவரவில்லை. அவர் சிரித்தபடி “இவன் என் கால் விரலின் வடுவையே நோக்கிக்கொண்டிருந்தான்” என்றார். “இவனுக்கு உகந்த ஒரு மறுமொழியை சொன்னேன். நாளை சூதர்களிடம் இவன் இதைச் சொல்லி நல்ல கதைகளை உருவாக்குவான் அல்லவா?” அபிமன்யூ புன்னகைத்தான். “மருகனே, அரசர்கள் சூதர்களுக்கு கதைகளையும் பெண்டிருக்கு மைந்தர்களையும் மண்ணுக்குக் குருதியையும் அந்தணர்களுக்குப் பொன்னையும் அளித்தபடியே இருக்கவேண்டும் என்பது நம் நிலத்தின் தொல்மரபு” என்றார்.
அபிமன்யூ பிரலம்பனை வெறுமனே நோக்கிவிட்டு “தங்களை நகர் காத்திருக்கிறது, மாதுலரே” என்றான். “என்ன நிகழ்கிறது அகத்தளத்தில்?” என்றார் இளைய யாதவர். “எட்டுதிசைகளும் ஒன்றிலிருந்து ஒன்று அகன்று செல்கின்றன” என்றான் அபிமன்யூ. “நன்று, திசைகள் விரியத்தானே வேண்டும்” என்றார். உதடுகளிலும் விழிகளிலும் அப்போதும் புன்னகை இருந்தது. “யாதவ மைந்தர்கள் மூத்தவரின் வழியே உகந்தது என எண்ணுகிறார்கள். ஷத்ரிய மைந்தர்கள் உங்கள் ஆணைக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் அநிருத்தரை நீங்கள் பட்டத்து இளவரசராக அறிவித்துவிட்டீர்கள் என நம்புகிறார்கள்.”
இளைய யாதவர் ஒன்றும் பேசாமல் இரு பக்கமும் சென்றுகொண்டிருந்த கட்டடநிரைகளை நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் விழிதூக்கி பிரலம்பனைப் பார்த்து “இந்தக் கால்விரல் வடுவே விரிந்து பதின்மூன்றாண்டுகள் என்னை மூடியிருந்தது, இளையவனே” என்றார். அதையே எண்ணிக்கொண்டிருந்த பிரலம்பன் திடுக்கிட்டு “அரசே” என்றான். பின்னர் “இங்கு நிகழ்பவை எனக்கு அச்சமூட்டுகின்றன, அரசே” என்றான். “காமகுரோதமோகம் பிரம்மத்தின் ஒரு அலைவடிவு” என்றார் இளைய யாதவர். “அவை இணைந்துகொள்ளும் கூர்முனையை ஆணவம் என்கிறார்கள்.”
“ஆனால் இங்கே இவை இப்படி நிகழுமென எவர் எதிர்பார்த்திருக்கக் கூடும்?” என்றான் பிரலம்பன். “உங்கள் காலடியில் படைக்கப்பட்ட மலர்க்களம் இந்நகர் என என் அன்னை சொல்லியிருக்கிறார்.” இளைய யாதவர் சிரித்து “உன் அன்னை பெயர் என்ன, நிவேதையா?” என்றார். “ஆம்” என்றான் பிரலம்பன். “தாங்கள் அவரை அறிவீர்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் அறிந்திருக்கிறீர்கள் என்பது வியப்பூட்டுகிறது.” இளைய யாதவர் “நான் அனைவரையும் அறிவேன். நான் அறிவேன் என்பதை பெண்கள் அறிவார்கள்” என்றார். “நிவேதை… நல்ல பெயர். கொடையென படைக்கப்பட்டவள். அவள் உண்மையின் ஒருநிலையை மட்டுமே நோக்கும் விழிகள் கொண்டவள். இளையோனே, நீயும் இவனும் அனைத்தையும் நோக்க ஊழ்கொண்டவர்கள்.”
