மலபாரைச் சேர்ந்த முகம்மது ரஃபீக் பதினைந்தாண்டுகளாக எங்கள் நண்பர் வடகேரள இஸ்லாமியர்களுக்கே உரிய ஆழ்ந்த நட்புணர்வும் திறந்த உள்ளமும் கொண்டவர். துபாயில் இந்திய அராபிய கலாச்சார நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறார். எளிய நிலையில் இருந்து வாழ்க்கையில் முன்னேற துபாய் அவருக்குப் பெரிதும் உதவியுள்ளது. அவர் நடத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக ஆறாண்டுகளுக்குமேலாக என்னை அழைத்துக்கொண்டிருந்தார். இம்முறை செல்லலாம் என்று நான் முடிவெடுத்ததற்கு காரணம் அரேபியக்கவிஞர் ஒருவரின் நூல்வெளியீடும் அது குறித்த ஒரு கருத்தரங்கமும் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தமை.
ஆனால் சுத்தமாக நிகழ்ச்சியை மறந்துவிட்டேன். பயணச்சீட்டும் விசாவும் வந்தபோதுதான் எனது ஒட்டுமொத்த திட்டத்தையும் மாற்றியமைக்கவேண்டியிருந்தது. சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்று மறுநாளே கிளம்பி திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் துபாய்க்குப்பறந்தேன். கேரளாவின் புகழ்பெற்ற செய்தி ஒருங்கிணைப்பாளர்களான ஸ்ரீகலாவும் லாலும் என்னுடன் வந்தனர். இருவரும் கேரளாவின் நட்சத்திரங்கள். ஆனால் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமில்லாதிருந்த நான் அவர்களை ஒருமுறை கூட பார்த்ததில்லை. அவர்களுக்கு என்னைத் தெரியும், எனக்கு அவர்களைத்தெரியாது. அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கு இருவருமே இலக்கிய அறிமுகம் உடையவர்கள் என்பதுதான் காரணம்.
அரசியல் வம்புகள் இலக்கிய ஊடல்கள் என அரட்டை அடித்தபடி விமானத்தில் ஏறினோம். என் வழக்கம் தூங்க வேண்டுமென்று முடிவெடுத்த மறுகணமே தூங்கிவிடுவது. துபாயில் தான் விழித்தேன். அங்கு என் நண்பர் சுதாகர் ஃபெர்னாண்டோ விமான நிலையத்திற்கு வந்திருந்தார். மணப்பாடு ஊரைச்சார்ந்தவர். அதன் பின் சந்தித்த அத்தனை தமிழ் நண்பர்களிடமும் மணப்பாடு என்ற ஊரை நினைவிருக்கிறதா, எங்காவது மணியடிக்கிறதா என்று கேட்டேன். பெரும்பாலானோர்களுக்கு எந்த உளப்பதிவும் இல்லை. வண்ணநிலவனின் கடல்புரத்தில் கதை நிகழும் களம் என்று நானே சொல்லவேண்டியதிருந்தது. நீர்ப்பறவை ,கடல் போன்ற படங்கள் அங்குதான் எடுக்கப்பட்டன என்று மேலதிகமாகச் சொன்ன போது ‘ஆ ஞாபகம் வருகிறது!” என்றார்கள்.
மணப்பாடுதான் என் கணிப்பில் தமிழகத்தின் மிக அழகிய கடற்கரை ஊர். இரு வேறு பாணிகளைச் சார்ந்த மிகப்பெரிய தேவாலயங்கள் அங்குள்ளன. குவைமுகடு கொண்ட தேவாலயம் ஒன்று. ஊசிக்கூரை முகடு கொண்டது இன்னொன்று. மிக வெண்மையான மணல்மேடு. அங்கிருந்து ஆழத்தில் தெரியும் வளைவான கடற்கரையில் அலைகள் பக்கவாட்டில் செல்வதைக் காணலாம். புனித சவேரியார் வந்து தங்கிச் சென்ற சிறிய குகை அங்கே உண்டு.
