ஐந்து : துலாநிலையின் ஆடல் – 6
சுருதகீர்த்தி மெல்ல அசைந்து சொல்லெடுக்க முனைவதற்குள் அவன் பேசப்போவதை அஸ்வத்தாமனும் துரியோதனனும் அவ்வசைவினூடாகவே உணர்ந்தனர். சல்யர் அவனை திரும்பி நோக்கியபின் துரியோதனனிடம் “ஆம், நான் சிலவற்றை எண்ணிப் பார்க்கவில்லை” என்றார். ஆனால் அச்சொற்றொடருக்கு நேர் எதிர்த்திசையில் அவர் உள்ளம் செல்வதை அவருடைய உடலசைவு காட்டியது. மீண்டும் அவர் சுருதகீர்த்தியை நோக்கியபோது அவர் விழிகள் மாறியிருந்தன. மீண்டும் அதில் குடிப்பெருமையும் மைந்தர்பற்றும் கொண்ட தந்தை எழுந்திருந்தார்.
அதை உணர்ந்தவனாக துரியோதனன் “பாரதவர்ஷத்தின் ஷத்ரியர்கள் தங்கள் பிளவுகளையும் வஞ்சங்களையும் மறந்து கைகோத்து நின்றிருக்கும் இந்த மாபெரும் அரணில் தாங்களும் முதன்மை ஷத்ரியராக நிற்க வேண்டுமென்று கோருகிறேன். அஸ்தினபுரியும் காந்தாரமும் சௌவீரமும் பால்ஹிகமும் சிந்துவும் மகதமும் அங்கமும் வங்கமும் கலிங்கமும் காமரூபமும் விதர்ப்பமும் சேதியும் கூர்ஜரமும் மாளவமும் கோசலமும் மிதிலையும் அயோத்தியும் என நாளை சூதர் ஒரு பெயர்நிரையை வகுக்கையில் அதில் மத்ரம் என்னும் பெயரும் சேரவேண்டாமா என்று நான் கேட்க விழைகிறேன். பிறிதொன்றும் நான் சொல்வதற்கில்லை” என்றான்.
சல்யர் அசைந்தமர்ந்து “ஆம். என் கடன் அதுவே. மூதாதையர் எங்கள் குடிக்கிட்ட ஆணையும் அதுதான்” என்றபின் திரும்பி சுருதகீர்த்தியைப் பார்த்து “ஆனால்…” என்றார். அஸ்வத்தாமன் “தாங்கள் எண்ணுவது புரிகிறது, மூத்தவரே. ஆனால் இப்பெரும்போர் தவிர்க்கப்படுவதற்கு ஒரு வழியே உள்ளது. அது வேதம் வெல்லப்பட முடியாதது என்னும் எண்ணத்தை அதை எதிர்ப்பவர்களுக்கு உருவாக்குவது. இன்று அவர்கள் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையை எப்படி பெறுகிறார்கள்? தங்களைப்போன்ற மாவீரர்கள் தங்கள் தரப்புக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பினால் அல்லவா?” என்றான்.
“பாஞ்சாலரும் நீங்களும் விலகிக்கொண்டால் பாண்டவர்களின் தரப்புதான் என்ன? எங்கிருந்து படைகொள்வார்கள்? எங்கிருந்து பொருள் திரட்டுவார்கள்? நீங்கள் அறியாததல்ல, எவர் வேதத்தை எதிர்த்து முகம்கொண்டு நின்றிருக்கிறாரோ அவருடைய நேர் உடன்பிறந்தார், பிறந்த கணத்திலிருந்து அவருடன் ஒரு கணமும் பிரியாதிருந்தவர், இன்று எதிர்த்து நின்றிருக்கிறார். பலராமரைவிட தங்கள் குருதியுறவு அணுக்கமானதல்ல. எந்தை தன் முதல் மாணவனுக்கெதிராக அஸ்தினபுரியின் அரசருடன் நிற்கிறார். அவரைவிட நூலறிந்தவரா தாங்கள்? தன் குருதியில் பிறந்த மைந்தருக்கெதிராக பிதாமகர் பீஷ்மர் இத்தருணத்தில் நின்றிருக்கிறார். அவருக்குப் பின்னர்தான் இவர்களுக்கு நீங்கள் தந்தை” என்றான் அஸ்வத்தாமன்.
“ஆம், பீஷ்மர் மட்டுமே எனக்கு முன்வழி என்று கொள்கிறேன்” என்றார் சல்யர். “சல்யரே, பாண்டவர் தரப்பில் நின்று நீங்கள் வேதத்திற்கெதிராக பொருதினால் உங்கள்முன் வில்லுடன் வந்து நிற்பவர்கள் யார்? முதன்மையாக பீஷ்மர். உங்களை அவர் வெல்வார் என நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனெனில் இப்புவியில் எவரும் அவரை வெல்ல இயலாது” என்றான் துரியோதனன். “தந்தையின் கையால் இறக்க நீங்கள் விரும்பலாம். அதை மண்மறைந்த உங்கள் தந்தையர் விரும்புவார்களா?”
