சோபியாவின் தரப்பு

AVT_Sofia-Tolstoi_8381

சோபியாவின் கள்ளக்காதலன்

அன்புள்ள திரு.ஜெயமோகன்,

‘சோஃபியாவின் கடைக்கண்’   என்ற தலைப்பு என்னை   ‘க்ராய்ட்ஸர் சொனாடா’  பற்றி நினைக்க வைத்தது.  சில நாட்களில், அந்த இடுகையைத் தொடர்ந்து வந்தவாசகர் கடிதத்திலும் அதே குறுநாவல் குறிப்பிடப்பட்டதைக் கண்டேன்.  சோஃபியாஎன்றதும் சோஃபியா டால்டாய் நினைவுக்கு வருவதும்,  ‘க்ராய்ட்ஸர்  சொனாடா’ நினைவுக்கு வருவதும் அவ்வளவு அதிசயமான தற்செயல் இல்லைதான். என்றாலும் ஒரு இயல்பான குறுகுறுப்பு இல்லாமல் இல்லை.
அந்நாவலில், சற்றே வயதான ஒரு கனவானுக்கும் அவன் மனைவிக்கும் நாளடைவில்  ஒரு விலகல் ஏற்படுகிறது. கடைசியில் தன் மனைவியின் இசை-இணையனை, கள்ளக்காதலன் என்று எண்ணி, பொறுமி, மனைவியைக் கொல்கிறான் நாயகன். இந்நாவல், டால்ஸ்டாய் தனது மணவாழ்க்கையைப் பற்றிய பரிசீலனையாக எழுதினார் என்று ஒரு வாசிப்பு உண்டு.

இன்று உங்கள் தளத்தில் வந்த வாசகர் கடிதத்தின் தலைப்பு:  ‘சோஃபியாவின் கள்ளக்காதலன்’.
என்ன விளையாட்டு இது?

தலைப்பு மட்டுமே தான் சம்மந்தம் என்றாலும், இந்த தற்செயலை விடுவதாய் இல்லை.

படைப்பின் ஊற்று வாழ்வனுபவமாக இருப்பதைப் பற்றி பலரும் பல கோணங்களில் சிந்தித்திருந்தாலும்,  ‘க்ராய்ட்ஸர் சொனாடா’வின் பிரசுர வரலாறு இன்னுமொரு கோணத்தைக் காட்டுகிறது:
மணவாழ்க்கை, ஆண்/பெண் உறவு பற்றிய (உங்கள் ப்ரிய) டாஸ்டாயின் நேரடி எண்ணங்களாக இந்நாவல் வாசிக்கப்படும் என்று சோஃபியாவுக்குத் தெரியாமல் இல்லை. கைப்பிரதி எடுத்தவரே அவர் தானே!  இந்நாவல் தடை செய்யப்பட்டபோது, ட்ஸாரிடம் சென்று முறையிட்டவரும் சோஃபியா தாம். தடைவிலகலை தனது தனிப்பட்ட வெற்றியாக தனது நாட்குறிப்பில் குறித்துக்கொண்டிருக்கிறார்.

’இந்நாவல் தன்னைப் பற்றியது’ என்ற குறுகலான வாசிப்பை தனது முறையீடே முறியடிக்கும் என்று எதிர்பார்த்தார், என்று ஒரு பத்தியாளர் எழுதியதைப் படித்தேன். அப்படி எல்லாம் கூட எளிமைபடுத்திவிட முடியாது என நினைக்கிறேன்.

அந்நாவலைத் தொடர்ந்து வந்த வாசகர் கடிதங்களுக்குப் பதில் எழுதும் டாஸ்டாய், இந்த குறுநாவலின் நாயகனின் எண்ணவோட்டங்கள், தனது எண்ண ஓட்டங்களுக்கு இயைபானவையே என்று ‘ஒப்புக்கொள்கிறார்’. எப்படி வாசிக்கப்படும் என்றாலும், இப்படைப்பு வெளியாகியே தீரவேண்டும் என்ற முனைப்பாகவே சோஃபியா டால்ஸ்டாயின்  முறையீட்டை நினைக்கத் தோன்றுகிறது.
க்ராய்ட்ஸர் ஸொனாடா’வுக்கு  சோஃபியா டால்ஸ்டாய்,  எழுதிய எதிர்வினை  சமீபத்தில்தான்  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.   அது  சற்று  முதிரா எழுத்து என்று  கருதப்பட்டாலும்,  தன் தரப்பு நியாயங்களை எடுத்து வைக்கும்  படைப்பு   (படைப்பாம் – நான் வாசிக்கவில்லை).

tolstoy

க்ராய்ட்ஸர்  சொனாடா’வின் நாயகி  ஆன்னா’வின் நோக்கிலிருந்து  எழுதப்பட்ட  எதிர்வினையான அந்நாவலின் தலைப்பு:  ‘யாருடைய பிழை?’ !

நியூயார்க்கரில் அதைப் பற்றி வந்த கட்டுரை https://www.newyorker.com/books/page-turner/sofiya-tolstoys-defense
சோஃபியாவின் எதிர்வினை முழுமையான இலக்கிய விமர்சனமா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் ஒரு கருத்துநிலைப்பாட்டை முன்வைக்கும்பொருட்டு எழுதப்படும் எந்த ஒரு படைப்புக்குமே உரிய போதாமை, க்ராய்ட்ஸர் சொனாடா’வில் இருப்பதை அது அடிக்கோடிட்டுக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

டால்ஸ்டாயின் ‘கலையின் நோக்கம்’ பற்றிய கருதோள்கள் ஓவியர்களிடமும் கூட செல்வாக்கு பெறுவதை இல்யா ரெபின் சாடினார்.

