வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 10

fire-iconபிரலம்பன் இளைய யாதவரின் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவைமுறைமைகளின்போது அவர் அரைக்கண்மூடி அங்கிலாதவர் என அமர்ந்திருந்தார். அவைநுழைந்தபோது நேராகச் சென்று முன்னிரையில் அமர்ந்திருந்த வசுதேவரை அணுகி கால்தொட்டு வணங்கினார். அவர் ஒருமுறை பலராமரை நோக்கிவிட்டு “நலம் சூழ்க!” என்றார். பலராமரை அவர் தாள்வணங்கியபோது அவரும் அதேபோல உணர்வற்ற மொழியில் “நலம் சூழ்க!” என்றார். அவர்களருகே அமர்ந்திருந்த அக்ரூரரை வணங்கியபோது அவர் வெறுமனே அவரது தலையை தொட்டார். அதன் பின் தன் இருக்கையை வந்தடைந்த இளைய யாதவர் கண்களை மூடிக்கொண்டார்.

இளைய யாதவரின் அருகே அமர்ந்திருந்த சாத்யகி குமுறிக்கொண்டிருப்பதை பிரலம்பன் கண்டான். இளைய யாதவர் வணங்கும்போது அவன் யாதவநிரையை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் ஒருமுறைகூட திரும்பி நோக்கவில்லை. ஆனால் அவன் உடலிலேயே உளக்குமுறல் விழி அறியாத ஒன்றாக தெரிந்துகொண்டிருந்தது. அங்கு நிகழ்ந்ததை அங்கிருந்த அனைவருமே நன்குணர்ந்திருந்தனர். இளைய யாதவர் அவைக்குள் நுழைகையில் தன்னை அவருக்கான இருக்கையருகே சென்று நின்றிருக்கச் சொன்னது அந்த இக்கட்டான சூழலை சுருக்கமான காலடிகளுடன் விரைந்து முடிப்பதற்காகத்தான் என பிரலம்பன் உணர்ந்தான்.

இளைய யாதவர் உள்ளே நுழைந்ததும் அவை மெல்லிய கலைவோசையுடன் பதற்றம் கொண்டது. பின்னர் உச்சம் கொண்டு விழிகளாகியது. இளைய யாதவர் அமர்ந்ததும் அவர்மேல் விழி நிலைக்கச்செய்து காத்திருந்தது. பின்னர் மெல்ல இயல்பாகி பேச்சொலி கொண்டது. யுதிஷ்டிரர் வந்தமர்ந்து முடியும் கோலும் சூடிக்கொண்டார். இளைய பாண்டவர்கள் அவரை வணங்கி தங்கள் பீடங்களில் அமர்ந்தனர்.

முதலில் குந்திபோஜர் யுதிஷ்டிரரை வாழ்த்தினார். பின்னர் துருபதர் வாழ்த்தளித்தார். பின்னர் ஷத்ரியர்களான வத்சநாட்டரசர் சுவாங்கதரும், துஷார மன்னர் வீரசேனரும், திரிகர்த்த மன்னர் சுசர்மரும், கேகய மன்னர் திருஷ்டகேதுவும், மல்லநாட்டரசர் ஆகுகரும், காரூஷநாட்டு க்‌ஷேமதூர்த்தியும், பல்லவநாட்டரசர் நதீஜனும், தரதர்களின் அரசராகிய கர்ணவேஷ்டரும் அவைமுறைமைகளை செய்தனர்.

ஒரே குரலில் என முறைமைச்சொற்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. ஒவ்வொரு அசைவும் நன்கு வகுக்கப்பட்டிருந்தது. அவை முறைமைகள் முடிந்தபின்னர் சௌனகர் அபிமன்யூவின் திருமணச்செய்தியை அறிவித்தார். மறுநாள் முதற்புலரியில் விராடநிலத்தின் உபப்பிலாவ்யநகரியில் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள கொற்றவை ஆலயத்தில் மணக்கோள் நிகழும் என்றும் அந்நாள் முழுக்க விழவுகளும் களியாட்டுகளும் எழும் என்றும் அறிவித்தார். வழக்கமான கலைவோசையுடன் வாழ்த்தொலிகள் எழுந்தன. எவரும் பெரிதாக ஆர்வம்கொள்ளவில்லை என்று தெரிந்தது. அபிமன்யூ எழுந்து அவையை வணங்க அனைவரும் அரிமலர் தூவி அவனை வாழ்த்தினர். அவன் குந்திபோஜரையும் துருபதரையும் வசுதேவரையும் பலராமரையும் வணங்கியபின் இளைய யாதவரை அணுகி வாழ்த்து பெற்றான். விழித்துக்கொண்டவர்போல அசைந்தெழுந்து அவர் மரபுச்சொற்களை உரைத்தார்.

