பனிமனிதன் படித்து முடித்தேன். மனம் முழுக்க கிம் தான் இருக்கிறான். கிம் மூலமாக ஒரு அத்வைத உபந்யாசம் கேட்ட உணர்வு. இது பெரியவர்களுக்கான கதைதான். விசித்திர உலகின் விலங்குகளும் பறவைகளும் Narniya, the Last airbender, Iceage3, the croods, படங்களைப்போன்று படமாகலாம்.
தங்களிடமிருந்து இப்படி ஒரு Fantasy யை நான் எதிர்பார்க்கவில்லை. தத்துவம் தூக்கலாக இருந்தாலும், அறிவியலோடு கற்பனையும் கலந்து பனிமனிதனின் உலகை நீங்கள் வர்ணித்த விதம் அருமை.
எனது கற்பனைத்திறன் மீதும் எனக்கு இப்போது நம்பிக்கை வருகிறது.
நீண்ட நாட்களாக எனக்கு ஒரு எண்ணம் இருந்தது, ஹனுமன், ஜம்பவான், ஜடாயு போன்ற கலப்பு உயிர்கள் அல்லது முழுபரிணாம வளர்ச்சி பெறாத உயிர்கள் வாழ்ந்திருக்கும் என்று.
ராமபிதாகஸ் பற்றி நீங்கள் விளக்கி இருந்தது ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
வாயுமைந்தன் என்ற கற்பனை என்னுள் இருந்தது, அதற்கு ராமபிதாகஸ் என்ற தலைப்பு பொருத்தமாகப்படுகிறது
பனிமனிதனை இன்னும் விரிவாக அறிவியல் புனைகதை எழுதலாம், ஃபன்டாசி படம் எடுக்கலாம், அனிமேசன் படம் பண்ணலாம், கார்டூன் தொடராக எடுக்கலாம், என்றெல்லாம் தோன்றுகிறது.
சாங்கிய யோகத்தை இணையத்தில் தேடி உங்களை படிக்க ஆரம்பித்தேன், உங்களை படிக்க படிக்க தத்துவ க்னானத்தோடு கற்பனையும் இலக்கியமும், வரலாறும், அறிவியலும் , சம்ஸ்க்ருதமும், தூய தமிழும் படிக்கும் பாக்கியம் பெருகிறேன்.
நன்றி
அன்புடன்
பகவதி
***
அன்புள்ள பகவதி,
கற்பனையை மெய்மையை நோக்கிச் செல்லும் பாதை என்றே என் மனம் கொள்கிறது. அதை எவ்வகையிலும் தர்க்கம் கட்டுப்படுத்தலாகாது என எண்ணிக்கொள்வேன். தர்க்கம் அதன் ஒரு சிறுபகுதியகாவே வரவேண்டும். கட்டற்ற கற்பனை ஓர் ஆறு, நம்மை அடித்துச்சென்று புதிய கரைகளை அடையச்செய்யும். பனிமனிதன் அவ்வாறு எழுதப்பட்டது. வெண்முரசில் பல பனிமனிதன்கள் உண்டு.
ஜெ
***