வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 27

நான்கு : ஆடலின் வண்ணங்கள் – 5

fire-iconஉபப்பிலாவ்ய நகரிக்கு அபிமன்யூ பிரலம்பனுடன் வந்து சேர்ந்தபோது நள்ளிரவு. வழியெங்கும் அவர்கள் பேசிக்கொண்டே வந்தனர். அபிமன்யூ பேசத்தொடங்கினால் ஒன்றிலிருந்து பிறிதொன்றென கோத்துக்கொண்டே செல்வது வழக்கம். அவனிடமிருக்கும் ஓர் இயல்பை அதற்குள் பிரலம்பன் வகுத்துக்கொண்டுவிட்டிருந்தான். அவன் எப்போதும் முன்னிற்பவரை பேச்சில் ஈடுபடுத்தவும் மகிழ்விக்கவும் முயல்வான். அவர்கள் எவராக இருந்தாலும் சரி. அவர்களின் விழிகளினூடாகவே அவன் அங்கே தன் இருப்பை நிறுவிக்கொள்வான். அத்தருணத்தை கடந்துசெல்வான்.

அப்போது தன்னை அவன் ஒரு கூத்தனாகவே எண்ணிக்கொண்டிருப்பதுபோலத் தெரியும். கூத்தர்களுக்குரிய அத்தனை நுண்ணுணர்வுகளும் அவனிடம் வந்து கூடும். ஓருசில சொற்றொடர்களுக்குள் அவர்கள் எதற்கு சிரிப்பார்கள், எதில் அவர்களின் உள்ளம் மீட்டப்பட்டு விழிகள் ஒளிகொள்ளும் என அவன் புரிந்துகொண்டுவிடுவான். அதன்பின் பேச்சு அதை மையம் கொள்ளும். தொட்டுத் தொட்டு எடுத்து விரிக்கும். தன் பெட்டியிலிருந்து முடிவிலாது பொருட்களை எடுத்துப்பரப்பும் அணிவணிகனைப்போல. சிரிப்போ வியப்போ முதல் அதிர்வெழுகை வலுவானதாக அமையவேண்டும் என்றும் அதன் மீட்டலை சிறுசிறு தூண்டல்கள் வழியாக மேலெடுத்துச்செல்ல முடியும் என்றும் அவன் அறிந்திருந்தான். எங்கு அது கீழிறங்குகிறதென்று மேலும் நுட்பமாக உணர்ந்தான். அங்கே அடுத்த தொடக்கம் ஒன்றை நிகழ்த்துவான்.

அவன் பேச்சு ஒரு நுரை. ஒரு துளியின் குமிழிப்பெருக்கம். ஆனால் ஒளிகொள்வது, வானை ஏந்துவது. எளிய காவலர்களும் ஏவலரும் அடையாளம் காணப்பட ஏங்குபவர்கள் என்று அறிந்திருந்தான். அவர்களை அவன் ஏளனம்செய்தால்கூட அது பெருந்திரளில் இருந்து பிரித்தறியப்படுவதென்றே அவர்களுக்கு பொருள்படும். மீண்டும் மீண்டும் அவன் ‘நான் உன்னை அறிவேன், நானும் நீயும் நிகர்’ என்னும் ஆடலை ஆடினான். முதியவர்கள் அனைவரிடமும் சிறுமைந்தன் என்றானான். அவர்கள் விளையாடினால் விளையாட்டுப்பிள்ளை. அவர்கள் கடுமைகொண்டால் தண்டிக்கப்பட்ட குழந்தை.

ஒவ்வொரு சீண்டலுக்குள்ளும் இருக்கும் நுட்பம் ஒன்றை பிரலம்பன் மெல்லவே கண்டுகொண்டான். முதியவர்கள் அனைவரிடமும் அவன் அவர்களின் இளமைப்பருவத்தையே நினைவூட்டினான். அவர்களின் காதலை, காமத்தை, இளமையழகைப் பற்றியே பேசினான். முகம்சிவந்து சீறியும், எரிச்சலுடன் விலகியும் அவர்கள் எதிர்வினையாற்றினாலும் அவர்களுக்குள் அமைந்த ஒன்று உவகை கொள்வதை பிரலம்பன் உணர்ந்தான். அது அவர்கள் தங்கள் ஆழத்திற்குள் பிறர் அறியாது மீட்டும் ஒரு யாழ். அத்துமீறி அதில் கைவைத்து அவர்களை திடுக்கிடச் செய்கிறான். ஆனால் அதிர்ச்சியும் அந்தக் கூசலும் அவர்களுக்கு இனியவையே. முதியவனென்றும் ஆகி தன்னை நிகழ்த்திக்கொள்ளக் கற்றவனின் வழிமுறை அது. எளிய இளையோர் அதை ஆடவியலாது.

ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் விந்தையோ நகைப்போ கொண்ட ஏதோ ஒன்றை அவன் கண்டடைந்தான். அவற்றை நினைவில் தேக்கிக்கொண்டு உரிய இடங்களில் சொன்னான். சொல்லிச்சொல்லி அவற்றை வளர்த்தெடுத்தான். அவை புனைவுகள் என்பதொன்றே அவற்றை தோற்கடிப்பதென்று அறிந்தமையால் அவனே அவற்றை புனைவென்று நகையாடியபடி முன்வைத்தான். அவனைப்பற்றிய அத்தனை எள்ளல்களையும் அவனே செய்து அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டான். தன்னை எதிர்படுபவர்களினூடாக அவன் தன்னை வடிவமைத்துக்கொண்டிருந்தான்.