அவையை வணங்கியபின் வந்து அமர்ந்த அபிமன்யூ “அரசன் என்றால் வணங்கி வணங்கி சாகவேண்டும் என வகுத்தவன் எவன்?” என்றான். “ஆணவம் கொள்ளலாகாதே என்றுதான்” என்றான் பிரலம்பன். “ஆணவமில்லா அரசன் எவன்? நான் அரசனாக இருந்தாலும் இதோ எப்படி பணிகிறேன் பார்த்தீர்களா என்றல்லவா அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்?” என்றான் அபிமன்யூ. பிரலம்பன் “முகத்தை உறைநிலையில் வைத்துக்கொள்ளுங்கள், அரசே. அசைந்தசைந்து அமரவேண்டாம். அவையே உங்களை நோக்குகிறது” என்றான். “நான் துயில்கொள்ளப்போகிறேன். வேறுவழியில்லை” என்றான் அபிமன்யூ. “மூத்த தந்தை பேசத்தொடங்கினாரென்றால் நன்று. நல்லுறக்கம் அமையும்.”

அதன் பின்னர் இயல்பாக அரசுசூழ்தலைப்பற்றி பேச்சு திரும்பியது. அதிலிருந்த ஒழுக்கு பிரலம்பனை வியக்கச் செய்தது. அவைக்கு நன்றி சொன்ன யுதிஷ்டிரர் ஒவ்வொரு அரசரையும் பெயர்சொல்லி வாழ்த்தி முகமன்கள் உரைத்து முடிக்கையில் மெய்யாகவே அபிமன்யூ மெல்லிய குறட்டையுடன் முகம் மார்பின்மேல் படிய துயில்கொண்டுவிட்டிருந்தான். வாழ்த்துக்களுக்குப்பின் யுதிஷ்டிரர் “நான் இன்று நிலமில்லாதவன். இந்நகரை கொடையெனப் பெற்று முடிசூடியிருக்கிறேன். இங்கே என் முடியை நம்பி வந்துள்ள அனைவரும் என் முடிகாக்க உடன்நிற்பவர்கள் என்றே கொள்கிறேன். பாண்டுவின் குருதிக்குரிய நிலத்தில் நான் கோல் கொண்டமைகையில் மீண்டும் அனைவரும் வரவேண்டும். அன்று ஓர் உண்டாட்டில் நாம் கைகோத்து நடமிடுவதற்கு இறையருள் கூடவேண்டும்” என்றார்.

துருபதர் எழுந்து “அது நிகழும்… விரைவிலேயே. இங்கே நாம் முடிகொண்ட மன்னர்கள் கூடியிருப்பது அது குறித்து பேசும்பொருட்டே. என்ன செய்யப்போகிறோம்? இப்போதே முடிவு செய்துவிடுவோம்” என்றார். “முதலில் நிகழ்ந்ததென்ன என்று சௌனகர் விளக்கட்டும்” என்றார் குந்திபோஜர். “ஆம், நாம் முதலில் நிகழ்ந்ததை சுருக்கிக் கொள்வோம். முறைப்படி அனைத்தும் செய்யப்பட்டுள்ளனவா என்பதிலிருந்தே நாம் தொடங்கமுடியும்” என்றார் விராடர். முதற்பேச்சுக்களை மூத்தவர்களே முன்னெடுத்தனர். அது உரையாடலை அவர்கள் வழிநடத்திக்கொண்டு செல்ல முயல்வதை காட்டியது. அதை மச்சர்களும் நிஷாதர்களும் ஆதரித்தனர். அங்கிருந்த அனைவரும் அத்தனை சொற்களையும் இளைய யாதவருக்காகவே எடுப்பதுபோல் இருந்தது.