சல்யர் அமைதி இழந்தவராக எழுந்து அறைக்குள் தலைகுனிந்தபடி நடந்தார். பின் சாளரத்தை அணுகி அதன் கட்டையைப் பற்றிக்கொண்டு வெளியே நோக்கியபடி நின்றார். “இம்மைந்தரை வளர்த்தவன் நான்” என்றான் துரியோதனன். “நாளை இவர்களை களத்தில் எதிர்கொள்ளக்கூடுமென்ற எண்ணமே துயர்கொள்ளச் செய்கிறது. ஆனால் இங்குள்ள ஒவ்வொன்றும் நுண்வடிவச் சொல்லென நாமறியா வெளியை நிரப்பியிருக்கும் வேதத்தால் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. அதன்பொருட்டு வாழவும் மடியவும் கடமைப்பட்டவர்கள் நாம். அப்பொறுப்பை நம் விழைவின்பொருட்டோ அச்சத்தின்பொருட்டோ துறப்போமெனில் அது கீழ்மை. நம் பற்றின்பொருட்டு துறப்போமெனில் மேலும் கீழ்மை அது.” சல்யர் “மெய்தான்” என்றார்.
“தங்கள் உறவு அங்கிருக்கிறதென்பதை நான் மறுக்கவில்லை. தங்கள் உடன்பிறந்தாள் மாத்ரியின் மைந்தர்கள் வில்லுடன் எதிர்கொண்டு வருவார்கள். தங்கள் அம்புகளால் ஒருவேளை அவர்கள் மடியவும் கூடும். தங்கள் மகள் வயிற்று மைந்தர்கள்கூட களத்தில் தங்களால் கொல்லப்படக்கூடும். அது தங்களை தாங்களே கொன்று கொள்வதுதான். ஆனால் நம் உடலை, உயிரை களத்தில் வேதத்திற்கு பலியிடுவது போலத்தானே அது? நாம் கொண்ட அனைத்தையும் ஆகுதியாகப் படைத்துதானே வேள்வி நிறைவு செய்கிறோம்? நம் கருவூலத்துச் செல்வங்களைப்போல இந்தப்பலியும் வேள்விக் கடன் மட்டுமே” என்றான் துரியோதனன்.
அஸ்வத்தாமன் “இத்தருணத்தில் போர் நிகழுமென்று கொள்ளவேண்டியதில்லை. வேதம் காக்க ஷத்ரியர்கள் கொண்டுள்ள உறுதியை மட்டும் நாம் வெளிப்படுத்தினால் போதும். போர் உறுதியாக நிகழாதென்றே எண்ணுகிறேன்” என்றான். துரியோதனன் “இது போர்வஞ்சினம் அல்ல. நாம் நம் குலமாளும் சொல்லான வேதத்திற்கு அளிக்கும் சோரியுறுதி” என்றான்.
சல்யர் சற்று தளர்ந்த நடையுடன் வந்து பீடத்தின் விளிம்பில் அமர்ந்துகொண்டு கைகளால் தாடியை அளாவத் தொடங்கினார். அவர் மீண்டும் உளம் மாறிவிட்டதை உடலே காட்டியது. அவ்வப்போது தாடியை நீவிய கைகள் நிலைத்து மீண்டும் அசைவுகொண்டன. ஒவ்வொரு முறையும் அவர் எண்ணுவதென்ன என்று அத்தனை தெளிவாக வெளித்தெரிந்தது. துரியோதனன் அஸ்வத்தாமனை நோக்க அவன் விழிகளால் ஆறுதல் கூறினான்.
சுருதகீர்த்தி துரியோதனனிடம் “தந்தையே, இனி நான் என் குரலை முன்வைக்கலாமல்லவா?” என்றான். சல்யர் அவனை திரும்பிப் பார்த்தபோது அவர் விழிகள் மங்கலடைந்து விலங்கின் பார்வை கொண்டிருப்பதை சுருதகீர்த்தி கண்டான். துரியோதனன் “ஆம் மைந்தா, உன்னை இந்த அவையில் அழைத்தது உன் தரப்பையும் நீ சொல்ல வேண்டுமென்பதற்காகத்தான். நம்மைப்போல் பல குரல்களை பல நூறு அவைகளில் பார்த்தவர் மூத்தவர். அவர் முடிவெடுக்கட்டும்” என்றான்.
