ஐந்து : துலாநிலையின் ஆடல் – 3
சுருதகீர்த்தியும் சுதசோமனும் அணுகிச்செல்லுந்தோறும் படைசூழ்கை தெளிவடையத் தொடங்கியது. படைத்தலைவர்களின் குடில்களிலும் காவலரண் முகப்புகளிலும் மட்டுமே நெய்விளக்குகள் எரிந்தன. சூழ்ந்திருந்த படை முழுமையும் இருளுக்குள் மறைந்திருந்தது. ஆயினும் குறைந்த ஒளிக்குப் பழகிய கண்களுக்கு நெடுந்தொலைவு வரை அலையலையாக பரவியிருந்த மரப்பட்டை பாடிவீடுகளும் தோல் இழுத்துக் கட்டிய கூடாரங்களும் புரவி நிரைகளும் தென்படலாயின. முன் இருட்டிலேயே படை முழுமையும் துயில் கொள்ளத்தொடங்கியிருந்தது. எனினும் அனைவரின் ஓசைகள் இணைந்த கார்வை அவ்விருளை நிறைத்திருந்தது.
முதல் காவலரணை அடைந்ததும் அங்கிருந்த காவல்வீரன் கையில் மூன்று சுடரெரிந்த தூக்குவிளக்குடன் அவர்கள் அருகே வந்தான். தன் தலைக்குமேல் அதை தூக்கிப்பிடித்து “உபபாண்டவர்கள். அல்லவா?” என்றான். சுருதகீர்த்தி “ஆம், அஸ்தினபுரியின் அரசரின் அழைப்புக்கேற்ப மத்ரநாட்டு அரசர் சல்யருக்கு ஒரு செய்தியை அளிக்கும்பொருட்டு செல்கிறோம்” என்றான். “தங்களை அரண்மனைக்கு அழைத்துச்செல்லும்படி ஆணை” என்றான் காவலன். “தங்களுக்காகவே இங்கு காத்து நின்றிருக்கிறோம்” என்றபின் திரும்பி தன் கையிலிருந்த சிறு கொம்பை முழக்கியதும் மூன்று புரவி வீரர்கள் அவர்களை நோக்கி வந்தனர்.
முதல் புரவி வீரன் தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரை வணங்குகிறேன். தங்களை அழைத்துச்செல்லும்பொருட்டு ஆணை பெற்று இங்கு காத்திருந்தேன்” என்றான். “என் பெயர் சூலன். நூற்றுவர் தலைவன். அஸ்தினபுரியில் முன்பு தங்களை கண்டதுண்டு” என்றான். “சூலரே, நாங்கள் வரும் செய்தி எப்போது வந்தது?” என்று சுருதகீர்த்தி கேட்டான். “சற்றுமுன்புதான்” என்றான் சூலன். “அந்த ஆணையை விடுத்தது யார்?” என்றான் சுருதகீர்த்தி. “அரண்மனை முத்திரை கொண்டிருந்தது. அங்கு அரசின் பொறுப்பில் எவர் இருக்கிறாரோ அவர். மேல் அறிய எனக்கு உரிமையில்லை” என்று அவன் சொன்னான்.
இருபுறமும் சூழ்ந்திருந்த அஸ்தினபுரியின் படைகளின் நடுவினூடாக பாதையில் செல்கையில் சுருதகீர்த்தி வெறும் ஓசையே ஒரு படையை உருவாக்கிக் காட்டுவதைக் கண்டு வியந்தான். மனித ஓசைகள், மெல்லிய உரையாடல்கள், மூச்சொலிகள், கலங்களின் ஒலிகள். அவை இணைந்து வடிவங்களை, வண்ணங்களைக்கூட சமைத்தளித்தன. பின்னர் ஏதோ ஒரு திகிரியில் உளம் திரும்ப மானுடம் அல்லாத ஒன்றாக அவ்வோசை உருமாறி பரவியது. அத்திரிகள், புரவிகள், மானுடர். இருளில் அவையனைத்தும் வடிவுருகி ஒற்றைப் பெருக்கென்றாகி ஒலித்தன. ஏதோ பேருருவ இருப்பு பிறிதொன்றுடன் உரையாடிக்கொண்டிருந்தது.