சௌனகர் அன்றுவரை நிகழ்ந்த அனைத்தையும் படிப்படியாக விரித்துரைத்தார். அப்போது சூழ்ந்துள்ள அரசியல் நிலையை விளக்கினார். “இன்று அணைந்திருப்பது இத்தருணம். நம்முடன் எட்டு துணையரசர்களும் மூன்று மணவுறவு அரசர்களும் மட்டுமே உள்ளனர். நம்மிடம் சேராதவர்கள் அனைவருமே அவர்களிடம் சேரக்கூடுமென்று எண்ணி நிலை சூழ்வதே நமக்கு நன்று. ஏனெனில் நம்மிடம் சேராதவர்கள் தன்னுடன் சேர்ந்துகொள்வதாக எண்ணியே மூத்த கௌரவர் தன் நிலைபாடுகளை எடுப்பார். அவை ஆகவேண்டியதை உரைக்கட்டும்” என்று தலைவணங்கி அமர்ந்தார்.

வசுதேவர் “சல்யர் இன்னும் அவைபுகவில்லை அல்லவா?” என்றார். யுதிஷ்டிரர் “ஆம். ஆனால் அவர் கிளம்பிவிட்டாரென்ற செய்தி வந்திருக்கிறது. இங்கு வந்துகொண்டிருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இங்கன்றி வேறெங்கும் அவர் செல்வதற்கும் இல்லை” என்றார். விராடர் “மச்சர்கள், நிஷாதர்களில் பெரும்பான்மையினர் நம்முடன் இருக்கிறார்கள் என்றே கொள்வோம். எங்கள் குடி இத்தருணத்தில் இங்கு நின்றாகவேண்டும். எங்கோ ஒரு களத்தில் ஷத்ரியர்களை வாள் எதிர்கொள்பவர்களாகவே நாங்கள் இங்கிருக்கிறோம்” என்றார்.

திருஷ்டத்யும்னன் “பாஞ்சாலர்களின் படை, கருவூலம் இரண்டும் சென்ற ஆண்டுகளில் திரண்டு முழுத்திருக்கின்றன. பாரதவர்ஷத்தின் எந்த நாட்டுக்கும் இளைத்தவையல்ல” என்றான். குந்திபோஜர் தளர்ந்த தாழ்ந்த குரலில் “மகதர் என்ன முடிவெடுத்திருக்கிறார்?” என்றார். பீமன் “ஜராசந்தரின் மைந்தன் சகதேவனை இளைய யாதவர் நெஞ்சோடணைத்து அரியணை அமர்த்தினார். இந்திரப்பிரஸ்தம் கோல்துணை அளித்தது. நாம் கானேகிய காலகட்டத்தில் துரியோதனன் சகதேவனை வென்று அவன் அன்னைவழியினராகிய ஜரைகுடியின் காட்டுக்குத் துரத்திவிட்டு ஜராசந்தரின் இளையோனும் பிருஹத்ரதருக்கு ஷத்ரியகுடியில் பிறந்தவனுமாகிய பிருஹத்சேனனை அரசனாக்கினான். இன்று அவன் மகதத்தை துரியோதனனின் ஆணைபெற்று ஆள்கிறான்” என்றான்.

சௌனகர் “ஜரர்கள் மகதத்துடன் எவ்வகையிலும் பொருந்தாமல் போரிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நான்காண்டுகளுக்கு முன்பு சகதேவன் நோயுற்று இறந்தான். அவன் இளையவன் ஜயத்சேனன் ஜரர்களுக்கு தலைமை தாங்குகிறான். ராஜகிருகத்திற்கு வடக்கே கங்கைக்கரையின் சேற்றுநிலத்தில் அவர்கள் பாடலிபுரம் என்னும் ஊரை சிறுநகரென உருவாக்கியிருக்கிறார்கள். சதுப்பிலமைந்த துறைமுனம்பு அது. இன்று அது கங்கைக்கரைப் பெரும்படகுகள் அணையும் துறைநகர். ஜரர்கள் தங்களை மெய்யான மகதர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார்.

“அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா?” என்றார் துருபதர். “ஆம், ஆனால் அவர்கள் உடனடியாக முடிவெடுக்க விரும்பவில்லை. வணிகம் வளர்ந்துவரும் பொழுதில் ராஜகிருகத்துடன் ஒரு பூசல் வேண்டுமா என ஐயுறுகிறார்கள்” என்றார் சௌனகர். “உண்மையில் ஜராசந்தரின் எட்டு மைந்தர்கள் அரசுரிமை கோருகிறார்கள். அவர்களுக்குள் தொடர் பூசல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஜராசந்தரின் ஷத்ரிய குலத்து மைந்தனை அரியணை அமர்த்தியிருக்கிறார் துரியோதனர். அவனை ஆறு ஷத்ரியகுடி மைந்தர்கள் எதிர்க்கிறார்கள். ஜரர்கள் மட்டுமல்ல சில ஷத்ரியர்களும் நம்முடன் சேரக்கூடும்.”

