வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 41

ஆறு : காற்றின் சுடர் – 2

fire-iconஅபிமன்யூ இளைய யாதவரின் அறைவாயிலை அடைந்து ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து நின்றான். வாயிற்காவலன் உள்ளே சென்று மீண்டு அவன் உள்ளே செல்லலாம் என்று கைகாட்டினான். அறைக்குள் நுழைந்ததும் அவனுக்குப் பின்னால் கதவு மெல்ல மூடிக்கொண்டது. அவ்வசைவு தன்னை பலவற்றிலிருந்து அறுத்து விடுவிப்பதை அவன் உணர்ந்தான். அச்சிறிய அறைக்குள் அவரும் அவனும் மட்டுமே இருந்தார்கள். அவர் தாழ்வான மஞ்சத்தில் கால் நீட்டி அமர்ந்து வலப்பக்கமிருந்த சுவடிகளை எடுத்துப் படித்து இடப்பக்கம் வைத்துக்கொண்டிருந்தார். அவனை நோக்கி விழிதூக்கி புன்னகைத்து அருகே வந்தமரும்படி கைகாட்டினார்.

அவன் அவர் அருகே சென்று கால்களைத் தொட்டு தலைசூடி காலடியிலிருந்த சிறுபீடத்தில் அமர்ந்தான். அவனுக்கான புன்னகை அப்படியே முகத்தில் எஞ்சியிருக்க அவர் அச்சுவடிகள் ஒவ்வொன்றையாக படித்துக்கொண்டிருந்தார். எதற்கும் அவர் முகத்திலிருந்த புன்னகையோ விழியுணர்வோ மாறவில்லை என்பதை அவன் கண்டான். எளிய அன்றாடக் கணக்குகளை, சிறிய நற்செய்திகளை மட்டுமே வாசிப்பவர்போல தோன்றினார். ஆனால் அவருக்கு வரும் ஓலைகள் அவ்வாறிருக்க வாய்ப்பில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். சல்யர் கௌரவருடன் சேர்ந்துகொண்ட செய்தி முன்னரே வந்து சேர்ந்திருந்தது. ஷத்ரிய அரசர்கள் ஒவ்வொருவராக கௌரவர் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் எவர் அத்தரப்புக்குச் செல்கிறார்கள் என்பதை ஓலைகள் சொல்லிக்கொண்டிருந்தன.

யாதவர் தரப்பில் இருந்து மேலும் கவலையுறச் செய்யும் செய்திகள் வந்தன. உபப்பிலாவ்யத்திலிருந்து கிளம்பிய வசுதேவரும் பலராமரும் அக்ரூரரும் நேராக மதுராவுக்குச் சென்று சேர்ந்தனர். யாதவ குடித்தலைவர்கள் அனைவருக்கும் ஓலைகள் அனுப்பப்பட்டன. மதுராவில் நிகழவிருக்கும் பெருங்குடியவை ஒன்றில் யாதவர்கள் எடுக்க வேண்டிய இறுதிமுடிவைப்பற்றி அவர்களின் கருத்துக்களை தெரிந்துகொண்டு நிலைபாடு கொள்ளப்போவதாக செய்திகள் வந்தன. அந்நிலைபாடு என்ன என்று அனைவரும் முன்னரே அறிந்திருந்தனர்.

அஸ்வத்தாமன் உதவியுடன் வடக்கே யாதவச் சிற்றரசொன்றை அமைத்திருந்த கிருதவர்மனை தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி பலராமர் அழைத்த செய்திதான் அன்று காலை உபப்பிலாவ்யத்தை வந்தடைந்தது. கிருதவர்மன் இளைய யாதவரின்மேல் வஞ்சம் கொண்டிருந்தான். அவர் குருதியைக் கண்ட பின்னரே தன் இடக்கையில் கட்டப்பட்டிருந்த கரிய கங்கணத்தை அவிழ்ப்பேன் என்று சூளுரைத்திருந்தான் என்பது சூதர்கதைகளென யாதவ நிலமெங்கும் பாடப்பட்டது என்பதனால் அச்செய்தி அனைவரையும் கொதிக்கச் செய்தது.

