வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44

ஆறு : காற்றின் சுடர் – 5

fire-iconசிற்றமைச்சர் சந்திரசூடர் “இவ்வழி” என்று சொல்லி அபிமன்யூவையும் பிரலம்பனையும் அரண்மனையின் இடைநாழியினூடாக அழைத்துச்சென்றார். அபிமன்யூ மெல்ல உளமகிழ்வடைந்தான். “ஒவ்வொன்றும் நினைவிலிருந்து எழுந்து வருகின்றன, பிரலம்பரே. மழைவிழுந்து பாலைநில விதைகள் முளைத்தெழுவதுபோல” என்றான். கைகளை விரித்து “காடு மண்டுகின்றது. பூத்து விரிகின்றது” என்றான். “அந்த வரி பாடுவதற்குரியது” என்றான் பிரலம்பன். “ஆம், ஏதோ சூதர் சொன்னது” என்றான் அபிமன்யூ. “சூதர்கள் முழு வாழ்க்கையையும் முன்னரே பாடிவிடுகிறார்கள். நாம் மறுபடியும் அதை நடிக்கவேண்டியிருக்கிறது” என்றான் பிரலம்பன்.

“நான் இங்கே மாதுலரின் மைந்தருடன் வளர்ந்தேன். மூத்தவர்களுக்கு நான் மைந்தனைப்போல் இருந்தேன். அவர்கள் என்னைவிட பத்துப்பதினைந்தாண்டுகள் மூத்தவர்கள்” என்றான் அபிமன்யூ. “அவருக்கு எத்தனை மைந்தர்?” என்று பிரலம்பன் கேட்டான். “ஏராளம்… அவர் பாலையில் மகரந்தம் விரிந்த மரம். காற்றெல்லாம் பரவினார் என்கிறார்கள் சூதர்கள்” என்றான் அபிமன்யூ. “அந்த ஒப்புமை கூர்நோக்குக்கு உரியது. பாலைமரத்தின் மகரந்தம் காற்றில் சென்று இலைகளிலும் பாறைகளிலும்கூட படிந்திருக்கும். அடுத்த காற்றில் எழுந்து பரவும். அழிவதே இல்லை. அந்த மரம் அழிந்தபின்னரும்கூட காற்றிலிருக்கும் அதன் மகரந்தம் மலர்களை கருவுறச்செய்யும்.”

“ஆம், அஸ்தினபுரியில்கூட பல பெண்கள் அப்படி கருவுற்றிருக்கிறார்கள்” என்று பிரலம்பன் சிரித்தான். அபிமன்யூ “அவருக்கு அரசியர் எண்மர். அவர்களில் எண்பது மைந்தர்கள். அவரை உளத்தலைவனாக ஏற்றுக்கொண்டவர்கள் பல்லாயிரம்பேர். அவர்களின் மைந்தர்களையும் அவருடைய மைந்தர் என்று கொள்வதே இங்கே வழக்கம். அவர் மனைவியர் பதினாறாயிரத்தெட்டு என்றும் அவர்களின் மைந்தர்கள் லட்சம்பேர் என்றும் சூதர்கள் பாடுகிறார்கள்” என்றான்.

பிரலம்பன் “எண்பது இளவரசர்கள்!” என்று சிரித்தான். “எண்பதுபேரின் மைந்தர்கள் நூற்றிஎட்டுபேர் இருக்கிறார்கள்… மூத்தவர் அநிருத்தர்” என்றான் அபிமன்யூ. “அமைச்சரே, இளவரசர்களின் பட்டியலை நம் தலைமைஒற்றரிடம் சொல்லும்” என்றான். சிற்றமைச்சர் திகைத்து பிரலம்பனை பார்த்துவிட்டு “ஆம்” என ஏதோ சொல்ல முயன்றார். “இவர் அவர்களை உளவறிய வேண்டியிருக்கிறது” என்றான் அபிமன்யூ. அவர் தலையசைத்துவிட்டு “இடப்பக்கம் இணைநிலை என அமைந்த எட்டுத்துணைவியரும் எந்தையை மணந்து பத்து மைந்தர் என ஈன்றனர். அவர்கள் விண்ணுலகில் ஆழிவெண்சங்குடன் அமர்ந்தவனின் அவையமர்ந்த தெய்வங்களின் மண்வடிவங்கள்” என்றார்.

“இவர்கள் அனைவருக்குமே இந்தப் பாடல் தெரியும். நினைவில் வைத்திருக்கவேண்டும் அல்லவா?” என்றான் அபிமன்யூ தாழ்ந்த குரலில். “சொல்லப்போனால் இங்கே சிற்றமைச்சராக இருக்க வேண்டிய தகுதியே இப்பெயர்களையும் முறைகளையும் நினைவில் வைத்திருந்து ஒப்பிப்பதுதான். எண்பதில் ஒருவரை அடையாளம் கண்டு முறைமைசெய்ய மறந்தாலும் தலை போய்விடும்” என்றபின் தயங்கியபடி நோக்கிய அமைச்சரிடம் “பாடுக, அமைச்சரே!” என்றான்.

