எழுத்தாளன் ஆவது

DSC_0101

நந்தகுமாரின் கடிதங்கள்

விக்ரம், மகாதேவன் அவர்களின் கடிதங்கள் வாயிலாக என்னை அவதானிக்க நினைத்தேன். முதலில் அவர்களுக்கு நன்றி. ஆனால் ஒரு பெரிய அவ நம்பிக்கையில் சிக்கிக் கொண்டிருப்பதைப் போல உணர்கிறேன். ஒரு புனைவெழுத்தானாய் என்னை உணர முயல்கிறேன். ஆனால் நான், என்னுடைய எழுத்துக்கள் உரு பெறும் போது ஒரு ஜெராக்ஸ் நீ! என்று உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. பின் மிகுந்த தேக்க நிலைக்கு சென்று விடுகிறேன். உண்மையில் என்னுள் நான் ஒரு எழுத்தாளன் என்ற சுய நம்பிக்கை இன்னும் ஏற்படவில்லையோ என்று தோன்றுகிறது. திரும்ப மூர்க்கமாக வாசிக்கத் தொடங்குகிறேன். நிகாஸ் கசண்டாகிஸின் கிறுஸ்துவின் கடைசி சபலம் நாவலைப் படித்து வருகிறேன், ஆங்கிலத்தில். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே அதை தமிழில் என்னுடைய அவதானிப்பிற்கும், தேடலுக்கும் மற்றும் என்னுடைய கதை மொழிதலை உணர்ந்து கொள்வதற்காக மொழி பெயர்க்க முயன்று வருகிறேன். வரிக்கு வரி பெயர்த்தலில்லாமல் என்னுடைய காட்சியில் கிறுஸ்துவை அணுக முயலும் ஒரு தேடலாகத்தான் இதனை முயல்கிறேன். அதன் இரு வெவ்வேறு பத்திகளை மட்டும் கீழே இணைத்துள்ளேன். தங்களின் வழிகாட்டலும், என்னுடைய பலவீனமும் எனக்கு தெரிய வேண்டும்.

1
வெறுமை தொனிக்க, இளைஞனை நோக்கி, பாதி மூடிய விழிகளுடன் தலைகுனிந்தான் யூதாஸ்.
மறுதலிக்க முடியாத அசைவின்மை, நெற்றியில் குத்திட்டு நிற்கும் கரு நீல நுனி. விரிந்த பார்வையில், தேற்ற இயலாத துக்கக் கனாக்களின் காட்சிப்படலம். பழுத்து உருளும் வெண்கோளங்கள் முன் துடிதுடிக்கும் வெற்றின் அந்திமம். அரூபமாய் சுருண்டு அப்பால் தழலெரியும் நெழிவுகள். காலங்காலமாய் நிகழ்வுகளின், எண்ணங்களின், மருட்சிகளின், தாபங்களின், அலைக்கழிப்புகளின், பித்தின் துளைக்கும் ஊசி நுனிகள். அது நிலமெங்கும் எழுந்து தன் குருதியுமிழும் குமிழ்க்கண்களால், நிலையின்றி, ஊசலாடியது. எந்தப் பதிலும் சொல்ல வழியின்றி நடுனடுங்கும் விரல்களைப் பற்றி, ஏதோ காட்சிகளுக்கப்பால் அமைதியின்றி தழலும் அந்த நிலை விளியைக் கூர்ந்திருந்தான் இளைஞன்.