சுருதகீர்த்தி சற்று முன்னால் வந்து சல்யரை வணங்கி “தந்தையே, தங்களுக்கு வழிகாட்டும்பொருட்டோ அறிதலைத் துலக்கும்பொருட்டோ இங்கு நான் சொல்லெடுக்க விரவில்லை. எளியவன் நான். உங்கள் குருதியில் முளைத்த சிறு தளிர். இக்குரலை உங்கள் உடலுக்குள்ளிருந்து எழும் ஒன்று என்று மட்டும் எண்ணுங்கள். இது உங்கள் உள்ளத்தின் ஒரு மூலையின் ஒழியாச் சிறுமுணுமுணுப்பு மட்டுமே” என்றான். தணிந்த உறுதியான குரலில் “நான் இங்கு பாண்டவர்களின் மைந்தனாக, பாண்டுவின் கொடிவழியினனாக மட்டும் சொல்லெடுக்கவில்லை. இளைய யாதவரின் குரலாகவே பேச விழைகிறேன். தாங்கள் அறிவீர்கள், எந்தை தன் தோழருக்கு தன்னை முழு படையலிட்டவர் என. தன் கல்வியை, மெய்யறிதலை, மீட்பை. வாழ்வையும் உயிரையும் உடைமைகளையும் குலத்தையும் தனதென்று எண்ணவில்லை அவர். ஆகவே நாங்கள் இளைய யாதவர் படைக்கலங்களன்றி வேறல்ல” என அவன் சொன்னபோது சல்யர் மெல்ல அசைந்தமர்ந்தார்.
“தங்களைப்போன்ற முதுதந்தை என்றும் குலஅறத்தையே முதன்மையாக கருத வேண்டும். அதை மைந்தர்களாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். மூதாதையே, ஒவ்வொரு விலங்கும் உண்ணும் ஒவ்வொரு துளி உணவும் மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்டு அதன் உடலில் குருதியாகின்றன என்கின்ற நூல்கள். ஒரு பகுதி உண்டு உயிர்வாழ்தலுக்காக. ஒரு பகுதி உறவுகளைப் பேண. மத்ரரே, பிறிதொரு பகுதி தன் கொடிவழிகளைப் படைத்து பேணி விட்டுச்செல்ல. எம் குலத்தின் முதுதந்தையாகிய நீங்கள் உங்கள் பெயர் கொண்ட மைந்தரைப் பேணும் கடமை படைத்தவர். இந்த அவையில் உங்கள் கொடிவழியினரில் ஒருவனாக நின்று எனக்கென படைக்கலம் ஏந்துங்கள், என் உயிர்காத்து களம் நில்லுங்கள் என்று கோரும் உரிமை எனக்குண்டு. என் தம்பியர் சதானீகனுக்கும் சுருதவர்மனுக்கும் இருக்கும் அதே உரிமை. எதன்பொருட்டும் அக்கடமையை நீங்கள் தவிர்க்க இயலாது.”
“அதை தவிர்ப்பீர்கள் என்றால் அதைவிடப் பெரிய ஒரு கடமை உங்கள்மேல் வந்து அமையவேண்டும். அது அரசரென மத்ர நாட்டுக்கும் அதன் குடிகளுக்கும் நீங்கள் கொண்ட கடமை. மூத்தவரே, நீங்கள் அறிவீர்கள். இன்று பூரிசிரவஸ் உருவாக்கியிருக்கும் பால்ஹிகக் கூட்டமைப்பே நமது மத்ர நாட்டுக்கு முதல் எதிரி. இதுநாள்வரை அதை பேணிவளர்த்து உங்களைச் சூழ்ந்து ஒரு கோட்டையென அமைந்து பல்லாயிரம் கைகளால் உங்கள் நாட்டு மண்ணைக் கவ்வ முயன்று கொண்டிருப்பது அஸ்தினபுரியின் படைவல்லமை. இன்று நீங்கள் அவர்களுடன் சேர முயல்வதென்பது தானும் சிம்மக்கூட்டங்களிலொன்று என்று மயங்கி அந்நிரையில் சென்று நிற்க முயலும் மானின் அறிவின்மையாகிவிடக்கூடும்.”
அவன் குரல் உயர்ந்தது. “மூத்தவர் கூறுக! இந்த அவையில் இனி ஒருபோதும் பால்ஹிகக் கூட்டமைப்பின் படைகள் மத்ரநாட்டுக்குள் நுழையாதென்ற உறுதியை அஸ்தினபுரியின் அரசர் அளிக்க முடியுமா? அதை அளித்தாலும் எதன்பொருட்டு அதை சௌவீரர்களும் பால்ஹிகர்களும் கடைபிடிப்பார்கள்? இன்றுவரை அவர்களின் படைகள் மத்ரநாட்டுக்குள் நுழையவே இல்லை என்றால் அது எந்தையர் இருவரின் தோள்வலிமையும் வில்வலிமையும் கண்ட அச்சத்தால் மட்டுமே. படைகொண்டு என்றேனும் அவர்கள் எழுந்துவந்து பழிதீர்க்கக்கூடும் எனும் கருதலால். இத்தனை காலம் இரு காவல்நிலைகளென நின்று மத்ர நாட்டைக் காப்பாற்றியது அவர்கள் கொண்ட புகழ். இனிமேலும் அவர்கள் கொடிவழியினரின் காப்பே மத்ரநாட்டுக்குரியது என்று உணர்க!”