சிற்றமைச்சர் “முதன்மை அரசி ருக்மிணியின் மைந்தர்களாக பிரத்யும்னன், சாருதேஷ்ணன், சுதேஷ்ணன், சாருதேஹன், சீசாரு, சாரகுப்தன், பரதசாரு, சாருசந்திரன், விசாரு, சாரு ஆகியோர் பிறந்தனர். அவர்கள் நிகரற்ற வில்லவர்கள். அரசுசூழ்தலில் முதல்வர்கள். மண்ணாளப் பிறந்தவர்கள். அன்னை சத்யபாமை பானு, சுபானு, ஸ்வரபானு, பிரபானு, பானுமான், சந்திரபானு, பிரகத்பானு, அதிபானு, ஸ்ரீபானு, பிரதிபானு ஆகியோரை ஈன்றார். அவர்களே தொல்புகழ் யாதவப்பெருங்குலத்தை இம்மண்ணில் அழியாது நிலைநிறுத்தும் நல்லூழ் கொண்டவர்கள்.”

“இளைய அரசி ஜாம்பவதி சாம்பன், சுமித்ரன், புருஜித், சதாஜித், சகஸ்ரஜித், விஜயன், சித்ரகேது, வசுமான், திராவிடன், கிராது ஆகியோரை ஈன்றார். ஜாம்பவானின் அழியாப்புகழை இப்புவிக்கு அறிவிப்பவர்கள் அவர்கள். ராகவராமன் முதல் இளைய யாதவர் வரை நீளும் தொல்மரபல்லவா அது?” என்றார் சிற்றமைச்சர். “நக்னஜித்தி என்னும் சத்யை அரசியரில் வீரம் மிக்கவர். அவர் வீரா, சந்திரா, அஸ்வசேனன், சித்ராகு, வேகவான், விருஷன், அமன், சங்கு, வாசு, குந்திகன் ஆகியோரை ஈன்றார். அவர்கள் இன்று யாதவப்பெரும்படையை போர்முதல்வர்கள் என நின்று காக்கிறார்கள்.”

“இளையவரை தெய்வமென தன் நெஞ்சில் சூடிய அரசி காளிந்தி வயிறு கனிந்து சுருதன், கவி, விருஷன், களிந்தவீரன், சுபாகு, பத்ரன், சாந்தன், தர்ஷன், பூர்ணநமாம்ஷு, சோமகன் ஆகிய மைந்தர்களை இளையவருக்கு அளித்தார். அவர்கள் அவருடைய அடியை சென்னிசூடும் மைந்தர்கள். இக்கோட்டையின் காவலர்கள். லக்‌ஷ்மணை தன் பரிசாக அவருக்கு பிரகோஷன், காத்ரவான், சிம்மன், பலன், பிரபலன், ஊர்த்துவாகன், மகாசக்தன், சகன், ஓஜஸ், அபரஜித் என்னும் மைந்தர்களை அளித்தார். அவர்களை இந்நகர் காவல்தெய்வங்கள் என வழிபடுகிறது.”

“அரசியாகிய மித்ரவிந்தை விருகன், கர்ஹன், அனிலன், கிருதரன், வர்தனன், ஆனந்தன், மகாம்சன், பவனன், வஹ்னி, சூதி என்னும் மைந்தர்களை பெற்றார். இளையஅரசியாகிய பத்ரை சங்க்ரமஜித், பிருகத்சேனன், சூரன், பிரகரணன், அரிஜித், ஜயன், சுபத்ரன், வாமன், ஆயு, சத்யகன் ஆகியோரை ஈன்றார். அவர்களால் பொலிகிறது அரசரின் அழியாப் பெருங்குருதி மரபு. அதை வானுறையும் மூதாதையர் காக்கட்டும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் அமைச்சர்.

“நன்று. ஆனால் நீர் முழுமையாக பாடவில்லை” என்றான் அபிமன்யூ. அவர் திகைத்து திரும்பிப்பார்க்க “பதினாறாயிரத்தெட்டு மனைவியரையும் அவர் மைந்தரையும் சொல்க!” என்றான். அவர் வாய்திறந்து அசைவற்ற விழிகளுடன் நோக்க பிரலம்பன் “அவர்களின் பெயரர்களையும் சொன்னால் நினைவில்கொள்ள இயலுமே” என்றான். அமைச்சர் அதன் பின்னரே புன்னகைத்து “அது கடற்கரை மணல்களைப்போல எண்ணற்கரியது. கடல் அலைகளைப்போல நிகழ்ந்துகொண்டே இருப்பது” என்றார்.

