நாகர்கோயிலும் சுச்சா பாரதமும்

nager

மாபெரும் குப்பைக்கூடை

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

நலம் என நினைக்கிறேன். என்னால் நம்பவேமுடியாதவாறு என்னுடைய முந்தைய முதல் கடிதம் தங்கள் பதிலுடன் உங்கள் தளத்தில் வெளியானது, http://www.jeyamohan.in/96497#.WeHwSLKg_IU அந்த பூரிப்பில் அதற்கு பதில் எழுத நினைத்தேன், நேரம் கூடவில்லை அல்லது அதில் மேலும் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை என்று நினைத்து காலம் கடந்து விட்டது. நேற்று நாகர்கோவில் பற்றிய தங்களின் எரிச்சல் பதிவு மீண்டும் என் கையரிப்பை தூண்டிவிட்டதால் இதனை எழுதுகிறேன்.

கவுன்சிலர் மற்றும் நகர்மன்ற நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்துபோன தற்போதைய நிலையில் நகராட்ச்சித்தலைவரை குறைசொல்வது ஏற்புடையதா எனத்தெரியவில்லை, நகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் தான் பொறுப்பென்று நினைக்கிறேன். மீனாதேவ் ஜந்து வருடங்கள் ஒன்றும் செய்யாமல் சென்றிருந்தாலும். அரசியல் மேன்மைகள் காமராஜர் காலத்தோடு மறைந்துவிட்டது தான் நிதர்சனம். நிற்க, நான் சொல்லவந்தது அது குறித்து அல்ல.

எல்லோரையும் போல் நானும் நம் நகரத்தை குறித்து பெருமைப்படுபவன், இப்போது வருடத்தில் 30 அல்லது அதிகபட்சம் 60 நாட்கள் மட்டுமே நான் வசிக்கும் நகரமாக அது இருந்தாலும். ஒவ்வொருமுறை நான் விடுமுறைக்கு வரும்போதும், பெரும் எதிர்பார்புடன் வந்து சிறு ஏமாற்றத்துடன் தான் திரும்பி வருவேன்.

நான் வடசேரியில் பிறந்து வளர்ந்தவன், சிறு வயதில் நான் குளிக்கச்சென்ற பழையாறு இப்போது இல்லை, பழையாற்றின் கரைகள் மணற்கொள்ளையர்கள் மற்றும் அருகிலுள்ள வயல் முதலாளிகளால் காவு கொள்ளப்பட்டு விட்டது, இப்போது இருப்பது ஒரு குப்பை ஆறு, புத்தேரி ஆஸ்பத்திரி கழிவுகள் உள்பட நகரக்கழிவுகள் கலந்து ஓடும் ஒரு சாக்கடை. சமீபத்தில் என் தந்தை தவறியபோது வடசேரி மையானத்திற்கு ஈமக்கடன்கள் செய்யச்சென்றபோது அதிர்ச்சியடைந்தேன், நதியின் தற்போதைய நிலையைப்பார்த்து. படித்துறைகள் கூட பராமரிப்பின்றி உடைந்துகிடக்கும் அவலம்.

பொதுமக்களின் சமூகப்பங்கழிப்பு குறைந்துபோனதும் ஒரு காரணம் என நினைக்கிறேன். என் சிறுவயதில் நான் குளிக்கச்செல்லும் போது தினமும் இருவர் தொடர்ச்சியாக படித்துறைகளை மேலிருந்து கீழ்வரை கழுவி விடுவர், கீழ்படியில் துவைத்து வைத்திருக்கும் துணிகளின் ஊடாக அழுக்கு நீர் இறங்கி வரும்போது நமக்கு எரிச்சல் வரும், ஆனால் அவர்கள் அதைப்பற்றி கவலையே இல்லாமல் ஏதோ நகராட்சி அவர்களுக்கு மாதச்சம்பளம் தருவதுபோல் நாள் தவறாமல் ஒரு தவம் போல் காலையில் வந்ததும் படித்துறையை கழுவிவிட்டுவிட்டு தாங்களும் குழித்து கறையேறுவார்கள், அப்படிப்பட்ட மனிதர்கள் இப்போது இல்லை, காரணம் ஆறு ஆறாகவே இல்லாத போது அதற்கான தேவையும் இல்லை என நினைக்கிறேன்.

