மாபெரும் குப்பைக்கூடை

nager

எரிச்சல்பதிவுகள் பற்றி எனக்கே ஓர் எரிச்சல் உண்டு, ஆனாலும் மேலும் ஒன்று. நான் சினிமாவுக்கு எழுத ஆரம்பித்த காலம் முதல் சென்னைக்குச் சென்று தங்குவதைப்பற்றிய ஆலோசனைகளும் அழைப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. பிடிவாதமாகத் தவிர்த்துவருகிறேன். காரணம், நாகர்கோயில் என் நகர் என என் மனதில் பதிவாகியிருக்கிறது. என்னைப்போலவே இது கேரள – தமிழ்ப் பண்பாடுகளின் கலைவை. ஒரு சமரசமையம்.

அத்துடன் இங்குள்ள மழை, பசுமை. மலைகள் சூழ்ந்த அமைதி. இங்குள்ள இளவெயிலை தமிழகத்தில் ஊட்டியில் மட்டுமே காணமுடியும். பிற கன்யாகுமரிக்காரர்களைப்போலவே தமிழ்நாடு எனக்கு இன்னொருவகை நிலம்தான். இந்த மோகம் என் எழுத்தின் ஊற்றுக்கண். ஆகவே இங்கேயே வாழ்வதே என் நிறைவு.

ஆனால் மீண்டும் மீண்டும் நாகர்கோயில் எரிச்சலையும் ஊட்டுகிறது. நான் அறிந்தவரை தமிழகத்தில் மிகமிக மோசமாக நிர்வகிக்கப்படும் நகராட்சி நாகர்கோயில்தான். நகரில் அனேகமாக எங்கும் சாலை என்பதே கிடையாது. பல ஆண்டுகளாக. குப்பை அள்ளும் வழக்கமே இல்லை. ஒரு மாபெரும் இடிபாட்டுக்குவியல்போலிருக்கிறது இந்நகரம்.

இதை ஆளும் பாரதிய ஜனதாவின் நகராட்சித்தலைவர் மீனா தேவ் மக்கள்பிரதிநிதிக்கான அடிப்படைத் தகுதிகூட இல்லாதவர். மோடியின் ஸ்வச் பாரத் பற்றியெல்லாம் அந்தம்மாளுக்கு இன்னும் யாரும் எடுத்துச் சொல்லவில்லை போலிருக்கிறது. உச்சகட்ட ஊழலில் திளைக்கிறது நகராட்சி நிர்வாகம் என்கிறார்கள். இல்லையேல் இந்த அளவுக்கு செயலின்மை சாத்தியமும் இல்லை.

அதைவிடக் கொடுமை இங்கே சேவைகளும் வணிகங்களும். எந்தப்பொருளுக்குமே அசல் கிடைக்காது, அசலே போன்ற போலிகளை மட்டுமே விற்பவை பெரும்பாலான கடைகள். ஆகவே விஷயமறிந்தவர்கள் இங்கே எதுவும் வாங்குவதுமில்லை. அவசரத்துக்குச் சென்று கேட்டால் போலிகளை தூக்கிவைத்து “இதான்சார் அசல்” என்றே வாதிடுவார்கள்.

என் வீடெங்கும் மடிக்கணினிகள். ஆனால் இப்போது எழுத உடைந்த மடிக்கணினிதான். அத்தனை மடிக்கணினிகளிலும் சிறு பழுதுகள். நாகர்கோயிலில் அரங்கசாமி சிபாரிசு செய்த கணினிநிலையத்திற்கு ஒவ்வொன்றையும் எடுத்துச்சென்றேன். அதுதான் நாகர்கோயிலிலேயே பெரிய சர்வீஸ்- சேல்ஸ் நிறுவனம்.எந்த கணிப்பொறியைப் பார்த்தாலும் “சரிபண்ணமுடியாது சார். ஸ்பேர் இல்ல” என்பதுதான் பதில்.ஆனால் அதைச் சொல்ல நாலைந்து நாட்களாகும். மூன்றுமுறை நாமே நேரில் செல்லவேண்டும். அதற்குள் கணினியை திறந்து பூட்டி பிரித்து சேர்த்து முன்பு கொஞ்சமாக வேலைசெய்துகொண்டிருந்ததுகூட இல்லாமலாகிவிட்டிருக்கும்.

சிந்தித்துப்பார்க்கிறேன், நாகர்கோயிலில் இன்றுவரை நான் கணினியையோ மற்ற பொருட்களையோ பழுதுநோக்கி சரிப்படுத்தியதே இல்லை. வாங்கி கழற்றிநோக்கித் திருப்பித்தருவார்கள். ஒன்று சென்னையில் சரிசெய்யவேண்டும். அல்லது வேறு வாங்கவேண்டும். ஒவ்வொரு கடையிலும் மொண்ணையாக ஏழெட்டு பையன்கள். “அவனுக்கு கம்யூட்டர் பத்தி ஏதாவது தெரிஞ்சா நாகர்கோயிலிலே ஏன் இருக்கான்?” என்றார் நண்பர். அதுவும் சரிதான்.

நான் ஆஸுஸ் கணிப்பொறி ஒன்றை எடுத்துச்செல்லும் தேவைக்காக வைத்திருந்தேன். இலகுவானது. நான்காண்டுசேவைக்குப்பின் அது டிஸ்பிளே வராமலாகியது. அரங்கசாமி சொன்ன கடைக்குக் கொண்டுசென்றேன். பலநாட்கள் ஆராய்ந்துவிட்டு ஏதோ சிறிய பொருள் இல்லை, ஆனால் அது நாகர்கோயிலில் கிடைக்காது என்று சொன்னார்கள். ஆகவே அங்கேயே இன்னொரு ஆஸுஸ் வாங்கினேன். அதில் மென்பொருட்களை தரவிறக்கம் செய்து போட்டுத்தர ஒருநாள் ஆகியது. பார்த்தால் தாறுமாறாக ஏதோ போட்டு கணினி மிகமிக மெல்ல இயங்கியது.

