அயினிப்புளிக்கறி -கடிதங்கள்

ayani

அயினிப்புளிக்கறி [சிறுகதை]

அன்பான ஜெயமோகன்

அயினிப்புளிக்கறி

இனிமையிலும் இனிமை இச்சிறுகதை.

பழத்திலே இனிக்குததுதான் காயிலே புளிக்குது , இல்லேண்ணா கடுக்குது. புளிப்பும் கசப்பும் மூத்து கனிஞ்சா அது இனிப்பு…”

அவ்வளவே வாழ்க்கை.

உள்ளம் மலர வைத்து விட்டது ““வாறேன்” என்று சொல்லியபடி அவள் பாய்ந்து வேலியில் இருந்து கீழே இறங்கினாள்”  என்ற வாக்கியம்.

அது சரி, ஆசான் அழைக்கும்போது “பாய்ந்து வேலியில் இருந்து கீழே இறங்கித்” தான் பின் தொடர வேண்டும். கனியைப்  பறிக்க வேண்டிய அவசியம் இல்லையே.

அன்புடன்

ரவிச்சந்திரிகா

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களின் ‘அயினி  புளிக்கறி ‘ சிறுகதை படித்தேன் .  நம் ருசிகளும் ரசனைகளுமே, இப் பிறவியை நாம் எவ்வளவு அர்த்தத்துடன் வாழ்கிறோம் என்பதற்கான சான்று . ஆசானுடைய அயினி மரத்தின் மீதான அன்பு, அவரின் முதல் மனைவியின் மேல் வைத்த அன்பு . அந்த காதலை அவர் ஒன்பது மாதமே அனுபவித்தார் .  அந்த மண்ணில் பிறந்து , வளர்ந்து, காதலித்து மணந்த முதல் மனைவியே அவரின் முதல் ருசி . பாண்டி நாட்டில் கட்டிய இரண்டாம் மனைவியெல்லாம் அடுத்து தான் .  அயினி மரம் அவருடைய வாழ்வின் ருசியின் ஒரே சாட்சி . மாட்டையோ வீட்டையோ விற்பதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல .  அயினி மரம் வெட்டப்படும் என்பது உறுதியாகும் போது, அதை ஏற்க அவர் தயாராக இல்லை .  மனதில் இக் கதையை ஒரு படமாக ஓட்டி பார்க்கும் பொழுது, கதை பல தளங்களில் அர்த்தம் ஆகிறது .

மண் வேலிக்கு மேல் நிற்கும் பெண் யார் ?

“இப்டி கோலம்கெட்டுப் போனியேட்டி” என்று மிக கரிசனமாக ஏன் கேட்கிறார் ?

“வாறியாடீ?” என்ற ஒற்றை வார்த்தையில் வெட்டப்பட்டதாக  கருதப்பட்ட ஒரு அயினி மரம் மீண்டும் துளிர்கிறதா ?

தாங்கள் அடிக்கடி குறிப்பிடும் “வாசக இடைவெளி ” என்ன என்பதை இக் கதையில் நன்றாக உணர முடிந்தது .

அன்புடன்

பா .சரவணகுமார்

நாகர்கோவில்

****

அன்புள்ள ஜெ

அயினிப்புளிக்கறி சிறுகதை படித்தேன்.குறிஞ்சி திணையையும் கி ராவின் கன்னிமை சிறுகதையையும் என் அனுபவமாக என் பாட்டியையும் நினைவுபடுத்தியது.முதல் பாதி படிக்கும்போது கி ராவின் கன்னிமை சிறுகதையும் அதைபற்றிய உங்கள் கட்டுரையும் அதனுடன் தொடர்ந்து கொண்டே வந்தன.சமுதாய அறங்கள் கால மாற்றத்தால் மாறும் விதங்களை சொல்லும் சிறுகதையோ என எண்ணிக்கொண்டிருக்கும்போதே அதன் வடிவம் மாறி குறிஞ்சி திணையின் வடிவான புணர்தலும் அதன் நிமித்தமும் என்ற வடிவினை அடைய தொடங்கியது.ஆசான் மற்றும் அவரது முதல் மனைவி வாழ்வின் மொத்தமும் அயினிக்காயின் உவமையால் சொல்லப்பட்டு விடுகிறது .(குணமணி “அயினிப்பளத்துக்க சொளை நல்ல இனிப்பாட்டுல்ல இருக்கு? பின்ன எதுக்கு காயி அந்தப்புளி புளிக்குது?” என்றான்