“ஆம், இதோ இக்கணம் எங்கோ அவருக்கு ஒரு மைந்தன் பிறக்கிறான். நான் அதை உணர்கிறேன்” என்றான் அபிமன்யூ. “அதற்கு சற்றுமுன் ஒரு மகள் பிறந்தாளே, நீங்கள் அறியவில்லையா?” என்றான் பிரலம்பன். அமைச்சர் புன்னகை செய்தார். “வருக, இளவரசே… இதுவே இளையோர் அரண்மனை… பேரரசி சத்யபாமை இங்கிருந்து இந்நகரை ஆள்கிறார்” என்றார். “நகரையா?” என்றான் அபிமன்யூ. “ஆம், நகரை முழுமையாகத்தான் ஆள்கிறார்கள்” என்றார் அமைச்சர். “எஞ்சியவர்கள்?” என்றான் பிரலம்பன். “அவர்களும் நகரை முழுமையாக ஆள்கிறார்கள்” என்றார் அமைச்சர்.

திகைப்புடன் “அதெப்படி?” என்றான் பிரலம்பன். “காற்று ஆளும் இடத்தை ஒளியும் மணமும் ஆள்கிறதல்லவா?” என்றார் அமைச்சர். “ஆகா!” என்றான் பிரலம்பன். “இளவரசே, அந்தணர் அந்தணர்தான்…” அபிமன்யூ “ஆம், அவர்கள் சொலல்வல்லர், அதில் மட்டும் சோர்விலர்” என்றான்.

fire-iconஅறைவாயிலில் சிற்றமைச்சர் சந்திரசூடர் சற்று நின்று அபிமன்யூவிடம் “இங்கு காத்திருங்கள்” என்றபின் கதவைத் திறந்து உள்ளே சென்றார். அபிமன்யூ பிரலம்பனிடம் “இன்னமும் எவரும் இங்கு பட்டத்தரசராக அறிவிக்கப்படவில்லை. ஆகவே எட்டு மனைவியரின் எண்பது மைந்தருக்கும் முடிசூடும் விழைவு இருப்பதுபோல் தெரிகிறது” என்றான். அவன் அதை இயல்பான குரலில் சொன்னமையால் பிரலம்பன் திடுக்கிட்டு நாற்புறமும் பார்த்தபின் “மெதுவாக பேசுங்கள், இளவரசே” என்றான். “நான் இங்கே அஞ்சவேண்டியது ஏதுமில்லை. இங்குள்ள அனைவருக்கும் என்னை தெரியும்” என்றான் அபிமன்யூ.

பிரலம்பன் “நான் இங்கு நின்றுகொள்கிறேன்” என்றான். “இங்கு முறைமையென ஏதுமில்லை. இது அரச அவையும் அல்ல. அவர்கள் என் முறைக்குருதியர்.. இளையோனாக அவர்களுடன் இந்நகரின் தெருக்களில் ஆடிவிளையாடியிருக்கிறேன். மூத்தவர் பானு என்னை தோளில் சுமந்து சென்ற நினைவு உள்ளது” என்றான். பிரலம்பன் ஏதோ சொல்ல வாயசைப்பதற்குள் கதவு திறந்து வெளியே வந்த சிற்றமைச்சர் “உபப்பிலாவ்யத்தின் இளவரசர் அபிமன்யூவிற்கு துவாரகையின் மூத்த இளவரசர் பானு திருமுகம் அளிக்க ஒப்புதல் கொண்டுள்ளார்” என்றார்.

“இவர் என் அணுக்கன்” என்று அபிமன்யூ சொல்ல “தனியறைக்குள் பிறருக்கு நுழைவொப்புதல் அளிப்பதில்லை” என்றார் சிற்றமைச்சர். பிரலம்பனை ஒருகணம் திரும்பி நோக்கியபின் அபிமன்யூ உள்ளே சென்றான். பிரலம்பன் ஆறுதலுடன் நிமிர்ந்து ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டான். எடைமிக்கதாயினும் பித்தளைக் குடுமிகளில் ஓசையின்றி சுழன்ற கதவு அவனுக்குப் பின்னால் பட்டுத்திரைபோல மூடிக்கொண்டது. அபிமன்யூ இயல்பான நடையுடன் சிரித்தபடி உள்ளே சென்றான்.

அறைக்குள் பானுவும் பிரபானுவும் சுபானுவும் பீடங்களில் அமர்ந்திருக்க பிற உடன் பிறந்தார் மூவர் சாளரத்தருகே நின்றிருந்தனர். அபிமன்யூ உள்ளே நுழைந்து உரக்க “வணங்குகிறேன், மூத்தவரே. சற்று பருத்துவிட்டீர்கள்” என்றான். பானு அச்சொற்களை கேட்காதவன்போல அவன் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். பிற இருவரும் சற்றே அசைந்தனர். சிற்றமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க அவரை விழிகளால் விலக்கிய பிரபானு அபிமன்யூவிடம் ஏதோ சொல்ல எண்ணும் முகம் கொண்டிருந்தான்.

