ஜெமோ,
சமகாலத்தில் வாழ்வதென்றால், கடந்தகால பிரஞ்கையற்று இருப்பதென நான் எண்ணிய காலங்களுண்டு. பெரும்பாலும் வாசிப்பற்ற அல்லது அப்படியே வாசித்தாலும் ஒன்றை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத இருண்மைகளே வாழ்க்கையென்று உழன்ற காலமது.
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஒரு பெரும் திறப்பாக அமைந்திருந்தார். “தன்னம்பிக்கை மனிதர்கள் சவங்களுக்குச் சமம்” என்ற அவருடைய பன்ச் lines வசீகரிக்கத்தான் செய்தன.
தன்னம்பிக்கை மனிதர்கள் இறந்த காலத்தில் தான் வாழ்கிறார்கள். அவர்களால் சமகாலத்தில் வாழவோ, அது தரும் பிரச்சினைகளை முழுமையாக கையாளவோ தகுதியற்று போய்விடுகிறார்கள் என்பார். இதை அப்படியே எடுத்துக் கொண்டு கடந்த காலங்களை முற்றிலுமாக நிராகரித்ததுண்டு. என்னால் பாம்பை பயமின்றி தொடமுடியும் என்ற அவருடைய வாசகங்களில் லௌகீக விவேகமற்று மயங்கியதுண்டு.
அறியாமையே வரமென்று மரபும் அறியாமல், அதனால் நவீனமும் புரியாமல் குழம்பியதுண்டு. சுருங்கச்சொன்னால், செயலூக்கத்தின் உச்சமாகிய செயலின்மையை சோம்பித்திரிவதென தவறாக எண்ணுவது போலத்தான் இதுவும்.
இது, ஜிட்டுவை மிகத் தவறாக புரிந்துகொண்டதன் விளைவு. விரிவான வாசிப்பின்மையே இதற்கு காரணமென்பதை உங்களை வாசிக்க ஆரம்பித்தபின் உணர்ந்து கொண்டேன்.
உங்களின் இக்கட்டுரையைப் படித்ததும் உங்களை வழிமறுத்து வினா தொடுத்தவரிடமிருந்த அறியாமை என்னை நினைவுபடுத்தியது.
சமகாலத்திலுள்ள பிரச்சினைகளின் ஆணிவேர் மரபில் உள்ளது. இம்மரபுகள் வரலாறாக இலக்கியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இதை வாசித்தறியாமல் சமகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதென்பது இயலாத ஒன்றே என மிகப் பூடகமாக உணர்த்தியுள்ளீர்கள்.
அன்புடன்
முத்து
***
அன்புள்ள ஜெ
நத்தையின் பாதை ஒட்டுமொத்தமாக ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இலக்கியம் என்பது ஒருவகை டைரிக்குறிப்பு அல்ல. சமகாலத்தின் மீதான எதிர்வினை அல்ல. சமூக விமர்சனம் கூட அல்ல. அது பண்பாட்டை உருவாக்குவது என்று கூறுகிறீர்கள். அதன் சவால் ஒருவகையில் திகைப்பை உருவாக்குகிறது
செல்வன்
***
அன்புள்ள ஜெ,
தங்களுடைய காட்டைபடைக்கும் இசையில் சில வரிகள் ஒரு பெரிய திறப்பு.
—
அவ்வினாவை எதிர்கொள்ளாத இலக்கியவாதியும் தத்துவவாதியும் இருக்கமுடியாது. சொல்லப்போனால் அவன் அங்கிருந்தே தொடங்குகிறான். மையமும் முழுமையும் உண்டா என்று ஆராய்கிறான். இல்லையோ என ஐயுறுகிறான். இல்லையென்றால் உருவாக்கவேண்டும் என முடிவுசெய்கிறான். உருவாக்கும்போதே தத்துவவாதியாக, இலக்கியப் படைப்பாளியாக ஆகிறான்
இங்குநிகழும் உயிர்ப்பரிணாமம், மானுட வாழ்க்கை, வரலாறு சிதறிப்பரவிப் பெருக்கெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி அழித்து வென்று இணைந்து பிரிந்து ஒழுகுகிறது. இதற்கு ஒரு திசை உண்டா, இவற்றுக்கு ஏதேனும் ஒழுங்கு உண்டா என்ற கேள்விக்கு எவரும் இறுதிப்பதிலைச் சொல்லிவிடமுடியாது. எந்த விடை சொல்லப்பட்டாலும் அது சொல்லப்படும் சூழலை, கணக்கில்கொள்ளப்பட்ட காலத்தை மட்டும் பொறுத்ததாகவே அமையமுடியும்.
—
உங்கள் பதில் சிறிய உளச்சோர்வை அளித்தாலும், மேலும் தேடுதலை தீவிரமாக்குகிறது.
—
பனிமலைமுகடுகளில் இளவெயில் எழும் அற்புதமான காட்சியை நோக்கி நின்றபோது ஆசிரியர் மாணவரிடம் சொன்னார். “நாம் காணும் இந்தக்காட்சி காளிதாசனால் உருவாக்கப்பட்டது”
—
எப்போது மாலை நேர மேகத்தை பார்தாலும் தங்களுடைய ‘இரவு’ குறுநாவல் வரி விளிம்புகள் பற்றி எரிந்த மேகங்கள் ஞாபகம் வரும். அது உங்களால் உருவாக்கப்பட்டது.
—
தீப்பிழம்பு போல கிடந்தது காயல்வெளி. அப்பால் தூரத்தில் அந்திச்சூரியன் விளிம்புகள் பற்றி எரிந்த மேகங்கள் நடுவே மெல்லப் புதைந்து கொண்டிருந்தது
—
அன்புடன்
திருமலை
***