காட்டைப்படைக்கும் இசை
அன்பின் ஜெமோ
வணக்கம்.காட்டைப் படைக்கும் இசை”வாசித்தேன்.
சமகால நிகழ்வுகளில்,உணர்ச்சிகளில் சிக்கிக்கொள்ளாமல் தப்பிப்பது என்பது இன்றைய இணைய உலகில் மிகக் கடுமையான சவாலாகவே உள்ளது.
அதனை எப்படி இயல்பாகத் தள்ளிவிட்டு ஒட்டுமொத்தப் பார்வையில் இலக்கியவாதி ,இலக்கிய வாசகன் செயல்பட வேண்டுமென்று வேண்டுமென்று அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
தனிப்பட்ட முறையில் நான் பெரும்பாலான இத்தகைய சமகால நிகழ்வுகளில் பங்கேற்பதேயில்லை.யாராவது விவாதித்தாலும் அதில் எனக்கு எந்த சுவாரசியமும் இருப்பதில்லை.எத்தனை கோணங்களில் திரும்பத் திரும்ப இவற்றை பேசுகிறார்கள் என்று மட்டுமே எண்ணுவேன்.
பெரும்பாலான நேரங்களில் வாசித்துக் கொண்டிருக்கும் எனக்கு சில வேளைகளில் நீங்கள் எழுதியது போன்று , என்னைப் பற்றியே குற்ற உணர்வு கூட தோன்றுவதுண்டு.நான் ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் கடந்து செல்கிறேன் என்றும் நினைப்பேன்.ஆனால் என்னால் அப்படித்தான் இருக்க முடிகிறது.
காட்டைப்படைக்கும் சீவிடுகளின் இசையைப் பற்றிய உங்கள் ஒப்பீடு மிக நன்று.அந்த இசை இணைக்கவில்லையெனில் எல்லாம் தனித்தனியாகத் தான் இருக்கும்.
இணையம் இன்றியமையாததாக மாறிவிட்ட சூழலில் இத்தகைய உணர்ச்சிப் பூர்வமான பதிவுகளிலும்,மேலோட்டமான விவாதப் பகிர்வுகளிலும் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதும்,அது சரியன்று என்ற தெளிவினைப் பெறுவதும் நிச்சயம் சற்று கடினமானதே.
இலக்கியத்தின் மூலம் ஒட்டுமொத்தமான வாழ்வைப்பற்றிய கோணங்களைப் பெறும் உணர்வு கொண்ட வாசக மனம் அவற்றில் சிக்காமல் வெளியேறிவிடும்.
எதைப்பற்றியும் சுயமாக சிந்திக்க விடாமல் சமகால உணர்வுகளிலேயே சிக்கி அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கும் சூழலை தொழில்நுட்பம் திணிக்கிறது என்பதையே அன்றாடம் காண்கிறோம்.
இலக்கியம் இவற்றிலிருக்கும் சலிப்புத் தன்மையிலிருந்து நம்மை விடுவிக்கிறது. காளிதாசன் கண்ட காட்சியை நானும் காண எனக்கு அத்திறப்பு தேவைப்படுகிறது.அதனை அளிப்பது இலக்கியம் தான்.காணும் அனைத்திலும், வேறொன்றை ஒப்பிடும் அந்த உணர்வினைப் பெறும் மனதிலையில் சமகால உணர்ச்சிப்பெருக்குகள் அலைகளாக விலகிச் சென்றுவிடுகின்றன.
எதற்காக இதனை நாம் அறிய வேண்டும்.எல்லோரையும் போல காட்சிகளைக் கண்டுவிட்டு அப்படியே சென்றுவிட ஏன் முடிவதில்லை என்றும் நான் நினைப்பதுண்டு.ஆனால் அப்படி உணர்ந்து அறிந்து கொள்ளும் தன்மை மட்டும் இல்லாவிட்டால்,தேவையற்ற வகையில் என் ஆற்றல் வெளிப்பட்டு மீண்டும் மீண்டும் புரியாதவர்களுக்கு என்னை நிரூபித்துக் கொண்டிருந்திருப்பேன்.அவர்களுக்கும் அது எப்பொழுதும் புரியப்போவதில்லை.
யாரிடமும் எந்த நிலையிலும் என் கருத்துகளைப் பற்றி அடிப்படையே புரியாதவர்களிடம் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதே என் வாசிப்பு எனக்களித்த தெளிவு.காட்டைப்படைக்கும் படைக்கும் இசை “என்று நீங்கள் எழுதிய இந்த கட்டுரை அதனை எனக்கு இன்னும் இணக்கமாகத் தெரிவிக்கிறது.
மிக்க நன்றி
அன்புடன்
மோனிகா.
***
அன்புள்ள ஜெ
காட்டைப்படைக்கும் இசை வாசித்தேன். பலகோணங்களில் சிந்திக்கவைத்தது அக்கட்டுரை. சமகாலத்தன்மை என்பது படைப்புக்கு எப்படி வருகிறது? அது நிரந்தரமான ஒன்றை சமகாலத்தன்மையை விளக்கப் பயன்படுத்தும்போது மட்டுமே. அப்போதுதான் இலக்கியவாதிக்கு அர்த்தம் வருகிறது. அன்றி வெறுமே இலக்கியவாதியும் மற்ற அரசியல் சமூகவியல் விமர்சகர்களைப்போல கூச்ச்சலிடும்போதுதான் அவர்கள் மேல் நாம் சலிப்பு கொள்கிறோம். அதிலும் படைப்புகள் அப்படி வருவதென்பது அருவருப்பூட்டுவது
சத்யா
***