அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
‘ஆழமற்ற நதி’ ரிலீஸான நேரம் முக்கியமான நேரம். மஹாளய பக்ஷத்தில் மஹாளய அமாவாசையில், பலர் தங்கள் முன்னோர்களின் கடன் தீர்க்கின்ற சமயத்தில் இந்த சிறுகதை வெளி வந்தது மிக பொருத்தம்.
இன்டெர்ஸ்டெல்லார் என்றொரு திரைப்படம். அதன் இயக்குனர் (கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்) எனும் காலத்தின் அம்சத்தை (நாயகனின் தந்தை, நாயகன், நாயகனின் குழந்தை) என்று இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருப்பார். பாத்திரங்கள் பேசும் வசனங்களை கவனித்தால் காலமே காலத்துடன் உரையாடுவது போலிருக்கும். நமது முன்னோர்கள் நமக்கு யார்? நமது பெற்றோர்கள் நமக்கு எதை தந்து செல்கிறார்கள்? அவர்கள் நமக்கு விட்டு செல்வது நினைவுகள், ஞாபகங்கள் (Memories) மட்டுமே. நாம் நமது குழந்தைகளுடன் சேர்ந்து மேலும் நினைவுகளை உருவாக்குகிறோம். நம் உடல் மறைந்த பிறகு நமது குழந்தைகளுக்கு நாம் வெறும் நினைவுகளே. பெரும்பாலான மனிதர்கள் இறப்பதற்கு முன் கடைசியாக பார்க்க விரும்புவது தங்கள் குழந்தைகளின் முகங்களை. அந்த முகங்களில் தங்களின் நீட்சியை பார்த்தபடி மறைகிறார்கள்.
நாம் நமது பெற்றோர்களை கடந்த காலம் என நினைக்கிறோம். ஆனால் அவர்களோ நமது எதிர்காலத்தை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். நாம் நமது குழந்தைகளை எதிர் காலம் என நினைக்கிறோம். ஆனால் அவர்களோ நமது கடந்த காலத்தை நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். ஒரு புள்ளியில் முக்காலமும் உறவுகளும் ஒன்றாக உறைகிறது.
தர்மச்சக்கரத்திலிருந்து பிரிந்து மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கைச்சக்கரங்கள் விலகி செல்லும்பொழுது சிக்கல்களும் குழப்பங்களும் எழுகின்றன. கதிர் போன்ற குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் சக்கரவியூகத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். கொஞ்சம் பணமோ பதவியோ அகங்காரமோ வந்துவிட்டால், மனிதர்கள் தங்கள் பெற்றோர்களை, குழந்தைகளை, உறவினர்களை, சமூகத்தை மறந்து விடுகிறார்கள். சமைப்பதற்கு, வாகனம் ஓட்ட, பாடம் சொல்லி கொடுக்க என்று அனைத்துக்கும் ஆள் வைத்து பழகி, பிறகு ஒரு கட்டத்தில் கொள்ளி வைப்பதற்க்கு கூட ஆள் தேடுகிறார்கள்.
அழுகை என்பது ஒருவர் மட்டும் சார்ந்ததா என்ன ? கதிரின் அழுகையும் கண்ணீரும், ஒட்டு மொத்த மானுடத்துக்கான அழுகையும் கண்ணீரும் என்றே தோன்றுகிறது.
நன்றி,
அன்புடன்,
ராஜா.
அன்புள்ள ஜெ
ஆழமற்ற நதிக்கு வந்த வாசிப்புகள் ஆச்சரியமளிக்கின்றன. நான் அக்கதையை உருக்கமான ஒரு தருணம் என்று மட்டும்தான் வாசித்தேன். விகடனில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் வாசிப்பார்கள். ஆனால் இந்தத்தளத்தில் வந்த வாசிப்புகள் வாசிப்பதற்கான ஒரு பயிற்சிபோல் இருந்தன. எப்படியெல்லாம் வாசிக்கலாம், எந்தந்த வாய்ப்புகள் உள்ளன என அவை காட்டின. நானேகூட அதன்பின்னர் அச்சிறுகதையை மீண்டும் புதிய கோணத்திலே வாசித்தேன்
எனக்கு அந்தக்கதை புனிதர்கள் மீதான மானுடர்களின் சுமையேற்றும் மனநிலை என்று தோன்றியது. அதாவது நான் கிறிஸ்தவன். ஏசுவின் மீது எல்லா பாவங்களையும் ஏற்றிவைக்கவேண்டும் எனறு கிறிஸ்தவம் சொல்கிறது. அவரை சிலுவையில் ஏற்றியது பலிநிறைவேற்றம் என்கிறது. இது சரித்துரம் முழுக்க நடைபெறுகிறது. காந்தியும் அவ்வாறே மனிதர்கள் தங்கள் சிறுமையையும் பாவத்தையும் சுமத்தி சிலுவையில் ஏற்றப்பட்டவர்தான்.
