கேரளத்தின் தலித் பூசகர்கள் மூன்று வினாக்கள்

 

1

கேரள தலித் அர்ச்சகர் நியமனம்

 

ஜெ,

 

தாந்திரிக முறை, தந்திரி என்று உங்கள் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன?

 

ஜெயக்குமார் சிவராமன்

 

அன்புள்ள ஜெயக்குமார்,

 

கேரள ஆலயங்கள் தாந்திரிக நெறிகளின்படி பூசை செய்யப்படுகின்றன. தமிழக ஆலயங்களில் அர்ச்ச முறை உள்ளது. இறைவனுக்கு பதினாறு உபச்சாரங்களைச் செய்வதும், துதிப்பதும் இங்குள்ள முறை. நீரும் மலரும் அளித்தல், படையல்கள், சைகைகள், வெறும் ஒலி மட்டுமேயான மந்திரங்கள் போன்றவற்றினூடாகஇறைவழிபாடுசெய்வது தாந்திரிக மரபு.

 

தாந்த்ரிகமுறை மிகத்தொன்மையான காலம் முதல் இருந்துவருவது. பழங்குடி வாழ்க்கையில் வேர்கொண்டது.  இங்கே ஆலயவழிபாட்டுமுறைமைகளை ஆகமங்கள் வகுத்து அளிப்பதுபோல அங்கே தாந்திரிக நூல்கள் வகுத்தளிக்கின்றன. ஆகமமுறைகளைப்போலன்றி தாந்திரிக முறைமைகளுக்கு கடுமையான நோன்புகளும் உண்டு.

 

இங்குள்ள ஆகமமுறை பக்தி இயக்கத்தின் காலகட்டத்தில் வரைமுறைப்படுத்தப்பட்டது. ராஜராஜசோழன் தமிழகம் முழுக்க ஆகம முறைகளை ஆலயங்களில் நிறுவினார் எனச் சொல்லப்படுகிறது. அது பெரும்பாலும் பக்தி சார்ந்தது.ஆகவே நெகிழ்வானது. அதேசமயம் அனைத்து ஆகமமுறைப் பூசனைகளிலும் தாந்திரிக முறைகளும் கலந்துள்ளன

 

தாந்திரிக பூஜையை பலவகையான குறியீட்டுச்சடங்குகள் என்று சொல்வதே பொருத்தம். அக்குறியீடுகள் அளிக்கும் ஆழ்மனத் தாக்கமே அவற்றின் வழிமுறை. அவற்றில் கணிசமானவை ரகசியத்தன்மை கொண்டவையாக இருப்பது அதனால்தான்.

ஜெ

 

2

அன்புள்ள ஜெ

கேரளத்து ஆலயங்களில் தலித் பூசாரிகளை நியமிப்பது குறித்த உங்கள் விரிவான பதிலைக் கண்டேன். அனேகமாக சம்பிரதாயமான தரப்பிலிருந்து அதற்குச்சொல்லப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டீர்கள்.

ஆனால் ஆலயம் என்பது ஓரு குறியீட்டமைப்பு. அந்த அடிப்படைக்குறியீட்டை மாற்றங்கள் சிதைக்கலாகாது. என நீங்கள் சொல்வது சிக்கலானது என நினைக்கிறேன். எதை வேண்டுமென்றாலும் அப்படி குறியீட்டுத்தன்மை என சொல்லமுடியும். சமீபகாலமாக சபரிமலையில் பெண்கள் செல்வதற்கான அனுமதி குறித்தும் பெண்கள் பூசாரிகளாக அமைவதைப்பற்றியும் பெரிதும் விவாதிக்கப்படும் சூழலில் இந்தக்கருத்து அதற்கு எதிரானதாக அமைகிறது

 

செல்வக்குமார்

 

அன்புள்ள செல்வக்குமார்,

நான் குறியீடு எனச் சொல்வது பக்தியை பக்திக்கு வெளியே நின்று புறவயமாகப் புரிந்துகொள்வதற்காகவே. ஆலயவழிபாடு என்பதே குறியீடுதான். கன்யாகுமாரி தேவி கன்னி என்பதும் குருவாயூர் கிருஷ்ணன் குழந்தை என்பதும் அவ்வாறான உருவகங்கள்தான். அவ்வாறு பாவனை செய்து அதனூடாகவே பக்தர்கள் தங்கள் மெய்மை நோக்கிச் செல்கிறார்கள். அது உலகமெங்கும் உள்ள வழிமுறை. குழந்தை ஏசுவும் வியாகுலமேரியும் எல்லாம் ஐரோப்பாவிலும் உள்ளன.