அவர்கள் துவாரகையின் சுருள்பாதையில் குன்றேறிச் சென்றனர். அதன் குவைமாடங்கள் வானின் ஒளியில் மென்பட்டுபோல வளைவொளி கொண்டிருந்தன. வானில் விண்மீன்கள் நடுங்கிக்கொண்டிருக்க கடற்காற்றில் கொடிகள் துடித்தன. அரண்மனைத் தொகை வான்பெருங்கலம் மண்ணிறங்குவதுபோல அணுகி வந்தது. இளைய யாதவர் ஏதேனும் மெய்ப்பாடு கொள்கிறாரா என பிரலம்பன் ஓரவிழிகளால் நோக்கிக்கொண்டிருந்தான். அவர் முகம் கருவறைத்தெய்வத்தின் கரிய உறைவாகத் தெரிந்தது.
எல்லையிலா திசைவெளியை நோக்கி ஒளிகொண்ட விழிகள். இளமைந்தருக்கும் கன்னியருக்கும் மட்டுமே அத்தனை பெரிய இமைப்பீலிகளை அவன் கண்டிருந்தான். கூர்மூக்கும் குமிழுதடும் கொழுகன்னங்களும் ஒருகணத்தில் அவரை இளமைந்தன் என்றே ஆக்கின. கணந்தோறும் அறைந்துசெல்லும் காலப்பெருங்கடலை அறியாத கரைப்பாறை. எவர் வரி? கிருஷ்ணமகாத்மியம். அல்லது யாதவகதாமாலிகா. மீண்டும் அவர் விழிகளை பார்த்தான். நெடுந்தொலைவைப் பார்ப்பவர் மானுடரில் இறப்பையன்றி எதை பார்க்கமுடியும்? பெருவிரிவைப் பார்ப்பவரால் அழகென்றும் இனிமையென்றும் எதையேனும் உணரமுடியுமா? இங்கென்றும் இனியென்றும் ஏதேனும் எஞ்சியிருக்குமா அவருக்கு?
அறியாத சிலிர்ப்பொன்றை பிரலம்பன் அடைந்தான். நடுங்கும் கைகளால் அவன் தேரின் தூணை பற்றிக்கொண்டான். அவர் உதடுகளில் தன் பெயர் அசைந்ததை அண்மையிலெனக் கண்டான். இடியோசை தன் பெயர் சொல்வதைப்போல, மின்னல் அதை எழுதிச்செல்வதைப்போல. விழிகளை மூடிக்கொண்டு அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். மிக ஆழத்தில் மிகமிக தாழ்வாக ஏதோ சொற்கள். மீண்டு வந்தபோது அவன் துவாரகையின் அரண்மனைக் கோட்டைக்குள் தேர் நுழைவதை உணர்ந்தான். வியர்வை பரவிய உடல் காற்றுபட்டு குளிர்ந்தது. மெய்ப்பு கொண்டு கழுத்தும் கன்னங்களும் அதிர்ந்தன. ஒவ்வொரு மணல்பருவும் அறியும் கடல். எந்த நூலின் சொல்லாட்சி? கிருஷ்ணவைபவமா? சாரங்கதரர் எழுதியதா?
அவன் திரும்பி இளைய யாதவரை நோக்கினான். அவர் சிரித்துக்கொண்டே அபிமன்யூவிடம் பேசிக்கொண்டிருந்தார். “ஆம், பெண்குழவிதான். நான் இங்கிருக்கும்வரை ஆண்குழவிகளே பிறக்கும் என்றனர் நிமித்திகர். அகன்றபின் எண்மரின் ஆழுளத்தவமும் குவிந்து பெண்ணாகும் என்றனர்.” அவனுள் ஒவ்வொரு மணற்பருவும் என்னும் சொல் மீண்டும் எழுந்தது. கடல் அறியும் ஒவ்வொரு மணற்பருவையும்.