குக்குடபுரியின் தென்கோட்டை இரண்டு ஆள் உயரமே இருந்தது. களிமண்ணைக் குழைத்துக் கட்டி மேலே ஈச்சை ஓலைக்கூரையிட்டு காக்கப்பட்டது. கோட்டைமுகப்பின் இரு தூண்கள் மட்டும் கல்லடுக்கிக் கட்டப்பட்டவை. ஒரு தூணின் மீது மரத்தாலான காவல் மாடமும் போர் முரசும் இருந்தன. கோட்டைக்கு அகழியோ கடவுப்பாலமோ இல்லை. அணுகியபோது அதற்கு கதவுகளுமில்லை என்பதை சுருதகீர்த்தி கண்டான். கோட்டைக்கு அப்பால் நெய்ப்பந்தங்களின் மெல்லிய ஒளியின் செந்நிறத் திரை.
சுதசோமன் அருகே வந்து “தொன்மையான கோட்டை” என்றான். “ஆம், மாமன்னர் பிரதீபரின் காலத்தில்தான் அஸ்தினபுரியின் இந்த எல்லைகள் உறுதியாக வகுக்கப்பட்டன. எல்லைவட்டத்தில் ஒரு நாளுக்குள் சென்றுவிடும் தொலைவில் கோட்டை சூழ்ந்த ஊர்களை அவர் அமைத்தார். ஒவ்வொரு கோட்டையிலும் ஒரு புரவிப்படையை நிறுத்தினார். ஒன்றுடன் ஒன்று முரசோசையாலும் எரியம்புகளாலும் தொடர்புகொள்ள வைத்தார். இதற்கு மாபெரும் சிலந்தி வலை என்று அப்போது பெயர் சூட்டப்பட்டது. அஸ்தினபுரி அளவுக்கு வலுவாகக் காக்கப்படும் எல்லைகள் கொண்ட நாடு எதுவும் அன்று பாரதவர்ஷத்தில் இருக்கவில்லை.”
“பின்னர் அனைத்து ஷத்ரிய அரசர்களும் இத்தகைய கோட்டைக்காவல் நகர்களை தாங்களும் அமைக்கலாயினர். வடக்குக் காட்டோரமாக இருப்பதனால் இப்பகுதியின் கோட்டை நகர்கள் பிரதீபர் கட்டிய அவ்வண்ணத்திலேயே நீடிக்கின்றன என்று எண்ணுகின்றேன். தெற்கிலும் மேற்கிலுமுள்ள காவலூர்கள் அனைத்தும் வளர்ந்து வணிக நகரங்களாகிவிட்டிருக்கின்றன. தென்மேற்கே சித்திரபஞ்சரம், சூத்ரபீடம் போன்ற கோட்டையூர்கள் பழைய மண் கோட்டைகளை உள்ளே அமைத்து சுற்றிலும் புதிய கற்கோட்டைகள் கட்டப்பட்டு பெரிய நகர்களாக மாறிவிட்டிருக்கின்றன” என்றான்.
குக்குடபுரியின் தெருக்கள் குறுகலாகவே இருந்தன. மண் குழைத்து கட்டப்பட்ட புடைத்த சுவர்களின்மேல் மரக்கூரை அமைந்த கட்டடங்களின் முகப்புகளில் நெய்ப்பந்தங்கள் எரிந்தன. உருளைக்கல் பரப்பப்பட்ட சாலையில் குதிரைக்குளம்புகள் தாளமிட்டபடி சென்றன. நகர் முழுக்க வெளியே இருந்த படையின் தலைவர்களும் வணிகர்களும் தங்கிய மாளிகைகள் இருந்தன. அவர்களின் குடியடையாளங்கள் பொறிக்கப்பட்ட கொடிகள் இல்லங்களின் முகப்பில் காற்றில் படபடத்தன.
நகர் நடுவே இருந்த இரண்டடுக்கு மாளிகை அஸ்தினபுரியின் அரச குடியினர் வந்தால் தங்குவதற்குரியது எனத் தெரிந்தது. அதன் முகப்பில் அமுதகலக்கொடி பறந்துகொண்டிருந்தது. மண் குழைத்து கட்டப்பட்ட கீழடுக்கின் நுழைவாயிலுக்கு முன்னால் ஏழு புரவிகள் நின்றிருந்தன. சிறிய முகப்பு முற்றம் அதனாலேயே நிறைந்துவிட்டதுபோல் தோன்றியது. குதிரைவண்டி ஒன்று நுழைவுப்பாதைக்கு வலப்பக்கம் நின்றது. அதன் நுகத்திலேயே கட்டப்பட்டிருந்த குதிரை தன் வாயில் தொங்கிய பையிலிருந்து கொள்ளை மென்றுகொண்டிருந்தது. அவர்களின் புரவிகள் அணுகும் காலடியோசையைக் கேட்டு காதுகளை பின்சரித்து முகம் தூக்கி கண்களை உருட்டி அவர்களைப் பார்த்தது.