சுதாகரை எனக்கு பத்தாண்டுகளுக்கு மேலாகத் தெரியும் சுந்தர ராமசாமியின் இறுதிக்கட்ட சீடர்களில் ஒருவர் என்று சொல்லலாம். துபாயில் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். ரஃபீக்கும் அவரது நண்பர்களும் விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர். அவர்களின் காரிலேயே ட்யூன்ஸ் விடுதிக்குச் சென்றேன். சமையலறை இணைக்கப்பட்ட விடுதியறை என்பது சுவாரசியமாக இருந்தது. துவைப்பதற்கு சலவை இயந்திரமும் சமையற்பாத்திரங்களும் இருந்தன. அராபியர்கள் பெருங்குடும்பங்களாக வந்து தங்குபவர்கள்.
முந்தைய வளைகுடாப்பயணத்தில் குவைத்திலிருந்த நண்பர் ஜெயகாந்த்ராஜு இப்போது அபுதாபியில் பணியாற்றுகிறார். அங்கிருந்து அவர் வந்து நான்கு நாட்கள் என்னுடன் இருந்தார். இரண்டாவது நாள் காலையில் ஆசிஃப்மீரான், சென்ஷி, அய்யனார் விஸ்வநாத் ஆகியோர் பார்க்க வந்திருந்தனர். லக்ஷ்மணன், அருண், முத்துக்கிருஷ்ணன் என பல நண்பர்கள் சந்திக்க வந்தனர். நாகர்கோவில்காரரான நந்தகுமார் சென்னையிலிருந்து நான்குமாதங்களாக துபாயில் பணியாற்றுகிறார் அவர் சந்திக்க வந்தார். விழித்திருக்கும் பொழுதுமுழுக்க ஏதேனும் நண்பர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம் இலக்கியம் சினிமா வேடிக்கைகள்.
துபாயில் உணவு விடுதிகள் தரமானவையாகவே இருந்தன, ஆனால் தரமான உணவுக்குப் புகழ்பெற்றது என்று சொல்லப்படும் சரவணபவன் உணவகத்தில் புளித்துப்போன மாவால் ஊத்தப்பம் ஊற்றிக்கொண்டு வந்து வைத்தனர். மன்றாடி அதை திரும்பப்பெறும்படி செய்து அடை வாங்கி சாப்பிட்டோம். அதிலும் தேங்காய் சட்டினி ஊசிப்போயிருந்தது. அனைத்து இடங்களிலுமே சரவணபவன் உணவின் தரம் நம்பமுடியாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்களுக்கு எவரேனும் தெரிவிக்கிறார்களா என்றே தெரியவில்லை.
அங்கே ஏதேனும் மைய நிர்வாகம் இதைக்கவனிக்கிறதா? தமிழகத்தின் புகழ் பெற்ற பிராண்ட் அது. அதன் வெற்றி ஒருவகையில் தமிழகப் பொருளியலின் வெற்றி. இத்தகைய பிராண்ட் களின் வெற்றி வழியாகவே நாம் முன்னேறுகிறோம். ஆனால் இங்கே அத்தனை பிராண்ட் களிலும் நிகழும் ஒரு வீழ்ச்சி அதை உருவாக்கிய முன்னோடியின் அடுத்த தலைமுறை அதை சரியாக முன்னெடுப்பதில்லை என்பதில் உள்ளது. விரிய விரிய நம் நிர்வாகத்திறன் சரிவுகொள்கிறது போலும்.