அபிமன்யூ அதே சிரிப்புடன் பிரபானுவைப் பார்த்து “இங்கு வந்து நெடுநாட்களாகின்றன. நான் கண்ட நகர் முற்றிலும் மாறிவிட்டிருக்குமென்று எண்ணினேன். நன்று, என் கனவுகளில் வரும் நகராகவே எஞ்சுகிறது. எப்படியிருக்கிறீர்கள்? சிறு படகுகளில் அலைமேல் செல்லும் விளையாட்டு இங்கு இப்போதும் நிகழ்கிறதா? சற்று இளைப்பாறிய பின் நல்ல கரும்புரவி ஒன்றை எடுத்துக்கொண்டு துறைமேடை நோக்கிச் செல்லும் பாதையில் முழுவிரைவில் பாய்ந்திறங்க வேண்டுமென்று விழைகிறேன்” என்றான்.

அவர்கள் முகங்கள் அனைத்தும் அவனை விலக்கும் ஒவ்வாநோக்கு கொண்டிருந்தன. பானு சிலைபோலிருக்க மூத்தவனை ஒருகணம் நோக்கிய சுபானு அபிமன்யூவிடம் “துவாரகையின் இளவரசரின் முன் நீங்கள் இன்னும் முறைமைச்சொல் உரைக்கவில்லை, இளவரசே” என்றான். “இல்லையே, வந்ததும் அவரை வணங்கினேனே?” என்றபின் சிரித்து “விளையாடுகிறீர்களா? நான் அரச முறையாக இங்கு வரவில்லை. மேலும் நான் எந்த நிலத்தை ஆள்கிறேன் என்றே எனக்கு இன்னும் உறுதியாகவில்லை. நான் உபப்பிலாவ்யத்திலிருந்து வருகிறேன். என் மாதுலரின் நகருக்கு, அவரது மைந்தராக” என்றான்.

“அரசகுடியினர் எப்போதும் அரசப்பொறுப்பிலேயே இருக்கிறார்கள். அவர்கள் அரசமுறைமைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்” என்று பிரபானு சொன்னான். அபிமன்யூ “இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? முறைமைச்சொற்கள் உரைத்து தலைவணங்க வேண்டுமா?” என்றான். “ஆம்” என்றான் சுபானு. “பொறுங்கள்” என்றபின் திரும்பிச்சென்று கதவைத் திறந்து “பிரலம்பரே, உள்ளே வாரும்” என்றான்.

பிரலம்பன் உள்ளே வந்து அனைவர் முகங்களையும் ஒருகணத்தில் விழிதொட்டுச்சென்று அபிமன்யூவை நோக்கினான். அபிமன்யூ “என்னை இங்கு அறிவியும்” என்றான். அக்கணமே அனைத்தையும் புரிந்துகொண்டு கூத்து நடிகனைப்போல காலெடுத்து வைத்து தலையுயர்த்தி நின்று உரத்த பெருங்குரலில் “அஸ்தினபுரியின் மாமன்னர் பாண்டுவின் பெயர்மைந்தரும் மும்முடி சூடி சத்ராஜித் என அரியணைஅமர்ந்த பேரரசி திரௌபதியின் அறமைந்தரும் அறச்செலவர் யுதிஷ்டிரரின் வழித்தோன்றலும் குருகுலத்தோன்றல் இளையபாண்டவர் அர்ஜுனரின் குருதிமைந்தருமான இளவரசர் அபிமன்யூ வருகை தந்துள்ளார். அவரை இந்திரப்பிரஸ்த நகரியின் பட்டத்து இளவரசராக உபப்பிலாவ்யத்தில் கூடிய அரசப்பேரவையில் முறைப்படி அறிவித்திருக்கிறார்கள். படைத்துணையாகிய விராடப்பேரரசின் இளவரசியை மணந்து புவிவெல்லும் கோல்சூடியுள்ளார். பிற நாடுகளில் முறையாக பட்டத்து அரசராக அறிவிக்கப்பட்டவர் எவரோ அவர் மட்டும் இளவரசரின் நிகர் நின்று முறைமைச்சொல் உரைக்கலாம். பிறர் அகன்று நின்று தங்கள் பணிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும்படி இந்திரப்பிரஸ்தத்தின் செங்கோல் கோருகிறது” என்றான்.

பானு திகைத்து இரு கைகளாலும் பீடத்தின் விளிம்பை பற்றிக்கொண்டான். அபிமன்யூ மேலும் நாடகத்தன்மை தோன்ற காலெடுத்து வைத்து “இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்து இளவரசராக நகர் நுழைந்திருக்கிறேன். எனது கொடி அரண்மனை முகப்பில் எழட்டும். வரவேற்பு முரசுகள் முழங்கட்டும். இங்கு பட்டத்து இளவரசரின் உடனிளையோர் எவரோ அவர் என்னை வாயிலில் வந்து வரவேற்றிருக்க வேண்டும். நன்று, இனிமேல்கூட அவர் தன் பிழையை நிகர் செய்யலாம்” என்றான்.

