மெல்லியநூல் -கடிதம்

gan

மெல்லிய நூல் (சிறுகதை)

அன்புள்ள ஜெ வணக்கம்.

மெல்லிய நூல் 2011 ஆண்டுப்படித்தபோது பாபுஜியை சோகன்ராம்களை வென்று எடுக்கும் மாமனிதர் என்று மட்டும்தான் எண்ணி இருந்தேன். சோகன்ராமாகவும் பாபுஜியாகவும் நின்றுப்பார்க்கும்போது எத்தனை தூரமும் எத்தனை ஆழமும் நிறைந்த இடைவெளிமனிதர்கள் மத்தியில் இவர் பெரும் பாலமாக சமபரப்பை உழுது உருவாக்கும் நந்தியாக நிமிர்ந்து எழுகின்றார் என்று வியந்தேன்.

மெல்லிய நூலை 2017ல் வாசிக்கையில் இந்த கதை பாபுஜியை பாபுஜி வெல்லும் மையத்தில் நின்று வெற்றிக்கண்டு உள்ளதை அறிந்து வியக்கின்றேன். இந்த கதையில் பாபுஜி யாரையும் வெல்லவில்லை, தன்னை வெல்வதைமட்டும்தான் பயின்று கொண்டு இருக்கின்றார். தன்னை வெல்வதை பயின்றுக்கொண்டு இருக்கும் பாபுஜியை சந்திக்கும் ஜீவன்கள் அறிந்தோ அறியாமலோ தங்களை தாங்கள் வெல்லும் கணங்களை கண்டு அடைகிறார்கள், சிலர் கண்டு அடையும் தருணம் கிடைத்தும் கண்மூடிச்செல்கிறார்கள். முதலில் வைணவர், பின்பு சிண்டன்.

பர்த்வான் கிராமத்தில் தலித்தாக பிறந்து இன்று பாபுஜிக்கு அணுக்க தொண்டனாக விளங்கும் சோகன்ராம். நெறிநூல்கள் பயின்றோ அல்லது ஆச்சர ஆனுஸ்டானும் செய்தோ இந்த இடத்திற்கு வரவில்லை. பாபுஜியை பன்றிக்காதன் என்று திட்டியவன். உன் பெயர் என்ன என்று கேட்டதற்கு  உலகில் உள்ள அத்தனை ஆபாச வசைகளையும் பொழிந்தவன். மனிதர்கள் விசித்திரமானவர்கள். எளிய விடைகளை சொல்லத்தெரியாமல் பெரிய பெரிய புழுதிமலைகளை விடைகளாக சுமந்துதிரிபவர்கள்.

மனிதர்கள் அனைவரும் தனது கை குடுவையைக் கொண்டே மனித சாகரத்தை அள்ளி எடுக்க முனைகின்றார்கள். எவ்வளவு மொண்டாலும் அந்த குடுவை அளவுக்குமேல் அவர்களால் அள்ளமுடிவதில்லை. துரதிஷ்டவசமாக அந்த குடுவையைத்தாண்டிப்பார்க்கும் உயரமும் அவர்களுக்கு கிடைப்பது இல்லை.  முரட்டு அன்பு, ஓயாத வம்பு, தீராத வஞ்சம். நீங்காத பஞ்சம் விலகாத நோய் என்று அவர்கள் கைக்குடுவைகள் அவர்களை தளையிட்டு வைத்திருக்கிறது. அதன் மூலமாகவே அவர்கள் மனித சாகரத்தை மொண்டு எடுக்க முயற்சித்து அதில் மூழ்கியும்போகின்றார்கள்.

முதன் முறையாக பாபுஜி சோகன்ராமுக்கு அவன் நம்பும் வலிமையாகிய வசை, கோபம், வஞ்சம், இழிவு  அனைத்திற்கும்  அப்பால் உள்ள வலிமை அன்பு என்று காட்டுகின்றார். அங்கு தனது போலி வலிமையை இழந்து பாபுஜியின் ஒரு அங்கமாக மாறிவிடுகின்றான் சோகன்ராம்.