“இன்று எளிய சொல்லாடல்களுக்கு மயங்கி அஸ்தினபுரியுடனோ அவர்களின் கைகளென அங்கு திகழும் சௌவீர நாடுகளுடனோ பால்ஹிகக்குடிகளுடனோ உறவு கொண்டீர்கள் என்றால் மத்ரநாட்டை வைத்து ஆடி இழக்கும் பழி உங்களைச் சூழும். மத்ர நாட்டை காப்பாற்ற வேண்டுமென்ற எந்தப் பொறுப்பும் இவர்களுக்கில்லை. அப்பொறுப்பு இருப்பது எந்தையரிடம். எங்கள் கொடிவழிகளிடம். ஏனெனில் நீங்கள் எங்கள் குருதி. உங்கள் வீழ்ச்சி எங்கள் வீழ்ச்சியே. நீங்கள் அழிந்தால் தீராப்பழி கொள்ள வேண்டியவர்கள் நாங்கள் மட்டுமே. மூதாதையே, நாளை இடையளவு நீரில் நின்று நீத்தாரை எண்ணி கையள்ளி நீரளிக்கையில் உங்கள் பெயரையும் உங்கள் தந்தை பெயரையும் சொல்ல வேண்டிய கடன் கொண்டவர்கள் நாங்களே. மத்ர நாட்டின் பொருட்டு பிறிதெவருடனும் நீங்கள் இணைய முடியாது. மத்ர நாட்டின்பொருட்டு நீங்கள் வந்து நின்று படைக்கலம் எடுத்து தோளிணை கொண்டு களம் நிற்க வேண்டியது இந்திரப்பிரஸ்தத்துடன் மட்டுமே.”
“மூத்தவரே, தாங்கள் அறியாததல்ல. எளியவன் சொல் மிகையாகுமென்றால் மடியில் அமர்ந்த குழந்தையின் கால் நெஞ்சில் பட்டதென்று மட்டுமே தாங்கள் கொள்ள வேண்டும். தன் குலக்கடனையும் அரசக்கடனையும் ஒருவன் துறந்து செல்லலாமென்றால் அது வேதக்கடமையின்பொருட்டே. ஆம், ஷத்ரிய குடியாகிய தாங்கள் வேதத்தை நிலைநாட்டும் பொறுப்பு கொண்டவர். அதற்கென படைமுகப்பில் நின்றிருக்க வேண்டிய மூத்த வீரர்களில் ஒருவர். ஐயமில்லை. ஆனால் வேதம் தன் காவலென வகுத்த அந்த ஐம்பத்தாறு நாடுகளில் மத்ரமும் ஒன்றா என்ன? வேதம் வளர்த்த தொல்முனிவர் அவ்வனலைச் சூழ்ந்து காக்கும்பொருட்டு அமைத்த வாள்வேலி அந்த ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகள் மட்டுமே. நாம் வேதப்பயிர் விளைவித்து அறுவடைகொள்ளும் உழவர் அன்றி பிறரல்ல.”
“வேதம் விளையும் பெருநிலமென பாரதவர்ஷத்தை அமைத்தனர் முனிவர். வேதம் நூறு மேனி என விளைந்தெழும் அமுதப்பயிர் என்கின்றன நூல்கள். இன்று வேதம் வளர்ந்து தென்கடல் எல்லைகளை முட்டுகிறது. மேற்கின் வன்பாலை நிலங்களைக் கடந்து செல்கிறது. மேரு மலைமேல் சென்று அலையடிக்கிறது. இந்த ஐம்பத்தாறு நாடுகள் அமைந்திருப்பது சைந்தவமும் காங்கேயமும் என அன்றிருந்த மூதாதையர் கண்ட நிலத்தில் மட்டுமே. பிற நிலங்களில் வேதம் காப்பது யார்? புதிய ஷத்ரிய குலங்கள் எழுந்து வரவேண்டாமா? பனிமலையிலும் தென்கடலின் அலைக்கரையிலும் வாளுடன் வீரர்கள் எழவேண்டியதில்லையா? மூத்தவரே, அப்படி எழுந்த தொல்குடியிலிருந்துதானே மத்ரநாட்டு ஷத்ரியர் உருவானார்கள்? ஐம்பத்தாறு நாட்டு மன்னர்களுக்கிருக்கும் அதே கடமை அமைந்தது அவ்வாறல்லவா?”
