வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 40

ஆறுகாற்றின் சுடர் – 1

fire-iconஇரு பாங்கர்களும் ஓசையின்றி தலைவணங்கி இரு பக்கங்களிலாக விலகிச் செல்ல கதவின்முன் அபிமன்யூ உள்ளமும் உடலும் செயலற்றவனாக நின்றான். கணம் கணமென ஓடிய நெடுங்காலத்திற்குப்பின் தன்னினைவு கொண்டான். பெருமூச்சுவிட்டு தன் அகத்தை அசைவு கொள்ளச் செய்தான். கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைய வேண்டுமென்று எண்ணினால் கைகள் அவ்வெண்ணத்தை அறியாது குளிர்ந்து தொங்கிக் கிடந்தன. உள்ளே எவரும் இல்லை என்ற எண்ணத்தை அவன் அடைந்தான். மறுகணமே அவ்வெண்ணம் பெருகியது. ஏதோ பிழை நிகழ்ந்துவிட்டது. ஆம், உடனே ஏவலரை அழைத்து இதை கூற வேண்டும். பிழைதான். உள்ளே எவருமில்லை.

அனைத்து புலன்களையும் கூர்ந்து உள்ளே அசைவோ மணமோ இருக்கிறதா என்று பார்த்தான். இல்லை இல்லையென்றே அவை ஆணையிட்டுரைத்தன. திரும்பி பாங்கர்களை பார்த்தான். அவர்கள் இருவருமே ஓசையற்ற காலடிகளுடன் விழி தொடா தொலைவுக்கு சென்றுவிட்டிருந்தனர். இந்த அறை அல்லவா? அல்லது அவன் உள்ளே சென்ற பின்னர்தான் அவளை கூட்டி வருவார்களா? ஆம், அவ்வாறுதான் இருக்கும். முறைமைப்படி அவள் மஞ்சத்தறைக்கு அவன் செல்லவேண்டும். ஒருவேளை விராட நாட்டில் முறைமை பிறிதொன்றாக இருக்கலாம். அவள் உள்ளே இல்லை. உண்மையிலேயே இல்லை. ஒழிந்த அறை. காத்திருக்கும் அணிமஞ்சம்.

அவ்வெண்ணம் அவனை எளிதாக்கியது. இறுகியிருந்த தசைகள் நெகிழ்வதை அவனாலேயே உணர முடிந்தது. உள்ளே சென்று மஞ்சத்தில் காத்திருக்கலாம். அதற்குள் பேசவேண்டிய சொற்களையும் கொள்ளவேண்டிய முகத்தையும் எண்ணி எடுத்து அமைத்துக்கொள்ளலாம். அவன் கதவை தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தான். முதல் விழியோட்டலிலேயே மஞ்சத்தில் அவள் இருப்பதைக் கண்டு நெஞ்சு அதிர கதவைப் பற்றிய கை நடுநடுங்க ஒரு கால் மெல்ல துள்ளிக்கொண்டிருக்க அப்படியே நின்றான். அவன் நுழைந்த அசைவைக் கண்டு தலைதூக்கி முகத்தை மறைத்திருந்த பீதர் நாட்டு மெல்லிய ஊடுநோக்கு ஆடையை விலக்கி அவள் அவனை பார்த்தாள். பின்னர் எழுந்து தலைகவிழ்ந்து நின்றாள்.

பாதி உடல் கதவினூடாக நுழைந்திருக்க நிலைச்சட்டத்தில் ஒட்டி நின்றிருந்த அவன் எடுத்த அறியா அசைவு வெளியே செல்வதாக அமைந்தது. பின்னர் அதை உணர்ந்து தன்னை உள்ளே செலுத்தி கதவை மூடினான். மிக மெல்ல அது தன் பொருத்தில் அமைந்த ஓசைக்கு அவன் உடல் விதிர்த்தது. மூச்சை நெஞ்சுக்குள் குளிரென உணர்ந்து இருமுறை மீண்டும் இழுத்துவிட்டான். அப்போது செய்யவேண்டியது என்ன என்று பலமுறை அவனுக்கு பாங்கர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் அத்தருணத்தில் அவன் உள்ளம் முற்றிலும் ஒழிந்து கிடந்தது. அப்போது அவன் விழைந்ததெல்லாம் கதவைத் திறந்து வெளியே சென்று இடைநாழியில் ஓடிக்கொண்டிருக்கும் குளிர்ந்த மென்காற்றை உடலெல்லாம் வாங்கி உள்ளூர நிறைத்து கைகளை சிறகுகளென விரித்து கண்மூடி நிற்பதைத்தான்.