அவர்களின் புரவி முற்றத்தில் நுழைந்தபோது பிற புரவிகள் அனைத்தும் திரும்பிப்பார்த்தன. தலைமை கொண்டிருந்த பெண்புரவி மெல்ல கனைத்து அவர்களின் புரவிகளை வரவேற்றது. சுதசோமனின் புரவி அவ்வரவேற்புக்கு மறுமுகமன் உரைத்தது. மாளிகைக்குள்ளிருந்து கைகளைக் கூப்பியபடி சிற்றமைச்சர் உத்பவர் வெளியே வந்து சுருதகீர்த்தியின் புரவியை அணுகி “வருக, இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசர்களே! இந்நகர் இதன்பொருட்டு உவகையடைகிறது” என்றார். சுருதகீர்த்தி புரவியிலிருந்து இறங்கி அணுகிய காவலனிடம் கடிவாளத்தைக் கொடுத்துவிட்டு “வணங்குகிறேன், சிற்றமைச்சரே. இத்தருணம் மகிழ்வுற்றது” என்று மறுமுகமன் உரைத்தான்.
சுதசோமன் கீழே இறங்கி “நான் நன்கு உணவு உண்ணவேண்டியிருக்கிறது. நெடுந்தொலைவுக்கு நில்லாமல் வந்தோம்” என்றான். “உங்களுக்கான ஓய்வறையும் நீராட்டறைகளும் ஒருங்கியுள்ளன. நானே அழைத்துச் செல்கிறேன்” என்று சொல்லி “வருக!” என்று உத்பவர் கைகாட்டினார். மாளிகைக்குள் நுழைவதற்கு ஒழுங்கற்ற கற்களால் படியமைக்கப்பட்டிருந்தது. உள்ளே தரையில் வேயப்பட்டிருந்த பலகைகள் பழையனவாக ஒன்றுடன் ஒன்று சரிவர பொருந்தாமல் நடக்கையில் முறுகலோசை எழுப்பின.
மாளிகையின் கீழ்த்தளத்திலேயே அவர்களுக்கான அறை அளிக்கப்பட்டது. கதவைத் திறந்த ஏவலன் “மரவுரியும் மாற்றாடைகளும் சித்தமாக உள்ளன” என்று சொல்லி தலைவணங்கினான். “ஓய்வெடுங்கள்” என்று அமைச்சர் சொன்னார். “ஓய்வுக்கு முன்னர் நாங்கள் மத்ரநாட்டு அரசரை சந்திக்கவேண்டும்” என்றான் சுருதகீர்த்தி. “ஆம், உங்களுக்கு சந்திப்பு ஒருக்கப்பட்டுள்ளது. நான் வந்து அழைத்துச் செல்கிறேன்” என்று சிற்றமைச்சர் சொல்லி தலைவணங்கி விலகிச் சென்றார்.
சுதசோமனும் சுருதகீர்த்தியும் அந்தச் சிறிய அறைக்குள் நுழைந்தனர். சுதசோமன் உள்ளே நுழைந்ததுமே அவ்வறை மிகச் சிறிய கூண்டுபோல் ஆகிவிட்டதென்று சுருதகீர்த்தி எண்ணினான். அவ்வெண்ணம் முகத்தில் ஒரு புன்னகையாக விரிய சுதசோமன் திரும்பிப் பார்த்து “ஒரே அடியில் உடைத்துவிடக்கூடிய கூரை. மிகச் சிறிய மனிதர்களுக்காக கட்டப்பட்டது” என்றான். சுருதகீர்த்தி புன்னகைக்க சுதசோமன் “உணவு அரிதாக கிடைத்த காலத்தில் இந்த அறை கட்டப்பட்டிருக்கும்” என்றான்.
“நாம் நீராடி உடைமாற்ற வேண்டும். மூத்தவரை சந்தித்து நம் சொற்களை உரைக்கவேண்டும்” என்றான் சுருதகீர்த்தி. “ஆம், உணவுண்டு இளைப்பாறிச் செல்வதல்லவா நன்று? இனிய சொற்களை மலர்ந்த முகத்துடன் சொல்வதற்கு வயிறு நிறைந்திருக்கவேண்டும் என்பார்கள்” என்றான் சுதசோமன். “நாம் வீணடிக்க பொழுதில்லை. இச்சிற்றமைச்சர் கௌரவ அரசரின் அணுக்கர். இவர் இங்கிருக்கிறார் என்றால் அதன் பொருள் அஸ்தினபுரியின் அரசர் இங்கு இருக்கிறார் அல்லது இன்னும் சற்றுபொழுதில் இங்கு வந்துவிடுவார் என்பதே. அவ்வாறு வந்த பின்னர் மத்ரநாட்டு அரசரைச் சந்திக்க நமக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்றே ஐயம் கொள்கிறேன். அவரோ காந்தார இளவரசரோ கணிகரோ உடனிருந்தால்கூட நம்மால் நாம் எண்ணிய ஒரு சொல்லையும் மத்ரநாட்டு அரசரிடம் சொல்லிவிடமுடியாது” என்றான் சுருதகீர்த்தி.
