[சோஃபியா, இஸ்தான்புல் மசூதியின் சுவரோவியம்]
வணக்கம் திரு ஜெயமோகன்
இன்று உங்கள் தளத்தில் வந்த புதிய வாசகரின் கடிதம் படிக்கையில் நான் வியந்தே போனேன் நானும் மருத்துவம் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். நானும் அதே நிகழ்ச்சியில் கமல் அவர்கள் பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு அறம் நூலை அளித்தபோதுதான் உங்களைப் பற்றிஅறிந்தேன்.
அறம் தொகுப்பின் அனைத்துக் கதைகளையும் வசித்தபோது அதுவரை லார்ட் ஆப் தி ரிங்ஸ் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போன்ற ஆங்கில நூல்களையே படித்த எனக்கு தமிழ் மொழிக்கு அது திறப்பாக விளங்கியது. பின்பு விஷ்ணுபுரம் . நிறைய இடங்களில் புரியாவிடினும் தங்களின் பிறநூல்களையும் வாசிக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது அது.
தி கம்யூனிஸ்ட் மனிபெஸ்டோ வை மட்டுமே படித்துவிட்டு கம்யூனிசம் தான் உலகின் அறிவார்ந்த சித்தாந்தம் என நம்பிக்கொண்டிருந்த என்னை பின் தொடரும் நிழலின் குரல் முற்றிலுமாக தகர்த்துபோட்டது. இப்போது வெண்முரசில் இந்திரநீலம் வாசித்து கொண்டிருக்கிறேன். வெண்முரசு ஆரம்பம் முதலே அனைத்து நிகழ்வுகளும் பெரும்போரை நோக்கியே நகர்வதாகச் சித்தரிந்திருந்தது எனக்கு முதலில் விளங்கவில்லை. பிறகு லியோனார்டோ ட வின்சி யின் ஓவியங்களில் அவர் கிறிஸ்துவை சிறு குழந்தையாக வரையும்போதே அக்குழந்தையின் கையில் சிலுவை போல் தோற்றமளிக்கும் பொருளையும் மற்றொரு ஓவியத்தில் குழந்தை கிறிஸ்து ஒரு ஆட்டுக்குட்டியை தாவிப் பிடிப்பது போலும் வரைந்திருப்பதை பார்க்கையில் என் ஐயம் தெளிந்தது. ஒரு கலை வடிவில் இவ்வாறாக குறியீடுகள் மூலம் நிகழ இருப்பவையை முன் கூடியே சொல்லி வைப்பதுவும் அணிசேர்த்தல் போலவே என்றுணர்ந்தேன்
இரண்டாம் முறை விஷ்ணுபுரம் வாசிக்கையில் இவ்வாறாக உள்ள குறியீடுகள் முன்பு அறிந்திராதவையும் புலப்பட ஆரம்பித்தன விஷ்ணுபுரம் முடிவில் அது த்ரிவிக்ரமர் எழுதிய பத்ம புராணம் என்று கூறி அமைகிறது. சங்கர்ஷணன் சபையில்அவமதிப்பிற்கு பின் தூக்கி எறிந்த சுவடுகள் எஞ்சியவையை வைத்து அவர் சபையில் முன்னரேகண்ட த்ரிவிக்ரமர் இதை எழுதினார் என்று பொருள் கொள்கிறேன் சங்கர்ஷணன் எதற்காக எழுதுகிறோம் என்று பேசுவதையும் என் மனம் அது நீங்கள் பேசுவதாகவே எண்ணிக் கொள்கிறது.
வ்யாஸனின் எச்சமே உலகில் உள்ள அனைத்தும் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தீர்கள். அது போலவே வெண்முரசின் எச்சமே நான் வாசித்த வாசிக்க இருக்கும் அனைத்து நூல்களும் என நான் கூறுவேன். வெண்முரசு வாசிக்க தொடங்கிய பின் நான் வாசித்த மார்ஸல் ப்ரௌஸ்ட் இன் ரிமெம்பரான்ஸ் ஆப் திங்ஸ் பாஸ்ட் இன் சர்ச் ஆப் லாஸ்ட் டைம் ஆறு தொகுதிகள் கொண்ட நாவலையும் வெண்முரசு தந்த மானுட உணர்ச்சிகளின் போக்குகளையும் சிக்கல்களையும் கொண்டே புரிந்து கொண்டேன்.