“அவ்வாறு கணிக்கப்போனால் நாம் செல்லும் தொலைவுகள் பல உள்ளன. இன்று நம் கையில் திரண்டிருப்பதென்ன என்று மட்டுமே நாம் பார்க்கவேண்டும்” என்றார் யுதிஷ்டிரர். குந்தி “அவ்வாறல்ல, மைந்தா” என மெல்ல தொடங்கினாள். “இவ்வாறு இன்று முரண்கொண்டு நிற்கும் அனைவரிடமும் நாம் தொடர்பு கொள்ளவேண்டும். அவர்களை நாம் தொடர்பு கொள்கிறோம் என்பது மந்தணமாக இருக்க இயலாது. எனவே முரண்கொள்வோர் அனைவருமே கூர்ந்து உளவு பார்க்கப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்களை நாம் தொடர்பு கொள்கிறோம் என்பதே நம்மீது அச்சத்தை உருவாக்கும். நம் தரப்பு பெருகி வருகிறது என்ற எண்ணம் எழும்.”

சௌனகர் “ஆம், பேரரசியின் கூற்று மெய்யானதே. பாரதவர்ஷத்தின் பத்தொன்பது நாடுகளில் இளவரசர்கள் எவரேனும் ஆளும் அரசுடன் முரண்கொண்டு படைதிரட்டி நின்றிருக்கிறார்கள். அனைவருக்கும் நம் அரசரிடமிருந்து தூது செல்லலாம்” என்றார். யுதிஷ்டிரர் “நாம் படைதிரட்டுவதைப்பற்றி இப்போது பேச வேண்டியதில்லை” என்றார். “நானும் படை திரட்டுவதைப்பற்றி பேசவில்லை” என்று சினமெழுந்த குரலில் குந்தி சொன்னாள். “அவர்களை நமது தூதர் சென்று சந்திக்கட்டும். அச்சந்திப்பின் செய்தி துரியோதனனை சென்று அடையட்டும். நம் நில உரிமை குறித்து நாம் பேச அமர்கையில் அச்செய்தியும் அருகே அமைந்திருக்கவேண்டும்.”

குந்தியின் சினம் அவையை அச்சம் கொள்ளச்செய்தது. சற்றுநேரம் அங்கே சொல்லெழவே இல்லை. அபிமன்யூவின் குறட்டையோசை உரக்க ஒலிக்க அர்ஜுனன் திரும்பி நோக்கினான். அவ்விழிகளை சந்தித்து தலைகுனிந்த பிரலம்பன் அபிமன்யூவை தொட்டான். குறட்டை நிற்க அவன் விழிக்காமலேயே உடலை அசைத்து சப்புகொட்டினான். மீண்டும் குறட்டை மெல்ல எழுந்தது. “எனக்கு இவை அனைத்தும் ஏதோ போரை நோக்கி செல்வதாகவே தோன்றுகிறது” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “நமக்கு நில உரிமை உள்ளது. அதை மட்டுமே நாம் பேசவிருக்கிறோம். அதை மறுப்பது அறமல்ல என்று பேரறத்தானின் மைந்தனாகிய துரியோதனனின் உள்ளமைந்த உளச்சான்றுக்கு சொல்கிறோம். அவ்வளவுதான்” என்றார்.

குந்திபோஜர் “மூத்த கௌரவர் நமது யுகத்தைச் சார்ந்தவர் அல்ல என்கிறார்கள். எழுந்துவிட்ட கலியுகத்தின் முகம் அவர் என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவருள் வாழ்வது இன்று நம் அனைவரிலும் வாழும் அறமல்ல. நாளை எழுந்து இப்புவியை ஆளப்போகும் பிறிதொரு அறம். கொண்டதனைத்தும் எனக்கே என்றும் கொள்ளும் முறை அனைத்தும் நெறியே என்றும் தன் அகத்துறையும் தெய்வங்களை நம்பவைக்கும் ஆற்றல்கொண்ட கூர்மதி அன்று அனைவரையும் ஆளும் என்கிறார்கள். மைந்தா, கிருதயுகத்தை அறம் ஆண்டது. திரேதாயுகத்தை உணர்வுகள் ஆண்டன. துவாபர யுகத்தை நம்பிக்கைகள் ஆள்கின்றன. கலியுகத்தை மதியே ஆளும் என்கிறார்கள் நூலோர்” என்றார். “நாம் செய்யக்கூடுவதென்ன? துரியோதனனிடம் எவர் பேசக்கூடும்? எதை? அதைமட்டும் நாம் இங்கு முடிவெடுப்போம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார்.