“நல்லூழாக நாமிங்கு வந்த செய்தியை மத்ரநாட்டு அரசர் நேரடியாக அறிந்திருக்கிறார். தடையின்றி நாம் இங்கு வரவும் விரைவாக அரண்மனைக்குள் நுழையவும் ஒருங்கு செய்திருக்கிறார். இதை தவறவிடலாகாது” என்று சுருதகீர்த்தி சொன்னான். “அப்படியென்றால் இப்படியே செல்வோமே. ஏன் நீராடவேண்டும்?” என்றான் சுதசோமன். “நீராடாமல் அரசர் ஒருவரை சந்திக்கச் செல்வது மரபல்ல” என்றான் சுருதகீர்த்தி. “உணவு உண்ணாமல் செல்வது மட்டும் மரபா?” என்று சுதசோமன் சொன்னான்.
“நீராடாது செல்லலாம் என நான் எந்த நூலிலும் பார்த்ததில்லை. மேலும் எந்த நூலைக் காட்டினாலும் தாங்கள் ஏற்கப்போவதில்லை” என்றான் சுருதகீர்த்தி. “சரி, நான் உணவுண்டதனால்தான் ஒன்றும் நிகழாமல் போயிற்று என்ற சொல் எழக்கூடாது. ஆனால் உனக்கு வலப்பக்கம் பசித்த வயிறொன்று காத்து நின்றிருக்கிறதென்ற உணர்வுடன் பேசு. அரசுசூழ்தலின் அனைத்து முறைகளையும் நீ பயன்படுத்தி முடிக்கையில் புலரிக்கதிர் எழுந்துவிடக்கூடாது” என்று சுதசோமன் சொன்னான். “அஞ்சவேண்டாம், மூத்தவரே. நான் சொல்வதற்கு ஏதுமில்லை. இளைய யாதவர் அளித்த சில சொற்றொடர்களை மட்டுமே அவரிடம் சொல்லவேண்டியுள்ளது. நான் எண்ணிச்சூழ கருத்துக்கள் ஏதுமில்லை” என்று சுருதகீர்த்தி சொன்னான்.
அவர்கள் நீராட்டறைக்குச் சென்று அமர்ந்தனர். ஏவலர் இளவெந்நீரால் அவர்கள் உடலை கழுவிக்கொண்டிருக்கையில் சுருதகீர்த்தி சற்றே தலைகுனிந்து தனக்குள் எண்ணங்களை ஓடவிட்டுக்கொண்டிருந்தான். பின்னர் சுதசோமனிடம் “எங்கோ ஒரு சிறு பிழையிருக்கிறது, மூத்தவரே” என்றான். செம்மொழியில் அவன் அதை சொன்னதனால் சுதசோமனால் முதலில் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் “இங்கு நீராட்டறையிலா?” என்றான். “அல்ல. நாம் உள்ளே நுழைந்த முறையில். இத்தனை எளிதாக இது நிகழ வாய்ப்பில்லை. இவ்வளவு பெரிய அரண்களை அமைத்தவர்கள் இதை கணிக்காதிருப்பார்கள் என்று நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டியதில்லை” என்றான்.
“நம்மை அவர்கள் குறைத்து மதிப்பிட்டிருக்கலாம். இளையவர்களின் பேராற்றல் என்பது அவர்களின் இளமைதான். அவர்கள் தங்களைவிட இளையவர்கள் என்பதனாலேயே அறிவும் திறமையும் குறைந்தவர்கள் என்று மூத்தவர்கள் எண்ணுவார்கள். அவ்வெல்லைகளை நாம் எளிதாக கடந்து செல்வோம். நம்மை இத்தனை பெரிய செயலுக்காக அனுப்பியிருப்பார்கள் என்று இங்கு எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்” என்றான் சுதசோமன். “அல்ல, இங்கு முதன்மையான எவரோ இருக்கிறார். மத்ரநாட்டுக்குச் சென்று சல்யரை இத்தனை தொலைவுக்கு அழைத்து வந்தவர் யார்?” என்று சுருதகீர்த்தி கேட்டான்.