அவள் மணிமின்னிய பொன்னணிகளும் செதுக்கு வளையல்களும் மணிக் கங்கணங்களும் அரிச் சிலம்புகளும் தாளத்தில் ஒலிக்க ஆடை சரசரக்க அவனருகே வந்தாள். நறுஞ்சுண்ணமும், செம்பஞ்சுக் குழம்பும், கூந்தல் மலர்களும், கஸ்தூரியும், கோரோசனையும், சவ்வாதும் கலந்த மணம். அந்த மணங்கள் அனைத்தும் அவள் வியர்வையின் நறுமணத்தின்மீது அணிகளென சூட்டப்பட்டிருந்தன. குனிந்து அவன் கால்களைத் தொட்டு வணங்கியபோது கைவளைகள் சரியும் ஒலி. தலையாடை சரிய மணிமாலை பின்னிய கருங்குழல் சுருள்கள் தெரிந்தன. சொல்லெடுக்காது வலக்கையை அவள் தலைமேல் வைத்து வாழ்த்தினான். எழுந்து சற்று விலகி ஆடை நுனியை இழுத்து முகத்தை மறைத்து தலைகுனிந்து நின்றாள்.

அவன் அவளை அண்மையில் நோக்கியபோது சற்று விலகிய ஆடைக்குள் தெரிந்த அவள் கழுத்து நெஞ்சுத்துடிப்பால் அதிர்ந்துகொண்டிருந்தது. ஊடுநோக்கு ஆடை வழியாகத் தெரிந்த முகத்தில் சிறிய உதடுகள் சற்றே திறந்து இரு முன்பற்களின் நுனி தெரிந்தது. மேலுதட்டில் மென்மயிர்ப் பரவலை கண்டான். மூக்குக்கருகே சிவந்த சிறிய பரு. சரிந்த இமைகளின்மேல் கண் மை பரவியிருந்தது. காதோர மயிர்ப்பரவல். கழுத்தின் தோல்வரிகள். நெற்றிவகிட்டில் நின்ற தனி முத்து. புருவத்தருகே மின்னிய சிறு வியர்வை.

நோக்கை விலக்கியபடி நடந்து சென்று மஞ்சத்தில் அமர்ந்தான். அவள் அங்கேயே நின்றாள். ஏழு திரி கொத்தகலின் ஒளி முத்துச்சிப்பிச் செண்டுமேல் விழுந்து பெருகி அவளை ஒளிரச்செய்தது. பீதர்நாட்டு இளஞ்செம்பட்டில் அவள் வண்ணப்பூச்சி போலிருந்தாள். அவளை அழைக்க வேண்டும் என்று அவன் நினைவுகூர்ந்தான். அதற்கு முன் அவள் தன்னை வணங்கியபோது “நன்மைந்தரை பெறுக! மூதன்னையாகி நிறைவு பெறுக! உன் கொடிவழிகள் செழிக்கட்டும்!” என்று வாழ்த்தியிருக்கவேண்டும். அணியறைச் சமையனின் சொற்கள் நினைவில் ஓடின. அவன் கால்நகங்களை இருவர் சீர்படுத்தினர். கைநகங்களை செதுக்கியபடி ஆணிலியாகிய குர்மிதர் தாழ்ந்த குரலில் அவன் செவிகளுக்கு மட்டுமென சொன்னார்.