சுற்றிச் சுற்றி பேச்சு ஒரு முனையையே வந்து அடைவதைப்போல் பிரலம்பனுக்கு தோன்றியது. இளைய யாதவர் தன் சொல்லுடன் எழவேண்டும் என்று அனைவரும் எதிர்பார்ப்பதுபோல. அவர் அத்தருணத்தை முன்னரே வந்து அடைந்து ஒவ்வொரு சொல்லுக்கும் ஒத்திப்போட்டுக்கொண்டிருக்கிறார் என்பதுபோல. அவன் அவரையே நோக்கினான். அரைவிழி தாழ்த்தி தலையை வலக்கையில் சாய்த்து ஊழ்கத்திலென அமர்ந்திருந்தார். மணிமுடியிலெழுந்த பீலி விழிதிறந்து அனைவரையும் நோக்கிக்கொண்டிருந்தது.

யுதிஷ்டிரர் “எங்களால் எங்கும் சென்றடைய முடியவில்லை. எங்கள்பொருட்டு இளைய யாதவரே தன் தரப்பை சொல்ல வேண்டுமென்று விழைகிறேன்” என்றார். அனைவரும் இளைய யாதவரை நோக்க சாத்யகி அவரை மெல்ல தொட்டான். இளைய யாதவர் திகைத்தவர்போல விழிதிறந்து அனைவரையும் பார்த்தார். பின்னர் எழுந்து “நிலத்தின்பொருட்டு எனில் நான் பேச ஏதுமில்லை. எந்த நிலமும் இப்புவியில் அறத்தால் கொள்ளப்பட்டதல்ல. எனவே அறத்தின் பொருட்டு கோரப்படவேண்டியதும் அல்ல” என்றார்.

அவையில் எழுந்த அமைதியையும் பின் வெடித்தெழுந்ததுபோல் ஒலித்த முழக்கத்தையும் கேட்டு உளவிசையுடன் பிரலம்பன் எழுந்தமர்ந்தான். “என்ன சொல்கிறீர்கள்? நிலம் அரசர்களுக்கு தெய்வங்களால் அளிக்கப்பட்டது, வேதங்களால் உரிமைநிறுத்தப்பட்டது” என்றான் தனாயு நாட்டரசனாகிய மணிமான். இளைய யாதவர் புன்னகையுடன் அவனை நோக்கி “உங்கள் நாட்டுநிலம் எப்படி பெறப்பட்டது? இல்வலர் என்னும் அசுரமன்னரால் ஆளப்பட்டது உங்கள் தலைநகரமாகிய மணிமதீபுரம். அதை உங்கள் முன்னோரான மணிமயர் வென்று கைப்பற்றி அரசொன்றை அமைத்தார்” என்றார்.

மணிமான் “ஆம்” என்றான். “அதை முன்பு கசியபருக்கு திதியில் பிறந்த தைத்யர்களாகிய நிவாதகவசர்கள் ஆண்டிருந்தனர். அவர்கள் தொல்புகழ் அசுரச்சக்ரவர்த்தியான பிரஹலாதரின் குருதியிலெழுந்தவர்கள். முன்பு அவர்களை இலங்கையரசர் ராவணப்பிரபு வென்றார் என்கின்றன நூல்கள். அவர்களும் காலகேயர்களும் இணைந்து ஷத்ரிய நகர்களின்மேல் படைகொண்டு சென்றனர். ஹிமமேருமலைச்சாரலில் இந்திரனின் பேராலயத்தில் கூடிய பதினெட்டு ஷத்ரிய அரசர்கள் இந்திரனின் சாரதியாகிய மாதலியை படைமுகப்பில் அமைத்து அவர்களை அழித்தனர். எஞ்சியவர்கள் காட்டுக்குடியினரானார்கள். அவர்களில் ஒருவர் இல்வலர்.”