ஆசிப் மீரான் அவருடைய மகளுடனும் என்னுடைய நல்லவாசகிகளில் ஒருவரான ஜஸீலாவுடனும் பார்க்க வந்தார். ஜஸீலா எழுதிய ‘நம் நாயகம்; என்னும் குழந்தைகளுக்கான நூலை அளித்தார்கள். ஜமீலாவின் முதல் நூல் இது. மிக அழகிய தயாரிப்பு. கையில் வாங்கியதுமே தயாரிப்பில் இருக்கும் நுட்பம் வியக்கவைத்தது. இத்தனை வண்ண வேறுபாடுகளும் அச்சிடுவதற்கு மிகுந்த கவனமும் தொழில் நுட்பத்திறனும் தேவை. பெரும்பாலும் அச்சில் வண்ணங்கள் நிறம் மாறிவிடவும் கலந்துவிடவும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் அச்சிட்டிருந்தார்கள் என்று தெரிந்துகொண்டபோது பெருமிதமாக இருந்தது
நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை சிறிய நிகழ்ச்சிகளினூடாக குழந்தைகளுக்கு சொல்வது போல் அமைந்த நூல். பெற்றோர் குழந்தைகளுக்கு படித்துக்காண்பிப்பதென்றால் மிக உகந்தது. ஆனால் குழந்தைகள் நேரடியாகப்படிப்பதற்கு இடையூறாக இருப்பது இதில் ஜெசீலா கையாண்டிருக்கும் பேச்சுத்தமிழ். பேச்சுத்தமிழ் எளிமையானதென்றும் குழந்தைகளுக்கு அது பழகியிருக்குமென்றும் நாம் நினைப்போம். உண்மையில் அப்படி அல்ல. பள்ளியில் எளிய அச்சுத்தமிழையே குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். பேச்சுத்தமிழை புதிய ஒரு வார்த்தையாகவே அவர்கள் அடைவார்கள். ஓடிப்போயிற்று என்பதை ஓடிப்போச்சு என்று படிக்கும் போது அவர்கள் புதிய வேறு ஒரு சொல்லை படிக்கும் சிரமத்தை அடைகிறார்கள். குழந்தைகளுக்கான நூலை பேச்சுத்தமிழில் எழுதுவது நல்லதல்ல என்பது என் எண்ணம்.
குழந்தைகளுக்கான மொழி நடையில் ஐந்து விதிகளை வைத்துக்கொள்ளலாம் என்பது என்னுடைய நடைமுறை.
அ. ஒவ்வொரு சொற்றொடரும் அதிகபட்சம் பத்து வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆ. தேவையான போது மட்டுமே அரிய வித்தியாசமான சொற்கள் வரவேண்டும்.
இ. கூடுமானவரை சொற்கள் திரும்பத் திரும்ப வரவேண்டும்.
ஈ.எழுவாய் பயனிலை ஆகியவை அனைத்துச் சொற்றொடர்களிலும் அமைந்து முழுமையடைந்திருக்க வேண்டும்.
உ. ஒரு கூற்றை சொல்பவர்களின் பெயர்கள் கூடுமானவரை திரும்ப திரும்ப வரவேண்டும்.
ஜெசீலா குழந்தைகளுக்கான நூல்களைத் தொடர்ந்து எழுதமுடியும் என்ற எண்ணம் இந்நூலை வாசிக்கையில் ஏற்பட்டது. குழந்தைகளுக்கான கதைக்கு இன்றியமையாத குழந்தையின் கோணம் அநேகமாக அத்தனை நிகழ்வுக்கதைகளிலும் அமைந்துள்ளது. குழந்தைக்கதைகளில் அதுவே உண்மையில் முக்கியமானது.
இரண்டு நாள் நிகழ்ச்சி. முதல் நாள் இந்தோ அராப் கல்சுரல் காலா எனப்படும் மாபெரும் கலைநிகழ்ச்சி. கேரளத்திலும் துபாயிலும் உள்ள பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருது வழங்குபவர்களில் நானும் ஒருவன்.