“முதற்சொல்லே அவர் அழகைப் புகழ்வதென அமைய வேண்டும், இளவரசே. குடிப்பிறப்பும் செல்வமும் கொண்ட அவரைப் பெற்றது நல்லூழ் என்று அவரிடம் விழிநோக்கி தாழ்ந்த குரலில் சொல்லவேண்டும். பெண்ணிடம் அவள் உடற்குறையையோ இல்லத்தின் குறைகளையோ ஒருபோதும் உரைக்கலாகாது. புகழ்வது எத்தனை பொய்யானதென்றாலும் பொருட்படுத்த வேண்டியதில்லை. அது பொய்யென்று அவள் அறிந்திருந்தாலும் புகழப்படுகிறோம் என்பதே அவளை நிறைவுறுத்தும். புகழ்மொழிகளுக்குப்பின் அவர் விழி கனிந்த பிறகே மெல்ல தொட வேண்டும். முதலில் கைவிரல்களை. அவை குளிர்ந்திருக்கும். வியர்வை வழுக்கும். அக்கைப்பற்றலில் காதலோ காமமோ இருக்கலாகாது. இரு கைகளுக்குள் அவர் விரல்களை பொத்தி வைத்துக்கொண்டு அவர் விழிகளை நோக்கி அவருக்கு முன் முற்றிலும் பணிவதுபோல் சொல்லெடுக்க வேண்டும்.”

அடைக்கலமளிக்கும் கையளிப்பும் அடிபணியும் சொல்லும் இணைந்தெழுகையில் அவருள் வாழும் இரு முகம் கொண்ட ஒன்று மகிழ்கிறது. அவ்வுடல் ஒரு ஊர்தி. ஒரு திரை. ஓர் அணிகலன். அதிலேறி வந்து அத்திரை களைந்து தோன்றி அதைச் சூடிநின்றிருக்கும் ஒன்றே நீங்கள். மெய்யாகவே மணந்த இளமகள். நீங்கள் அறிந்த பெண்கள் உங்கள்மேல் உதிரும் மலர்கள். உங்கள் காலடியைக் காத்திருந்த கூழாங்கற்கள். இவர் அரசி. இளவரசே, நிகர்கொண்ட பெண்ணிடமே காதலை உணரமுடியும். அவளிடமே புறக்கணிப்பையும் வெறுப்பையும் அறியவும்கூடும். வெல்வதில்லையேல் காமம் இல்லை. காதலும் இல்லை என்று உணர்க.

முதல் இரவில் நிறைவின்மையையே ஆணும் பெண்ணும் உணர்கிறார்கள். அவர்கள் எண்ணியது நிகழ்வதில்லை. நிகழும் எண்ணாதவை விரும்பத்தக்கதாக இருப்பதுமில்லை. காதலென்றும் கனவென்றும் அவர்கள் தீட்டி வைத்திருக்கும் நுண்ணிய ஒன்று அதிர்வுறுகிறது. காமம் உடலிலெழுகையில் அதை விண்ணில் வாழும் தெய்வங்கள் கைவிடுகின்றன. மண்ணுக்கு அடியிலிருந்து அறியாத புதிய தெய்வங்கள் எழுந்து வருகின்றன. வேர்களை, புழுக்களை, விலங்குகளை ஆள்பவை. திகைத்து உளம் விலகி நாணி அனைத்தையும் ஆழத்தில் புதைத்து முற்றிலும் தன்னை மறைத்துக்கொண்டு மீள்கிறார்கள் இளையோர். இரண்டென்றாகிறார்கள். அன்று வரை சூடியிருந்த முகத்தை பகலுக்கும் பிறருக்கும் அளிக்கிறார்கள். அன்று பெற்றவற்றை பரிமாறிக்கொள்கிறார்கள். இருளுக்குள் மட்டுமே கொண்டு கொடுத்துக் கொள்ளக்கூடியவை. தொடுகையால் மட்டுமே தொடர்புறுத்தக்கூடியவை. உண்பதும் உண்ணப்படுவதுமென ஆகி உடல் தன்னை முழுமை செய்துகொள்ளும் தருணங்கள்.