“இவ்வாறு இதை பகுப்பதற்கு முன்னர் தொல்வேதம் புரந்த பண்டை மூதாதையர் பதினாறு ஷத்ரிய குலங்களாக இந்நிலத்தை பகுத்தனர். ஷோடச ஜனபதங்களின் தலைவர்களால் அன்று வேதம் காக்கப்பட்டது. முந்தை மூதாதை ஒருவன் பதினாறை ஐம்பத்தாறாக்குவான் என்றால் இந்த ஐம்பத்தாறை நூற்றெட்டாக்குவதற்கு ஒருவன் எழுவதில் என்ன பிழை? இது இங்கு என்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது, மத்ரரே. வேதஅனல் விளைய இங்கே ஷத்ரியக் குலங்களை அழித்தாகவேண்டும் என எழுந்த பரசுராமரின் குருமரபு இன்றும் உள்ளது. அனல் அளித்து அது தொல்குடியினரை ஷத்ரியர்கள் என அமர்த்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் வாள்முனைகளால் வேதம் நாம் அறியா நிலங்களிலும் தழைக்கிறது.”
“பரசு ஆழியானது என்று கொள்க!” என்றான் சுருதகீர்த்தி. “அதை ஏந்தியவர் வேதத்தை அழிக்கவில்லை, அதை கூர் தீட்டுகிறார். அறுவடை செய்கிறவனை வேளாண்மை அறியாதவன் பயிரை அறுத்து அழிப்பவன் என்று எண்ணக்கூடும். அவன் விதை கொள்கிறான். நூறு மடங்கு நிலங்களுக்கு அப்பயிரை கொண்டு செல்கிறான். இளைய யாதவர் வேத எதிரி அல்ல. வேதத்தை விதைகளென விரிக்க வந்த மெய்வேதத்தின் தலைவன். முனிவர்களில் வியாசன். அறிஞர்களில் கபிலன். அரசே, மன்னர்களில் அவர் பிருது. தாங்களோ நானோ அவர் அறிந்த வேதத்தை அறிந்ததில்லை. அவர் சென்ற தொலைவு செல்லும் சிறகுகள் நமக்கில்லை.”
சுருதகீர்த்தி தன் சொற்களினூடாக சென்றுகொண்டிருந்தான். “ஆனால் இங்கு நிகழும் இப்பூசல் வேதத்திற்கானதல்ல, வேதம் காக்கும் உரிமைக்கானது. அவ்வேறுபாட்டை தாங்கள் அறிந்தாகவேண்டும். வேதமே அழிந்தாலும் வேதம் காக்கும் உரிமையை பிறருக்கு விட்டுத்தரமாட்டோம் என்று எண்ணுகிறார்கள் இந்த ஐம்பத்தாறு ஷத்ரியர்கள். வேதம் எவருக்கும் தனியுரிமை அல்ல. அது மெய்யறிவு என்றால் மானுடத்துக்குரியது என்கிறார் இளைய யாதவர். மூதாதையே, அது பாரதவர்ஷத்தினருக்கு மட்டும் உரியதல்ல. காப்பிரிகளுக்கும் பீதர்களுக்கும் யவனர்களுக்கும் சோனகர்களுக்கும் உரியது என்கிறார். வேதம் வளரவேண்டுமென்று எண்ணுபவர்கள் சென்றடைய வேண்டிய இடம் இளைய யாதவரின் தரப்பு மட்டுமே.”
“இம்மூவகையிலும் உங்கள் கடமை ஒன்றே” என்றான் சுருதகீர்த்தி. “பிறிதொன்றை எண்ணினால் இந்த யுகம் அளிக்கும் நல்வாய்ப்பை இழந்தவர் ஆவீர். எண்ணி முடிவெடுங்கள். உங்கள் காலடியில் அமர்ந்து சொல்லுக்காக காத்திருக்கிறேன்.” அவன் சொல்லோட்டம் நின்றபோது அறைக்குள் அமைதி நிலவியது. துரியோதனன் முகம் மலர்ந்து அஸ்வத்தாமனிடம் “இவன் இப்படி சொல்லாளுவான் என எண்ணியதே இல்லை, உத்தரபாஞ்சாலரே. இவனைக் கற்பித்த ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து பரிசளிக்க விரும்புகிறேன்” என்றான். அஸ்வத்தாமன் “அர்ஜுனனின் குருதி” என்று சொல்லி புன்னகை செய்தான்.