கேரளத்தின் காங்கிரஸ் பெருந்தலைவர்களில் ஒருவராகிய பேரா. கே.வி.தாமஸ், பாரதிய ஜனதாக்கட்சிகளின் தலைவர்களில் ஒருவராகிய பத்மநாபன் ஆகியோர் விருதுகளை வழங்க வந்திருந்தனர். தொழில் துறையிலும் ஊடகத்துறையில் சாதனை புரிந்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.. ஒவ்வொரு விருது நிகழ்வுக்கும் நடுவே கலைநிகழ்ச்சிகள் பெரும்பாலும் பெருவாரியான மக்களுக்குப்பிடிக்கும் கேளிக்கைகள். பாடல்கள், நடனங்கள்.
மேடை நிகழ்ச்சிகளில் பாடல்களில் சுருதி சேர்வது என்பவற்றையெல்லாம் யோசிக்கவேண்டியதில்லை. நடனம் கூட அசைவுகள் ஒத்திசையாத ஒருவகை உற்சாகத்தை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். அசோகமித்திரன் ஒரு கதையில் சொல்வதைப்போல ‘பல்சுவை நிகழ்ச்சி தொடங்கியது. இசைக்குழுவினர் அவர்க்ளுக்குச் சாத்தியமான இசையை வாசிக்க நடனக்குழுவினர் அவர்களுக்கு சாத்தியமான நடனத்தை ஆடினர்’. எனக்கு எல்லாமே சிரிப்புக்குரியதாகவே இருந்தது. வயதாகிவிட்டது என எண்ணிக்கொண்டேன்
நிகழ்ச்சி முடிவதற்கு ப்ன்னிரண்டு மணி ஆகியது. மறுநாள் நிகழவிருந்த கவிதை வெளியீட்டுவிழா கவிஞருக்கு அரசு அலுவல்கள் ஏதோ அமைந்ததனால் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்றார்கள். அன்று ஒரு விருந்துகூடல் மட்டுமே நிகழுமென்றும் அதற்கு நான் வரவேண்டும் என்றும் ரஃபீக் சொன்னார். காலையிலேயெ நண்பர்களுடன் கிளம்பி அபுதாபியில் ஜெயகாந்த் ராஜுவின் இல்லத்திற்குச் சென்றோம். அவரது மனைவி கல்பனா ஜெயகாந்த் வெண்முரசின் தீவிர வாசகி .கடிதங்கள் அடிக்கடி எழுதுபவர்.
துபாயின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தை பார்த்தபடி பாலைவனத்தைக்கடந்து அபுதாபிக்குச் சென்றோம். அரபுப்பாலைவனம் நமீபியா போல செந்நிறமானது அல்ல. வெளிர்மண். கருகியதுபோன்ற குட்டைப்புதர்கள். ஆங்காங்கே ஒட்டகங்கள். ஆனால் பெரும்பகுதி நிலம் நம்மூரில் ‘நகர்கள்’ அமைக்க ‘பிளாட்’ போடப்பட்டு காத்திருக்கும் மண் போலத்தான் தோன்றியது
துபாயை விட அபுதாபி செங்குத்தானது. ஏனோ எனக்கு பாறைமுகடிலிருந்து தேன் கூடுகள் செறிந்து தொங்குவது போல பூமியிலிருந்து வான் நோக்கி அந்நகர் தொங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. அடுக்கடுக்கான தட்டுகளாக சாளரங்களும் உப்பரிகைகளும் கொண்ட கட்டிடக்கொத்துகள். ஜெயகாந்த் வீட்டில் மதிய உணவு. சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம்.
இருட்ட ஆரம்பித்திருந்தது. எங்கள் திட்டம் அபுதாபியின் மிகச்சிறந்த கட்டிடமான ஷேக் சையத் மசூதியைப் பார்ப்பது. நவீன காலகட்டத்தில் கட்டப்பட்ட மாபெரும் மசூதிகளில் ஒன்று. சென்ற பத்தாண்டுகளில் உலகளவில் கட்டப்பட்ட புகழ்பெற்ற பல கட்டிடங்களை நான் பார்த்திருக்கிறேன். மலேசியாவின் இரட்டைக்கோபுரம் தவிர எதுவுமே என் கண்ணுக்கு அழகாக பட்டதில்லை. பின் நவீனத்துவ கட்டிடப்பாணி என்றவகையில் கண்ணை உறுத்தும் விபரீதங்கள் பலவற்றை மறுமுறை பார்க்க விரும்பமாட்டேன். எனக்குச் செவ்வியல் கட்டிடங்களே பிடித்தமானவை.