அந்தக்காலத்தில் பொங்கலுக்கு அடுத்தநாள் காணும் பொங்கல் தினத்தன்று பொங்கலுக்கு மிஞ்சிய பழையசாதத்துடன், சாம்பாருடன் அவியல் மற்றும் பிற மிஞ்சிய அனைத்து கறிகளும் கலந்த பழங்கறி நிறைந்த தூக்குப்பாத்திரங்களுடன் வடக்காத்துக்கு வடசேரி ஜனம் முழுதும் கலந்து போகும், வடக்காத்தில் மிகப்பெரிய மணல் பறப்பு இருந்தது, அக்கறையில் இருக்கும் புன்னைமரத்தடி வரை நீந்திச்சென்று குழித்து, ஹரிகிருஷ்ணன் கோவில் சென்று பட்டை போட்டுக்கொண்டு மணற்பரப்பில் ஊற்று தோண்டி குடிநீர் எடுத்து, அனைவரும் அமர்ந்து உணவுண்டு சைட்அடித்து கடந்து சென்ற காலங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறது. இப்போது அந்த மணல்வெளியே காணாமல் போய்விட்டது, ம்ம்ம், நிற்க, நான் சொல்ல வந்தது இதுவும் அல்ல.

எண்பதுகளின் இறுதியில் அரசு அப்போது அறிவித்த பிரைம் மினிஸ்ட்டர் ரோஜ்கார் யோஜனா (பி.எம்.ஆர்.ஒய்) திட்டத்தின் கீழ் ஒரு வங்கி மேலாளரை யாருடைய பரிந்துரையும் இல்லாமல், எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் அணுகி 85000 ரூபாய் கடன் வாங்கி சந்தைக்கடையில் தேங்காய், மாங்காய் வாங்குவது போல் கணிணி பற்றிய எந்த அறிவும் இல்லாமல் கணிணி வாங்கி தொழில்முறை கணக்காளனாய் நகரில் முதல்முறையாக ஒரு நிறுவனம் நடத்திவந்த நாட்கள் தங்கள் கட்டுரையை பார்த்து நினைவுக்கு வந்தது. மின்னஞ்சல் வருவதற்கு முந்தைய காலகட்டம், அப்போது கணிணியை போர்டு லெவலுக்கு சர்வீஸ் செய்யும் ஆட்கள் நகரில் இருந்தனர், அவர்கள் மின்னஞ்சல் என்று ஒன்று வரப்போகிறது, அமெரிக்காவில் இருந்து ஒருவர் மின்னஞ்சல் அனுப்பினால் அடுத்த நொடியிலேயே நம் மின்னஞ்சல் பெட்டிக்குள் அது வந்து விடும், நாம் திறந்து படித்துவிடலாம் என்று சொல்லும்போது வாய்பிழந்து என் நாகராஜாகோவில் வடக்குத்தெரு அலுவலக மாடியில் நின்றிருந்தது நினைவுக்கு வந்தது. என்னால் அந்தசமயத்தில் அதை நம்பவே முடியவில்லை, இன்று கணக்காளனாய் நான் துபாயில் வேலைபார்ப்பதற்கு அப்போது நானே கற்றுக்கொண்ட கணிணி அறிவே முக்கிய காரணம். நம் நாகர்கோவிலில் கணிணி ரிப்பேர் செய்ய ஆளில்லையா என்பதை நினைக்கும் போது வருத்தம் வருகிறது, திறமையானவர்கள் எல்லாம் எங்கோ பிழைப்பு தேடிப்போய் எஞ்சியவர்கள் கையில் நம் நகரமா இப்போது? கவலையளிக்கிறது.

இங்கே துபாய் போன்ற நகரங்களில் ஒருபொருள் ரிப்பேர் ஆகிவிட்டால் அதை எறிந்துவிட்டு அடுத்து புதியதாய் வாங்கிக்கொள்வது வழக்கமான ஒன்று, ஆரம்பத்தில் அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், ரிப்பேருக்கு செலவழிக்கும் பணம் மற்றும் நேரத்தை கணக்கில் கொண்டால் அப்போதிருக்கும் புதிய தொழில்நுட்பத்துடன் புதியது வாங்குவது நல்லது என்பது பின்னர் புரிந்தது. ஒரு பிரிண்டரின் விலை 300 திர்ஹாம் என்றால் ரிப்பேர் செய்வதற்கு இங்கே குறைந்தது 150 ஆகும், பின்னர் நேரவிரயம். அதற்கு இங்கே இருக்கும் வாங்கும் சக்தி முக்கியம், நம் ஊரில் வாங்கும் சக்தி குறைவு அதனால் திறமையானவர்களுக்கு அதாவது கணிணியை ரிப்பேர் செய்யச்செலவாகும் திறமைக்கேற்ற ஊதியம் கொடுக்க முடியாது, அது அவர்களை ஊதியம் கிடைக்கும் இடத்தை நோக்கி உந்துகிறது.

