போகனின் இருகதைகள் -நந்தகுமார்

bogan

எழுத்தாளர் போகனின் இரு கதைகள் பற்றி,

  1. நாகப்படம்

http://ezhuththuppizhai.blogspot.ae/2016/08/blog-post.html

வான்கா தன் காதுகளை அறுத்துக் கொண்டதும், காதலிக்காக தீச்சுடரின் முன் தன் கைகளை எரித்துக் கொள்வதும் அதனால் தானா. ஓவியன் உடல்கள் எனும் பிலத்திற்குள் வருடிக் கொண்டே அலைக்கழிகிறானா. அவனது மீட்பும் வாதையும் உடலினால் ஆக்கப்பட்டாதாகுகையில், சமனிலை இழக்கும் உடல், தன்னைத்தானே அழித்துக் கொள்ளத்துணிகிறதா? தன் வாலைத் தானே கவ்வும் கத்ருவினைப் போல, மனித உடலும் தன்னை விழுங்கி பிறப்பிக்க விளைகிறதா? நாகராஜ கோவிலின் ஒற்றைத்தலை நாகச்சிலையின் மேல் பதிக்கப்பட்ட ஐந்து தலை நாகப்படத்தின் விடமொழுகும் பற்களின், இரட்டை நாக்கின் இருமையையும் காண்கிறேன். உடல் பின்னும் நாகங்களின் புணர்ச்சியில், அந்த சிலைகள் கனத்து உறைந்திருப்பதையும். பின் ஓவியனும் சிற்பியும் உடலை எவ்வாறு அறிகிறான். அவர்களுக்கு அதன் எளிய பாவனைகள் நன்றாக தெரிந்திருக்கும். அதன் அம்மணத்தில் அவர்கள் தேட உந்துவது, தன்னைத்தானே அழிக்கும் உள்ளீடற்ற அப்பால் ததும்பும் ஒன்றையா? நிலைத்திருக்கும் சிலைகளின் கண்களில், அவயங்களில், பாவங்களில், உடல் மொழியில் அவர்கள் உலவ விடுவது கட்டில்லாத ஒரு ஒற்றை மானுடத்தின் கனவுகளையா?

திருவட்டார் கோவிலின் மன்மதன், ரதியின் அவிழ முனையும், இன்னும் அவிழ்ந்து விடாத பாவத்தில் தொக்கி நிற்கும் காமம் என்றென்றுக்குமாய் அவர்களின் இடைவெளியில் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது. அர்ஜுனனை விட கர்ணன் உயரமாகவும் அழகனாகவும் மாறுவதும், கர்ணனின் நிமிர்ந்த உடல் மொழியும் ஒரு கட்டில்லாக் கனவின் பிரதி பிம்பங்கள் போல மயக்குகிறது. உடலின் மெல்லிய இந்த வலியுணரும், அது அளிக்கும் கவர்ச்சி எந்த எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை. ஒரு நாகப்படம் நாகங்களின் கடியிலிருந்து எப்படி மீட்கிறது, ஒரு மனித நிர்வாணப்படம், மனித உடலிலிருந்து அவனை எப்படி விலக்க முயற்சிக்கிறது.

ஆனால் கலைஞனால், விலக்க முடியாத ஒன்றுள்ளது. அந்த நிர்வாணத்தின் பால் அவன் உணரும் அந்த உடலெனும் கட்டின்மையில், அவனது கண்ணிகள் கட்டப்பட்டு கிடக்கிறது. நம் நிர்வாண உடலை நம்மால் முழுதுமாக உணர்ந்து, ஸ்பரிசித்துப் பார்க்க முடியுமா? கண்ணாடியின் முன் நமது உடலைக் காண்கையில், அதன் குழிவுகளையும், விகாரங்களையும், நாற்றங்களையும் இன்னும் அதன் அழகையும், நளினங்களையும். இதை எல்லாவற்றையும் மறுதலிக்க முயற்சிக்கும் நமது பாவனைகளையும் திரும்பத் திரும்பக் காண்கின்றேன்.

ஆனால் ஒரு மாற்று ஒன்று அவன் தேடிக் கொண்டிருக்கும் பொழுதே, இன்னும் மூர்க்கமாக அந்த நிர்வாணத்தைக் கடித்துக் கொள்கிறான். அவனுக்கு அந்த அம்மணம் வேண்டும். அதில்லையேல் அவன் வாழ்வதற்கான பிடி விட்டு விடும். அங்கு அவனது மாணவனின் மனைவியின் நிர்வாணத்தை வரைந்து தள்ளுகிறான். மீள்கிறான். ஆனால் அது ஒரு தற்காலிக மீட்சியே.

ஒரு உன்னதமான உடல் அவனுக்கு அமையப் பெறும் வரை அவனது திருப்தியின்மையில் உழன்று சாவதொன்றே அவனுக்கு விதிக்கப்பட்டது போல. திரும்பத் திரும்ப அந்த தேடலின் சங்கிலியில் கழுத்து கட்டுண்டு வெறிக்க ஊளையிட்டுக் கொண்டிருக்கிறான்.