இஸ்லாமிய செவ்வியல்பாணியில் நவீன கட்டுமானப்பொருட்களைக்கொண்டு கட்டப்பட்ட இம்மசூதி இன்றைய காலகட்டத்தின் கட்டிட அற்புதங்களில் ஒன்று. பிரம்மாண்டமான கட்டிடம் அராபியக்கூட்டமைப்பு நாட்டின் தலைவராக இருந்த ஷேக் சையத் சுல்தான் அல் நஹ்யான் [Sheikh Zayed bin Sultan Al Nahyan] அவர்களால் முன்னெடுக்கப்பட்டது இந்தக் கட்டிடம். 1996 முதல் 2007 வரை இதன் கட்டிடப்பணிகள் நடைபெற்றன. முப்பது ஏக்கர் பரப்பிலமைந்துள்ள இதுதான் அராபிய உலகின் மிகப்பெரிய மசூதி. உலகில் சலவைக்கல்லில் கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டுமானம் இதுவே. நாற்பதாயிரம்பேர் ஒரே சமயம் இவ்வளாகத்தில் பிரார்த்தனைபுரிய முடியும். இஸ்லாமியக் கட்டிடக்கலையின் நிபுணர்களை இந்தியா உட்பட உலகமெங்கணுமிருந்துகொண்டு வந்து இதைக் கட்டியிருக்கிறார்கள். பெரும்பகுதி வெண்சலவைக்கல். பொன்முலாம்பூசப்பட்ட பித்தளையும் வண்ணமேற்றப்பட்ட கண்ணாடிகளும் தரையோடுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய தரைக்கம்பளம் இந்த மசூதியில்தான் விரிக்கப்பட்டுள்ளது.
தகவல்குறிப்புகள் அளிக்கும் இச்செய்திகளைக் கடந்து ஒட்டுமொத்தமாக ஒரு காட்சியனுபவமாக நம்மைத் சூழ்ந்துகொள்கிறது இந்த மாபெரும் கட்டிடவிரிவு.வெண்ணிறக் கும்மட்டங்கள் அழகிய நுரைக்கொப்புளங்கள் போலிருந்தன. ஐரோப்பியக் கட்டிட நிபுணர்கள் இவற்றை வெங்காயக் குமிழ்கள் என்கிறார்கள். கும்மட்டங்களுக்கே உரிய பெண்மையழகு. கண்களை உறுத்தாத மிதமான வண்ணங்களை தூண்களுக்கும் கம்பளங்களுக்கும் அளித்திருந்தனர். விளக்கொளி கூட மென்மையான இளநீலநிறத்தில்.
விரிவு அளிக்கும் திகைப்பும் பின் ஆழ்ந்த அமைதியும் உருவாகியது. பெருங்கட்டிடங்களைக் காண்கையில் அவை இறைவனுக்குரியவையாக அமையும்போது மட்டுமே என்னைப்போன்ற மரபான மனம் கொண்டவர்களின் உள்ளம் நிறையவடையும். ஓர் அலுவலகத்தையோ குடியிருப்பையோ பிரம்மாண்டமாக கட்டும்போது இயற்கைக்கோ விண்ணுக்கு எதிரான ஒரு சவால் அது என்றே தோன்றுகிறது. இறைவனுக்காக அதைக்கட்டும்போது அது ஒரு படையல். அதிலுள்ளது ஆணவம் அல்ல மானுடன் என்னும் பெருமிதம்.