ஏழு நாட்கள். அதன் பின் நாணிய ஒவ்வொன்றும் பெருவிழைவை ஈட்டுவதென்றாகும். அஞ்சிய இடங்களிலெல்லாம் வாயில்கள் திறக்கும். அத்தனை நறுமணங்களைவிடவும் இனிய கெடுமணங்கள் சில உள்ளத்தில் பதியும். ஆயிரம் இனிய சொற்களைவிட அழகிய வசைச்சொற்கள் தெரியவரும். விழிகள் மட்டுமே சொல்லிக்கொள்ளும் மொழியொன்று உருவாகும். அதுவரை இவ்வூசலின் வழியாக கடந்து செல்லவேண்டும். இதன் ஒவ்வொரு படியிலும் இதுவரை சூடியிருந்த ஒன்றைக் களைந்து முன்னகர வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் தன்னைக் கடந்து பிறிதொன்றாகி எழுவதையே வளர்ச்சி என்கிறோம். சூடும் பிறிது முன்னரே நம்மில் முளைத்து அங்கு காத்திருந்ததென்பதை பின்னரே அறிவோம். ஒரு பிறவியில் நூறு முறை பிறக்காதவன் வாழ்ந்தவனல்ல என்று அறிக! பிறந்தெழுக!

குர்மிதரின் சொற்களை அண்மையில் அவர் நின்று உரைப்பதுபோல் அபிமன்யூ கேட்டுக்கொண்டிருந்தான். அணியறையில்  குர்மிதர் அவற்றைக் கூறியபோது ஒரு சொல்லையும் உளம் குவித்து கேட்கவில்லை. அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டால் போதும் என்றே எண்ணினான். அவர்களின் விரல்கள் தன்னுடலில் படும்போதெல்லாம் கூசி அதிர்ந்தான். அவர்கள் உரைத்த சொற்கள் அவன் உள்ளாழத்தைத் தொட்டு மேலும் கூசச்செய்தன. இப்படி என்னைத் தொட இவர்களுக்கு என்ன உரிமை? அவையிலும் அறையிலும் உடன்குருதியரும் பிறப்பித்தோரும் மூத்தோரும் முறைமைச் சொல்லும் பயின்ற அசைவுகளுமாக அகன்றிருக்க அத்திரையால் முற்றிலும் மறைத்து வளர்ப்பன அனைத்தையும் இந்த அறியா ஏவலர் முன் எப்படி விரித்திடுகிறார்கள் அரசர்கள்?

ஏனெனில் இவர்கள் இந்தத் தனியாழத்தை மட்டுமே கையாளும் தொழில் கொண்டவர்கள். இந்நீராட்டறைக்குள் நுழையும் ஒவ்வொருவரின் ஆடையின்மையை அறிந்தவர்கள் என்பதனால் ஆடையின்மையை அறியும் உரிமை கொண்டவர்களுமாகிறார்கள். அத்தனை மானுடர்களையும் ஆடையற்று காண்பவர்களுக்கு ஆடையின்மைக்கு என்ன பொருள்? ஒருவரிடமிருந்து பிறிதொருவர் கொள்ளும் சிறு வேறுபாடன்றி பிறிதேதும் அவர்களின் நோக்கிற்கு தென்படுமா?

நின்று சலித்து அவள் இரு கைகளையும் தொங்கவிட்டு சற்று உடல் வளைத்தாள். அணிகளும் வளையல்களும் குலுங்கின. அவ்வோசையில் அவன் திடுக்கிட்டு சூழ் உணர்ந்து அவளை நோக்கி புன்னகைத்தான். அதையே அழைப்பென்று கொண்டு அவள் இரண்டு அடி எடுத்து வைத்து பீடத்தின் விளிம்பை வலக்கையால் பற்றிக்கொண்டு அவனை நோக்கினாள். ‘முதற்சொல்!’ என அபிமன்யூ எண்ணினான். எழுக முதற்சொல்! இவள் அழகைக் குறித்ததாக அது இருக்கவேண்டும். அதை முன்னரே எண்ணி வகுத்துக்கொள்வது நல்லது. இல்லையேல் மானுட உள்ளத்திற்குள் செறிந்து முண்டியடிக்கும் தெய்வங்களிலொன்று எழுந்து தன் சொல்லை உரைத்துவிடும் என்றார் குர்மிதர்.