ஒற்றனின் ஓலையை சௌனகர் படித்ததும் யுதிஷ்டிரரே தன்னிலை அழிந்து பீடத்திலிருந்து எழுந்து “என்ன செய்கிறார் மூத்தவர்? கிருதவர்மன் யாதவர்களால் முற்றிலும் வெறுக்கப்பட்டவன்” என்றார். பீமன் “அது ஓர் அறைகூவல், மூத்தவரே. இளைய யாதவருக்கு அவர்கள் ஒரு செய்தியை சொல்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் “குலப்போர் எங்கும் நிகழ்ந்துகொண்டிருப்பதே. சொல்லப்போனால் குலங்கள் அனைத்துமே ஒவ்வொரு கணமும் முந்தைய கணம் நிகழும் ஒரு நிகர்நிலையால் நிலை கொள்கின்றன. அடுத்த கணம் எழப்போகும் நிகர்குலைவை எதிர்நோக்கியுமுள்ளன. குலங்களின் எண்ணிக்கை பெருகுந்தோறும் முரண்பாடு தவிர்க்கமுடியாததாகிறது. குலம் வென்று செல்வமும் அரசும் கொள்ளும்தோறும் பூசலின் ஆழம் பெருகுகிறது” என்றார்.

“ஆனால் இங்கு நிகழ்ந்திருப்பது அதுமட்டுமல்ல. தன் இளையோனைக் கொல்ல வஞ்சினக்கங்கணம் கட்டிய ஒருவனை அழைத்து உடனமர்த்தி அவைகூடவிருக்கிறார் பலராமர். என்ன செய்யப்போகிறார்? இளையவனைக் கொன்று தலைகொய்து மதுராவின் கோட்டை முகப்பில் வைத்துவிட்டு நாடாளவிருக்கிறாரா?” என்றார் யுதிஷ்டிரர். பீமன் “அவரது எண்ணம் அதுவல்ல. யாதவகுலம் முழுமையாக அவரைத் துறந்துவிட்டதென்று இளைய யாதவரிடம் சொல்வதே. தனிமைப்படுத்தப்பட்டால் இளைய யாதவர் பணிவார் என்று எதிர்பார்க்கிறார்” என்றான். நகுலன் “அவருக்கு இளையவரை தெரியாதா என்ன?” என்றான். பீமன் நகைத்து “அவரது உற்றாரும் அணுக்கரும்தான் அவரை முற்றிலும் அறியாதிருக்கிறார்கள். பெற்ற மைந்தர் எவரென்று வசுதேவர் அறிந்திருக்கவில்லை. பலராமர் தன் இளையோன் என்றன்றி பிறிதெவ்வகையிலும் இளைய யாதவரை அறிந்தவரல்ல. அறிதலுக்கு ஓர் அகல்வு தேவைப்படுகிறது. மலைகளைத் தொட்டறிந்து முழுதறிய முடியாது” என்றான்.

யுதிஷ்டிரர் சோர்வுடன் பீடத்தில் சரிந்து இருபுறமும் நோக்கியபின் “இளையவன் எங்கே?” என்றார். “அவர் எப்போதும் தோழருடனே இருக்கிறார். இங்கு வந்ததிலிருந்து அவரிடமன்றி பிற எவரிடமும் அவர் எதையும் பேசுவதில்லை” என்றான் நகுலன். பீமன் “ஆம், இளையவனின் அமைதி வியப்பளிக்கிறது. அரசவையிலும் மன்றுசூழ்கையிலும் எதையும் செவிகொள்வதில்லை. ஒரு சொல்லும் உரைப்பதில்லை. இளைய யாதவரின் காலடியில் சிறிய பீடத்தில் அமர்ந்துகொள்கிறான். இரு கைகளையும் மடியில் கோத்தபடி அவர் கால்களையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நானும் எண்ணினேன். இருமுறை அவர்கள் அறைக்குள் செல்லும்போது அவர்களின் சொல்லின்மையைக்கண்டு என்னைக் கண்டதும் பேச்சை நிறுத்திவிட்டார்கள் என்று எண்ணினேன். பிறகு அறிந்தேன் அவர்கள் பேசிக்கொள்ளவேயில்லை என” என்றான்.