தன்னைத் தவிர்க்க தன் உடலைத் தவிர்க்க, இல்லை ஒட்டு மொத்த உடல்களையும் தவிர்த்துக் கொண்டே இருக்க இன்னும் “ஓரு மிடறு”

வான்காவின் அந்த இறுதி ஓவியத்தின் பறவைத் தெறிப்பின் தீற்றல் மூளைச் சுவர்களில் அறைந்து கொண்டே இருக்கிறது.
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

  1. மீட்சி

http://ezhuththuppizhai.blogspot.ae/2015/04/blog-post.html

மரணத்தின் முன் அதுவரையிலான வாழ்வின் அபத்தங்களின் பெரும் பிரவாகம் சுழியிட்டு ஓடுகிறது. அங்கு நாம் அதக்கி வைத்துக் கொண்டிருந்த நம்பிக்கைகளின் கனவுகள் வெற்று மிதவையைப் போல அடித்துச் செல்லப்படும் பொழுது கரையில் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றன மிச்ச மரணங்களும். தேவ மலர்களும், லில்லிகளும் வண்ணத்துப்பூச்சிகளாக உருவெடுத்து மரணத்தின் அப்பால் பரந்து கிடக்கும் தோட்டத்தின் நறுமணங்களை நிரப்புகையில், அந்த மீட்சியில் மனிதனின் எளிய பற்றுக் கோடுகளையே நம்பிக் கொண்டிருக்கிறேன். அது அழிந்து விடின் மானுடம் வாழ்வதற்கான கண்ணி இழுபட்டு சிதறும். ஆனால் அது வெற்று நம்பிக்கைதானே என்று திரும்பவும் அலைகழிகிறது.

அதன் முன் எளிய உயிராக மனிதன் மண்டியிட்டுக் கிடக்கிறான். அதன் முன்னேயே கோவில்களை, மடாலயங்களை, அதிகாரங்களை மென் மேலும் கெட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறான். திரைகளுக்கு மேல் திரையாக மறைத்து, மறக்கடிக்கலாம் என்று நம்புகிறான். பூதாகரமாக தன் முன்னால் அது இளித்துக் கொண்டிருக்கையில், கரைந்தொழுகுவதைத் தவிர அவனுக்கு வாய்ப்புமில்லை. சில நேரங்களில் அதன் மேல் நாம் திணிக்கும் எண்ணற்ற பொதிகளால், நாம் கடவுள்களை உருவாக்கி வழிபடுகிறோம். ஆனால் மரணம் எல்லாவற்றையும் மிச்சமின்றி அழித்து விடுகையில். பள்ளிக் கூட வாசலில், தன் தேவ மலர்களைக் கண்டு விடத் துடிக்கும் அப்பனிடம், அவர்கள் வரமுடியாத அந்தப் பாதையின் வெறிச்சிடலில் அந்த அபத்தத்தின் பலி ரத்தம் உருகியொழுகிக் கொண்டிருக்கிறது.

சமாதனங்களால், ஆறுதல்களால் மரணத்தின் முன் ஒரு பித்து இளிப்பை அந்த மீட்சியில் நாம் உருவாக்கிக் கொள்ளலாமா? அதன் முன் காறி உமிழ்ந்து கொண்டேயிருத்தல். வாழ்வதன் நியாயங்கள் அதன் பின் அதீதமாய் முளைத்துப் பெருகிக் கொண்டே இருக்கும். ஆனால் உண்மையில் அது ஒரு பாவனையும் தானே. தேவமலர்களின் பட்டாம் பூச்சி சிறகடிப்புகளில் அதனை மீட்டுக் கொள்ள, அவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்று உணர்ந்து நிம்மதியடைய. அங்கு குமிழியிட்டுக் கரையும் எண்ணிலடங்கா துளிகளைத் தன்னுள் தானடக்கி ஆழ்ந்து கிடக்கும் ஆழியில் உடையும் ஒவ்வொரு குமிழிகளுக்கும் தனித்தனியான வண்ணங்கள் உண்டு தானே. அதன் தனிமையில் நீலம் கலந்து ஏதுமில்லாது ஆகி விடுகையில், இந்தக் குமிழிகளாலான ஒரு உலகம் அதன் ஆழத்தில் அடி மண்டிக் கிடக்கிறது என்று நம்பிக்கை கொள்வதைத் தவிர…

மீட்சி உண்மையில் சாத்தியம் தானா? மரணத்தின் முன் வலியின் வாதையுடன் பரிதவித்த மனித குமாரனைத் தவிர யார் அதனை சொல்ல முடியும். ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளின் பிரார்த்தனைகள், பூசாரிகளின் மந்திர ஜபங்களாக உழல்கையில் அந்த மீட்சியின் நாள், மீளாத அந்த பலியின் நினைவூட்டலாக மாறி கபாலத்தில் அறைந்து கொண்டிருக்கிறது.

திரும்பத் திரும்ப சமாதானம் செய்ய முடியாத அதன் அலைகளின் மூர்க்கம், இடைவிடாது பாறைகளில் பட்டுப் பின் வாங்குகிறது அடுத்த அலை மீறலுக்காக.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள,

நந்தகுமார்.

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 65
அடுத்த கட்டுரைபுதுக்கவிதை சுருக்கமான வரலாறு