“துணைவியிடம் ஏப்பம் வருகிறது என்று முதல் பேச்சை எடுத்தவர்கள் இருக்கிறார்கள்” என்று அவர் சொன்னபோது அவர் துணைவர் சர்வகர் சிரித்தார். “உன் தந்தையின் மீசை எனக்குப் பிடிக்கவில்லை என்று மாளவ அரசர் அவர் மணந்த கூர்ஜரத்து அரசியிடம் சொன்னார் என்றொரு கதை எங்களிடையே புழங்குவதுண்டு” என்றார்  குர்மிதர். “மாளவமும் கூர்ஜரமும் ஏழாண்டு காலம் போரிட்டது அதனால்தான்.” சர்வகர் வெடித்துச் சிரித்து “விப்ரநாட்டரசர் தன் துணைவியிடம் உங்கள் அடுமனையில் இன்று என்ன உணவு? இஞ்சி மணம் வீசுகிறதே என்றாராம். அவள் உங்கள் தந்தை அடுமனைப் பணியாளனா என்று கேட்டாளாம்” என்றார். அபிமன்யூ அச்சிரிப்புகளால் எரிச்சலுற்றான். “நான் சொல்லவேண்டியதென்ன?” என்று குர்மிதரிடம் கேட்டான்.

“இளவரசே, இத்தகைய தருணங்களில் எது மிகவும் பழகியதோ அதுவே நன்று. ஓராயிரம் முறை முன்னோரால் சொல்லப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது அது” என்றார்  குர்மிதர். அபிமன்யூ “என்ன அது?” என்றான். “உன் அழகைக் கண்டு திகைத்துவிட்டேன். உன்னை அடைந்தது என் நற்பேறு” என்றார்  குர்மிதர். “இத்தனை எளிதாகவா? அணிகளின்றியா?” என்றான் அபிமன்யூ. “இத்தருணத்தின் உணர்வு மிக எளிதானது. முற்றிலும் எளிய சொற்களில் அது சொல்லப்பட்டால் ஒலியென்று அது எழுந்ததுமே உள்ளம் அதை ஒப்புக்கொள்கிறது. காவியத்திலிருந்தோ சூதர்பாடல்களிலிருந்தோ அணிச்சொற்களை கற்றுக்கொள்ளலாம். ஆனால் அவற்றை உரைத்த மறுகணமே உங்கள் உள்ளம் அதை ஏற்காமல் கூசி பின்னடையும். உங்களுள் வாழும் நுண்ணுணர்வு ஒன்று சிறுமை கொள்ளும். ஆகவே அடுத்த சொற்றொடரை அதை நிகர் செய்யும்பொருட்டு கடுமையாகவோ அழகற்றதாகவோ நீங்கள் அமைக்கக்கூடும்” என்றார்  குர்மிதர்.

சர்வகர் “முதற்சொற்றொடர் எளிதாக இருந்தால் பல தருணங்களில் அவ்வெளிமை கண்டு நம் உணர்வுகள் நிறைவின்மை கொள்கின்றன. முறையாக சொல்லப்படவில்லை என்று உணர்ந்து பிறிதொரு சொற்றொடரை உருவாக்குவோம். அது எதுவாக இருப்பினும் ஓர் உரையாடல் தொடங்கிவிடும். ஒரு சொற்றொடரிலிருந்து பிறிதொன்று எழுமென்றால் உள்ளம் ஒழுகத் தொடங்கிவிடுகிறது. அத்தருணம் இனிதாக வளரத் தொடங்கும்” என்றார். “எத்தனை சிடுக்கு!” என்ற அபிமன்யூ அவ்வெண்ணத்தாலேயே எளிதாகி புன்னகை புரிந்தான். “பிறரது தனித் தருணங்களை வேறெங்கோ இருந்து கணம் கணமென வகுத்துக்கொண்டிருக்கிறீர்கள். கந்தர்வர்களைப்போல” என்றான். “மனிதர்கள் நூல்களை நடிக்கிறார்கள். நூல்கள் அத்தருணங்களை மீண்டும் விரித்தெழுகின்றன” என்றார் குர்மிதர்.