யுதிஷ்டிரர் “ஒரு சொல்லுமா?” என்றார். “ஆம், மூத்தவரே. ஒருசொல்கூட. பெரும்பாலும் அருகமைகிறார்கள். அவ்வளவே.” சகதேவன் “அருகமைதல் மெய்யின் வழி” என்றான். அவர்கள் அவனை நோக்க “வேதமுடிவை விளக்கும் நூல்கள் அனைத்துமே அருகமைவுகள் என்றுதானே அழைக்கப்படுகின்றன, மூத்தவரே?” என்றான். ஒருகணத்தில் அனைவரும் அவன் சொன்னதையும் அர்ஜுனனின் அந்நிலையையும் உணர்ந்துகொள்ள அவை அமைதிகொண்டது. யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டு “ஆம், இத்தருணத்தில்தான் மெய்மையின் சொல்லெழக்கூடும் போலும். மலை உச்சியை நெருங்க நிலம் கூர்மை கொள்வதுபோல. விண் அங்குதான் இறங்கிவந்து உருகிப் படிகிறது” என்றார்.

இளைய யாதவர் இறுதி ஓலையையும் படித்துவிட்டு ஓலைகளை நன்றாக அடுக்கி பட்டுநூலால் கட்டி சிறிய பேழைக்குள் வைத்தபின் எழுந்து சென்று மரக்குடைவுக் கலத்திலிருந்த நீரை அகன்ற மரயானத்தில் விட்டு கைகளை கழுவிக்கொண்டார். மரவுரியால் துடைத்தபின் மீண்டும் வந்து அமர்ந்து “இரண்டு நாட்களாக உன்னை தேடிக்கொண்டிருந்தார்கள்” என்றார். அபிமன்யூ “காட்டிலிருந்தேன்” என்றான். “என்ன செய்தாய்?” என்று இளைய யாதவர் கேட்டார். “வில் பயின்றேன்” என்று அபிமன்யூ சொன்னான்.

இளைய யாதவர் புன்னகைத்து “அத்தனை இலக்குகளையும் வென்றுவிட முடியுமென்னும் மாயையிலிருந்து விடுபட்டாய் என்றால் வில்லையும் கடந்தவனாவாய்” என்றார். அபிமன்யூ விழிதூக்கி “வில் எப்போதும் என்னுடன் இருக்கிறது” என்றான். “ஆனால் கருவறையில் இருந்து நீ அதை கொண்டு வரவில்லை. அங்கிருந்து வராத எதுவும் இறுதி வரை உடன்வர முடியாது. வருவது நன்றும் அல்ல” என்றார் இளைய யாதவர். அபிமன்யூ தலைகுனிந்து “இது ஒன்றே எனக்கு பற்றுக்கோடு” என்றான். “பிறிதொன்றை பற்றிக்கொள்பவன் தன்னை அதற்கு அடிமைப்படுத்துகிறான். விடுதலை என்பது ஒவ்வொன்றாக உடைத்துச் செல்வதே” என்றார் இளைய யாதவர்.

அபிமன்யூ “விடுதலை அச்சுறுத்துகிறது” என்றான். “ஏன்?” என்றார் இளைய யாதவர். “கட்டுப்படுத்துபவை அனைத்தும் நம்மால் நம் ஆறுதலுக்காக உருவாக்கப்பட்டவை. அன்னையின் கைகள்போல, இல்லத்தின் சுவர்களைப்போல, கோட்டை வளைப்பைப்போல, இருட்டைப்போல பாதுகாப்பானவை. விடுதலை என்பது வெறுமை கொள்வது. பிறிதொன்றும் நாமும் மட்டுமே முகத்தோடு முகம் நோக்கி நிற்றல். அச்சத்தை நிறைக்கிறது அது” என்றான்.

இளைய யாதவர் “ஆம், முதலில் எழும் பேருணர்வு அச்சமே. பின்னர் அதன் பேருருவால் அதை உணரும் நம் தன்னுணர்வும் வளரத்தொடங்குகிறது. புயற்காற்றில் இறகென்றிருப்போம். மலையென்றுணர்கையில் விடுதலை கொள்வோம்” என்றார். “என்னால் அது இயலும் என்று தோன்றவில்லை, மாதுலரே” என்றபின் அபிமன்யூ எழுந்து “நான் செல்கிறேன்” என்றான். “அமர்க!” என்று அவன் தோளைப் பற்றினார் இளைய யாதவர். “உன்னிடம் நான் பேசவெண்டுமென்று உன் தந்தை விரும்பினார். பிற எவரும் உன்னை அணுக முடியாதென்றார். நானும் முற்றிலும் அணுக முடியாதென்று அவரிடம் சொன்னேன்” என்றார்.