மணிமான் “ஆம்” என மீண்டும் தலையசைத்தான். “இல்வலரின் மகள் சாந்தையை உங்கள் மூதாதை மணிமயர் மணந்தார். அவள் குருதிவழியில் எழுந்தவர்கள் உங்கள் மூதாதையர்” என இளைய யாதவர் தொடர்ந்தார். “இங்குள்ள அத்தனை நிலங்களும் அசுரர்களிடமிருந்தோ நாகர்களிடமிருந்தோ அரக்கர்களிடமிருந்தோ வெல்லப்பட்டவையே. எவரேனும் மறுப்புரைக்க இயலுமா?” அவை அமைதியாக இருந்தது. விராடர் “ஆம், வரலாறு சொல்வது அதுவே” என்றார். துருபதர் “இந்தக் கதை இப்போது எதற்கு?” என்றார்.

“வென்றும் பின்பு குடிகலந்தும் நிலம்கொண்டவர்களே அத்தனை ஷத்ரியர்களும் என்று கொள்வோம். ஆகவே நிலத்தின் மீதான அறம்சார்ந்த உரிமை எவருக்குமில்லை. அறத்தின்பொருட்டு நிலம்கோரச் செல்கிறோமென்றால் அதனால் எப்பயனும் இல்லை” என்றார் இளைய யாதவர். “இரு வகையில் நாம் நிலம் கோரமுடியும். ஒன்று ஒரு குடிக்குள் திகழும் நெறியின் அடிப்படையில். இந்திரப்பிரஸ்த நிலம் குடிமூத்தவர்களால் அளிக்கப்பட்டது. அவர்கள் முன்னிலையில் இழக்கப்பட்டது. அவர்கள் அளித்த சொல்லின்படி மீண்டும் பெறப்படவேண்டியது.”

“மைந்தருக்கு அன்னையர் அன்னம் என்றும் தந்தையர் சொல் என்றும் தோற்றமளிக்கிறார்கள் என்பது நூல்நெறி. மைந்தருக்கு அளித்த சொல்லை தந்தையர் காக்கவேண்டும் என்று பீஷ்மரிடமும் திருதராஷ்டிரரிடமும் சொல்லலாம். அதன்பொருட்டு நாம் தூதனுப்பலாம்” என்றார் இளைய யாதவர். “பிறிதொன்று, அரசருக்கு அரசர் அளித்த சொல். அரசுகள் சொல்லால் நிலைகொள்பவை. வாள்களை ஏந்தி களம்நிற்கும் வீரனை அரசனின் சொல்லே ஆள்கிறது. வணிகனும் உழவனும் வரியளிப்பது அச்சொல்லின்பொருட்டே. துரியோதனன் அவைநடுவே அளித்த சொல்லை அவன் காக்கவேண்டும் என்று சென்று சொல்லலாம்.”

“இரண்டுக்கும் அந்தணர் தூது செல்வதே நல்லது. நாம் போரை விரும்பவில்லை என்றால் ஷத்ரியரும் அரசரும் தூது செல்லலாகாது” என்று இளைய யாதவர் சொன்னபோது மெல்லிய சோர்வுடன் அவையினர் பீடங்களில் சாய்ந்தனர். அவை அமைதியாக இருந்தது. “தௌம்யர் செல்லலாம். சௌனகர் உடன்செல்லலாம்” என்று இளைய யாதவர் சொன்னார். எவரும் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர் பெருமூச்சுவிட்டார். பீமன் “தூது செல்வதில் பொருளில்லை. அவர்களின் மறுமொழிகளில் அதற்கான வழியீடுகளே இல்லை” என்றான். “எறும்பு நுழையவேண்டும் என்றாலும் விரிசலாவது வேண்டுமல்லவா?” என மீண்டும் அவன் சொன்னபோதும் அவை எதிர்வினையாற்றவில்லை.

பலராமர் அசைந்தபோது அத்தனை விழிகளும் அவரை நோக்கி திரும்பின. அவர் எழுந்து தன் கையை விரித்து “அவை விரும்பினால் நான் துரியோதனனிடம் பேசிப்பார்க்கிறேன்” என்றார். “தூதனாக நான் செல்லமுடியாது, ஏனென்றால் நான் அரசன். ஆனால் அவனுடைய ஆசிரியனாக அவனைச் சென்று பார்க்கவியலும். இங்குள்ள உணர்வுகளை நான் அவனிடம் சொல்கிறேன்” என்றார். யுதிஷ்டிரர் முகம் மலர்ந்து “ஆம், அது நன்று. உங்கள் சொல் அவனை கட்டுப்படுத்தும். மூத்தவரே, உங்களால் நாங்கள் சிக்கியிருக்கும் இந்த இக்கட்டிலிருந்து அனைவரையும் மீட்கமுடியும்” என்றார்.