 

வழிபாட்டுச்சீர்திருத்தங்கள் என்றபேரில் அந்தக் குறியீட்டுத்தன்மையை அழிப்பதென்பது அவ்வழிபாட்டை அழிப்பதே. அதிலும் அந்த உளநிலையுடன் சம்பந்தப்படாதவர்கள் ஏதேனும் அரசியல் கொள்கைகளைப்பேசியபடி அதைச்செய்வது வன்முறை மட்டுமே.

 

ஆனால் அனைத்துக்கும் இதைச்சொல்லமுடியுமே என்பது ஒரு முக்கியமான கேள்வி. நடைமுறையில் அப்படி அனைத்துக்கும் இதைச் சொல்லமுடியவில்லை என்பதே கண்கூடு. அடிப்படையான மானுட அறம்சார்ந்த மாற்றங்களை மிக எளிதாகவே ஆலயவழிபாட்டாளர்களிடம் கொண்டுசெல்லமுடியும் என்பதையே சென்ற நூறாண்டுக்கால வரலாறு காட்டுகிறது. பக்தர்கள் மூர்க்கர்களோ மானுடவிரோதிகளோ அல்ல. சொல்லபோனால் பலவகையான அரசியல்கோட்பாட்டாளர்களின் கண்மூடித்தனமும் எதிர்மறை இயல்பும் காழ்ப்புகளும் அவர்களிடம் இல்லை. அவர்களால் புரிந்துகொள்ளமுடியும்

 

குறியீட்டுத்தன்மையை அழிக்கலாகாது என்பதை உடனே பெண்களை அனுமதிப்பது குறித்த விவாதங்களில் மொண்ணையாக உள்ளே நுழைக்கவேண்டியதில்லை. சபரிமலையில் ஐயப்பன் நித்யபிரம்மசாரி, ஆகவே பூசகர் பெண்ணாக இருக்கமுடியாது. ஆனால் குருவாயூரில் அமையலாம். அத்தனை பகவதிகளுக்கும் கிருஷ்ணன்களுக்கும் அமையலாம். இந்த வேறுபாடே நான் சொல்லவந்தது

 

சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதி இல்லை எனக்கொந்தளிப்பவர்கள் ஆற்றுகால் பகவதி பொங்காலை நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் நகரிலேயே ஆண்கள் நடமாட அனுமதி இல்லை என்பதை புரிந்துகொள்ளாதவர்கள். கேரளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பகவதி ஆலயங்களில் பொங்காலை வழிபாடு உள்ளது. அந்தப்பக்கமாக நடமாடவே ஆண்களுக்கு அனுமதி இல்லை.

 

பகவதிக்கு இனிமேல் ஆண்களும் பொங்கல்பூசைசெய்ய அனுமதி தேவை என ஒரு கும்பல் ஆரம்பித்தால் அது எவ்வகையில் முற்போக்காக ஆகும்? ஆற்றுகால் பகவதி சினம் கொண்ட கண்னகி ஆகவே ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பதே குறியீடு. என்ற நம்பிக்கையே அவ்வழிபாட்டின் ஆதாரம்

 

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளிக்கலாமா? அதைப்பற்றிய பொதுவிவாதம் மதச்சூழலில் எழுவதே அதற்கு வழி. ஐயப்பன் என்னும் ஆழ்மனக் குறியீட்டை மாற்றாமலேயே அதைச்செய்யமுடியுமா என்று பார்க்கலாம். அல்லது அவ்வினாவினூடாக மெல்ல மெல்ல ஐயப்பன் என்னும் குறியீடே பக்தர்களின் உள்ளத்தில் மாற்றமடையவும்கூடும். ஆனால் ஆணையிட்டு மாற்றினால் அது ஆலயத்தை இடிப்பதற்குச் சமம்தான்

 

அப்படி ஒரு இயக்கம் எழுந்து அதற்கு பெருவாரியான மக்களாதரவு அமைந்து, அய்யப்பன் தன் துறவு என்னும் அடையாளத்திலிருந்து குறியீட்டு மாற்றம் அடைந்து ‘சர்வஜன வத்ஸலனாக’ ஆவான் என்றால் அதை நான் வரவேற்கவே செய்வேன்.