அபிமன்யூ விழிகளில் நீருடன் நிமிர்ந்து நோக்கி “தாங்கள் அறிய முடியாத ஒரு துளியும் என்னிடமில்லை, மாதுலரே. நான் சொல்லித்தான் அவற்றை அறிய வேண்டுமென்றில்லை” என்றான். கைநீட்டி அவர் கால்களை மீண்டும் தொட்டு விழிதாழ்த்தியபோது அவன் குரல் இடறியது. “இப்புவியில் தாங்கள் அறியாத ஏதேனும் உண்டா?” சிலகணங்கள் அமைதியில் இருந்தபின் இளைய யாதவர் “இல்லை” என்றார். திடுக்கிட்டு விழிதூக்கி அவர் முகத்தை பார்த்த அபிமன்யூ மெய்ப்பு கொண்டான். அவர் காலைத் தொட்டிருந்த அவன் கைகள் நடுங்கத்தொடங்கின.

“இருப்பினும் எப்படி மானுடராக இயல்கிறீர்கள், மாதுலரே? எந்த பீடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள்?” என்றான். அவனுக்குள் ஆழம் நடுங்கிக்கொண்டிருந்தது. என்ன கண்டேன்? விழிதொட்ட முதற்கணத்தின் முதற்துளியில் நான் கண்டதென்ன? தெய்வங்களே, மூதாதையரே, இங்கு நான் கண்டதென்ன? இளைய யாதவர் அவன் தலைமேல் கைவைத்து “அப்பீடத்தை யோகம் என்பார்கள்” என்றார். அவன் மீண்டும் மெய்ப்பு கொண்டான். குளிர்ந்த அருவி ஒன்று அவன்மேல் பெய்து கொண்டிருப்பதைப்போல. “யோகம் என்பது யுஜ் என்னும் முதற்சொல்லின் விரிவு. அமைதல். இணைதலே அமைதலின் வழி. ஒன்று பிறிதென, பிற அனைத்துடன், அனைத்தும் ஒன்றென, பிறிது இல்லையென.”

“இப்புவியில் முற்றிணைய இயலாத எவையும் இல்லை என்றறிவதே ஞானம். இணைக்கும் வழியறிவதே ஊழ்கம். இணைந்தமைவது யோகம்” என்றார் இளைய யாதவர். அபிமன்யூ நீள்மூச்சு இழுத்து “நெடுந்தொலைவிலிருக்கிறேன், மாதுலரே. இருந்தும் என்னால் உணர முடிகிறது. இதை நான் கருவிலேயே உணர்ந்திருக்கிறேன் என்று தோன்றுகிறது” என்றான். இளைய யாதவர் “கருவில் சற்றேனும் அறியாத ஒன்றை மண் பிறந்தபின் எவரும் அறிய முடியாது” என்றார். அபிமன்யூ பெருமூச்சுவிட்டான்.

“இங்கு நிகழ்வனவற்றை ஓர் எல்லைக்கு மேல் புரிந்துகொள்ள முயலாதே. நீ எய்துவது பிறிதொன்றுள்ளது. இங்கு உனக்கு கடன்களேதுமில்லை. மறந்து கொண்டுசென்றுவிட்ட ஒன்றை திரும்ப அளித்துவிட்டு செல்லும் சிறுபயணமே உன்னுடையது. உன் கையிலிருப்பது மிக அரியதென்பதனால்தான் அதை அளிக்க உளம் தயங்கி கையோடு கொண்டு சென்றாய். அளித்துவிட்டால் மீள்வாய். உன்னை இங்கு கட்டியிருப்பது அதுவே…”

அபிமன்யூ தலைகுனிந்து அசைவிலாது அமர்ந்திருந்தான். “அரசு சூழ்தலின் கணக்குகளை நான் சொல்ல வேண்டியதில்லை. பாஞ்சாலத்து அரசிக்கு அளிக்கப்பட்ட சொல்லுக்கு நிகரான ஒன்று விராடருக்கு அளிக்கப்படவேண்டுமென்ற நிலை வந்தது” என்றார். “ஏன் நான்?” என்றான் அபிமன்யூ. “ஏனெனில் அவர் நீ” என்றார் இளைய யாதவர். அபிமன்யூ பெருமூச்சுடன் “என் முதற்தளை” என்றான். இளைய யாதவர் மெல்ல நகைத்து “இறுதித் தளை நீ அவர் என்பது” என்றார். அபிமன்யூ விழிதூக்கி அவர் புன்னகையைப் பார்த்து அறியாது தானும் புன்னகைத்து “ஆம், அதை உணரமுடிகிறது” என்றான்.