“ஏலே, நீ பாத்திருக்கியா? பழத்திலே இனிக்குததுதான் காயிலே புளிக்குது , இல்லேண்ணா கடுக்குது. புளிப்பும் கசப்பும் மூத்து கனிஞ்சா அது இனிப்பு…”). அயினிக்காயின் இயல்பான மேலிருக்கும் முள்ளும் பாலின் பிசுபிசுப்பான ஒட்டும் தன்மையும்  அவர்களின் வெறுப்புக்கும் விருப்புக்கும் உவமையாக கூறப்பட்டது என்று கொண்டால்  பழம் காலத்தால் ஏற்படும் கனிதலை குறிக்கிறது.தன்முனைப்புகளின் போரால் பிரிந்த இருவரும் காலம் கொடுத்த கனிவால் மறுபடியும் சேர்கின்றனர்.நிலமாகிய மலைநாடான தோத்தவிளையும் அதன் உரிப்பொருள்களூள் ஒன்றான மரமாகிய அயினியும அதன் காயையும் பழத்தையும் உவமையாக கொண்டே அத்திணையின் களமாகிய புணர்தலும் அதன் நிமித்தமும்  விளக்கப்படும் இந்த சிறுகதையை ஒரு சங்க கால கவிதை என்றே என்னை எண்ண வைத்தன.

நவீன சிறுகதை என்ற வகையில் ஈரோடு சந்திப்பில்  நீங்கள் சொன்ன குளிர் சிறுகதையை (ஒரு அறையில் மனைவியை இழந்த கணவன் இருப்பான்.சிறுகதை முழுக்க குளிர் விவரிக்கப்படும்.இறுதியில் அக்குளிர் அவனது மனைவியுடான நினைவுகள் என முடியும்)நினைவுபடுத்தியது.இச்சிறுகதையில் ஆசான் தன் முதல் மனைவியைஅயினிபுளிக்கறியாகவே நினைவு வைத்திருப்பதாகவே எனக்கு தோன்றியது.நம்மைவிட்டு பிரிந்த நபர்களை நாம் எவ்வாறு நினைவு வைத்துக்கொள்கிறோம் என்ற விந்தையை நினைத்தால் ஆச்சரியமே எஞ்சும்.பெயராக  உருவாக நிழ்வுகளாக எண்ணங்களாக நினைத்து கொண்டிருக்கிறேன் என்றே இதுவரை எண்ணியிருந்தேன்.நீங்கள் உங்களுடைய அம்மாவை பற்றிய கட்டுரையில் அவரை ருசியாகவும் நினைவு கொண்டிப்பதாக படித்தபோது  எதுவும் தோன்றவில்லை.ஆனால் இதை படித்துமுடித்தும் என் பாட்டியை கருவாட்டு குழம்பு மற்றும் எள் உருண்டையாகவே நினைவு வைத்திருப்பதை அறிந்து அதிர்ந்தேன்.

ஆசான் ஏன் அந்ந மரத்தை வெட்டகூடாதென சொல்வதை  முதலில் அவர் காலத்து அறமாகிய பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலையும் பின் அவரின் முதல் மனைவியின் நினைவாக  அது இருந்ததையும் உணர  முடிந்தது.மரபின் மேல்  ஆர்வம் உள்ளவன் என்றாலும் வணிக படைப்புகளையே அதிகம் படித்த எனக்கு சங்க கவிதைகளையும் நவீன இலக்கியத்தையும் எவ்வாறு அணுகுவது என்று கற்பித்தமைக்கும் அழகான சங்க கவிதைகளை நினைவுபடுத்தும்  இச் சிறுகதைக்கும் நன்றி ஜெ.
இப்படிக்கு

அந்தியூர் மணி

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51
அடுத்த கட்டுரைஉலகமனிதன் -கடலூர் சீனு