பானு சினத்துடன் “இங்கு பட்டத்து இளவரசன் நான். அதை அனைவரும் அறிவர்” என்றான். “துவாரகையின் அரசர் இளைய யாதவர் அதை அறிவாரா?” என்று அபிமன்யூ கேட்டான். அதிலிருந்த எள்ளலைப் புரிந்துகொண்டு பானு எழுந்து நின்று “எவர் முன் நின்று சொல்லெடுக்கிறாய் தெரிகிறதா?” என்று கூச்சலிட்டான். “இளவரசே, துவாரகையின் அரசருக்கு எட்டு மனைவியரில் எண்பது மைந்தர். மேலும் பதினாறாயிரத்துஎட்டு பெண்களுக்கு அவர் உளத்துணைவர் என்றும் அவர்கள் ஈன்ற மைந்தர்களுக்கு அவரே அறத்தந்தை என்றும் சொல்லப்படுகிறது. அத்தனை மைந்தருக்கும் நான் அவைமுறைமை செய்தால் என்னை மருத்துவ நிலையத்தில் ஓராண்டுகாலம் முதுகுக்கு ஒத்தடமும் வேதனமும் செய்து சீர்படுத்தி எடுக்க வேண்டியிருக்கும். பொறுத்தருள்க! எவர் பட்டத்து இளவரசர் என்று துவாரகையின் அரசர் அறிவிக்க வேண்டும். பதினாறாயிரத்தெட்டு மனைவியரின் அத்தனை மைந்தருக்கும் அவர்களே பட்டத்தரசர் என்று எண்ணமிருக்கலாம். அவர்களின் குருதியுடன்பிறப்புகள் அதை நம்பவும் கூடும்” என்றான்.

பானு பற்கள் தெரிய “சிறுமை செய்யும் சொல்” என்றான். “இங்கு நான் என் மாதுலரின் மைந்தனாக வந்தேன். அரச முறைமையை நினைவுறுத்தியவர் தாங்கள்தான். ஆகவே நான் கோருவதும் அரச முறைமையைத்தான்” என்றான். சுபானு “மூத்த அரசியின் மைந்தர் அவரே. அவர் பட்டத்தரசராவதில் இங்கெவருக்கும் மறு கருத்தில்லை” என்றான். “மறு கருத்து எஞ்சிய அத்தனை இளவரசர்களுக்கும் இருக்கும்” என்று அபிமன்யூ சொன்னான். “துவாரகையின் இப்பகுதியின் பட்டத்தரசர் என்று நீங்கள் உங்களை சொன்னால் ஓரிரு நாழிகைப்பொழுதுக்கு அதை என்னால் ஏற்க முடியும்.”

“ஆனால் அவ்வாறு உங்களை துவாரகையின் அரசர் அமைத்துப்போன ஓர் ஓலையையோ அமைச்சருக்கு அளித்த ஆணையையோ சுட்டிக்காட்டும்படி என் அணுக்கனாகிய இவர் கேட்பார். இவர் பெயர் பிரலம்பன். என் ஒற்றரும்கூட. மிக ஆணவம் மிக்கவர். ஷத்ரிய குடிப்பிறந்தாலும் சூதர்களுக்குரிய எள்ளலும் கசப்பும் கொண்டவர். பாரதவர்ஷத்தின் அத்தனை அரசுகளுக்கும் பட்டத்து இளவரசராக துவாரகையின் ஒவ்வொரு இளவரசரை அனுப்பினாலும் எஞ்சியவர்கள் ஒரு நல்ல படையெனத் திரள்வார்கள் என்று இவர் சொன்னாலும் சொல்லக்கூடும்” என்றான் அபிமன்யூ.

“மேலும் முறைமைகளைப்பற்றி என்னைவிடவும் கவலை கொள்பவர் இவர். என்னிடமே முறைப்படிதான் பேசுவார். இவரிடம் நான் சொல்லவேண்டிய அரசச் செய்திகளை பறவைச்செய்தி வழியாக உபப்பிலாவ்யத்திற்கு அனுப்பி அதை அமைச்சர் சுரேசர் ஓலைச்செய்தி வழியாக இவருக்கு அனுப்புகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர் என்ன கேட்பார்? சத்யபாமை அத்தை யாதவகுலம். ருக்மிணி அத்தை ஷத்ரிய குலத்தில் பிறந்தவர். எக்குடிப்பிறந்தவராயினும் அரசர் மணக்கும் ஷத்ரியப்பெண்ணின் மைந்தரே பட்டத்தரசராக வேண்டுமென்பது பாரதவர்ஷத்தின் மாறா நெறிகளில் ஒன்று என்பார். நான் தட்டிக்கேட்கவே முடியாது. தீய உள்ளம் கொண்ட ஷத்ரியர்.” பிரலம்பன் மீசையை நீவி ஆம் என தலையசைத்தான்.