என்போன்ற எளிய மனிதர்களுக்கு பாபுஜியின் இந்த செயல் பெரும் வல்லமையாக தெரிகின்றது. இது பாபுஜிக்கு பெரும் செயல்அல்ல அது வெறும் ஒரு அன்றாட கடமை மட்டும்தான். சோகன்ராம் விசயத்தில் பாபுஜிக்கு எதுதான் பெரும்செயல்?. சோகன்ராமை அணுக்கத்தொண்டனாக ஏற்றுக்கொள்ள தர்மசாஸ்திரத்தில் இடம் உண்டா என்று கேட்கும் வைணவரிடம். தேவையில்லை. அனுமதி ராமனிடமிருந்து எனக்குக் கிடைத்தது.” என்று பதில் உரைத்து ராமனிடம் நான் பேசினேன். உங்களால் பேச முடிந்தால் கேட்டு உறுதி செய்துகொள்ளலாம்” என்று முத்தாய்ப்பு வைப்பதுதான். படிக்காதவர்களை நம்பவைத்துவிட முடியும் காரணம் அவர்கள் உண்மையை எதுவோடும் ஒப்பிடுவது இல்லை. படித்தவர்களை நம்பவைக்க முடியாது அவர்கள் உண்மையை உண்மையைதவிர அனைத்துடனும் ஒப்பிட்டு ஒப்பிட்டு காலத்தை கறைத்துவிடுவார்கள்.

பாபுஜி கர்மவீரர். கர்மத்தின் மூலமாகவே ஆன்மாவை தரிசிக்கின்றார். நூல்களில் பேசப்படும் அறியாத ஆன்மாவைப்பற்றி அவர் பாடம் நடத்தவிரும்பவில்லை.

எதுவும் கற்காத சேற்றுமீன்பிடித்து வாழ்ந்த சோகன்ராம் பாபுஜியிடம் கண்டுக்கொண்டது அந்த அழியாத ஆன்மாவை. படித்து பட்டம்பெற்று ஆன்மாப்பற்றி மணிகணக்கில் விளக்கம் கொடுக்கும் வைணவர் அறியாமல் போவது பாபுஜிக்காட்டும் அந்த ஆன்மாவைதான்.

நதி ஒரு திடீர் வளைவில் தனது திசையை மாற்றிக்கொள்வதுபோல கதை ஒரு தீடீர் திருப்பத்தில் கேரளாவின் அய்யன்காளியையும் பாபுஜியையும் எதிர் எதிரில் உட்காரவைத்து விடுகின்றது. கதையின் மையமே இந்த அமர்வின் அதிசயத்தைப்பற்றி பேசுவதுதான். அந்த மையத்தை அடைவதற்குதான் கதை தனது சுற்று வட்டத்தில் சுற்றி சுற்றி வருகின்றது.

தலித் மக்களுக்கும் தலித்பெண்களுக்கும் உயர்சாதியினரால் நடத்தப்படும் கொடுமையைப்பற்றி கதைப்பேசத்தொடங்கிவிடுகின்றது. நெருப்பு வளையத்திற்குள் நெருப்பு மேடையில் அமர்ந்து இருக்கும் தருணம்.

பாபுஜியின் எதிரில் அமர்ந்து இருக்கும் அய்யன்காளி எதுவும் பேசவில்லை, அய்யன்காளியின் தொண்டனாக வரும் சிண்டன் பேசுகின்றான். புறவயமான மானிட வலிமையை நீதியை தடிக்கொண்டு பெருக்குவதைப்பற்றி சிண்டன் குறிக்கோள் கொண்டு உள்ளான். அகவயவலிமையை பெருக்குவதை நீதியை வளர்ப்பதைப்பற்றி ஆயுதங்களை கைவிடுவதைப்பற்றி பாபுஜி நீதிபோதிக்கின்றார்.

அகமா புறமா என்று மேலும் கீழும் ஆடும் தராசுத்தட்டின் மையத்தில் நிற்கும் அய்யன்காளி எதுவும் பேசவில்லை ஆனால் தன்னுடன் தனது உருப்புபோல வைத்து இருந்த கைத்தடியை பாபுஜி முன்பு விட்டுவிட்டு அய்யன்காளி எழுகின்றார். அதனால் பாபுஜி பக்க தராசுத்தட்டு தாழ்ந்து கனம்கொண்டு விடுகின்றது. அகிம்சை எடை கூடுகின்றது.

கண்ணனுக்கு விஷப்பால் கொடுக்க பூதனையை அனுப்பும் கம்சன், பூதனையும் அன்னை என்று மயங்கும் தருணம் வரும் என்பதை அறிந்திருக்கவில்லை. அதுபோல்தான் சமுகபோராளி அய்யன்காளியுடன் வரும் சிண்டன் அவருக்குள் உள்ள ஆன்மஞானியை அறிந்திருக்கவில்லை. கண்ணன் முன் பூதனை அன்னையாவதுபோல பாபுஜி முன்பு சண்டியன் அய்யன்காளி ஆன்மஞானி அய்யன்காளியாக எழுகின்றார். சிண்டன் இன்னும் கொஞ்சம் முயன்று இருந்தாள் அய்யன்காளியின் அடுத்த அவதாரத்தை அறிந்துக்கொண்டு இருக்கமுடியும் அவனது பலவீனம் விடாததடியை பலமென்று நினைக்கவைத்து அய்யன்காளியைவிட்டு விலகிச்செல்லவைத்துவிட்டது. புதியது ஒன்றை பெற பழைய ஒன்றை விட்டுவிடுவதே பலம் அது முதலில் பலவீனமாக தெரியும் அதை அறிவதில் இருக்கிறது ஆன்மாவின் விழிப்புணர்ச்சி. அய்யன்காளி விழிப்பதும். சிண்டன் குறுடாவதும் அந்த கணத்தில்தான்.