“ஆம், நான் எண்ணுவதும் அதையே. இங்கே மெல்லமெல்ல ஒரு போர் முனைகொண்டுவருகிறதோ என்னும் ஐயமெழுகிறது. உடன்பிறந்தார் எவ்வகையிலும் களமெதிர்நிற்கக்கூடாது. அது குருதியளித்த மூதாதையருக்கு எதிரான போர். ஒவ்வொரு அம்பும் சென்று தைப்பது மூதன்னையரின் முலைகளுக்குமேல். அதை தவிர்த்தேயாகவேண்டும். அதை நான் அவனிடமும் சொல்கிறேன்.”

மணிமான் “மூத்தவரே, ஒரு சொல். இன்று சொல்லுடன் எழும் நீங்கள் உங்கள் மாணவன் தன் இளையோரின் நிலத்தைப் பிடுங்கியபின் கானேக ஆணையிட்டபோது அதை தடுத்திருக்கலாமே? அப்போது மதுராவில்தான் இருந்தீர்கள்” என்றான். “அதை ஏன் இப்போது பேசவேண்டும்?” என்று யுதிஷ்டிரர் சொல்ல சினத்துடன் கைதூக்கிய பலராமர் “நான் அதில் பிழையேதும் காணவில்லை. ஒருவன் தன் அறியாமையாலும் ஆணவத்தாலும் நிலத்தை வைத்து சூதாடுகிறான் என்றால் அவனுக்கு அந்நிலத்தை ஆளும் உரிமை இல்லை. ஏந்த முடியாததை அவன் இறக்கிவைப்பதன்றி வேறுவழியில்லை. குருதியின்றி அவனிடமிருந்து நாடு கொள்ளப்பட்டது முறை என்றே எண்ணுகிறேன்” என்றார்.

“அது முறையென்றால் இப்போது எதன்பொருட்டு பேசச்செல்கிறீர்கள்?” என்றார் மன்னர் திருஷ்டகேது. “அன்று எதன்பொருட்டு அமைதிகாத்தேனோ அதன்பொருட்டு. உடன்பிறந்தார் போரிடலாகாது. துரியோதனனிடம் நாம் சொல்லப்போவதும் அதையே. இப்போர் நிகழுமென்றால் அது பெரும்பழியையே சேர்க்கும். பாரதவர்ஷத்தில் இனி நிகழவிருக்கும் அத்தனை உடன்பிறந்தார் பூசல்களுக்கும் பிழைவழிகாட்டியதாக ஆகும். ஆகவே அவன் உளம் கனிந்தாகவேண்டும்.”

“உளம் கனிந்து எவரும் எங்களுக்கு கொடையளிக்க வேண்டியதில்லை” என்றார் துருபதர். “ஆம், அவன் நிலத்தை அளித்தால் அது கொடையேதான். வேறென்ன? எதன்பொருட்டு    நிலம் கோருகிறீர்கள் நீங்கள்? வென்றவன் கொண்ட நிலத்தை கேட்டுப்பெற்றவர்கள் உண்டா இங்கே? அவன் பேரறத்தானின் மைந்தன், என் மாணவன். ஆகவே அவன் அதை செய்வான். நான் ஆணையிட முடியும். அதனால்தான் இங்கே அவையெழுந்து பேசுகிறேன்” என்றார் பலராமர். துருபதர் “அனைத்துக்கும் அப்பால் நெறி என ஒன்றுண்டு, யாதவஅரசே. அதை சொல்க! இங்கே எவர் பக்கம் உள்ளது அறம்?” என்றார்.

“அவனிடம்தான். அதிலென்ன ஐயம்?” என்றார் பலராமர் உரத்த குரலில். “அவன் நிலம்வென்றவன். வென்ற நிலத்தை விண்ணவர் உகக்கும்படி ஆண்டவன். அவன் வென்ற நிலமோ அவனுக்கே முறைப்படி உரியதும்கூட.” துருபதர் சீற்றத்துடன் எழுந்து “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “எதன்பொருட்டு நீங்கள் அவனிடம் நிலம் கோருகிறீர்கள்? குலமுறைப்படி என்றால் அக்குலமுறை அவனுக்கே முடியை முற்றளிக்கும் நெறிகொண்டது. அஸ்தினபுரியின் அரசர் திருதராஷ்டிரரே. அவர் மைந்தனே அடுத்த அரசன். குடியில் பிறந்த மூத்தவனல்ல, கொடிவழியில் மூத்தவனே முடிக்குரியவன்” என்றார் பலராமர்.