“யாதவபுரியில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று அறிவாயல்லவா?” என்றார். “ஆம், இரு நாட்களுக்கு முன் அவையில் பேசப்பட்டவற்றை உடனிருந்து கேட்டேன்” என்றான். “ஒவ்வொன்றும் அகல்கின்றன” என்று இளைய யாதவர் சொல்ல அபிமன்யூ “மாதுலரே, ஒன்று மட்டும்தான் என்னுள்ளில் நெருடிக்கொண்டிருக்கும் வினா. எண்மரில் எவரேனும் அதில் உள்ளனரா?” என்றான். இளைய யாதவர் நகைத்து “இல்லை, அவர்கள் எப்போதும் பிரிந்ததே இல்லை. இணைவதற்கு முன்பேகூட பிரிவின்றி இருந்தவர்கள்” என்றார்.

அபிமன்யூ “அதெப்படி?” என்றான். “அதன் பெயர் பெண்மை. அதை பிரேமை என்கிறார்கள். பித்தர்களை, பேயர்களை, பெரும்பழி கொண்டவர்களைக்கூட காதல்பெண்டிர் கைவிட்டதில்லை. பேரறிவால் அறியமுடியாதவற்றை பிரேமையால் அடையும் வாழ்த்துபெற்று இங்கு வந்தவர்கள் அவர்கள். தவம் செய்து ஈட்டுவனவற்றை தாயென்றாகி எளிதில் கொள்ளும் வாய்ப்புள்ளவர்கள். மைந்தா, பெண்ணென்றாகாது எவருக்கும் பிரேமை அமைவதில்லை. பித்துகொளாது இங்கு எவரும் பேரறிவை சென்று தொடுவதுமில்லை” என்றார் இளைய யாதவர்.

அவர் முகம் அரிதாகக்கூடும் கற்சிலைத்தன்மையை அடைந்தது. காலம் கடந்து எழுந்து பெருகும் மானுட அலைப்பெருக்குகளை நோக்கி சொல்லெடுப்பவர்போல “மெய்மையின்பொருட்டு பெண்மை கொள்பவரின் பெருநிரை ஒன்று எழும். அவர்கள் அறிவார்கள். போரிடுவதனூடாக அல்ல, முற்றாக அடிபணிவதனூடாகவே வெல்ல முடியுமென்று. என்னுடன் பெண்களே எஞ்சுவார்கள். அவர்களுக்கு நான் அளித்த அமுதை பிற எவருக்கும் அளித்ததில்லை” என்றார்.

அபிமன்யூ மீண்டும் மெய்ப்பு கொண்டு விழிநனைந்தான். எங்கிருக்கிறேன் நான்? அக்கணத்துளியில் நான் கண்டதென்ன? இது கனவில் ஒரு பகுதியா என்ன? இளைய யாதவர் அவன் தலைமேல் கைவைத்து மெல்ல வருடி காதைப்பற்றி “பார்த்தனென்னும் அம்பின் கூர்முனை நீ. அவனுக்குக் கூறப்பட்ட அனைத்தையும் உனக்கு உணர்த்த முடியுமென்று அறிவேன்” என்றார். “எப்போது?” என்று அபிமன்யூ கேட்டான். “உணர்த்திவிட்டேன் மைந்தா, அது உன் முற்றத்தில் கிடக்கிறது. வாயில் திறந்து வந்து நீ அதை அள்ளி எடுத்துக்கொள்ளும் ஒரு காலைப்பொழுது அமையும்” என்றார்.

“அருள்க!” என்று அபிமன்யூ சொன்னான். “ஆசிரியன் என்று புவியில் பிற எவருமில்லை.” இளைய யாதவர் “மாணவர்கள் பலர் எனக்கு. விடாய் கொண்டு முலைக்கண் தேடி வந்த குழவி உன் தந்தை. நீயோ குருதி மணம் பெற்று நான் தேடி வந்த இரை. உன்னை நான் கவ்விச் செல்கிறேன். என்னிடமிருந்து நீ தப்ப இயலாது” என்றார். அபிமன்யூ எழுந்து அவர் கால்களில் தன் தலையை வைத்து “ஆம்” என்றான். அவன் தலைமேல் கைவைத்து “நிறைக!” என்றார் இளைய யாதவர்.