வாரன்டி சர்வீஸ்களும் நம் ஊரில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை, இங்கே துபாய் போன்ற பெருநகரங்களின் எல்லைகள் குறைவு, அதனால் வாரன்டியில் வாங்கி ரிப்பேர் ஆனால் அதை உடனடியாக சரிபண்ணி அல்லது மாற்றி புதியதாய் வாங்கிக்கொள்ளலாம், ஆனால் நாகர்கோவில் வாங்கிவிட்டு சென்னை சென்று மாற்றி வருவது எந்த அளவுக்கு சரிவரும், அப்படியானால் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் எப்படி இதனை செய்கிறார்கள், ஊருக்கு ஊர் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்கள் வந்தால் இது சாத்தியம், நம் நாகர்கோவிலுக்கு என்று வரப்போகிறதோ தெரியவில்லை. பார்க்கலாம்.

போர்களாலும், ஊடுருவல்களாலும் பஞ்சத்தாலும் நாம் இழந்தது அதிகம், நம் நாடும் வளம் பெற்று சிறப்பாகும் என்று நம்புவதை தவிர நாம் ஒன்றும் செய்வதற்கில்லை இப்போது,

சமீபமாய் நீண்ட நாட்கள் கழித்து புத்தகங்கள் வாங்க ஆரம்பித்திருக்கிறேன், ஒரு காலத்தில் சாண்டில்யன், கல்கி புத்தகங்கள் என் அறைகளில் இருந்திருக்கின்றன, அதை இப்போதைய தலைமுறையினர் அல்லது என் பிள்ளைகள் தொடுவது கூட இல்லை, நானும் பணத்தின் பின்னால் அலைந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஒற்றைக்குறிக்கோளுடன் ஓடிய காலங்களில் அவை எங்கோ தொலைந்து மறைந்து விட்டன, நீண்ட வருடங்களுக்குப்பின் புத்தகங்கள் வாங்க ஆரம்பித்திருக்கிறேன், அது ஏனோ நான் ஊருக்கு வரும் சமயத்தில் புத்தகக்கண்காட்சிகள் வருவதே இல்லை, உடன் படித்த நண்பர்கள் மற்றும் சிறுவயது தோழர்கள் எல்லாம் இப்போது திசைக்கொன்றாய் ஆனபின் ஊருக்கு வந்தால் பொழுது போவதும் இல்லை, தினமும் நாகராஜாகோவில் சீவலி பூஜை மட்டும் போவது வழக்கம், கடவுள்களை உறங்கப்படுத்திவிட்டு நானும் வீட்டுக்கு வந்து உறங்கச்செல்வது தான் ஊரில் இப்போது ஒற்றைப்பொழுதுபோக்கு.. இப்போது வாசிப்பும், நன்றி.

காடு வாங்கி ஒரே வேகத்தில் படித்து முடித்துவிட்டேன், விஷ்ணுபுரம் நடக்கிறது, முடிக்காமல் பிறவற்றை தொடுவதில்லை என்று முயன்று கொண்டிருக்கிறேன், இந்துஞானமரபில் ஆறு தரிசனங்கள், சார்த்தா, ரத்தத்தில் முளைத்த என் தேசம், நம்பக்கூடாத கடவுள் மற்றும் ஆளிபெரிது ஆகியவை அடுத்து வரிசையில் இருக்கிறது.

நீங்கள் துபாய் வருவதாய் எழுதியிருந்தீர்கள், என்று, எப்பொழுது? சும்மா, ஓரமாய் நின்று பார்த்துவிட்டு வரலாம் என்றுதான், முடிந்தால் பகிரவும்.

நம் இனிய ஊர்நினைவுகளை கிளறிவிட்டதற்கு மீன்டும் ஒருமுறை நன்றி, வணக்கம்.