மனிதர்களுக்கு இதனால்தான் புனிதர்கள் தேவைப்படுகிறார்கள். களங்கமற்றவர்களைப் பார்த்ததுமே பாவங்களை அவர்கள் சுமக்கட்டுமே என அனைவருக்குமே தோன்றுகிறது. கதிரின் கண்ணீர் ஏசுவும் காந்தியும் விட்ட கண்ணீர். இந்த மனிதர்களுக்காக
ஜான் விக்டர்
சில தினங்களாக உங்களின் “ஆழமற்ற நதி” சிறுகதைக்கு வரும் கடிதங்களை படித்தேன் . உண்மையில் அது உங்களின் கதைகளில் எளிய ஒன்றாகவே எனக்கு தோன்றியது . கூடவே அதற்கு சில தினங்களுக்கு முன்னர் வந்த “கி.ரா ” குறித்த கட்டுரையை அது நினைவு படுத்தியது . அதன் இறுதி வரி இப்படி முடிந்தது . “களங்கலால் ஆழத்தை மறைக்கலாம் . ஆனால் தெளிவால் ஆழத்தை மறைப்பது ஒரு படி மேலான கலை “. அதிலும் ஒரு ஆழமற்ற நதியை குறிப்பிட்டு இருந்தீர்கள்.
ஆகவே இந்த கதை எனக்கு எந்த ஆச்சர்யத்தையும் ஏற்படுத்த வில்லை . ஒரு வேலை, என் தாய் மனநலம் பிறழ்ந்தவர்.ஆனால் எங்கள் எல்லாரையும் விட நேர்மையானவர்.நாங்கள் செய்யும் தவுறுகளை , நாங்கள் தவறு என்று உணரும் முன்பே கண்டடைபவர் . ஆகவே , நான் எப்போதும் மனநலம் பிறழ்ந்தவர்கள் நம்மை விட சிறந்த நுன்மனதை உடையவர்கள் என்று நம்பி வருகிறேன்.வெண்முரசில் கூட குண்டாசி கர்ணனிடம் சொல்லும் இடம் ஒன்று உள்ளது . துரியோதனனின் இறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய கதாயுதத்தை குறித்து கூறும் இடம் . உண்மையில் அவர்களை நான் எப்போதும் அஞ்சுகிறேன் . ஆனால் மக்கள் இதை உங்களின் சிறந்த கதை என்று கூறுவது என்னால் தாங்கி கொள்ளமுடியவில்லை . “சூரியனை தொற்றி கொள்ளுதல் ” போன்ற கதையை ஏன் அவர்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க கூடாது . படிமங்கள் குறைவாக இருப்பதாக எண்ணுகிறார்களோ அந்த கதையில் . உங்களின் வார்த்தைகளை தேடுவதையே சிறந்த பொழுதுபோக்காக வைத்து உள்ளேன் . என் பாஸ் ஒரு முறை , உலகு எங்கிலும் நாம் பரவ வேண்டும் . “we need “follow the sun model “” என சொன்னார் . அமெரிக்காவில் வசிக்கும் கொல்கத்தாவை சேர்ந்த பெங்காலி பேசும் அவர் எப்படி ஜெயமோகனை படித்தார் என்று ஒரு நிமிடம் அயர்ந்து விட்டேன். பின்பு புரிந்தது அந்த வாக்கியம் ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ளது என்று :-).
என்னை மீண்டும் மீண்டும் எழ செய்யும் உங்கள் வார்த்தைகளையும் , அதற்கு காரணமான முடிவின்மையுடன் போரிடும் அக அலைச்சலும் , அதை ஈடு செய்ய நீங்கள் செல்லும் ஓயாத பயணங்களும் , நீங்களும் , உங்களை அவ்வாறு இருக்க செய்யும் அனைத்து காரணிகளும் , தெய்வங்களும் வாழ்க .
நன்றியுடன் ,
சௌமியா