அயினிப்புளிக்கறியும் அ.முத்துலிங்கமும்

அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கம்

ஸ்டைல் சிவகாமசுந்தரி அ முத்துலிங்கம்

அயினிப்புளிக்கறி [சிறுகதை]

இனிய ஜெயம்,

புத்தகச்சந்தையில் இலக்கியத்துக்கு அறிமுகமாகும் பல வாசகர்களை சந்தித்திருக்கிறேன் நூல்களை அறிமுகம் செய்ய கேட்பார்கள். கையில் பொன்னியின் செல்வன் வைத்திருப்பார்கள். யாருக்கு என வினவினால். தனக்குத்தான் என பதில் வரும்.

ஆம் பெரும்பாலும் பொன்னியின் செல்வன் வரை வந்து அங்கேயே நின்று விடுவார்கள். பின்பு பிழைத்துக் கிடக்கும் கல்வியை ஒரு பத்து பதினைந்து வருடம் துரத்தி இருப்பார்கள். இன்று செட்டில் ஆன பிறகு தாங்கள் இழந்த கனவு உலகை, இழந்த இடத்திலிருந்தே துவங்குவார்கள். அதுதான் கையில் இருக்கும் பொன்னியின் செல்வன்.

அப்படித்தான் பாலப்பனும் செம்பு மூட்டு ஆச்சியும் அயினி புளிக் கறியில் இருந்து மீண்டும் துவங்குகிறார்கள்.

// “அவ பேருகேட்ட எலஞ்சிக்கல் பெருவட்டருக்க ஒத்த மக. நான் பனையேறி செம்பனுக்க மகன். பாத்து இஷ்டப்பட்டு கெட்டினதாக்கும். //

காதல் கல்யாணம்தான். ஒவ்வொன்னிலும் இருக்கும் ருசியை அறிந்த மனிதன் என்ன செய்வான் ? தனக்கு ருசிக்கு உகந்த காதலியைத்தான் தேர்ந்தெடுப்பான்.

அவரது ருசி அறிந்த காதலி அவள்.

//அவ அண்ணன்மாரு வந்தானுக. ரெத்தத்த கண்டதும் அவ தாலிய அறுத்து எனக்க மேலே எறிஞ்சுட்டு வாடீன்னு கூட்டிட்டுப்போனானுக. அடுத்த ஆவணியிலே அருமநல்லூரிலே வேற ஆளப்பாத்து கெட்டிக்குடுத்தாச்சு…”//

இதுதான் கதையின் மையம். அவர்கள் இருவரும் பிரிக்கப்படுகிறார்களே அன்றி பிரியவில்லை. காயின் புளிப்பும் ஒரு சுவைதான். அதை அறிந்தவர் பாலப்பன். அவர் சுவைக்கு அதை சமைத்தளிக்க தெரிந்தவள் ஆச்சி. அவர்கள் வாழ்வு சரியாகத்தான் இருந்திருக்கிறது. புளிப்பும் ஒரு ருசி என்று அவளின் அண்ணன்களுக்கு தெரியவில்லை. அங்கு நிகழ்ந்தது பிழை.

அதுதான் அவர்களின் தாம்பத்யம் என அவர்களுக்கு சொல்ல தெரியாது. தெரிந்திருந்தால் பாலப்பன் அந்த மரம் உன் அம்மா போல என்று கணேசனுக்கு சொல்லி புரிய வைத்திருக்க மாட்டாரா.

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அது அவர்களின் வாழ்க்கை அழகு என தெரியாமல் அண்ணன்கள் அவர்களை பிரிக்கிறார்கள். அது அம்மா போல என்ற விழுமியமே தெரியாமல் [மாட்ட வில்லு நிலத்த வில்லு என ஆசான் கோவப்படும்] கணேசன் அதை விற்கிறான்.

//தோட்டங்களுக்குரிய குளிர்ந்த காற்று வீசியது. அப்படியே படுத்து தூங்கினார். கனவில் வேறெங்கோ இருந்தார். இளமையாக, திடமாக//

அங்கிருந்துதான் ஆசான் மீண்டும் தனது வாழ்வை துவங்குகிறார். ஆசானோ, ஆச்சியோ மீண்டும் தங்களது வாழ்வை துவங்குவதால் யாருக்கு என்ன நட்டம்?

அ. முத்துலிங்கம் எழுதிய ஸ்டைல் சிவகாம சுந்தரி சிறுகதை, அதன் அடிப்படையில் இந்த கதையுடன் இணைத்து வாசிக்க தோன்றியது.

கோலம் கெட்டுப் போன பின்னர் மீண்டும் துவங்கும் வாழ்வு. இதுதான் இக்கதையின் சாரமும். ஆச்சியை அவளது அண்ணன்கள் இப்படித்தான் வளர்த்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன்.

http://amuttu.net/viewArticle/getArticle/392.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதேவதை -கடிதம்
அடுத்த கட்டுரைகொஞ்சுதமிழ் குமரி