“நீங்கள் சொல்பேணும்படி கோரினீர்கள் என்றால் அதற்கு முன் உங்கள் தந்தை அளித்த சொல்லை பேணுக! பதினெட்டு ஆண்டுகளுக்குப்பின் மணிமுடியை அளிப்பதாக உரைத்த பாண்டுவின் சொல் வாழட்டும்” என்று பலராமர் உரக்க சொன்னார். “ஆகவே, நெறி பேசவேண்டாம். உடன்குருதியினரென அளிகோருவோம். அருகமைதலை கேட்டுப்பெறுவோம். அதைச் சொல்லவே நான் செல்கிறேன். அது ஒன்றே சொல்வதற்கும் உரியது.”

அவை அமைதியாக இருக்க குந்தி மெல்லிய குரலில் “மைந்தா, உன்னிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்றாள். “நான் என்ன செய்யவேண்டுமென எண்ணுகிறீர்கள்? யாதவன் என்பதனால் யாதவக்குருதிக்கு துணைநின்று அறமில சொல்லவேண்டுமா என்ன? நான் என்றும் என் உளச்சான்றின்படி நின்றவன். ஆம், என் மைந்தனுக்கு நிகரானவன் என் மாணவன். ஆனால் அவன் பிழைசெய்தால் அதையும் சொல்லத் துணிவேன்” என்றார் பலராமர். “இப்போதுகூட குருதியுறவைச் சொல்லி பாண்டவர்களுக்காக பரிந்து பேசவே வந்திருக்கிறேன். போரைத் தவிர்ப்பதற்காகவே முயல்கிறேன். இதுவே என் அறம்.”

நகுலன் “மூத்தவரே, திரௌபதியின் ஆடையை அவையில் களைய முற்பட்டதை நீங்கள் அவனிடம் கேட்டீர்களா?” என்றான். “அதை கேட்கவேண்டியதில்லை. பாஞ்சாலத்தரசி அகத்தறையில் அமர்ந்தவளல்ல. மும்முடிசூடி அரியணை அமர்ந்தவள். அவள் கணவன் அருகமர்ந்தவன் மட்டுமே. வென்ற அரசனை அவைச்சிறுமை செய்து தருக்குவது ஷத்ரியர் வழக்கம். அது முறையல்ல, ஆனால் பெரும்பிழையும் அல்ல.” அவை இமையா விழிகளுடன் பலராமரை நோக்கி அமர்ந்திருந்தது. அவையெங்கும் எழுந்த உளவிம்மலை ஒருவகை உடல்வெம்மையென தசைவிம்மலென மூச்சொலியென பிரலம்பன் உணர்ந்தான்.

“இங்கு சொல்லப்பட்டது குடியறத்தின்பொருட்டும் அரசநெறியின்பொருட்டும் துரியோதனனிடம் நிலம்கோரலாம் என்று. இரண்டின்பொருட்டும் நிலம் உங்களுக்குரியதல்ல. செய்வதற்கொன்றே உள்ளது, அது நேரடி மன்றாட்டு. யுதிஷ்டிரன் இளையவன் துரியோதனனிடம் ஆள்வதற்கு நிலம் கோரிப்பெறலாம். அதன்பொருட்டு இந்த அவை என்னை அனுப்பும் என்றால் இங்கிருந்தே அஸ்தினபுரிக்கு கிளம்புகிறேன்” என்று பலராமர் சொன்னார்.

அபிமன்யூ காலைநீட்ட அவ்வொலியைக் கேட்டு அருகமர்ந்திருந்த சதானீகன் திரும்பி நோக்கினான். அவன் விழிகள் நீர்மைகொண்டிருந்தன. மறுபக்கம் இருந்த சுருதவர்மன் “இளையோனே, சிறுமை கொள்ளாதே” என பல்லைக் கடித்தபடி சொன்னான். அபிமன்யூ “அனைத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். சௌனகரை தூதனுப்புகிறார்கள். அவ்வளவுதானே?” என்றான்.

முந்தைய கட்டுரைதலித் பூசகர்கள், மேலுமிரு கேள்விகள்
அடுத்த கட்டுரைஆழமற்ற நதி – கடிதங்கள்