“அதை எப்படியும் சற்று நேரத்தில் தெரிந்துகொள்ளப்போகிறோம். இங்கிருந்து எண்ணங்களை ஓட்டுவதால் என்ன பயன்?” என்றான் சுதசோமன். அதற்கு மறுமொழி கூறாமல் கண்களை மூடியிருந்தான் சுருதகீர்த்தி. அவர்கள் எழுந்து நிற்க மரவுரியால் உடல்களைத் துடைத்து நறுஞ்சுண்ணமிட்டு அணி செய்தனர் ஏவலர். மாற்றாடை அணிந்து ஈரக்குழலை தோளில் விரித்திட்டு அறைக்குச் செல்கையில் சுருதகீர்த்தி “அஸ்வத்தாமர்” என்றான். “யார்?” என்று சுதசோமன் கேட்டான். “சல்யரை இங்கு அழைத்துவந்தவர் உத்தரபாஞ்சாலராகிய அஸ்வத்தாமர். அவர் இங்குதான் இருக்கிறார்.”
“எதையோ பிழையாகப் பார்த்தேன் என்று எனது உள்ளம் சொல்லிக்கொண்டிருந்தது. அது என்னவென்று இப்போது உணர்கிறேன். வாயிலில் நின்றிருந்த அந்தக் குதிரைவண்டி உத்தரபாஞ்சால நாட்டைச் சேர்ந்தது” என சுருதகீர்த்தி சொன்னான். சுதசோமன் “எப்படி தெரியும்?” என்றான். “அதன் சகடங்களின் ஆரங்களுக்குள் நுழைவதாக இரு கட்டைகள் வண்டியின் அடியிலிருந்தன. பாஞ்சாலத்து வண்டிகளின் இயல்பு அது. அங்குள்ள மலைச்சரிவுகளில் மிகையான விரைவுடன் வண்டி இறங்குவதை தவிர்ப்பதற்காக அதை செய்திருக்கிறார்கள். தடைக்கட்டை உரசியும் விரைவழியவில்லை என்றால் அவ்விரு கட்டைகள் ஆரங்களுக்குள் புகுந்து வண்டியை முழுமையாக அசைவிழக்கச் செய்துவிடும்” என்றான் சுருதகீர்த்தி.
“பாஞ்சாலத்திலிருந்து இங்கு எவரேனும் தூது வந்திருக்கலாம். வணிக வண்டியாகக்கூட இருக்கலாம்” என்று சுதசோமன் சொன்னான். “இருக்கலாம். ஆனால் அரண்மனை முகப்பில் வண்டி நிற்பது அன்றாடம் நிகழ்வதல்ல. கௌரவர் தரப்பில் இருந்து சல்யரை சந்திக்கச் சென்ற தூதர் அரசராகவோ அரசகுடிப்பிறப்பாகவோதான் இருக்கவேண்டும் என்று நான் முன்னரே எண்ணினேன். ஏனெனில் அரச குடியினர் ஒருவர் தன்னைத்தேடி வந்ததாலேயே தான் மிகவும் மதிக்கப்பட்டதாக எண்ணி மகிழ்வடைபவர் அவர்.”
ஒவ்வொன்றாக உளவிழியில் ஓட்டி நோக்கியபடி சுருதகீர்த்தி “மிகச் சரியான சொல்லெடுத்து அவர் உள்ளத்தைக் கவர்ந்து இங்கு அழைத்துவரும் ஆற்றல் கொண்டவரே சென்றிருக்க வேண்டும். ஆகவே கௌரவத் தந்தையர் எவரும் சென்றிருக்க வாய்ப்பில்லை. சகுனியோ பூரிசிரவஸோ அஸ்வத்தாமரோ மட்டும்தான் சென்றிருக்க முடியும். சகுனியிடமும் பூரிசிரவஸிடமும் மத்ரருக்கு நல்லுறவில்லை. ஆகவே ஐயமே இல்லை. சென்றவர் அஸ்வத்தாமரே” என்றான்.
“நன்று! அதனால் என்ன?” என்று சுதசோமன் கேட்டான். “அவர் எங்கிருக்கிறார்? அவரைக் கடந்து நாம் சல்யரிடம் ஏதேனும் சொல்லெடுக்க முடியுமா?” என்றான் சுருதகீர்த்தி. “ஏன்?” என்றான் சுதசோமன். “மூத்தவரே, அவர் துரோணரின் மைந்தர். எந்தைக்கு நிகராக வில்லெடுப்பவர். எந்தையிடம் மாறாக் கசப்பு கொண்டவர். என் மீது அவர் கொள்ளும் உளமென்ன என்று என்னால் எண்ணக்கூடவில்லை” என்றான்.