என் வாழ்க்கையில் வெண்முரசு படிப்பதற்காவே பிறந்தேன் என்று தோன்றுமளவுக்கு அது என்னுள் ஒன்றாகி விட்டது. இந்த நாவல் வரிசையின் மூலம் இந்திய ஞான மரபையும் ஷன்மதங்களையும் ஆறு தரிசனங்களையும் நான் அறிமுகப்படுத்தி கொண்டேன். வெண்முரசை தொடர்ந்து தொய்வில்லாமல் எழுத வேண்டுகிறேன் என் சுயநலமும் கருதியே
சொல்ல நினைத்த அனைத்தையும் சொல்லி விட்டேனா என தெரியவில்லை அனால் சொல்ல ஆரம்பித்துவிட்டேன் என உணர்கிறேன் இம் முதல் கடிதத்தின் வாயிலாக மேலும் தொடரும் என நம்பிக்கை கொண்ட
ஸ்ரீராம்
***
அன்புள்ள ஸ்ரீராம்,
உங்கள் கடிதம் எனக்கு பல திறப்புகளை அளித்தது. அதையொட்டி சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். மருத்துவத்துறையிலிருந்து நிறைய வாசகர்கள் சென்ற இரண்டாண்டுகளாக அறிமுகமாகிறார்கள். சென்னையில் மாரிராஜ், செங்கல்பட்டில் தங்கபாண்டியன், மதுரையில் ரவிச்சந்திரன் என. சென்றமுறை மதுரையில் அலெக்ஸ் நினைவேந்தலுக்குச் சென்றபோது இரு மருத்துவர்கள் வந்து சந்தித்தனர். இருவருமே மிகச்சிறந்த வாசகர்கள் எனபது ஆச்சரியமாக இருந்தது.
இந்தியச்சூழலில் மருத்துவக்கல்வி என்பது உச்சகட்டப் போட்டிக்குப்பின் வெல்லப்படவேண்டிய ஒன்று. பிற அனைத்துத் திறன்களையும் அடகுவைத்து அடையவேண்டிய வெற்றி அது. அதிலிருந்து நல்ல வாசகர்கள் வருவது கலையின், அறிவியக்கத்தின் உள்ளார்ந்த ஆற்றலையே காட்டுகிறது. அழகிகளில் சோஃபியாவுக்கு நிகர் எவருமில்லை என்பார்கள். அவள் நூறு ஆயிரம் வீனஸ்களுக்குச் சமம். இலக்கியமோ தத்துவமோ உலகியலால் ஒருபோதும் அழிக்கப்படமுடியாதவை. எத்தனை புறக்கணிக்கப்பட்டாலும் எவ்வளவுதூரம் மறைக்கப்பட்டாலும் அவை தங்கள் அடியவர்களைக் கண்டடைந்தே தீருமென நினைக்கிறேன்.
நீங்கள் மிகக்குறுகிய காலத்தில் வாசித்து எழுந்த வேகம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. சென்ற காலங்களில் நானெல்லாம் தேவையற்ற வாசிப்புகளில் அலைக்கழிந்து மெல்லமெல்லத்தான் பேரிலக்கியங்கள் நோக்கி வந்தேன். நல்ல வாசிப்புகளை அடைய மிகவும் பிந்தியது. ஆனால் இன்றைய வாசகர்கள் மிக எளிதாக இலக்கிய ஆக்கங்களை வாசிக்கிறார்கள். இணையச்சூழல் இலக்கியப்புரிதலை, ஆர்வமுள்ளவர்களுக்கு, மிக எளிதாக்குகிறது
மிகச்சிறிய மழைக்கே பாலைநிலங்கள் பசுமைகொண்டுவிடும் என்பார்கள். நம் மாணவர்களில் எத்தனையோ செயலூக்கமும் படைப்பெழுச்சியும் கொண்ட உள்ளங்கள் இருக்கலாம். நம் கல்வித்துறை ஒரு சொட்டு நீர்கூட ஊற்றுவதில்லை. எப்போதேனும் தற்செயலாக இப்படி ஒரு வாசிப்பு நிகழ்ந்தபின்னர் அப்படியே மேலேறிச்செல்கிறார்கள் இளையவர்கள்.
இருவரைச் சொல்லவேண்டும். என் மருமகன் மதுசூதனன் என்னும் மது. என் பெரியம்மாள் மகள் பிரேமா அக்காவின் மகன்.அவனை இளமையில் நான் என் இடையில் எடுத்து வளர்த்திருக்கிறேன். அப்போது சுமாரான மாணவன். படிப்பு முடித்து வெளிநாட்டில் வேலைபார்க்கையில் வாசிக்கத் தொடங்கி இன்று வெண்முரசு வரை வாசிக்கும் மிகச்சிறந்த வாசகன். அவனைக் காண்கையிலெல்லாம் ஒரு நல்ல கல்விமுறையால் அவன் இளமையில் கண்டெடுக்கப்பட்டிருந்தால் என்னவாகியிருப்பான் என நான் வியப்பதுண்டு
என் அண்ணன் மகன் சரத் இன்னொரு உதாரணம். அண்ணாவுக்கு இலக்கிய, அறிவியக்க ஆர்வங்கள் இல்லை. படிபடி என பிள்ளைகளை உந்துபவர். அவர் குடும்பச்சூழலில் இலக்கியமோ கலைகளோ இல்லை. சரத் பொறியியல் முடித்து மேற்படிப்புக்காக சென்னை சென்றபின் வாசிக்க ஆரம்பித்து மிகவிரைவிலேயே நல்ல இலக்கியவாசகனாக ஆகியிருக்கிறான். எந்த வழிகாட்டலும் இல்லாமல்.
அவ்வாறு எழுந்து வருபவர்களைக் கண்டால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் எத்தனை படைப்புமனங்கள் இன்னமும் நீர்தொடாதிருக்கக்கூடும் என்னும் எண்ணமும் ஏற்படுகிறது.
ஜெ