சோபியாவின் கள்ளக்காதலன்

sophia

சோஃபியாவின் கடைக்கண்

அன்புள்ள ஜெயமோகன் சார்,
நான் ஒரு சிறந்த இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன், ஆனால் நிச்சயமாக இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்வேன். நான் இளமையில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்ததாலேயே பட்ட கஷ்டங்கள், இப்போது நினைத்தால் சிரிப்பாக உள்ளது. புத்தகம் படித்தால் புத்தி சுவாதீனம் போய்விடும் என்றும் நிறைய படித்ததால் ஒருவன் சீரியல் கில்லர் ஆனான் என்றும் பல தடவை எனக்கு சொல்லப்பட்டுள்ளது. காலையில் அலாரம் வைத்து எழுந்து யாரும் எழுவதற்கு முன்னால் கதை புத்தகங்களை வாசித்துள்ளேன் பள்ளி நாட்களில். பல தடவை புத்தகம் என் கையில் இருந்து பிடுங்கி வீசப்பட்டுள்ளது. யாரோ ஒரு நண்பர் சொன்னதின் பெயரில் உண்மையில் நான் கதை புத்தகம் தான் படிக்கிறேனா அல்லது அதற்குள் பாலியல் படங்களோ, எழுத்துக்களோ உள்ளனவா என்று என் தந்தையார், புத்தகங்களை புரட்டி புரட்டி பார்த்துள்ளார். ஈஸ்வரி வாடகை புத்தக நிலையத்தில் சந்தா கட்ட இருநூறு ரூபாய்க்கு அலைந்துள்ளேன். தேவநேய பாவணர் நூலகத்தில் பெண்ணாசை என்ற பாலகுமாரனின் மகாபாரத கதையை எடுத்ததற்கு திட்டு வாங்கியுள்ளேன். பாலகுமாரன் ஐயா எழுத்துக்களே எனக்கு இளமையில் பெரும் துணை. நீங்கள் சுஜாதா சாருக்கு ஒன்பது வயதில் கடிதம் எழுதியதை சொல்லியிருந்தீர்கள். நான் பதினைந்து வயதில் விகடன் ஆபீசுக்கு போன் போட்டு அவர் நம்பர் வாங்கி பேசியிருக்கிறேன். “எக்ஸிஸ்டென்ஷியலிசம் நா என்ன சார்?”, “நீங்க ரைட்டிங் கிளாஸ் எடுக்கிறீங்களா”. பாலகுமாரன் சாரிடமும் பேசி இருக்கிறேன். அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். இந்த நினைவுகளை உங்களது கட்டுரை மீட்டது…
அன்புடன்
K
பி.கு. இந்த கடிதத்தை வெளியிடுவதாக இருந்தால், என் பெயரை வெளியிட வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.

***

அன்புள்ள  K

உங்கள் கடிதம் ஆர்வமூட்டியது. குறிப்பாக அதிலுள்ள கடைசி வரி. நேற்றைய அனுபவங்கள் அனைவருக்கும் உரியவை. இன்றும் , வேலைக்குச் சென்றபின்னரும், தலைமறைவுப்போராளியாகவே இருக்கிறீர்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியம் அளித்தாலும் நிறைய ஆச்சரியம் அளிக்கவில்லை

மனைவியைக் கேட்டதாகச் சொல்லவும்

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 34
அடுத்த கட்டுரைபாணாசிங் -கடிதம்