கதையில் பெரும்மாற்றும் நிகழ்த்துவது பாபுஜிக்கும் அய்யன்காளிக்கும் இடையில் நிகழும் பெரும்மௌனம்தான். மௌனத்தின் மொழி சிலருக்கு கனமகா உள்மாற்றத்தை நிகழ்த்துகின்றது, அது நேரடியாக ஆன்மாவோடு பேசிவிடுகின்றது. அதற்கு சப்தமும் குறியீடும் ஒரு பொருட்டு அல்ல அது செயல்விளைவை சரியாக தருகின்றது. அதனால்தான் மௌனத்தின் உரையாடல் பாபுஜிக்கும் அய்யன்காளிக்கும் இடையில் நிகழ்வதாக கதைக்காட்டுகின்றது.

உயிர்க்குளத்தில் மனிதன் மட்டும்தான் புறக்காரணிகளை தனது பலமாக கொண்டு வல்லமைக்காட்ட நினைக்கின்றான். சோகன்ராமுக்கு வசை, வைணவருக்கு தருமசாஸ்திரம், சிண்டனுக்கு தடி. உற்றுநோக்கினால் அவர்கள் எந்தி உள்ள ஆயுதங்களே அவர்களின் பலவீனம் என்ன வென்று காட்டிவிடுகி்ன்றது. அய்யன்காளி தனது கைப்பட்டு கைப்பட்டு பொன்னொளி மின்னும் தடியை விடுவதே பலம் என்பதை கதை நுட்பமாக உணர்த்துகின்றது. புற ஆயுதங்களை ஏந்தும் அளவுக்கு மனிதனின் ஆன்மபலம் தூரத்தில் ஒதுங்கி நின்றுவிடுகின்றது என்றும் காட்டுகின்றது. ஆன்மபலம் பெறும் மனமே அன்பின்பால் அறத்தின்பால் அகிம்சையின்பால் பாபுஜியின்பால் மனம்திரும்ப முடியும் என்றும் காட்டுகின்றது.

கதையில் ஓயாமல் சுழன்று ஒலிக்கும் இரட்டை தனது செயலை சரியாக செய்துக்கொண்டு இருக்கிறது. பாபுஜியின் மனோலயமாக இயக்கப்படும் இரட்டையின் குறியீடு அய்யன்காளியின் சொல்லால் லயம் தப்புகின்றது. தலித்துகள்மீதும் தலித்பெண்கள்மீதும் நடத்தப்படும் வன்முறைக்கு முன் பாபுஜியின் அசிம்சைலயம் சலனப்பட்டது என்பதை கதை அறுந்த மெல்லியநூல் வழியாக நம் கண்ணீல் அறைகின்றது.

கொடுப்பன் எப்போதும் ஒன்றை பெறுகின்றான் அது கண்ணுக்கு தெரியாமல் இருக்காலாம். கற்றுக்கொடுப்பவன் எப்பொதும் ஒன்றை கற்றுக்கொண்டு இருக்கிறான் அதுவும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கலாம். பாபுஜி ஒவ்வொருவருக்கும் ஒன்றை கொடுக்கும்போதும் தான் ஒன்றை பெற்றுக்கொண்டே இருக்கிறார். அய்யன்காளிக்கு ஆன்மவலிமையைக்காட்டும் பாபுஜி தனது ஆன்மவலிமையையும் லஜம்மாறும் தருணத்தில் வெல்வதை கற்கிறார். விடாமல் இரட்டையை சுழற்றி சுழற்றி எண்ணத்தை முறுக்கி மெல்லிய நூலை நூற்று ஆன்மாவை கட்டுகின்றார். இது ஒரு வேளை பொழப்பு அல்ல ஓயாத பொழப்பு என்று நிறுபிக்கிறார். இது தவம். அதனால்தான் காந்தி எளிதில் பிறக்கமுடியவில்லை. தன்னை வெல்பவரால் அதுமுடியும். காந்தியாக பிறக்கமுடியும்.

 

அன்புடன்

ராமராஜன் மாணிக்கவேல்.

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 39
அடுத்த கட்டுரைஅயினிப்புளிக்கறி  [சிறுகதை]