அபிமன்யூ வருவதைக் கண்டதும் உத்தரையின் அருகிருந்த இரு சேடியரும் எழுந்து ஆடை திருத்தி அப்பால் நடந்து மறைந்தனர். அணித்தோட்டத்தின் தெற்கு எல்லையிலிருந்த மரமல்லி மரத்தினருகே மரப்பீடத்தில் அமர்ந்திருந்த உத்தரை தன் மேலாடையை இழுத்து முகத்தை முற்றிலுமாக மறைத்துக்கொண்டாள். அபிமன்யூ அருகே வந்து “விராட இளவரசியை வணங்குகிறேன்” என்றான். அவள் எழவோ மறுமுகமன் உரைக்கவோ செய்யவில்லை. அபிமன்யூ “இளைய யாதவர் நாளை காலை துவாரகைக்கு கிளம்புகிறார். அவருடன் நானும் செல்லவிருக்கிறேன். விடைபெறுமுகமாக இங்கு வந்தேன்” என்றான்.

அவள் “வெற்றி சூழ்க!” என்றாள். அவன் அருகிருந்த பிறிதொரு பீடத்தில் அமர்ந்தபடி “ஆம், வெற்றியை விழைந்து செல்கிறேன். ஆனால் வெற்றியென்று நான் எண்ணுவது பிறிதொன்று. அவரிடமிருந்து எதையேனும் நான் கற்றுக்கொள்ள முடியுமென்றால் அது இப்போதுதான். ஒவ்வொன்றும் அவரை விட்டுச் செல்கின்றன. ஒருவேளை அவர் துவாரகையை இழக்கக்கூடும். முன்புலரியில் அணியும் ஆடையுமிலாது கருவறையில் கரிய பெருமேனியுடன் எழுந்து நின்றிருக்கும் ஆழிவண்ணப் பெருமாளைப் பார்க்கும் தருணம் எனக்கும் அமையக்கூடும்” என்றான்.

உத்தரை “அவர் மெய்யாகவே சூடிய எதுவும் அவரிலிருந்து உதிர்வதில்லை” என்றாள். “எண்துணைவியரை சொல்கிறாயா? என்றான். “ஆம், அவர்கள் ஒருகணமேனும் அவரை விட்டு விலகமாட்டார்கள். அவர்கள் உள்ளங்களில் தன்னுரு கரந்து நிறைந்துள்ள பிரேமை மட்டுமேயான ஒருத்தி முன்பு அங்கு கோகுலத்தில் இருந்தாள். அவள் பெயர் ராதை என்கிறார்கள். அவளிடமிருந்து அவர் ஒன்றை கற்றுக்கொண்டார்” என்றாள். அபிமன்யூ “அவரா? அங்கிருந்து கற்றுக்கொண்டாரா?” என்றான். “என்ன ஐயம்? இப்புவிக்கு அவர் கற்பிப்பவை முழுக்க அவர் அங்கிருந்து கற்றுக்கொண்டவை மட்டும்தான்” என்றாள்.

“அவளிடமிருந்தா?” என்று மீண்டும் அபிமன்யூ கேட்டான். “ஆம். நான் நூறுமுறை பயின்றநூல் ஒன்று உண்டு. பெயரறியாத யாதவக் குலப்பாடகன் எழுதிய கோபிகாவிலாசம் என்னும் குறுங்காவியம். அவர் கால்களை முதலில் சென்னிசூடியவள் அவள். அப்பெயரை அவருக்கிட்டவள். அவர் ஏந்தும் இசைக்குழலையும் சூடும் பீலியையும் அளித்தவள். அவள் சுட்டிக்காட்டிய மண்ணும் விண்ணுமே அவர் அறிந்தது. இந்த பாரதவர்ஷம் இன்றுவரை அறியாத ஒன்றை அவள் அவரிடம் சொன்னாள். இது பெற்றுப் பெருகும் பேரன்னையரால் நிறைந்த மண். அவர்கள் வயிற்றிலிருந்து எழுந்து சொல்லும் வாளும் ஏந்தி திசையெங்கும் விரிந்த ஞானியரும் வீரர்களும் வாழும் நிலம். அசுரவேதம் அன்னையரை அறிந்தது. மானுடவேதம் அறிந்தது ஞானியரையும் வீரரையும்.”