முதற்சொல், எதை சொன்னேன்? நான் இன்னும் முதற்சொல்லே உரைக்கவில்லை. அத்தனை சொற்களும் கையெட்டாத் தொலைவில் கிடந்தன. தன்னுள்ளிருந்து பிறிதொருவன் எழுந்து வாயிலருகே சென்று நின்று நோக்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்தான். அக்கோணத்தில் அறை இருவர் நிழல்களும் சுவரில் மடிந்து எழுந்திருக்க கோணலாக விரிந்திருந்தது. அவள் மீண்டும் ஓரடி எடுத்து வைத்து மஞ்சத்தின் விளிம்பிற்கு வந்து தொற்றியவள்போல் இறகுச்சேக்கைமேல் அமர்ந்துகொண்டாள். இரு கைகளையும் மடியில் வைத்து தலைநிமிர்ந்து அவனை நோக்கியபோது முகம் மூடியிருந்த மென்துகில் நுரைப்படலமென வழிந்து கொண்டையின்மேல் தொற்றி நின்றது.

நெற்றிமேல் துளிர்த்து நின்ற சுட்டிமுத்து. புருவங்களுக்கு நடுவே சிறிய குங்குமப்பொட்டு. தேர்ந்த ஓவியனின் விரைவுக் கோடென புருவங்கள். சிறுகுழந்தைகளுக்குரிய மூக்கு. அவன் விழிகளை மீண்டும் திருப்பிக்கொண்டான். ஒவ்வொரு முறை இவளை நோக்குகையிலும் நான் அடையும் இக்குற்ற உணர்வு எங்கிருந்து எழுகிறது? படபடப்புடன் மஞ்சத்திலிருந்து எழுந்து நின்றான். ஆனால் அவன் உடல் அங்குதான் அமர்ந்திருந்தது. எழுந்த பிறிதொன்று விலகிச்சென்று சாளரத்தின் அருகே நின்று வெளியே நோக்கியது. இளங்காற்றில் இலைக்குவைகள் அசைந்துகொண்டிருந்தன. மிக அப்பால் ஏதோ பறவை மீண்டும் மீண்டும் ஒரு சொல்லை உரைத்துக்கொண்டிருந்தது.

இதை எந்த நூலும் சொல்லவில்லை. இவ்வறைக்குள் நான் நுழைகையில் ஆடிகளில் என பெருகிக்கொண்டே இருப்பேனென. உடைந்து துண்டுகளென மாறிவிடுவேனென. இங்கு என்னை என் விழிகள் வேவு பார்க்கின்றன. இந்தத் தனிமை அந்நோக்குகளால் முள்ளால் தொடப்பட்ட புழுவென சிலிர்த்துக்கொண்டிருக்கிறது. அவள் மெல்ல மூச்செடுத்தபோது அவ்வோசையால் கலைந்து அவன் மீண்டும் அவளை பார்த்தான். இரு உதடுகளும் ஒன்றையொன்று அழுத்தி பின் விலகுவதை மிக அண்மையிலெனக் கண்டான். சிவந்த நாநுனி வந்து கீழுதடை வருடிச் சென்றது. அவள் குரல் எழுந்தபோது அவன் திடுக்கிட்டான்.

“இளைய பாண்டவர் தன் தோழருடன் இருக்கிறார் என்றார்கள்” என்றாள். அவன் சில கணங்கள் முற்றிலும் சித்தம் உறைந்து இருந்தபின் துடித்தவன்போல உள்ளுயிர் கொண்டு “யார்?” என்றான். “தங்கள் தந்தை. இளைய யாதவருடன் சென்றபின் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்கள்” என்றாள். அபிமன்யூ “அவர்கள் இருவரும் அப்படித்தான். பிறர் அவர்களுடன் இருக்க இயலாது” என்றான். “ஆம், அதை பெண்டிரும் உணரமுடியாது” என்று அவள் சொன்னாள். பின்னர் இருவரும் கீழ்நோக்கி சரிந்த இமைகளுடன் அமர்ந்திருந்தனர்.