“பிரத்யும்னர் முறையாக அறிவிக்கப்படாத பட்டத்து அரசரென்று ஐம்பத்தாறு பாரதநாட்டு ஷத்ரிய அரசர்களாலும் முன்னரே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் மைந்தர் அநிருத்தரே வழித்தோன்றலென்றும் சூதர்கள் பாடுகிறார்கள்” என்று அபிமன்யூ தொடர்ந்தான். “எவர் சொன்னது? சொன்னவர்களை என் முன் வரச்சொல்” என்றான் பானு. அபிமன்யூ “ஒற்றரே, அரண்மனைக்கோட்டையில் இருந்து அத்தனை சூதர்களையும் அரண்மனைக்கு வரச்சொல்லி முரசறைய ஆணையிடுங்கள்” என்றான். “ஆணை!” என பிரலம்பன் திரும்ப பானு “அறிவிலி, அத்துமீறி சொல்லெடுக்கிறாய்” என்று கூவியபடி அபிமன்யூவின் கையை பற்றினான்.

“நயத்தக்க நற்பண்பு கற்றிருக்கிறீர்கள், இளவரசே. அவையில் இளையோன் என எண்ணி என் கையை பற்றுகிறீர்கள். இதையே ஏதேனும் களத்தில் செய்ய வந்திருந்தால் தலையல்லவா அறுந்து கீழே விழுந்திருக்கும்?” என்று அபிமன்யூ சொன்னான். பானு திடுக்கிட்டு கையை விலக்கிக்கொண்டான். பிரலம்பன் “அவர் தங்களை ஆரத்தழுவ விரும்பலாம், இளவரசே” என்றான். பானு “செல் வெளியே… நான் உன்னிடம் ஒரு சொல்லும் உரைக்க விரும்பவில்லை” என்றான்.

அபிமன்யூ தலைவணங்கி “தங்களை நான் முதலில் சந்திக்க வந்தது முன்பொருநாள் இந்தத் தோள்களில் அமர்ந்து இந்நகரைச் சுற்றிவந்தேன் என்று எண்ணியதனால்தான். உள்ளே நுழைகையிலேயே ஒவ்வாதன சில என் விழிகளுக்கு பட்டன. இங்கு அவற்றை உறுதி செய்துகொண்டேன். எழுந்து விண்தொடும் பெருமையின் காலடியில் என்றும் சிறுமைகளையே பரப்பி வைக்கின்றது விண்ணாளும் ஊழ். இந்நகர், இக்குலம் என்னவாகப் போகிறதென்று இன்று அறிந்தேன். அது அவர் கண்ணெதிரில் நிகழுமென்றும் தெளிந்தேன்” என்றான்.

அவன் குரல் மாறியதை உணர்ந்த பானுவின் நீட்டிய கை தளர்ந்தது. “ஆம், அது அவ்வாறே ஆகும். மானுடன் மண்ணில் நின்றிருக்க வேண்டியவன். தெய்வங்களின் பீடத்தில் அவன் அமர்ந்தால் மானுடனென அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்தும் அகன்று செல்லும். குலமும் குடியும் குருதியும் கொடிவழியும்” என்றபின் திரும்பி “பிரலம்பரே” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசர் அவை நீங்குகிறார். முறைப்படி முடியளிக்கப்படாத அனைவரும் தலைவணங்குக!” என்றான்.

பானு இரு கைகளையும் விரல் சுருட்டி இறுக்கி பற்களைக் கடித்தபடி ஈரம் படர்ந்த விழிகளுடன் நோக்கி நிற்க பிறர் அவன் ஆடிப்பாவைகளென தோன்றினர். அபிமன்யூ திரும்பி நடக்க கூத்துமேடைத்தனம் மேலும் மிகையெனத்தோன்ற காலடி வைத்து பிரலம்பன் அவனுக்குப் பின் சென்றான்.

fire-iconகதவுக்கு அப்பால் காலடியோசை கேட்டது. “நுழையலாமா?” என்று அமைச்சர் சுதமர் அறைவாயிலை சற்றே திறந்து கேட்டார். “வருக மூத்தவரே, இப்பொழுதின் இறுக்கத்தை உங்கள் முகத்தின் சிறுகீற்றே விலக்கிவிட்டது” என்று புன்னகையுடன் கூறியபடி அபிமன்யூ இரு கைகளையும் விரித்து அணுகினான். உள்ளே வந்த சுதமர் “இளைத்திருக்கிறீர்கள், இளவரசே” என்றார். “போர்… மெய்யாகவே போர். விழுப்புண்களை பார்க்கிறீர்களா?” என்று தோளை காட்டினான். அவர் சிரித்து “கேள்விப்பட்டேன்” என்றார்.