( சாடலுக்குள் புகும் முன், ரெபினைப் பற்றி நாம் நினைவில் நிறுத்திக்கொள்ளவேண்டியவை: டால்டாயை பல நிலைகளில் ரசித்து ஓவியம் தீட்டியவர்.  எத்தனை எளிமைக்கோலம் பூண்டாலும் ஸியுஸ் (Zeus) போல பரிமளிப்பவர், என்று டால்ஸ்டாயைக் ஆராதித்தவர்.

  1. இளவெயிலில் மரநிழலில் படுத்தபடி  படிக்கும்டால்ஸ்டாய்
  2. அவரது தினப்பணியான ஏரோட்டும் பொழுது,
  3. எழுத்து கோரும் ஒழுங்கான உழைப்பு வெளிப்படும் எழுத்துமேசை தருணத்தில்
  4. டால்ஸ்டாய்  வெறுங்காலை மண்ணில் பதித்து நிற்கும்இந்த ஓவியத்தின் முழுமையைஎன்னவென்று வியப்பது!

நின்றிருந்துகிடந்த  ஸியுஸைப் பற்றி ரெபின் கூறியவை:

”நெகிழ்கலைகளை (plastic arts!) சரியாக புரிந்துகொள்ளாத இலக்கியவாதிகள் நெகிழ்கலை விமர்சனத்தையும் ஆக்கிரமிக்கும் போக்கு, ரஷ்யாவில் மட்டுமே உள்ளது. இதனால் ரஷ்ய ஓவியர்கள் ‘இயல்பாக இயங்கமுடிவதில்லை’.  இயற்கையின் வடிவங்களையும், ஒழுங்கமைதியையும் வடிப்பதில் கச்சிதமாகிக்கொள்ள அவர்கள் முனையத் துணிவதில்லை. இதழியல் பாதையில் செல்லவும், லிபரல் கருத்துக்களை வரையவும் வற்புறுத்தப்படுகிறார்கள். மாறாக, ஃப்ரான்சிலோ, வடிவங்களின் நெகிழ்த்தன்மை பற்றிய புரிதலும், வண்ணவேறுபாடுகளைப் பற்றிய நுண்மையான புரிதலுமே கலைஞனின் ஆதாரக் கொள்கையாக இருக்கிறது. ரஷ்யாவிலோ, யார் பெயரை உச்சரிக்க நான் நடுங்குகிறேனோ (!), அவர் அழகுக்கு எதிராக ஒரு புனிதப்போரையே நடத்திக்கொண்டிருக்கிறார்”

– நிகொலாய் க்யெ’வுக்காக எழுதிய இரங்கல் குறிப்பிலிருந்து

பூனையைப் புறாக்களிடை விட்ட திருப்தியில்….

அன்புடன்,

பிரபு ராம்

800px-Tolstoy_family_circle_at_Yasnaya_Polyana

அன்புள்ள பிரபுராம்

சுவாரசியமான குறிப்பு. ஏற்கனவே இந்த தளத்தை நான் ஒரு கட்டுரையில் விவாதித்திருக்கிறேன். தல்ஸ்தோயின் மனைவியின் தரப்பு சென்ற இருபதாண்டுகளாகவே உலக அளவில் பேசப்படுகிறது .குறிப்பாக பெண்ணியர்களால். நான் சோஃபியாவின் தரப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய தனிப்பட்ட ஒழுக்கம் பற்றிப் பேசவில்லை. ஒழுக்கம் கால இடச் சார்பு கொண்டது. அன்றைய ருஷ்ய சீமாட்டி வாழ்க்கையின் இயல்புகள் அவரிடமிருக்கலாம். அதை பல கதைகளில் தல்ஸ்தோய் எழுதியிருக்கிறார். ஏறத்தாழ இதே கரு கொண்ட நாவல் அண்டோன் சேகவின் மூன்று வருடங்கள். நான் அறப்பிழை எனக் கருதுவது தல்ஸ்தோயின் படைப்புகளை வெறுமே பணமீட்டும் மூலப்பொருட்கள் என சோஃபியா கருதியதும் அதன்மேல் தனக்கும் தன் மைந்தர்களுக்கும் முழு உரிமை உண்டு என வாதிட்டதும் அதற்கு தன் அரசாங்கத்தொடர்புகளைப் பயன்படுத்தியதும்தான்.

ஏறத்தாழ இந்த படைப்பு மறுபடைப்பு விவகாரத்துடன் ஒப்பிடத்தக்கது மைத்ரேயி தேவியின் கொல்லப்படுவதில்லை என்னும் நாவல். அவரைப்பற்றிய ஒருபாற்பட்ட சித்திரத்திற்கான மறுப்பு அது. ஆனால் மூலத்தை விட கலையமைதிகொண்டது.

ஜெ

தல்ஸ்தோயின் மனைவி
கனவுபூமியும் கால்தளையும்
மைத்ரேயிதேவியின் ‘கொல்லப்படுவதில்லை’

=====================================================தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்

தல்ஸ்தோய் காட்சி
இரும்புத்தெய்வத்திற்கு ஒரு பலி
வாழ்க்கையின் விசுவரூபம்
இரண்டு வானோக்கிய சாளரங்கள்
தல்ஸ்தோயின் கலைநோக்கு
முந்தைய கட்டுரைஆழமற்ற நதி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 39