அவர்களின் அறைவாயிலில் நின்றிருந்த காவலன் “தாங்கள் சித்தமென்றால் அழைத்துவரும்படி ஆணை” என்றான். “இதோ கிளம்பிவிட்டோம்” என்று அறைக்குள் சென்று கழற்றி வைத்திருந்த அணிகளை அணிந்து தலையை கைகளால் சீவி பின் தள்ளி தலைப்பாகையை வைத்து சுருதகீர்த்தி வெளியே வந்தான். சுதசோமன் தன் கையில் தலைப்பாகையுடன் அவன் பின்னால் வந்து “இவ்வாறு அணிசெய்யும் நேரத்திற்குள் நான் உணவுண்டிருப்பேன்” என்றான். “இன்று மிகைப்பொழுதாகாது. உடனே முடிந்துவிடும்” என்றான் சுருதகீர்த்தி.
“நாம் செல்வது மிகப் பெரிய அரசுப்பணிக்கென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றான் சுதசோமன். “ஆம், ஆனால் அது முன்னரே முடிவுக்கு வந்துவிட்டது” என்று சுருதகீர்த்தி சொன்னான். “ஏன்?” என்று சுதசோமன் கேட்டான். “நம்முடைய பயணம் வீண்தான். அரசுசூழ்தலில் நாம் முற்றிலும் தோற்றுவிட்டோம். அது எப்படி எவரால் என்று மட்டுமே அறியவேண்டியிருக்கிறது” என்று சுருதகீர்த்தி சொன்னான். இடைநாழியினூடாக அவர்கள் நடந்தனர். “குனிந்தே வரவேண்டியிருக்கிறது. இதை இவர்கள் பசுக்களுக்காக கட்டியிருக்கவேண்டும்” என சுதசோமன் அலுத்துக்கொண்டான்.
அவர்களை இட்டுச்சென்ற ஏவலன் சிறிய அறைவாயிலில் நின்று “உள்ளே செல்லலாம்” என்றான். சுதசோமன் “நாம் யாரை சந்திக்கப்போகிறோம்?” என்று கேட்டபடி தலைப்பாகையை தலையில் வைத்து அழுத்தினான். “எவராயினும் அரசகுடியினர்” என்றபின் சுருதகீர்த்தி கதவைத் திறந்து உள்ளே சென்றான். இரு சுவர்களிலும் எரிந்த நெய்விளக்கின் ஒளியில் உயரமற்ற பீடங்களில் அமர்ந்திருந்த துரியோதனனையும் அஸ்வத்தாமனையும் கண்டு ஒருகணம் திகைத்து உடனடியாக அனைத்து உணர்வுகளையும் உள்ளிழுத்து அடக்கிக்கொண்டு அருகே சென்று துரியோதனனின் கால்களைத் தொட்டு தலைசூடி “வணங்குகிறேன், தந்தையே” என்றான்.
துரியோதனன் அவன் கைகளைப்பற்றி “உனக்காகத்தான் காத்திருந்தேன், மைந்தா. அமர்க!” என்றான். சுருதகீர்த்தி அஸ்வத்தாமனின் கால்களைத் தொட்டு வணங்கி “வாழ்த்துக, மூத்தவரே!” என்றான். அவன் தலையில் கைவைத்து “நலம் சூழ்க!” என்று அஸ்வத்தாமன் வாழ்த்தினான். சுதசோமன் வந்து துரியோதனனின் கால்களைத் தொட்டு வணங்கி “பணிகிறேன், தந்தையே” என்றான். அவன் கைகளைப்பற்றி இடையில் கைசுழற்றி தழுவிக்கொண்டு “நன்கு தோள்பெருத்துள்ளாய். முறையாக கதை பயில்கிறாய் அல்லவா?” என்றான் துரியோதனன். “ஆம், தந்தையே” என்றான் சுதசோமன். அஸ்வத்தாமன் “நன்கு உண்கிறான் என்பதில் எந்த ஐயமுமில்லை” என்றான்.