சல்யர் பெருமூச்சுடன் எண்ணம் மீண்டு “ஆம். மைந்தன் உரைத்தவை மெய்யே. முந்நூறாண்டுகள் ஐம்பத்தாறு ஷத்ரிய குடிகளின் அடிமையென்றிருந்தது எங்கள் குலம். என்றும் அவ்வாறிருக்க இயலாதே” என்றார். துரியோதனன் “ஆனால் அக்குடிகள் முனிவர்களால் வகுக்கப்பட்டவை” என்றான். சல்யர் “ஆம், வகுத்த காலத்தில் அது சரிதான். இன்று என் நாட்டின் பாதியளவுகூட இல்லாத நாடு மிதிலை. எந்த அவையிலும் எனக்கு மிதிலைக்கு நிகரான அரியணை போடப்படுவதில்லை. என் படையில் நூற்றில் ஒன்றுகூட இல்லாத நாடு கோசலம். ஓர் அவையில் கோசல மன்னன் நுழைந்து அமர்ந்த பின்னரே நான் அமர முடியும் என்றல்லவா நெறிகள் வகுக்கின்றன?” என்றார்.
உரத்த குரலில் “அந்நெறிகளை எனக்கு ஆணையிடுவது வேதம். ஆம், வேதம் அழியாதது, மாறாதது. வேதத்தின் பொருட்டுள்ள சடங்குகள் மாற்றப்பட்டாக வேண்டும். நெறிகள் விதிக்கப்பட்டாக வேண்டும். எல்லை விரிக்கப்பட்டாக வேண்டும்” என்று சல்யர் கூவினார். “வருவது கலியுகம் என்கிறார்கள். அன்று மண்ணில் வாழும் ஒவ்வொன்றும் விரியும். எழுவன அனைத்தும் உச்சம் கொள்ளும். நன்றும் தீதும். அன்றும் நாங்கள் குறுகி மண்ணில் கிடக்கவியலாது.”
துரியோதனன் “அர்ஜுனனின் மைந்தன் இத்தனை கூரிய சொற்களைச் சொல்வது எனக்கு எவ்வகையிலும் வியப்பில்லை. தந்தை தகுதியுடையவன் என்றால் மைந்தர்கள் அத்தகுதிகளுடனேயே பிறக்கிறார்கள். மைந்தனின் குரல் அளித்த உவகையை நான் மறைக்க விரும்பவில்லை” என்றான். “ஆனால் நான் கேட்க விரும்பும் ஐயம் இதுவே. நான் மைந்தனைப்போல வேதம் கற்றவனோ வேதமுடிவு தெளிந்தவனோ அல்ல. என் ஐயம் மிக எளிது. தன் குலத்தின்மீது கொடிவழிகள்மீது அக்கறை கொண்ட அரசன் ஒருவனின் எளிய கேள்வி. அதற்கு இளையோன் சுருதகீர்த்தியே மறுமொழி சொல்லட்டும்.”
சுருதகீர்த்தி தலைவணங்கினான். “மைந்தா, இளைய யாதவன் முன்வைக்கும் அந்த வேதத்தில் அசுரவேதம் அடக்கமா? இல்லையென்றால் எதன் பொருட்டு வஜ்ரநாபனும் பாணனும் சம்பரனும் பிற அசுரகுடிகள் நூற்றெண்மரும் அவனுடன் படை கூடியுள்ளனர்? சொல்க! இந்நிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக அசுரரும் அரசரும் போரிட்டது வேதத்தின் பொருட்டே. வேதம் காக்க அவன் நின்றிருக்கிறான் என்றால் அசுரர்கள் ஏன் அவன் பின் படைதிரண்டு நின்றிருக்கிறார்கள்? நேற்று மகாபலியின் பின்னால் அணி திரண்டார்கள். அதற்கு முன் ஹிரண்யாக்ஷனின் பின்னால். அதற்கு முன் விருத்திராசுரனுடன். அசுரர் திரண்டது அனைத்தும் வேதத்திற்கு எதிராகவே. மீண்டும் இன்று அவர்கள் ஒருங்கு திரண்டிருக்கிறார்கள். அதன் பொருளென்ன?”
சுருதகீர்த்தி “அசுரவேதமும் நாராயண வேதத்தில் அடங்கியதே” என்றான். எங்கோ அச்சொல் சென்று தாக்க சல்யர் சினத்துடன் திரும்பி “அது எங்ஙனம்? அவர்களின் வேதம் எப்படி நம்முடையதாகும்?” என்றார். சுருதகீர்த்தி பணிந்து “தாங்கள் அறியாததல்ல, மூத்தவரே. தங்கள் கல்வி எனக்கில்லை. இதை என் அறிவை மதிப்பிடும்பொருட்டு தாங்கள் கேட்பதாகவே கொள்கிறேன். மானுட உயிர்கள் அனைத்திற்கும் வேதம் அருளப்பட்டுள்ளது. விலங்குகளுக்கும் புழுபூச்சிகளுக்கும்கூட அவற்றுக்கான வேதம் இருக்கக்கூடுமென்று சாந்தீபனி மரபு கொள்கிறது. வேதங்கள் வேறுபடுவது அவற்றை விளங்கிக்கொள்ளும் இடத்தில்தான்” என்றான்.