மாபெரும் கட்டிடங்கள் எப்படி வண்ணம் அளிக்கப்படவேண்டும் என்பதற்கு இம்மசூதி ஒரு பெரிய உதாரணம்.இரண்டு நாட்களுக்கு பின் விழிமூடினால்கூட அதன் இளநீல வண்ண கும்மட்டங்கள் கனவிலெனத் தெரிந்தன.
நாங்கள் விடுதிக்குத் திரும்பிவந்த போது விருந்து கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அபுதாபியின் மக்கள்த்திரள் பெரும்பகுதியினர் குடியேற்றக்காரர்கள். அவர்களிலும் பெரும்பகுதியினர் கார் வைத்திருக்கிறார்கள். எரிபொருள் செலவு குறைவென்பதும் ஒரு காரணம் / ஆகவே பாலைவன நகரானாலும் ,எத்தனை விரிவாக சாலைகள் போட்டாலும் போதாத அளவுக்கு கார்கள் பெருகியுள்ளன. அலுவலகம் முடிந்த பொழுந்துகளில் ஒரு கிலோமீட்டரைக் கடப்பதற்கு ஒருமணி நேரமாகும் அளவுக்கு நெரிசல். ஆகவே நேரடியாகவே என் அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தோம்
இந்தப்பயணத்தில் எழுத்தாளர் ஆபிதீனை சந்தித்தது ஒரு நிறைவூட்டும் அனுபவம்.அவருடன் நெருக்கமான அகத்தொடர்பு எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது நாஞ்சில்நாடனுக்குக்கொடுப்பதற்கு உஸ்தாத் ரஷீத் கான் அவர்களின் ஒலிப்பதிவுத்தகடை அளித்தார். சிலமனிதர்கள் விளக்க முடியாத ஒரு நேர்நிலை உளஅதிர்வை உருவாக்குகிறார்கள் ஒருவேளை அதற்கு அவர்கள் எதுவுமே செய்யாமல் கூட இருக்கலாம். தமிழ் எழுத்தாளர்களில் ஆபிதீன் அத்தகைய ஒருவர். கோபதாபங்களும் எதிர்மறை உணர்வுகளும் அற்றவராக இயல்பிலேயே இருப்பது அதற்கான காரணம் ஆனால் அத்தகையவர்கள் சில அரிய உதிரிப்படைப்புகளை உருவாக்குவதற்கு அப்பால் மானுட உள்ளங்களின் இருளும் கொந்தளிப்பும் வெளிப்படும் பெரும்படைப்புகளை உருவாக்க முடியாது என்றும் தோன்றுகிறது.
15-ம் தேதி 6.00 மணிக்குக்கிளம்பி 7.30க்கு விமான நிலையத்திற்கு வந்தேன். நடந்து வருவதாக இருந்தால் கூட அவ்வளவுதான் நேரம் பிடிக்கும் அத்தனை நெரிசல் 9.30க்கு விமானம் ஆகவே மூச்சுத் திணற ஓடி விமானத்தை வந்தடைய வேண்டியிருந்தது. கணிப்பொறி வாங்க வேண்டுமென்று திட்டமிட்டிருந்தேன். 15-ம் தேதி காலையில் சுதாகர் வந்து என்னை அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார். பின்னர் மத்தியானம் வருவதாக சொன்னார். அலுவலக பணிகள் முடிந்து அவர் வரும்போதே 5.30 மணி ஆகிவிட்டிருந்தது. அந்நெரிசலில் சென்றுவர முடியாதென்பதனால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டேன்.
விமானம் கிளம்பியதுமே மீண்டும் தூக்கம். அடுத்த பயணத்தைப்பற்றிய எண்ணம் வந்தது. திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு காலை 3 மணிக்கு வந்தேன். அங்கிருந்தே சென்னை விமானம் 6 மணிக்கு. சென்னையில் இருந்து 20-ம் தேதி இந்தூர். பத்துநாள் மத்தியப்பிரதேசம் மனிதன் இத்தனை பயணங்கள் செய்யும் காலகட்டம் வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதும் இருந்திருக்கிறதா என்ன?
***