யூதாஸ் முற்றிலுமாக பொறுமையிழந்திருந்தான். அசையாது நின்றிருந்த இளைஞனை உள் நோக்கினான். அவனது பார்வை உலகைக் கடந்திருந்தது. அங்கு அவிழ்க்க இயலாக் கருவறை இருள். தடையின்மையால் அனைத்தின் ஒழுங்கும் குலைந்து, மீள மீள கால்கள் புதையும் கருமைத் தொழி. தூரத்தில் ஒலியின்மையைக் குடித்துக் கொண்டு, அமைதியற்ற கூழாங்கற்கள் உருள, பாளம் பாளமாய்க் கிழிந்த இன்மையின் ஊற்றுக் கண்ணிலிருந்து, வெளியைக் கவ்விக் கொள்ள நீலவாய்த் திறந்து, கரைகளில் மின்னல் துமிகளால் அரணிட்டு, பாதையின்றி நெளிந்தோடும் இருண்மையின் நதி. நிலத்தின் ஏந்திய கைகளாய் வானமுந்தி விரிந்த மரங்களின் பாதாள நுண் சதுப்பில், விஷப்பற்களால் சமரிட்டு, பைசாச நுண்புழுக்கள் நொதிக்கும் சேற்று வண்டல்.
பார்வை எட்டும் தொலவு வரை காரிருள். அப்பால். பள்ளத்தாக்குகளில் மலர்களின் மொக்கவிழ்ந்து சுகந்தம் வழிந்தது. செடிகளும் மரங்களும் லீலையில் லயித்திருந்தது. தென்றலின் மென் நகர்வில் அசைந்தாடியது. மலையுச்சி மட்டும் அமைதியிழக்காமல் மோனம் காத்தது. காற்றின் உள்ளீடற்ற கமகங்கள், புல் நுனிகளில் நுழைந்து அமைதியின் குளிர் தீண்டலில், ஆகாசத்தில் துருவன் சிமிட்டியது. முகில்களின் மர்ம நகர்வில், பாதி நுழைந்திறங்கி தன் ஸ்பரிசக்குவையை உச்சிப்பாறையில் தெளித்து நிழலாடியது. ஒளி பின்னிய அந்த நிழல் வலைக் கண்ணியில் பாழின் கருமை உறைந்த சிலுவை. வருகையின் காத்திருப்பாக தனிமையில் சாசுவதமாய் நின்றிருந்தது.
பார்வையை விலக்கினான் யூதாஸ். வெளிச்சத்தின் அழிமுகத்தில் கண்கள் உறுத்த தலையை உலுக்கினான். உன்னால்…நீ…நீ… பேச முற்பட்டான். ஆனால் வார்த்தைகள் தடுமாற உதடுகள் சுளித்தன. இளைஞனை ஆரத்தழுவி முத்தமிடத் தோன்றியது. ஆனால் மரத்திருந்தான். சதுக்கத்தில் ஊன்றி வைக்கப்பட்ட மரத்தூண் போல.