அன்புடன்,

மணிகண்டன், துபாய்.

***

அன்புள்ள மணிகண்டன்,

எனக்கு எப்போதும் நாகர்கோயில் என் நகரம்தான். நான் விரும்ப, அமிழ இங்கே ஏராளமாக இருக்கின்றன. ஆதங்கமும் கசப்பும்கூட அதிலிருந்துதான்.

ஜெ

***

அன்பு ஜெ.மோ

நாகர்கோவிலில் கிடைக்கக் கூடிய தொழில்நுட்ப உதவி பற்றி நீங்கள் சீறுவது நியாயமாகத்தான் தெரிகிறது.

சென்னையில் புத்தம்புது லாப்டாப் வாங்குவது மிக எளிது. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டருக்கு மேலுக்கு முடியாமல் போனால், சென்னையில் அதற்கான tech support பற்றிப் பிரமாதமாகச் சொல்ல எதுவுமில்லை. நான் கவனித்தவரை, எந்த ப்ராண்ட் லாப்டாப் ஆக இருந்தாலும், ஒரு தடவை பழுது திருத்த நெம்பித் திறந்தால் அப்புறம் பிரச்சனை தான். கிட்டத்தட்ட எல்லாமே use and throw தான்.

தீர்வு? நான் இந்தப் பத்து வருடத்தில் ஐந்து லேப்டாப் வாங்கி விட்டேன். மற்றவர்கள் எப்படியோ

அன்புடன்

இரா முருகன்

***

அன்புள்ள இரா முருகன்,

நலம்தானே?

ஆப்பிள் போன்ற எதையாவது வாங்கினால் இருக்கிற கண்பிரச்சினையில் கீழே போட்டுவிடுவேன் என்று பயம். அதனாலேயே சீப்பான மின்பொருட்களையே நாடுகிறேன். கீழே விழுந்தாலும் போனால்போகட்டும் போடா என இருந்துவிடலாம்

சினிமா நண்பர் ஒருவரின் காதலி படு சுமார் ரகம். அவர் சொன்னார் “பிரேக்கப் ஆனாக்கூட வருத்தப்படவேண்டியதில்லை சார். அதான் இவள செலெக்ட் பண்ணினேன்”

ஜெ,

***

டியர் ஜெயமோகன் சார்,

நாகர்கோவில் பற்றி தாங்கள் எழுதியதை படித்தேன் தாங்களது தனிப்பட்ட கோபத்தை பொதுமைப்படுத்தி எழுதியிருப்பது சரிதானா?

அன்புடன்

மு.நாகூர்பிச்சை

***

அன்புள்ள நாகூர்ப்பிச்சை,

இரண்டுவகை அனுபவங்கள் உள்ளன. ஒன்று அரசு அறிக்கை. இன்னொன்று நம் அனுபவம். இரண்டில் எதை நம்பவேண்டும்? மாதமாதம் கலெக்டரும் நகராட்சி ஆட்சியரும் அரசாங்கத்திடமிருந்து கடிதம் பெறுகிறார்கள் சுச்சு பாரதம் எப்படி இருக்கிறது என்று. அவர்கள் இத்தனை டன் குப்பை அள்ளப்பட்டது என்கிறார்கள். அதுதான் பொது அனுபவம். நாகர்கோயிலில் பேருந்துநிலையம் தொடங்கி எல்லா தெருமுனைகளிலும் குறைந்தது ஆறுமாதக் குப்பையை மலைமலையாகக் காணமுடியும் என்பது என் அனுபவம். எதை நான் எழுதவேண்டும்?

ஜெ

***

இனிய ஜெயம்,

மாபெரும் குப்பைக்கூடை பதிவு வாசித்தேன். கணிப்பொறி பழுது நீக்கும் த்ராணியின்மை நாகர்கோவில் எல்லையுடன் முடிந்து விடும் ஒன்றல்ல தமிழ் நிலம் முழுமைக்குமான சிக்கல் அது.

