ஆழமற்ற நதி -கடிதங்கள்

134569_thumb

ஆழமற்ற நதி [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்,

சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான, என்னை பாதித்த, ஒரு கதை ஆழமற்ற நதி.

https://kesavamanitp.blogspot.in/2017/10/blog-post_25.html

அன்புடன்,

கேசவமணி

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். மிக்க நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

முதல் வாசிப்பில், ஆழமற்ற நதி கதையினை விவரிக்கும் சுந்தரேசனின் பாத்திர உருவாக்கம் ஆர்வமூட்டியது. உயர் பதவியில் இருப்பவர்களிடம் தொடர்புகளை வழிந்து ஏற்படுத்தி பேணிக் கொள்பவர். அவர்களிடம் தவழ்ந்து பணிந்து, குற்றேவல் புரிந்து அண்டி பிழைக்க தயங்காதவர். தான் பழகும் மனிதர்களின் இயல்புகளையும், அவர்களுக்கிடையேயான உறவுகளையும், கூர்ந்து அவதானிக்கிறார். சிலந்தி போல வலை பின்னி, பேச்சு என்னும் கொக்கி போட்டு விவரங்களை கறக்கிறார். அந்த கிசு கிசு விவரங்களை வேறு ஒருவரிடம் போட்டு கொடுத்து, அதனால் பணம் அல்லது வேறு ஏதாவது பலன்களை அடைபவராக இருக்கலாம். அல்லது கிசு கிசு ஏற்படுத்தும் மதமதப்பே அவர் அமிழ்ந்து மகிழும் பலனாக இருக்கலாம். எவ்வாறு இருந்தாலும் ஒன்றன் பின் ஒன்றாக கதையின் சூழல் விரிவதற்கு அவரின் விலகி நிற்கும் மூன்றாவது கோணம் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

கதையில் நிளா நதியை ஒத்த பிறிதொரு நதியான ஃபால்குனி நதி தொடர்பான குறிப்பு வருகிறது. அந்த நதியின் புராண கதையின் படி, பால்குனி நதிக்கு, ராமன், சீதாதேவி, மற்றும் தன் தம்பிகளுடன் இறந்த தசரதருக்கு பித்ரு காரியம் செய்யும் பொருட்டு வருகிறார்கள். காரியம் துவங்கும் முன் ராமன், தம்பிகளுடன், நீரில் மூழ்கி குளிக்க செல்கிறார். அந்த நேரத்தில் ஆவியாக எழுந்த தசரதன், அந்த ஆற்றில் மணல் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த சீதா தேவியிடம், கடும் பசி என்கிறார். ராமன் வரும் வரை பொறுக்க முடியாத, தசரதருக்கு, அரிசிக்கு பதிலாக, மண்ணினால் ஆன பித்ரு பிண்டத்தை, அக்ஷய வடம் எனும் அத்தி மரம், பிராமணன், அந்த ஃபால்குனி நதி, ஒரு பசு, துளசி செடி சாட்சியாக படைத்து தசரதனை ஆற்றுப்படுத்துகிறார்.

குளித்து திரும்பிய ராமன், அரிசியினாலான பிண்டத்தை படைத்து, நீண்ட நேரம் காத்திருந்து, அதை உண்ண தசரதன் நேரில் வராததால் குழம்புகிறார். மண்ணினாலான பிண்டத்தை படைத்து அளித்து தசரதர் ஆன்மாவை தான் நிறைவு செய்தேன் என்னும் சீதையின் விளக்கத்தினை ஏற்காத ராமர் சாட்சிகளிடம் கேட்கிறார். இதில் அத்தி மரம் தவிர அனைத்தும் சீதை கூறியது பொய் என பிறழ்ந்து பேசுகிறது. கோபமடைந்த சீதை நதியை மணல்மேடாகவும், பசுவையும் துளசியையும், கயா பிராமணர்களையும் சேர்த்து சபிக்கிறார். . உண்மையின் சாட்சியாக நின்ற அக்ஷய மரமான அத்தி மரத்தை மட்டும் கயா வரும் பக்தர்கள் அனைவரும் வணங்குவார்கள் வரம் கொடுத்தார்.

என் வாசிப்பின்படி ஆழமற்ற நதி சங்கரன்தான். அவர் தன் தந்தை ஜஸ்டிஸ் காசிநாதன் பேராசையினால் செய்த வினைகளுக்கு பேசா சாட்சியாக, ஆனால் அதன் பலனை குடும்பத்தாருடன் சேர்ந்து அனுபவித்தவராக இருந்திருக்கிறார். அறமின்மையின் சாபம், தன் கடைசி மகனான கதிராக தான் பெற்றதை எண்ணி வாழ்நாள் முழுவதும் குடித்து மனம் புளுங்கியிருக்கிறார். இறந்து பின் மணல் மேடாகுகிறார். பித்ரு காரியம் செய்யும் போது முதல் முறையாக அந்த ஆழமற்ற நதியில் தலை மூழ்கி மன்னிப்பு கேட்கிறார்கள் காசிநாதனுடன் அவரது குடும்பத்தாரும். அத்தி மரமாக அனைத்தையும் அன்று வரை பார்த்து வந்திருக்கும் கதிர், தன் அழுகை மூலம் அரையிருளிலிருக்கும் உண்மையின் மீது சாட்சியாக ஒளியை பாய்ச்சுகிறார்.

இந்த கதை கண்ணதாசன் தன், அரசியல் வாழ்வினை, திராவிட அரசியலின் பிண்ணணியில் விவரித்த தன் வரலாறு நூலான வனவாசத்தை நினைவூட்டியது. இந்த நூல் எனக்களித்த துணுக்குறலும், பிம்பங்கள் உடைந்து தெரித்ததால் நான் அடைந்த சோர்வும் பெரிது. திராவிட இயக்கமே, எழுந்து வா தமிழினமே என மேடையிலேறி பொய் கூவலிட்ட, அடுத்த மணிநேரத்தில், குடிசையின் வாயிலுக்கு சென்று பெண்களை தேடிய கூட்டங்கள் நிறைந்தது என்கிறார், அவர்களில் ஒருவராகயிருந்த கண்ணதாசன். அவரின் முழு புலன்களும் கூர்மையாக விழிப்படைந்தது சில விவரிப்புகளில், டால்மியாபுரத்தை, கல்லகுடி என பெயர் மாற்ற இரயில் மறிப்பு போராட்டத்தில் தன்னை மூன்றாவது அணியாக பங்குபெற வைத்து, எந்த விதத்திலும் அந்த போராட்டத்தின் வெற்றி மற்றவர்களுக்கு வந்து சேர விடாமல் அரசியல் செய்த கருணாநிதி பற்றிய விவரணை. கருணாநிதி தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்த கணையாழியை, அண்ணாதுரை அன்பளிப்பாக தருவதாக மேடையில் பொய் கூறியதை மௌன சாட்சியாக கண்டு புளிங்கியதை விவரித்த போது, கண்ணதாசனிடம் கசந்த உமிழ்நீர் தெறித்து தேங்கிய ஓடையில் கால் நனைக்க நான் நடந்தது போல இருந்தது. எழுத்தாளனின் மனசாட்சி, உண்மையின் சாட்சியானதால் அத்தி மரமாக காலம் கடந்து நிற்கிறது.

ஆழமான வாசிப்பனுவமளித்ததற்கு நன்றி,

உங்கள் வாசகன்,

சிவமணியன்

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53
அடுத்த கட்டுரைகடைசி முகம் -கடிதங்கள்