2

அவனும் சிலுவையுமன்றி அறையினுள் தனிமையின் வெறுமை பாளம் பாளமாய் சிதறிக் கிடந்தது. சுவர்க்கோழியின் நிலைத்து பின் மறுதலிக்கும் கூசிய ஒலி. சிலுவையில் அறையப்படுவதை, சுற்றிலும் வலியின் ராட்சசக் கொக்கிகள் இழுபடுவதை, கிழியும் தோலில் உதிரம் பீய்ச்சியடிப்பதை, தாங்கொணாது நசுங்கும் உயிரின் மீள முயலும் துடிதுடிப்பை தன் முன் நிறுத்திய சிலுவையின் சமன் செய்த மர ஸ்பரிசத்தைத் தடவிக் கொண்டே, தனக்குள் நிகழ்கின்ற படியாய் மோனத்தில் உருவகித்து உறைந்தான். பக்கத்து அறையில் விளக்கேற்றப்பட்டதும் விரைந்தெழுந்த அந்த சாம்பல் வண்ணக் காட்சி அவன் சித்தத்திலிருந்து உதிர்ந்து கரைந்தது. அவன் அம்மா மேரி, காலை உணவை அவசரமாக செய்யத் தொடங்கியிருந்தாள். அண்டை, அயலார்கள் யாவரும் ஏற்கனவே புறப்பட்டு சென்றிருந்தனர். தந்தையாரின் குரல்மட்டும் பொருளற்ற கூப்பாடாய் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தது. தெரு ஆளரவமற்று மயானக்காட்சி அளித்தது.
சிலுவையின் மேற்பரப்பில் இருந்த சிராய்ப்பின் கணுக்கள் அவனது விரல் நுனிகளில் நுழைந்து ரத்தம் கசிந்தது. அசைவின்மை பற்றிக் கொள்ள கண்களை இறுக மூடி, தனது இதயத்தின் ஊசலாட்டத்தை நிலை நிறுத்திக் கேட்டான். வியர்வை வழிந்தோடி தேகம் முழுதும் நனைந்திருந்தது. தலைக்கு மேலே சிறகடிப்புகள். இறுகப்பற்றின கூர் நகங்கள். இன்னதென்று ஊகிக்க முடியாத பைசாசப் பிடியில் அவனது மண்டை ஓடு சிதறுவதைப் போல, மூளைப்பிதுங்கலில், மெல்லிய நரம்புகளுள் நுழைந்தன உகிர்கள், குருதி நாற்புறமும் வெடித்துக் கொப்பளிக்க, பற்களை இறுக்க கடித்துக் கொண்டான். அவளை திரும்பவும் பயமுறுத்தி விடக்கூடாது என்று, வலியின் விம்மலை தனக்குள்விழுங்கி மௌனிக்க முயன்றான். உள்ளும் புறமும் ஒருமித்த ஓலம், “அவன் வந்து விட்டான்” “அவன் வந்து விட்டான்” என்று. அடக்கி வைத்திருந்த மௌனம் குரல்வளையைக் கிழித்தது. தனது உள்ளங்கைகளால் தலையின் இருபுறமும் அழுத்தி உலுக்கினான். எங்கும் அந்தக் குரூரக் குரலின் எதிரொலி “அவன் வந்து விட்டான், திரும்ப வந்து விட்டான்”. ஒரு நிலைப்படுத்த முடியாத சூழலில், அவன் தலைகுப்புற மண்ணில் விழுந்தான். கைகளால் தலையை அழுத்திக்கொண்டே, எச்சில் உமிழ்ந்தான். வெட்டுண்டதைப் போல கால்கள் தரையில் உராய புரண்டான்.
அவனது பன்னிரு வயதில் அது முதன்முறை நிகழ்ந்தது. ஒரு பிரார்த்தனைக் கூடத்தில். இறைவனது புனித வார்த்தைகளை வயதானவர்கள் ஒப்புவித்துக் கொண்டிருந்தனர். அங்கு வெண்மையான தணலொளியின் வெம்மை அவனது பிடரி நனைத்தது. தூயத் தொடுகையில் பேராற்றின் அடியில் உராய்ந்து உருளும் கூழாங்கற்களைப் போல அவனது அகம், சுய இருப்பை இழந்து, மழை பொழியும் ஆழ்கடலில், மென் குமிழியிடும் நொடிக் கணம், மெல்ல அணைந்து பற்றிப் பறந்தன, தீட்சண்யமான தேவதைச் சிறகுகள். அவனது அந்தகாரத்தில் நுழைந்து சாசுவதத்தின் விஸ்மய ரூபத்தை வியாபித்தன. முடிவேயற்ற சாகரம், அறுதியிட முடியா பேரின்ப பிரவாகம், உன்மத்தம் ஒழுக மந்தகசித்திருந்த அவனது அழகு முகம், அரைமயக்கத்தில் கண்ணீர் துளிர்க்க, அனந்தத்தின் நிர்மல உருவாய் தனக்குள் ஆழ்ந்து லயித்திருந்தது. மானுடர்களை உயிரோடு விழுங்கி விடும் புன்னகை. பிரபஞ்சத்தின் தவிர்க்க இயலா பிடிமானத்தில் அவனது ஆன்மா திளைத்திருந்திருக்கக் கூடும். அந்தப் பெரியவர்கள் திகைத்து, அசைவின்றி அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

நன்றி,
தங்கள் உண்மையுள்ள,

நந்தகுமார்.

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36
அடுத்த கட்டுரைஆழமற்ற நதி -கடிதங்கள்