 

ஆனால் நான் ஆலயவழிபாட்டாளன் அல்ல. சபரிமலைக்கு போகப்போவதுமில்லை. சிற்ப அழகில்லாத எந்த ஆலயத்திலும் எனக்கு ஆர்வமில்லை. என் வழி வேறு. அதையும் சேர்த்துச் சொல்லியாகவேண்டும். நான் பேசிக்கொண்டிருப்ப்பது என் உணர்வுகளைப்பற்றி அல்ல, பக்தர்களின் உணர்வுகளைப்பற்றி

 

ஜெ

1

ஜெ

 

நாராயணகுரு ‘பிறர் கோயில்களில் நாம் ஏன் நுழையவேண்டும் என்றுதான் சொன்னார், ஈழவர்களுக்கு அவர்களுக்குரிய ஆலயங்களை அமைத்தார். அதை ஈழவசிவன் என்று சொன்னார். ஆகவே தலித்துக்களின் இந்த ஆலயநுழைவு நாராயணகுருவின் கொள்கைக்கு எதிரானது’ என்று ஓரு குரல் கேட்டேன். உங்கள் விளக்கம் என்ன?

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்,

இப்படிப் புதிசு புதிசாகக் கிளம்பி வந்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்குப் பதில்சொல்லி மாளாது.

நாராயணகுரு ஈழவ சிவனை பதிட்டை செய்வதாகச் சொல்லவில்லை. ஈழவர் பதிட்டை செய்யலாமா என்று கேட்கப்பட்டபோது ‘இது அவர்களின் சிவன் அல்ல’ என்றுதான் பதில் சொன்னார். சாதிக்கொரு கோயில் என்று அவர் சொல்லவில்லை

அத்துடன் பேராலயங்கள் எந்தச் சாதிக்குரியனவும் அல்ல. உயர்சாதிகளுக்கு அவை உரிமையாக்கப்படவுமில்லை. அவை அனைவருக்குமுரியவை, அனைவரின் வரிப்பணத்தையும் கொண்டு மன்னர்களால் உருவாக்கப்பட்டவை. வரிகொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு உரிமை உண்டு அவற்றில்

நாராயணகுரு ஆலயப்பிரவேசம் சார்ந்த கோரிக்கை எழுந்த போது அதை முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. நமக்கு இடமில்லாத இடங்களில் செல்லவேண்டியதில்லை என்றார். காரணம் அவர் மோதல்போக்கை விரும்புபவர் அல்ல. அவருடைய மாணவரான டி.கே.மாதவன் முன்னெடுத்ததுதான் வைக்கம் போராட்டம்

ஆனால் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் அவர் நேரடியாகவே களத்திற்கு வந்தார். அப்போராட்டம் ஜனநாயகபூர்வமாக நிகழ்கிறதென்பதும் அதில் மோதல் உருவாகாதென்பதும் உறுதியானபின்னர். காந்திய வழிப்போராட்டத்தின் இயல்பை அவர் சற்றுப்பிந்தியே புரிந்துகொண்டார். ஆலயநுழைவுப்போராட்டம் முதல் ஆலயப்பூசைப்போராட்டம் வரை அனைத்தையும் முன்னெடுக்கவே அவர் சொன்னார். ஆனால் மோதல்களின் வழியாக அல்ல. கருத்துத்தளப்போராட்டம் மூலமாக.அதைத்தான் அவரது வழிவந்தவர்கள் அனைத்து தளங்களிலும் செய்கிறார்கள்.

 

இதையெல்லாம் நானே பலமுறை எழுதியிருக்கிறேன்.

 

ஜெ

 

 

முந்தைய கட்டுரைஆழமற்ற நதி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 30