விண்ணுக்கு அருகில்…

nuru

இந்தியப்பயணம் சென்றுகொண்டிருந்தபோதுதான் லடாக் செல்லும் எண்ணம் வந்தது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை என்பதுதான் கணக்கு. ஆனால் லடாக்தான் இந்தியாவின் வட எல்லை. சொல்லப்போனால் போங்கோங் ஏரி. இந்தியாவுக்கும் சீனாவுக்குமான பொது நீர்நிலை அது.

பல திட்டமிடல்களுக்குப்பின் பயணத்தை தொடங்கினோம். இப்பயணத்தில்தான் உலகிலேயே அபாயகரமான சாலைகளில் சென்றோம். சில இடங்களில் பெரிய பாறையில் பேன் ஊர்ந்துசெல்வதுபோல எங்கள் வண்டி சென்றது. காலடியில் அதலபாதாளத்தில் ஆறுகள் வெள்ளிநூலெனச் சென்றன

வழக்கமாக அஞ்சுவதில்லை. லடாக் பயணத்தில் மிக அஞ்சினேன், ஏனென்றால் என் மகன் அஜிதன் உடனிருந்தான். கவிஞர் தேவதேவனை கூட அழைத்துச்சென்றிருந்தேன். ஒருவழியாக மீண்டபின்னர்தான் லடாக் பெரும்கனவுநிலமாக என்னுள் திறந்துகொண்டது

லடாக் ஒரு நிலம் அல்ல. அங்கே சோலைவனங்கள் உள்ளன. பனிப்பாளங்கள் உள்ளன. பாலைவனங்கள் உள்ளன. நன்னீர் ஏரிகள் உள்ளன. ஏன் பாங்காங் ஏரி என்னும் குட்டிக் கடலே உள்ளது. உப்புநீர் அலையடிக்கும் கடல்குழந்தை அது

லடாக் பயணம் ஒரு கனவுநடை என நினைவிலிருக்கிறது. பௌத்தம் வாழும் நிலம். அந்நிலத்திற்கு பௌத்தமே பொருத்தம். பௌத்தம் ஓசையற்ற மதம். வான்முட்ட நிமிர்ந்து பனிசூடி அமைதியில் புதைந்து நிற்கும் மலைமுகடுகளை நோக்கி தியானிக்கும் மதம். மடாலயங்களின் மணியோசையின் ஓங்காரம் இல்லாமல் இமையமலைகளை எண்ணிப்பார்க்க முடியாது

muttu

இப்பயணத்தில் நாங்கள் அடிக்கடி எண்ணிக்கொண்ட நண்பர் லண்டன் முத்துக்கிருஷ்ணன். சமணப்பயணத்தில் உடனிருந்தவர். காட்ஜெட் முத்து என செல்லமாக அழைக்கப்படுபவர். அவருக்கு லடாக் வரும் ஆசை இருந்தது. சொல்லப்போனால் அவர்தான் அதை முதலில் சொன்னார். அவர் லண்டனிலிருந்து வரமுடியாமல்போனது

இந்த நூலை காட்ஜெட் முத்துக்குவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்

ஜெ

கிழக்கு பதிப்பகம் இணைப்பு

முந்தைய கட்டுரைபாணாசிங் -கடிதம்
அடுத்த கட்டுரைமண்ணுக்கு அடியில்