சன்னதம் -கமலக்கண்ணன்

download

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது குறுநாவல்களைத் தொகுத்து, கிழக்கு பதிப்பகத்தில் வெளிவந்திருக்கும், ‘ஜெயமோகன் குறுநாவல்கள்’ நூலினை வாசித்தேன். ஒருவரது செயல்பாடாக அன்றி, ஒரு இயக்கச் செயல்பாடாக வெளிவந்திருக்கும் இக்கதைகளின் வழி பயணிக்கையில், தோன்றும் மனவெளிகள் – நம்மால் உணரும்படியான அருகிலிருக்கும் சூழலைத்தான் சுட்டுகின்றன எனினும் – உருவாக்கும் தெள்ளத் தெளிந்த மீள் கட்டமைப்பு, அதை அண்மையில் தரிசிக்கும் இன்பம், தீக்குள் விரல் வைத்திடல் ஆகிறது.

கடல்கள் உலகில் பல. ஆனால், அவை அனைத்தையும், இணைத்துப் பார்த்தால் தெரியும், உலகின் கடல் ஒன்றே ஒன்றுதான். தன் உப்புத்தன்மையிலும், தோற்றத்திலும், அடர்த்தியிலும், நிலவமைப்பிலும் மட்டுமே அவை வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகின்றன!

இத்தொகுப்பின் கதைகள் மொத்தம் பதினொன்று. அவை, கிளிக்காலம், பூமியின் முத்திரைகள், மடம், பரிணாமம், லங்கா தகணம், அம்மன் மரம், டார்த்தீனியம், மண், நிழலாட்டம், பத்மவியூகம் மற்றும் இறுதிவிசம்!

ஆனால், இத்தொகுப்பினை ஒரே கதையின் பல்வேறு அத்தியாயங்களாகப் பார்த்திட வைக்கும் சரடுகள் எங்கும், நிரம்பியுள்ளன. ஒவ்வொரு கதையும், அலறி, சத்தமிட்டு, ஓலமிட்டு, இருளை உமிழந்து, ஆங்காங்கே ஒளியின் கீற்றைச் சுட்டும் விதத்தில் ஒரே கதையாகப் படுகின்றன.

அம்மன் மரம் கதையில், ‘ என் உடம்பின் ஒவ்வொரு அணுவையும் கடும் களைப்பு தழுவியது’ என்றொரு வரியினை ஒரு பாத்திரம் சொல்லும். அவ்வுணர்வினையே, ஒவ்வொரு கதையின் முடிவிலும், நான் அடைந்தேன் என்று சொல்ல முடியும். அப்படி அடையும் களைப்பே மேலும் வெறி கொண்டு அடுத்த கதையினை நோக்கி என்னை ஈர்த்து இழுத்தது. அவ்விதமாகவே ஒவ்வொரு கதைகளையும் வாசித்து முடிக்கையில் அக்களைப்பின் செறிவு தவிர்க்கவே முடியாத ஒரு அடிமைத்தனம் போல உலுக்கியது என்னை. அக்களைப்பின் கொதிநிலை, உயர்ந்து கொண்டே இருந்தது.

கிளிக்காலத்தில் வரும் ஒரு காட்சி அதன் கதையெங்கும் வியாபித்திருக்கிறது. ‘உஷா அக்கா உங்களிடம் ஒரு விசயம் சொல்லச் சொன்னாள்’ ‘ ஒரு தேவடியாளும் என்னிடம் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை போடா’ என்று சொல்லும் ஒருவனது மனநிலை சட்டென்று, ஏங்கி மெல்ல ‘ சரி, உன் உஷா அக்கா என்ன சொன்னாள்’ என்று அன்புக்களையும் எளிய மாக்களாகிப் போவதை பேசுகிறது, கதை. இந்த உச்சத்திற்கும், வீழ்ச்சிக்குமான பேரலைகளை ஒவ்வொரு வரியும் பேசிச் செல்கிறது.

டார்த்தீனியம் , அம்மன் மரம் மற்றும் நிழலாட்டம் இம்மூன்று கதைகளும் அடிப்படையில் அமானுஷ்யம் பற்றிய கதைகளெனத் தோன்றியும், அதைத் தாண்டிய மனவடுக்குகளில் நெளியும் புழுக்களை தவிர்க்கவே முடியாததைப் போல, அம்மனக்குறை கொண்ட நம் அன்னையின், தந்தையின், அக்காளின் வலியை நம்மால் தவிர்க்கவே முடியாமல் போவதை பேசிச் செல்கிறது. இம்மூன்று கதைகளுமே தன்மை நிலையிலிருந்து சொல்லப்படுகிறது. அது எனக்கு வெகுவார்ந்த அருகாமையை ஏற்படுத்திச் செல்வதால், அவ்வருகாமையின் தவிர்க்க இயலாமை தரும் பாதிப்பே இக்கதைகளின் நோக்கமாக இருந்திருக்க முடியும்.

2108167c-6ec5-4878-af70-b8ca98c16d89

சிவப்பொளியின் உக்கிரத்தை லங்கா தகனத்தின் ஆரம்ப பக்கங்களில் சொன்னதைப் போன்று எங்கும் நான் வாசித்ததில்லை. அதன், சிவப்பு தொடர்ந்து வந்து அம்மன் மரத்தில் குருதியாய் வழிகையில், இந்த சிகப்பு எத்தனை தூரதூரங்கள் தான் விடாது தொடர்ந்து வந்து, வஞ்சினம் செய்யும் என பதறும் அனுபவமே நிறைந்தெழுகிறது.

ஒவ்வொரு இலக்கியச் சூழலிலும், அதை விழியூடகத்திற்கு உயர்த்தும், வாய்ப்புகள் இருப்பின் அம்மொழியின் அந்நாட்டின் ஒளிமிகுந்த கலை உச்சத்தைத் தொடும்! மண் என்னும் குறுநாவலில் வரும், சில காட்சிகளை நல்திறம் வாய்ந்த ஒளியூடக, விழியுடக கலைஞர்கள் உணர்ந்தேற்று காட்சிப்படுத்த முடியும் எனில், உலகமே தமிழ் பண்பாட்டின் எழுத்தின் கூர்மையையும், அதன் தவிர்க்கமுடியாத வலியையும் தன்னகத்தே உணர்ந்து திரும்பும். அந்த காட்சிகளுக்கு இணையான காட்சிகளை தாங்கள் எழுதிய ‘கொற்றவை’ நாவலின் முதல் இருபது பக்கங்களில் உணர்ந்ததாய் மட்டுமே நினைவு!

ஒவ்வொரு கதைகளாய் விவரித்தும், விளக்கியும் எழுதிட மறுத்து, படித்தவுடன் தோன்றும் உணர்வுகளை மட்டும் பதித்து வைக்க என்னை நானே வகுத்து, இவ்வாறு எழுதி இருப்பதாய் தோன்றுகிறது. இன்னும் நூறு முறை வாசித்தும் தீராக் கடல் நீங்கள் படைக்கும் வண்ணக்கடல்கள்!

அன்புடன்

கோ.கமலக்கண்ணன்.

ஜெயமோகன் குறுநாவல்கள் ரெங்கசுப்ரமணி

ஜெயமோகன் குறுநாவல்கள்பாண்டியன் ராமையா

முந்தைய கட்டுரைஅயினிப்புளிக்கறி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைமரவள்ளி -கடிதங்கள்