“நெடும்பயணங்கள், கூடவே துயில்நீப்பு” என்றான் அபிமன்யூ. “விழாவென்றால் துயில் நீக்காது அமையாது” என்றபடி சுதமர் அமர்ந்தார். அறைக்குள் அபிமன்யூவின் மரவுரிகளை எடுத்து விரித்துக்கொண்டிருந்த பிரலம்பனைப் பார்த்து “இவர்தானா அது? இதற்குள் அரண்மனை முழுக்க இவரைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார். அபிமன்யூ “என் அணுக்கர். நான் உரைப்பவற்றை ஒருநாள் கழித்து புரிந்துகொள்வார். உரைக்காதவற்றை உடனே புரிந்துகொள்வார்” என்றான். பிரலம்பன் “எஞ்சியவற்றை நான் உரைப்பேன்” என்றான்.

சுதமர் நகைத்து “அணுகியவர்களை தன்னைப்போலாக்கும் திறன்கொண்டவர் என்று இளைய யாதவரை அறிந்திருக்கிறேன். மாதுலருக்கு உகந்த மைந்தன் நீங்கள்” என்றபின் சற்றே விழிமாறி “அவ்வகையில் நல்லூழ் கொண்டவர் இளைய யாதவர். தன் குருதி தான் என முளைப்பதைப் பார்க்கும் வாய்ப்பு எந்த தந்தைக்கும் அமைந்தாக வேண்டும். மண்ணில் மானுடருக்கு தெய்வங்கள் அளித்த நற்கொடைகளில் ஒன்று அது. இங்கு நுரைக்குமிழிகளென மைந்தர் பெருகிச் சூழ்ந்திருக்கிறார் அவர். ஒவ்வொன்றும் அவர் முகமே. ஆனால் ஒருமுகமும் அவரல்ல. தேவியர் வயிற்றில் எழாதது தங்கையின் வயிற்றில் எழுந்தது எனில் எண்மரையும் ஈரெண்ணாயிரத்தவரையும் கடந்து அவர் அருகே நின்றிருப்பவள் அவளே” என்றார்.

அபிமன்யூ அவர் அருகே அமர்ந்தபடி “இங்கென்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது, மூத்தவரே?” என்றான். “நீங்கள் மூத்த இளவரசரிடம் சொன்னதுதான். எண்பது மைந்தருக்கும் முடிசூடும் விழைவு” என்றார் சுதமர். அபிமன்யூ “எட்டு மூத்தவர்கள். அவர்களில் எவர் அகவையில் மூத்தவர்?” என்றான். “அவருக்குப் பிறந்த முதல் மைந்தர் பானு. அந்தகக் குடியின் அத்தனை யாதவ இயல்புகளும் அவரில் கூடியுள்ளன. அவற்றில் பெரும்பகுதி அறிவின்மை என்பதை சொல்லவேண்டியதில்லை” என்றார் சுதமர். “ஆனால் அவருக்கு நான்குநாழிகை கடந்து அதே நாளில் பிறந்தவர் இரண்டாவது மைந்தர் சாம்பன். களம் நின்று போர் தொடுக்கவும் அஞ்சாது சென்று வென்று மீளவும் இக்குடியில் அவரே முதல்வர்.” அபிமன்யூ “ஆம், இக்குடியில் அவர் ஒருவரின் அம்புகளே இலக்கை அடைகின்றன” என்றபின் பிரலம்பனிடம் “என்னிடம் நூறுக்கு ஓர் அம்பென எதிர்நிற்பார் அன்றெல்லாம்” என்றான்.

சுதமர் புன்னகையுடன் “மூன்றாமவர் பிரத்யும்னர். அரசரென அமர்வதற்கு அனைத்து தகுதிகளும் அவருக்கே. ஷத்ரியக் குடிமுறைகளும் அதையே உறுதி செய்கின்றன” என்றார். “ஆனால் இப்போதுவரை பட்டத்து இளவரசர் எவரென்பதை இளைய யாதவரால் அறிவிக்கமுடியவில்லை. பலமுறை பிரத்யும்னரை அறிவிக்க முற்பட்டார். ஆனால் மூத்த யாதவர் அதை விரும்பவில்லை. யாதவக்குருதிக்கு ஷத்ரிய அரசரா என்றார். அவர் துணைவியார் ரேவதிதேவி சத்யபாமையை விரும்பாதவர். ஆகவே பானுவுக்கு முடிசூட்டுவதையும் அவர் விரும்பவில்லை. எஞ்சியவர் சாம்பன். அவருக்கு முடிசூட்ட யாதவர்கள் ஒப்பவில்லை. அவர் வேடர்குருதி. காளிந்தியின் மைந்தர் அரசராவதைப்பற்றி எண்ணவே வேண்டியதில்லை.”