இன்று மொபைல் முதல் எந்த மின்னணு சாதனமும் [முப்பதாயிராம் விலைக்குட்பட்டது] பழுதுபட்டாலும், அதை சரி செய்ய முடியுமா எனும் நிலை சர்வீஸ் சென்டரில், பல படிகளுக்குப் பிறகே பரிசீலிக்கப்படும். ”என்னத்துக்கு சார் இதேயே. .. வேற மாத்திடுங்களேன் என ஆரம்பித்து அவர்களின் அந்த மாத விற்பனை இலக்கை தொட நம்மை உயிர் எடுப்பார்கள். அடுத்து பொருளில் எது பழுது என்று சுட்டி அதை மாற்ற சொல்லுவார்கள். அந்த பொருளை மாற்றாமல் அந்த பொருளில் நிகழ்ந்த பழுதை மட்டும் நீக்கும் திராணி இங்கே பெரும்பாலானோருக்கு கிடையாது.

அதே போல குப்பையும். அதுவும் தமிழ்நிலம் தழுவிய பிரச்னைதான். முதல் பிரச்னை தமிழ் மனத்தில் துளைக்க இயலா வண்ணம் நிறைந்து வழியும் தடித்தனம். உண்மையில் நம்மில் எவருக்கும் அசுத்தம் சார்ந்தோ அது கிளர்த்தும் நோய் சார்ந்தோ எந்த அக்கறையும் கிடையாது. கடந்த வாரம் ஒரு தாய், அவளது ஆறு மாத குழந்தை இருவருக்கும் டெங்கு, பயந்து போன தாய் குழந்தையுடன் கிணற்றில் குதித்தது விட்டாள். இந்த பன்னிரண்டாம் தேதி மதியம் வரை தமிழ் நிலத்தில் பதிவு பெற்ற டெங்கு மரணங்கள் ஆறு. அனிதா மரணத்துக்கு கொட்டை தெறிக்கும் வண்ணம் கூச்சலிட்டவர்கள் அனைவரது முகநூல் குப்பைகளையும் கிண்டிப் பாருங்கள் இவை குறித்தெல்லாம் எதுவுமே அவர்கள் மண்டையில் உரைக்கவில்லை என்பது தெரியவரும்.

கடலூர் எப்போதும் போல இந்த முறையும் டெங்குவின் தலைமை செயலகம். ஊருக்கு மத்தியில் ஓடும் கெடிலம் படுகை முழுவதும் ஊரின் கழிவுகள். சிப்காட்டின் ரசாயன புகை சூழ்ந்த சுற்று சூழல். அனைத்துக்கும் மேல் ஊரின் மையத்தில் [அது துவங்கப்பட்ட போது அதுதான் ஊரின் எல்லை] பல ஏக்கர் பரப்பளவில் குவிந்து நிற்கும் நகராட்சி குப்பை மலை [இப்போது அதன் மேல் மழை பெய்துகொண்டு இருக்கிறது]. அடிப்படையான இந்த மூன்று உற்பத்தி கேந்திரம் அழிக்கப்படாமல் கொசுவோ அது கிளர்த்தும் நோயோ கட்டுப்பாட்டுக்குள் வராது.

சிப்காட் சுற்று சூழல் சீர்கேடு சார்ந்து பல வழக்குகள் நிலுவையில் கிடக்கிறது. கெடிலம் நதியில் கழிவுகள் கலப்பது மீது அரசு நடவடிக்கை எடுக்க ஏசுவின் இரண்டாம் வருகையைத்தான் எதிர்நோக்க வேண்டும். அடுத்து இந்த குப்பை மலை. அதை ஒன்றுமே செய்ய இயலாது.

கடலூர மாவட்டத்தில் அரசு ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடிக்கும் குழந்தை ஒரு பத்து என வைத்துக் கொள்வோம் அதில் ஐந்து குழந்தைக்கு கூட தனது பெயரை பிழை இன்றி எழுத தெரியாது. அந்த ஐந்தாம் வகுப்பு எடுக்கும் ஆசிரியர் வாங்கும் சம்பளம் அரை லட்சம். அது யார் குழந்தை? குப்பை பெருக்குபவர் குழந்தை. இங்கே குப்பை பெருக்குபவருக்கு என்ன சம்பளம்? தினமும் குப்பையில் புழங்கும் அவர்களுக்கு என்ன விதமான மருத்துவ பாதுகாப்பு அரசு அளிக்கிறது?

கடலூரில் எந்த தெருவிலும் குப்பை தொட்டி கிடையாது. குப்பை பெருக்கும் பணியில் ஆளே கிடையாது. இருக்கும் முப்பது பேரில் பாதி பேருக்கு டெங்கு.