அவன் உடலெங்கும் சோர்வு பரவத்தொடங்கியது. கைகளும் கால்களும் உயிரற்று எடைகொண்டு மஞ்சத்தில் அழுந்தின. அப்படியே படுத்து கைகால்களை நீட்டிக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது. விழிகளை மூடினால் விழுந்துகொண்டே இருக்கும் உணர்வு எழும். துயின்றுவிட முடியும். கற்சிலை சேற்றிலென அம்மஞ்சத்தில் அழுந்தி மறைந்துவிட முடியும். மஞ்சம்! அச்சொல்லை எங்கே கேட்டேன்? அனைத்து மஞ்சங்களும் அனல் கொண்டவையே. அதை சொன்னவர் எவர்? மஞ்சத்தில் செவ்வனல் எழுவதை அவன் பார்த்திருக்கிறான். ஆயிரம் பசிகொண்ட நாவுகள் என.

அபிமன்யூ பாய்ந்தெழுந்து தன் தோளிலிருந்து நழுவி விழுந்த மேலாடையை இடக்கையால் எடுத்து மீண்டும் தோளிலணிந்தபடி “நான் செல்கிறேன்” என்றான். அவள் மறுமொழி சொல்லாமல் அவனை நோக்கினாள். விழிகளை விலக்கிக்கொண்டு “நான் செல்கிறேன், பணிகள் உள்ளன” என்றபின் நான்கு எட்டுகளில் அறை வாயிலை அடைந்தான். முன்னரே அவன் அங்குதான் நின்றிருந்தான் என்று உணர்ந்தான். கதவைத் திறந்து வெளியே சென்று மெல்ல மூடி இடைநாழியினூடாக நடந்தான். கதவு வண்டு முனகும் ஒலியுடன் மூடிக்கொண்டது.

வியர்த்த உடல்மீது அங்கிருந்த காற்று பரவி குளிரூட்டியது. அவன் காலடி ஓசை சுவர்களில், அப்பால் அறை வாயில்களில், மடிந்த கூம்புக்கூரையில் என பெருகி ஒலித்து சூழ்ந்தது. படிகளில் இறங்கி கூடத்தை அடைந்தான். அங்கிருந்த காவலன் முகத்தில் தெரிந்த வியப்பை புறக்கணித்து வெளியே சென்று முற்றத்தில் நின்றிருந்த புரவிகளில் ஒன்றை அணுகினான். புரவிக்காவலன் எழுந்து வணங்க அவனிடமிருந்து சவுக்கை பெற்றுக்கொண்டு கடிவாளத்தைப் பற்றி பாதவளையத்தில் மிதித்து கால் சுழற்றி ஏறி சேணத்தில் அமர்ந்தான். சவுக்கால் மெல்ல சுண்டியபோது புரவி எழுந்து உருளைக்கல் பரவிய முற்றத்தில் குளம்படிகள் பெருந்தாளமிட பாய்ந்தது. முற்றத்தைக் கடந்து சாலையிலேறினான். புரவிக் குளம்படிகளின் ஓசை அனைத்து மாளிகைச் சுவர்களிலும் பட்டு முழங்கிச் சூழ்ந்தது. எதிர்க்காற்றில் அவன் குழலும் ஆடையும் எழுந்து சிறகுகள்போல் பறந்தன.

அப்போது அங்கே அறைக்குள் அவன் விட்டு வந்த பிறிதொருவன் சாளரத்தருகே நின்றிருந்தான். நீள்மூச்செறிந்து நோக்கை விலக்கி மெல்ல மஞ்சத்தில் அமர்ந்து கால்களை மடித்து முழங்கால்களை கைகளால் வளைத்துக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்த அவளை பார்த்தான். அவள் குழலிலிட்ட ஆடை உதிர்ந்து சிந்திய பால் என தரையில் கிடந்தது. கன்னத்திலும் கழுத்திலும் நீல நரம்புகள் புடைத்திருந்தன. நோக்கற்றவையென விழிகள் விரித்திருக்க மூச்சில் முலைகள் எழுந்தமைந்தன. அவன் அணுகி குனிந்து அந்த மெல்லிய ஆடையை எடுத்து அவள் தோளிலிட்டு அவள் கைகளை பற்றிக்கொண்டான். “நான்தான்” என்றான். அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனை பார்க்க “ஆம்” என்றான்.

முந்தைய கட்டுரைஅயினிப்புளிக்கறி  [சிறுகதை]
அடுத்த கட்டுரைகாட்டைப்படைக்கும் இசை -கடிதங்கள்