துரியோதனன் நகைத்து “ஆம், அவன் தன் தந்தையைப்போல. நாங்கள் சேர்ந்து உண்ணும்போதெல்லாம் விழிதிருப்புகையில் அருகிருந்து உண்பவர் பீமசேனர் என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியாது” என்றபின் அவன் கைகளைப்பற்றி விரித்துப்பார்த்து “திரோத்பவம் பயில்கிறாய் அல்லவா?” என்றான். “ஆம், சென்ற ஓராண்டாக” என்றான் சுதசோமன். “திரோத்பவம் முழங்கையில் இந்த இரு தசைகளையும் பெரிதாக்குகிறது, பாஞ்சாலரே” என்றான் துரியோதனன். சுதசோமனின் கையில் இருந்த இரு கெண்டைத் தசைகளையும் தொட்டுப்பார்த்து “ஆனால் பயிற்சி முடிவடைய நெடுங்காலமாகும்” என்றபின் “உபலம்பம்?” என்றான். முனகலாக “அதையும் பயில்கிறேன்” என்றான் சுதசோமன்.
“திரோத்பவமும் உபலம்பமும் இணைந்து பயிலப்பட வேண்டும். களப்போரில் புரவியும் ஊர்பவனும்போல அவை ஒன்றென்றாகியிருக்கவேண்டும் என்பார்கள்” என்றபின் “எழுக!” என்றான் துரியோதனன். சுதசோமன் எழுந்தபின் தானும் எழுந்து ஓங்கி அவன் தோளில் அடித்தான். முழங்கையால் அவன் கையைத் தடுத்து கால் வளைத்து இடையில் ஓங்கி முட்டி தடுத்த கையை சுற்றிப்பிடித்து தலைக்குமேல் தூக்கி மறுபுறமிட்டான் சுதசோமன். காலூன்றி சுழன்று திரும்பிய துரியோதனன் பின் எழுந்து “என்னைச் சுழற்றி வீசியதும் உனது கால் தரையிலிருந்து சற்றும் இளகக்கூடாது. ஆனால் நீ சற்று நிலைதடுமாறி இரண்டடி பின்னால் வைத்தாய்” என்றான். “ஆம், தந்தையே. உபலம்பத்தின்போது எனக்கு எப்போதுமே கால்கள் அணுவிடை நிலைபெயர்கின்றன” என்றான் சுதசோமன்.
“மூடன். இப்போது நான் திரும்பி உன் கால்களை என் கால்களால் அறைந்திருந்தால் மல்லாந்து விழுந்திருப்பாய். நான் உன் நெஞ்செலும்பை மிதித்து உடைத்திருக்கமுடியும்” என்றான் துரியோதனன். சுதசோமன் தலைகுனிந்து நின்றான். “எத்தனை காலமாயிற்று, இதை பயிலத் தொடங்கி?” என துரியோதனன் கடுமையான குரலில் கேட்டான். “ஓராண்டு” என்று சுதசோமன் மெல்ல முனகினான். “ஓராண்டில் கால் நிலைக்கவில்லை என்றால் என்ன பொருள் அதற்கு? நீ முழுமையாக ஈடுபட்டுப் பயிலவில்லை. இங்கு என் அரண்மனையிலேயே சிலகாலம் இரு. உபலம்பத்தின்போது கால் நிலைக்காமல் இருப்பது ஆடையில் நெருப்பை பற்றவைத்துக்கொள்வதுபோல” என்றபின் திரும்பி தன் பீடத்திலமர்ந்து “அமர்க!” என்றான்.
தயங்கிய குரலில் “இல்லை” என்றான் சுதசோமன். “அமர்க, மூடா!” என்று அவன் கையைப்பற்றி அழுத்தி அமரவைத்தபின் “உன் மூத்தவனை சென்று பார். லக்ஷ்மணன் உபலம்பத்தில் நின்றால் தன்னளவே எடைகொண்ட இரு இளையவர்களைத் தூக்கி மறுபுறம் வீசுவான். வேங்கைமரம் வேரூன்றியது போலிருக்கும் கால்கள்” என்றான். சுதசோமன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். முகம் மலர்ந்து அவன் தோளைத்தட்டி “நன்று! உண்பதில் சற்று முன்னால் சென்றுவிட்டாய். பயிற்சி சற்று பின்தங்கிவிட்டது” என்று சிரித்த துரியோதனன் “உணவருந்தினாயா?’ என்றான். “இல்லை. என் கால்கள் நிலைக்காமைக்கு அதுகூட ஏதுவாக இருக்கலாம்” என்றான் சுதசோமன்.