“ஒருவேளை இளையோர் சிறுவராக இருந்தபோதே அறிவித்திருந்தால் எழும் குடிப்பூசல்களை வென்று நிலைகொள்ள அவருக்கு பொழுதமைந்திருக்கும். இன்று ஒருபுறம் குடிப்பூசல்கள் மறுபுறம் முடிப்பூசல்கள்” என்றார் சுதமர். “அறிந்திருப்பீர்கள், ஒவ்வொரு நாளும் இந்நகரிலிருந்து யாதவர்கள் அகன்று செல்கிறார்கள். ஐங்குடி யாதவர்களும் துவாரகைக்கு வெளியே ஒருங்குகூடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மூத்த யாதவரும் கிருதவர்மரும் தலைமைகொள்ளவிருக்கிறார்கள்” என்றார் சுதமர். “ஆம், வாயிற்காவலர்களிலிருந்தே யவனர்களைத்தான் பார்த்துக்கொண்டு வந்தேன்” என்றான் அபிமன்யூ.

“ஒவ்வொரு நாளும் இங்கே அமைச்சனின் பீடம் வெம்மைகொண்டு வருகிறது. அவர் வருவதை எண்ணிக்காத்திருக்கிறேன்” என்றார் சுதமர். “நான் வந்தது அவர் எப்போது நகர்புகுவார் என அறியவே.” அபிமன்யூ “நான் அறியேன். இங்கு அவர் இருப்பார் என எண்ணித்தான் நான் வந்தேன்” என்றான். சுதமர் பெருமூச்சுவிட்டு “என் கனவெல்லாம் இதையெல்லாம் அவரிடம் அளித்துவிட்டு மீண்டும் கோகுலத்திற்கே மீளமுடியுமா என்பதே” என்றார். “பதினான்காண்டுகள்… இங்கே முதன்மைப் பிரிவுத்துயரை அடைந்தவர்கள் அவருடைய இளமைத்தோழர்களாகிய நாங்களே.”

“ஸ்ரீதமரும் வசுதமரும் இங்குதான் இருக்கிறார்கள் அல்லவா?” என்றான் அபிமன்யூ. “ஆம், நாங்களே இந்நகரை அன்றாடம் நடத்திவருகிறோம். எட்டு மைந்தர்குழுக்களுக்கிடையே பந்தென உதைபடுகிறோம்” என்றார் சுதமர். “ஸ்தோக கிருஷ்ணனும் விலாசியும் அம்சுவும் பத்ரசேனரும் புண்டரிகரும் விடங்கரும் காலவிங்கரும் கண்ட இளைய யாதவர் அங்கே அவர்களுடன் பிரியாது விளையாடிக்கொண்டிருக்கிறார். அவர்களுக்கு காலத்துயரென்பதில்லை.” அபிமன்யூ “மூத்தவரே, இளைய யாதவர் வேதமையம் என ஒரு முழுமெய்யை முன்வைக்கிறார் என்று அறிவீர்களா? அந்தக் கொள்கையை கற்றிருக்கிறீர்களா?” என்றான்.

“ஒரு சொல்லும் அறியேன். என் தோழரும் அறியார்” என்று சுதமர் மலர்ந்த முகத்துடன் சொன்னார். “ஒருமுறைகூட அவர் எங்களிடம் அதைப்பற்றி பேசியதில்லை. அறிய விழைவும் இல்லை. இப்பிறவியில் எங்கள் கடன் அவர் உள்ளத்தை நடத்துவதும் அவருக்கு உகந்தவராக உடனிருப்பதும் மட்டுமே.” அபிமன்யூ “அவர் உள்ளத்தை எப்படி அறிவீர்கள்?” என்றான். அவர் திகைத்து “எப்படி என்றால்…” என்றபின் மேலும் குழம்பி “மெய்தான்… அவர் சொன்னதே இல்லை. ஆணையென ஒன்றும் உரைத்ததில்லை” என்றார். பின்னர் “இளையோனே, எவ்வாறோ அவர் உள்ளத்தை நாங்கள் தெளிவாக காண்கிறோம். ஒருமுறைகூட அவர் என்ன எண்ணுவார் என எண்ணியதே இல்லை. அவர் பிறிதொன்று கருதியதும் இல்லை” என்றார்.

“ஏனென்றால் உங்களுக்கு என உள்ளம் இல்லை” என்றான் அபிமன்யூ. அவர் முகம் மலர்ந்து “ஆம், நாங்கள் அறியாதுகூட பிறிதொன்றை இயற்றவியலாது. ஏனென்றால் நாங்கள் பிறிதல்ல” என்றார். “பெரும்பேறு பெற்றவர் நீங்கள், மூத்தவரே” என்று அபிமன்யூ சொன்னான். “பெருங்காதல் பெண்டிருக்கு மட்டுமல்ல தோழருக்கும் உரியது என நூல்கள் சொல்கின்றன. இன்று அதை கண்டேன்.” குனிந்து அவர் கால்களைத் தொட்டு “என்னை வாழ்த்துக!” என்றான். அவர் முகம் நெகிழ அவன் தலைதொட்டு “நிறைவுகொள்க!” என வாழ்த்தினார்.

முந்தைய கட்டுரைதப்பித்த எழுத்தாளன் -ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகுழந்தையிலக்கியம் – தொகுப்பு