“மெய்ப்பொருளை உணரும்போது வேதங்கள் ஒன்றாகின்றன. அனைத்து நதிகளும் கடலையே சென்றடைவதுபோல, அனைத்து இலைகளிலும் மரத்தின் சுவையே திகழ்வதுபோல. நுண்வடிவில் விதையில் உறைவது ஆயிரம் கிளைகொண்ட மரமென்றெழுவதுபோல. மூத்தவரே, ஆருணியாகிய உத்தாலகர் தன் மைந்தர் ஸ்வேதகேதுவுக்குச் சொன்ன மெய்மை இது. தோன்றுமிடத்தைக்கொண்டு நதிகளை புரிந்துகொள்ளலாம். விண்துழாவுகின்றனவா மண்ணில் கவ்வியுள்ளனவா என்றுவைத்து மரத்தையும் புரிந்துகொள்ளலாம். மூத்தவரே, கடலை புரிந்துகொள்வதற்கு புலன்கள் போதாது. நுண்மையைப் புரிந்துகொள்வது நுண்மையாலேயே இயலும். முழுமையை அறியாமல் வேதத்தை உணரவியலாது. அதுவே வேத முடிவு எனப்படுகிறது. அதுவே இரண்டின்மை. மெய்யறிதல்.”
சுதசோமன் சுருதகீர்த்தியின் கையை பிறர் அறியாமல் தொட்டான். ஆனால் தன் சொற்களால் தானே எழுச்சிகொண்டு சுருதகீர்த்தி மேலும் சொன்னான் “மெய்மை நோக்கி செல்லுந்தோறும் அசுரவேதமும் நாகவேதமும் ஒன்றென்றாகின்றன. அவ்வொருமையில் நின்று அனைத்தையும் ஒன்றிணைக்கும் அறிதல் இளைய யாதவரின் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது. அதுவே துவாபர யுகமெனும் மரத்தில் விளைந்த கனி.” அதை சொல்லிக்கொண்டிருக்கையிலேயே சுதசோமன் ஏன் தன் கையை தொட்டான் என்று புரிந்துகொண்டான். அவன் குரல் தழையத்தொடங்கியது. சல்யர் அவன் சொல்வதை சற்றும் புரிந்துகொள்ளவில்லை. புரியாதவற்றை இளையோர் சொல்லிக்கேட்கும் முதியவர்களைப்போல அவர் சினம்கொண்டார். “நாம் நூலறிந்தோரோ மெய்யுணர்ந்தோரோ அல்ல, தந்தையே. நம் எல்லைக்குள் நின்று நாம் அவரை புரிந்துகொள்ள முடியாது” என்றான்.
உடல் மெல்ல நடுங்க “என்ன உளறிக்கொண்டிருக்கிறாய்?” என உரக்கக் கூவியபடி சல்யர் எழுந்தார். “வேதங்களின் மெய்யறிவதற்கு அவன் என்ன ரிஷியா? கன்றோட்டி வாழ்பவன், தன்னை கற்றுக் கடந்தவன் என்று எண்ணிக்கொள்கிறானா?” என்றார். சுதசோமனின் கண்கள் மாறுபட்டன. “மூதாதையே, நான் சொல்லும் சொற்கள் இளைய யாதவரின் காலடியிலிருந்து எழுந்தவை. அவர் அடியமர்ந்த தந்தையரின் மைந்தன் நான்” என்றான் சுருதகீர்த்தி. அவன் குரல் நடுக்கத்துடன் தணிந்தமையால் சல்யர் மேலும் வெறிகொண்டார். “யாரவன்? வேதம் உசாவப்படும் அவை நின்று பேசும் தகுதி யாதவனுக்கு எப்படி வந்தது? ஞானியர் அறிந்த முழுமையை தான் அறிந்தேன் என்று நடிக்கும் வீணனை எப்படி ஒப்பியது பாரதவர்ஷம்? அவன் ஆணவத்தைக் கண்டு அறிந்தோர் நாணவில்லையா என்ன?” என்றார்.