அஸ்வத்தாமன் இரு தொடைகளிலும் அடித்து உரக்க நகைத்து “உகந்த மறுமொழி. இதையும் பீமன் சொல்வதை பலமுறை கேட்டிருக்கிறேன்” என்றான். “மனிதர்கள் மீளமீள நிகழ்கிறார்கள்” என்று துரியோதனன் சொன்னான். “நாமறியாது ஏதோ இலக்கை நோக்கி எய்யப்படும் அம்புகள். அவர்கள் குறிதவறுந்தோறும் மீண்டும் மீண்டும் செலுத்தப்படுகிறார்கள்.” சுருதகீர்த்தி உளம் திடுக்கிட துரியோதனனின் முகத்தை பார்த்தான். மிக அண்மையில் அதே சொற்றொடரை அவனிடம் எவரோ சொன்னதை நினைவுகூர்ந்தான். அல்லது அவனே எண்ணிக்கொண்டதா? ஏதோ நூலிலிருந்து நினைவு கொண்டதா?
துரியோதனன் கைகளைத் தட்ட ஏவலன் ஒருவன் உள்ளே வந்தான். “மைந்தனை அழைத்துச்சென்று உணவு ஒருங்கு செய்” என்றான் துரியோதனன். “உண்டு வருக, மைந்தா! உன் இளையவனிடம் மட்டுமே நாங்கள் பேச வேண்டியுள்ளது.” சுதசோமன் எழுந்து தலைவணங்கி வெளியே சென்றான். “என்ன விசை! எப்போதும் உணவை நோக்கிப் பாய்வதே இவர்களின் வழக்கம்” என்றான் அஸ்வத்தாமன். “மல்லர்கள் காணும் உணவு பிறிதொன்று. அது அன்னபிரம்மம்” என்று துரியோதனன் நகைத்தான்.
கதவு மூடியதும் துரியோதனன் “மைந்தா, நீங்களிருவரும் வந்துகொண்டிருப்பதை ஒற்றர்களினூடாக முன்னரே அறிந்தேன். என் எல்லைக்குள் சல்யர் வந்துவிட்டிருப்பதனால் நீங்கள் ஆற்றக்கூடிய பணி எதுவுமில்லை என்று உணர்ந்தேன். ஆயினும் இளைய யாதவன் திட்டம் ஏதென்று தெரியாததனால் விரைவைக்கூட்டி இன்று மாலையே இங்கு வந்து சேர்ந்தேன். சல்யரை நான் இன்னும் சந்திக்கவில்லை. சந்திக்கும்போது நீங்கள் இருவரும் உடன் இருப்பது நன்று என்று எண்ணினேன். ஏனெனில் இதில் சூழ்ச்சியோ பொய்மையோ ஏதுமில்லை. நேரடியான அரசியல் களமாடல் மட்டுமே என்றும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் தந்தையர் விழிகளே உங்கள் வடிவில் இங்கு வந்து என்னுடன் இருக்கின்றன” என்றான்.
சுருதகீர்த்தி தலையசைத்தான். “நீ எண்ணியதுபோலவே இது கணிகரின் திட்டம்தான். சௌனகரிடம் வஞ்சினம் உரைத்து சல்யர் அபிமன்யூவின் மணநிகழ்வுக்கு கிளம்பிச்செல்ல இருப்பதை அறிந்தேன். ஆனால் அங்கு யாதவர்கள் முன் தான் முதன்மையாக மதிக்கப்படாது போகலாம் என்று அவர் ஐயுற்றார். ஆகவே தன் படையனைத்தையும் திரட்டிக்கொண்டு செல்ல வேண்டுமென்று எண்ணினார். சல்யரிடம் இருந்த அந்த ஐயமே உள்ளே நுழைவதற்குரிய விரிசல் என்றார் கணிகர். சல்யர் படைதிரட்டிப் புறப்பட நான்கு நாட்களை எடுத்துக்கொண்டார். அது எங்களுக்கு போதுமான காலம்.”
“உத்தரபாஞ்சாலத்திலிருந்து அஸ்வத்தாமரை சல்யரிடம் அனுப்பினேன்” என துரியோதனன் தொடர்ந்தான். “சல்யர் துரோணர் மீதும் அஸ்வத்தாமன் மீதும் பெரும்பற்று கொண்டவர். நீ எண்ணுவதுபோல சல்யரை நான் எவ்வகையிலும் ஏமாற்றி இங்கு அழைத்து வரவில்லை. அஸ்தினபுரிக்கு வந்து என்னை சந்தித்துவிட்டுச் செல்லமுடியுமா என்றுதான் அஸ்வத்தாமன் கேட்டார். சல்யர் இங்கு வந்துள்ளது முற்றிலும் தன் நலன் கருதியே.”