எந்த ஊர் ஆனாலும் ஒரு திட்டம் என்றால் முதலில் என்ன செய்ய வேண்டும்? நிதி ஒதுக்கி, ஆட்களை அதிக எண்ணிக்கையில் வேலைக்கு சேர்த்து, சம்பளம் அதிகரித்து, மருத்துவ பாதுகாப்பு அளித்து, உரிய உபகரணங்கள் அளித்து, அவர்களை நெறிப்படுத்த்த தக்க தலைமை அமைத்து, விரிவாக பிரச்சாரம், கட்டுப்பாடு தண்டனைகள் வழியே சிவில் மனதை இவற்றுடன் இணைத்து இதன் முகமாகவே இந்த செயலின் முதல் படி துவங்க வேண்டும். அடுத்த கட்டமாக ஊர் மையத்தில் சேரும் அனைத்து குப்பைகளும் எரித்து அழிக்கப்பட தேவையான லாபம் ஈட்டும் தொழில் நுட்பத்தை அரசு அமைக்கவேண்டும், [பண்ரூட்டியில் ஒரு நிறுவனம் மலை மலையாக குப்பைகளை எரித்து அதிலிருந்து தனக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முயன்று பார்த்தது]. நிலவரமோ நேர் தலைகீழ். இந்த சுச் பாரத்தில் மோடி தவிர யார் இருக்கிறார்கள் என பாரத பிரஜை யாருக்கும் தெரியாது. [இந்த விளம்பரத்துக்கு ஆன செலவில் பல்லாயிரம் குப்பை தொட்டிகள் வாங்கி இருக்கலாம்]

பெரும் கனவுடன் துவங்கி, தளராது முன்னெடுக்கவேண்டிய கர்ம யோக பணி இது. நிதர்சனத்தில் என்ன நடக்கிறது. குளுகுளு; மால்களில் சுத்தத்தை நோக்கி மேலும் ஒரு அடி எனும் முழக்கத்துடன் இன்னும் பொது வெளியில் மலம் கழிக்கும் இந்தியா குறித்து கரிசனம் கொட்டுகிறது அரசு விளம்பரம். தொடப்பக்கட்டையை கட்டிப் பிடித்து போஸ் கொடுக்கும் முகங்களை முகநூலில் பகிர்ந்து, பிஜேபி ஜால்றாக்கள், உடைந்து போன பின்னும் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள் ஜால்றாவை

ஆம், சுச் பாரத் துவங்கிய நாள் முதல், ஜால்றா சத்தம்தான் கேட்கிறது. குப்பை பெருக்கும் சத்தம் கேட்கவே இல்லை.

கடலூர் சீனு

***

அன்புள்ள கடலூர் சீனு

ஸ்வச் பாரத் நல்ல திட்டம் – ஆனால் மெய்யாகவே குப்பையை அள்ளவேண்டும். அதை நாமே அள்ளிக்கொண்டால்தான் உண்டு. நாகர்கோயிலில் அப்படி ஒரு வழக்கம் இருப்பது போலத் தெரியவில்லை. எப்போதாவது ஏதாவது விஐபிக்கள் வந்தால் குப்பைமலைகளை அள்ளி அப்படியே ஏவிஎம் சானலில் கொட்டிவிடுவார்கள். மிதந்துசென்று குளிப்பவர்களை அழுக்காக்கி கடலை அடையும்.

என் வீட்டுக்கு ஏதாவது வெளிநாட்டு விஐபி வந்தால் நானே செலவுசெய்து அவர் வரும் வழியின் குப்பைகளை மட்டும் அள்ளி அவர் கண்காணாத எங்காவது போட்டுவிடுவதுண்டு. குப்பைகளை அள்ள எந்த நிதியமைப்பும் நிர்வாக அமைப்பும் செய்யாமல், எந்தக் கண்காணிப்பு அமைப்பும் உருவாக்காமல், வெறுமே வாரியல் எடுத்து புன்னகைக்கும் மோடி நம்மிடம் சொல்வதும் அதுதானே? “இந்தால வாரி அந்தால போட்டிருங்க மக்கா” என்று

ஜெ

***

முந்தைய கட்டுரைஎழுத்தறிவிக்கும் சடங்கு – எம்.ரிஷான் ஷெரீப்
அடுத்த கட்டுரைதி ஹிந்துவின் திராவிட மலர்