“ஆனால் பித்தெடுத்த பிச்சியரின் நிலை இரு வேதங்களுக்கும் தெரியாது. பெற்றுநிறைந்தோ தேடிச்சென்றோ கண்டடைய முடியாத ஒன்றை கனவு கனிந்து சென்று தொட்டுவிட முடியுமென்று அவள் அவருக்கு காட்டினாள். பாரதவர்ஷத்திற்கு அவர் கற்பிக்க இருப்பது அதுவே” என்றாள் உத்தரை. அவள் தன் முகத்தை ஆடையால் மூடியிருந்தமையால் அச்சொற்கள் அவள் வாயிலிருந்து எழுவனபோல் தோன்றவில்லை. வேறெங்கிருந்தோ அவள்மேல் பட்டு எதிரொலித்தவை போலிருந்தன.

அபிமன்யூ உடலெங்கும் ஒரு இறுக்கத்தை உணர்ந்தான். அங்கிருந்து எழுந்து விரைந்து அகன்றுவிட வேண்டுமென்று தோன்றியது. அத்தருணம் விசைமிக்க ஒன்றால் முறுக்கப்பட்டு மேலும் மேலுமென முறுகி முறுகிச் சென்றது. ஒடிந்துவிடும் என்பதுபோல். ஒடியுமென்றால் அக்கணம் அனைத்தும் பிளந்து இற்றுவிடும் என்பதுபோல். உள்ளங்கால்களின் தவிப்பை உணர்ந்து இரு கால்களையும் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டான்.

“சென்று வாருங்கள்! நீங்கள் அறிந்தவற்றைக் கடந்து பிற சிலவற்றை அறியக்கூடும்” என்றாள். “நீ என்ன சொல்கிறாய்?” என்றான். அவள் மேலும் முகம் குனித்து முகத்திரையை இழுத்து மார்பு வரை சரித்து அமர்ந்தாள். “அறமும் நெறிகளும் முறைகளும் கடுகென்று சிறுத்து காலடியில் மறைய எழுந்து நிற்கும் பித்துக்கணமொன்று உண்டு. பிறிதொருவர் இல்லாத பாதையில் ஒவ்வொருவரும் சென்று அமரும் இடமொன்று உண்டு. இப்புவிக்கு அவர் சொல்ல வந்தது அவ்விரண்டைப்பற்றி மட்டும்தான். விண்ணிலிருந்து முனிவர் தொட்டு இறக்கிய வேதங்களிலோ மண்ணில் பரவி தொல்மூதாதையர் வார்த்தெடுத்த அசுர வேதங்களிலோ இல்லாதது அந்த மெய்மை ஒன்றுதான்” என்றாள்.

“இங்கு ஒவ்வொருவரும் ஐந்தாவது வேதம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாராயண வேதம். அது தனிமையின் கனவின் வேதம். விழைதலின், எய்துதலின், ஆதலின், அமைதலின் சொல்.” அவள் வடிவில் அங்கே அணங்கு ஒன்று வந்து அமைந்துள்ளதா? இளவரசி ஒருத்தி சொல்லும் மொழிதானா அது? இவற்றை நான் என் உள்ளிருந்து எடுத்து செவிநிறைத்துக்கொள்கிறேனா? “எனக்கு அவர் அதை சொல்லவில்லை” என்றான்.

“அவர் எனக்கு அதை சொல்லவேண்டியதே இல்லை. காதல்கொண்ட கன்னியர் எவரிடமும் அதை சொல்லவேண்டியதில்லை” என்றாள் உத்தரை. அபிமன்யூ எழுந்து “நான் கிளம்புகிறேன்” என்றான். “அன்னையும் ஆகி நின்று இத்தருணத்தில் அறிந்து எழுக என வாழ்த்துகிறேன்” என்றாள் உத்தரை. “ஆம்” என்று சொல்லி தலைவணங்கி அவன் திரும்பி நடந்தான்.

முந்தைய கட்டுரைதுபாய் அபுதாபி -நான்குநாட்கள்
அடுத்த கட்டுரைஇரு வாசகர்கள்