அறியாது முன்னகர்ந்து சல்யரை தடுக்கும்பொருட்டு கைநீட்டினான் துரியோதனன். அதனால் மேலும் தூண்டப்பட்டு “அவன் எவனென்று நான் அறிவேன். பிடிபட்ட திருடன் நகர்காண வந்த அரசன் என்று நடிக்கிறானா? கீழ்மகன், தன்னை ஆயிரம்தலை கொண்ட சேடன் என்று எண்ணித்தருக்கும் புழு…” என்றார் சல்யர். அச்சொல்லொழுக்கை தன் இடையிலிருந்து வாளை உருவிய ஒலியால் நிறுத்திய சுருதகீர்த்தி “அடேய், மலைமகனே. இனி ஒரு சொல் எழுமென்றால் இங்கேயே உன் இழிதலையைக் கொய்து தரையிலிட்டு உதைப்பேன்” என்றான். முகத்தில் அறையப்பட்டவர்போல சல்யர் திகைத்து ஓர் அடி பின்னால் வைத்து வாயைத் திறந்து சமைந்து நின்றிருக்க உருவிய வாள் கையில் இருந்து நடுங்க சுருதகீர்த்தி முன்னால் வந்தான். விழிநனைந்து மின்ன, உதடுகள் நடுங்க, ஓங்கிய குரலில் கூவினான்.
“மூடா, கீழ்மகனுக்குரிய அறிவின்மையை சொல்லென இங்குரைத்தாய். யார் நீ? இன்றிருந்து நாளை உடையும் சிறு குமிழி. என்றும் இமயமலை முடிகள்போல மானுட குலங்களின் மேல் நின்றிருக்கும் என் தலைவனை நாவளைத்து ஒரு சொல் உரைக்க எப்படி துணிந்தாய்? அர்ஜுனனின் மைந்தன் முன் நின்று கண்ணனை சிறுமைசெய்யும் எண்ணம் எழுந்தமையாலேயே என்றேனும் ஒருகளத்தில் உன் நெஞ்சறுக்க பாண்டவரின் வாளி எழும். உன் களவீழ்ச்சி குறிக்கப்பட்டுவிட்டது. உள்ளிருண்டவனே, ஞானமென்று எதை அறிவாய்? உன்னுள் நுரைத்திருக்கும் அந்த எளிய ஆணவத்தை மட்டுமே. இருந்து மறைந்த எண்ணிலாக் கோடிகள் கடக்கமுடியாத அழுக்கு நதி அது. அதற்கப்பால் நீ அறிந்ததுதான் என்ன?”
சல்யர் கால்தளர்ந்து கைதுழாவி பீடத்தின் விளிம்பைப் பற்றி அமர்ந்துகொண்டார். துரியோதனன் ஏதோ சொல்ல முனைய அஸ்வத்தாமன் அவனைப் பிடித்து நிறுத்தினான். “என்னடா எண்ணினாய்? உன் துணை இல்லையேல் மெய்மை வெல்லாதென்றா? அறிவிலியே, மெய்மையின் பக்கம் நிற்க வேண்டுமென்று உன்னிடம் வேண்ட வந்தது எங்களுக்காக அல்ல. உனக்காக. உன்னைக் கொன்று வீழ்த்தும் பழி எங்கள் கைகளுக்கு வரக்கூடாதென்பதற்காக. நீயோ, உன் குடியோ, இதோ இங்கிருக்கும் என் தந்தையோ, அவரைச் சார்ந்த அரசகுடியோ, இந்நிலத்தில் வாழும் ஷத்ரியர்கள் அனைவருமோ, ஏன், இம்மண்ணில் இன்று வாழும் மானுடக்குடிகள் அனைவருமோ எதிர்த்து நின்றாலும் வெல்வது பீலி சூடியவனின் நாவில் எழுந்த சொல் மட்டுமே. அதிலெனக்கு எந்த ஐயமும் இல்லை.”
திரும்பி அவர்கள் அனைவரையும் நோக்கி அவன் சொன்னான் “அறிக, வெல்லும் சொல் ஒன்றே! இவ்வாறு புவி பிளந்து குருதி பெருக்கித்தான் அது மண்ணிலெழும் எனில் அதுவே நிகழ்க! அது இங்கு வாழும். இப்புவியில் மானுடன் நாவில் இறுதிச்சொல் திகழும் வரை அது வளரும்.” நீண்ட மூச்சுடன் நிலைமீண்டு சல்யரை நோக்கி கைசுட்டி “நீ நல்வாய்ப்பை உன் ஆணவத்தாலும் சிறுமையாலும் இழந்தாய். இனி நீ கால்பணிந்து கோரினாலும் உன் உறவு பாண்டவக் குடிக்கில்லை, நன்று!” என்று தலைவணங்கி வெளியே சென்றான்.
சுதசோமன் சல்யரை வெறுமனே நோக்கிவிட்டு அவனை தொடர்ந்தான். சல்யர் இடதுகால் வெட்டி வெட்டி இழுபட முகம் கோணலாகி வாய் வளைந்திருக்க கடைவாயில் நுரைக்கீற்றுடன் விழிநீர் ததும்ப அமர்ந்திருந்தார்.