கேட்டபோது ஆஸுஸ் இப்டித்தான் ஓடும்… இதுக்கு மேலே ஓடாது” என்றனர். “ஒரு கம்யூட்டர் இப்படி இயங்கவே முடியாது… ஒரு எழுத்து அடித்தால் இரு செகண்ட் தள்ளித்தான் தெரியும் என்றால் அது என்ன கம்ப்யூட்டர்’ என்று நான் சீறினேன். “ஒண்ணுமே பண்ணமுடியாது சார்…மேக்ஸிமம் ஸ்பீட் இதுதான்” என்றார்கள்.

அதில் வைஃபை இல்லை. “வைஃபை இதிலே வர்ரதில்ல சார்” என்றான் பையன். “வைஃபை வராத கம்யூட்டர் ஒண்ணு இந்த நூற்றாண்டிலே வர முடியுமா?” என்றேன். ஆனால் அங்கிருந்த பையன்களின் பொதுவான அறிவுத்திறனே அவ்வளவுதான். எனக்குத்தெரிந்த அளவுக்குக்கூட கம்பியூட்டர் பற்றி தெரியாது. இதில் அங்கேயே நின்று செய்து வாங்கவேண்டும். அரைமணிநேரத்தில் வருகிறேன் என கிளம்பினால் உடனே செல்போனை எடுத்து சினிமா பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். நாம் திரும்பிச்செல்லும்போது கணிப்பொறி விட்டுச்சென்ற வடிவில் சிதறல்களாக கிடக்கும்.

நானே மன்றாடி பலவழியாக முயன்று கடைசியில் ஒருவழியாக வைஃபை வந்தது. வீட்டுக்கு வந்து பலரிடம் செல்பேசியில் பேசி பல மென்பொருட்களை அழித்து அதை ஓரளவு சரிசெய்து விரைவுபடுத்தினேன். ஆனால் சைதன்யா வீட்டுக்கு வந்தபோது அவளுடைய கணிப்பொறியை எனக்கு விட்டுவிட்டு அதை எடுத்துச்சென்றாள். நான் அப்போது சென்னையில் இருந்தேன். சைதன்யாவின் மடிக்ககணினியை திரும்பி வந்தபோது பார்த்தேன். கண்ணாடியில் துப்பாக்கிக் குண்டுபட்டதுபோல ஓர் உடைசல். குப்புறக் கவிழ்த்து வைப்பாள் என நினைக்கிறேன். விளிம்பெல்லாம் தேய்சல். ஆனால் கமுக்கமாக இருந்துவிட்டாள். அவள் அண்ணன்தான் என்னிடம் “அப்பவே அது உடைஞ்சிட்டுது… சொல்லாம கொண்டுவந்திட்டா” என்றான்.

நாளை துபாய் செல்லவேண்டும். அவசரமாக ஒரு புதிய மடிக்கணினி வாங்கலாம் என்று இன்று கடைகளுக்குச் சென்றேன். ஒரு மடிக்கணினி ‘ஷோரூம்’. அங்கே நாலே நாலு தூசுபடிந்த மடிக்கணினிகள் இருந்தன. ஒரு அட்டையை காட்டி “இதில் எது வேணும்னு சொல்லுங்க . நாலஞ்சுநாளிலே மெட்ராஸிலே இருந்து வரவழைச்சு குடுப்போம்” என்றார். “இதுவா ஷோரூம்?” என்றேன். “ஆமா சார்”

நாகர்கோயில் முழுக்க சுற்றினேன். எல்லா மடிக்கணினிக் கடைகளும் இதே லட்சணம்தான். சாம்பிள்கள் இல்லை. சொன்னால் வரவழைத்து தருவார்கள் –அதாவது தர முயல்வார்கள். சர்வீஸ் கிடையாது. பாதிப்பேருக்கு மடிக்கணினியை இயக்கவே தெரியாது என்று தோன்றியது. பெருமூச்சுடன் திரும்பி வந்துவிட்டேன். சென்னை சென்றால் வாங்கவேண்டியதுதான். அதுவரை இந்த உடைந்த திரை போதும்.

வீடுதிரும்பி ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தபோது அமைதியானேன். இங்கிருக்கும் நம்பமுடியாத அறிவிலித்தனம், திறமையின்மை ,சோம்பல் குறித்து ஆச்சரியப்பட ஏதுமில்லை. திறமையானவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். எஞ்சியவர்களில் ஓரளவு தேறுபவர்கள் சென்னை அல்லது கோவைக்குச் செல்கிறார்கள். எந்தவகையிலும் பிரயோஜனமே இல்லாத கூட்டம்தான் நாகர்கோயிலில் எஞ்சுகிறது. எதிர்ப்படும் ஒவ்வொருவரும் ‘இன்னமும் நாகர்கோயிலிலா இருக்கிறீர்கள்?” என்று திகைப்படைவது இதனால்தான். இது ஒரு மாபெரும் மானுடக்குப்பைக்கூடை. ஆகவே நகரையும் குப்பைக்கூடையாகவே வைத்திருக்கிறது பாரதிய ஜனதாக் கட்சி.

முந்தைய கட்டுரைகேரளத்தில் தலித் பூசகர்கள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29