முற்றிலும் பிறருக்காக ஒருவன் தன்னை அமைத்துக்கொள்ளவியலுமா என பிரலம்பன் ஐயம் கொண்டான். அவனை கூர்ந்து அறிந்து தொடரும்தோறும் அவனுள் அமைந்த பிறிதொருவனை காணலானான். உண்மையில் அவன் பிறர்பேச்சை பொருட்படுத்துவதே இல்லை, எங்கும் அவன் குரலே ஒலித்துக்கொண்டிருக்கும். பிறர் நீளப்பேசத்தொடங்கினால் அவன் கண்கள் அவர்களை விலக்கி அகல்வு கொண்டன. மீண்டும் அருகணைந்தபோது ஏளனத்தை சூடியிருந்தன. மிக நுட்பமாக அவற்றிலிருந்த சலிப்பை பிரலம்பன் கண்டுகொண்டான்.

அர்ஜுனனும் இளைய யாதவரும் அன்றி எவரும் அபிமன்யூவுக்கு ஒரு பொருட்டே அல்ல என பிரலம்பன் உணர்ந்தான். இளைய யாதவருடன் அவன் பேசுகையில் அவ்விழிகளை நோக்கினால் அக்கணமே பாய்ந்து அவரை அவன் தழுவிக்கொள்ளப்போகிறான் என்று தோன்றும். ஒரு சொல்லுக்காக காப்பவன் போல. அர்ஜுனனின் கதைகளை கேட்கையில் மட்டும் அவன் முகம் பிறிதொன்றென்று ஆகும். அவன் அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் மாறி மாறி அகம்நடித்துக்கொண்டிருப்பவன். அவனுள் இருக்கும் அந்தப் பிறிதொருவன் பிறரை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளாதவன். அனைவருக்கும் மேல் எழுந்து நின்று குனிந்து நோக்கும் பேருருவன்.

பேச்சின் நடுவே இயல்பாக தன்னுள் சென்று ஒடுங்கி விழிகள் அணைந்து உடல் அசைவழிந்து ஊழ்கத்திலெனச் சமைவது அபிமன்யூவின் வழக்கம். மீண்டும் உயிர்ப்பசைவு கொண்டு எழுகையில் எழுவது எப்போதும் தன் பகடிச்சொல்லாகவே இருக்கும். பழகியணுகும்தோறும் அவன் நடத்தையில் இயல்புகொண்டிருந்த மிகையை பிரலம்பன் கண்டான். அவன் உள்ளியல்பு அல்ல என்பதனாலேயே பிறிதென அது அமையவியலாதென்று தெளிந்தான். நடிப்பென எழுவது எதுவானாலும் மிகையே. அறியாது நடிப்பதென்றாலும்கூட. அது மிகையென்றறிந்தபோது மேலும்  மேலும் இனியவனாகவே அவனைக் காட்டியது.

காம்பில்யத்திலிருந்து கிளம்பிய பயணத்தில் அவன் கொப்பளித்தபடியே இருந்தான். பல இடங்களில் புரவிக்கடிவாளத்தை பிடித்து இழுத்து நிறுத்தி பேரொலியுடன் நகைத்தான். புரவியைத் தூண்டி மலைச்சரிவுகளில் பாய்ந்தான். ஓடைகளை பறந்து கடந்தான். வழிப்போக்கர்களை நகையாடினான். பெண்களிடம் குலவினான். ஆனால் மெல்ல மெல்ல அணைந்துகொண்டிருந்தான். இரண்டுநாட்களில் முற்றிலும் அமைதிகொண்டு பிறிதொருவனென்றானான். பிரலம்பன் உடன்வருவதையே அறியவில்லை.

அவனைச்சூழ்ந்த இன்மையின் திரையை கலைக்கவேண்டியதில்லை என எண்ணிய பிரலம்பன் தானும் விலகி தன் உள்ளத்தை அளைந்தபடி உடன் சென்றான். ஆனால் அவனுடைய ஒவ்வொரு உடலசைவையும் அவன் விழிகள் நோக்கி அளவிட்டுக்கொண்டிருந்தன. உள்ளத்தை உடல் இத்தனை தெளிவாக வெளிக்காட்டுமா என்ன என அவன் வியந்தான். மூடவியலாச் சாளரங்களும் கதவுகளும் கொண்டவன் மனிதன். கரந்து வைக்க இயல்வது  என ஏதுமில்லை அவனிடம். ஒளிந்துகொள்வது பிறர் மேல் ஒவ்வொருவரும் கொள்ளும் நுண்நோக்கின்மையின் திரைக்குப்பின்னால்தான். ஒவ்வொருவரும் தன்னையன்றி பிறரை எண்ணுவதேயில்லை என்னும் மாயத்தால்தான்.

முதற் காவல்கோட்டத்தில் அவனது புரவியின் ஓசையைக் கேட்டதுமே இருகாவல் வீரர்கள் தங்கள் நீண்ட வேல்களால் சாலையை மறித்தனர். புதியதாக வெட்டி நாட்டப்பட்ட மரங்களின்மேல் மூங்கிலால் கட்டி ஈச்ச ஓலையால் கூரையிட்டு கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தின் அருகிருந்த நுணா மரத்தில் மீன்பந்தம் எரிந்துகொண்டிருந்தது. காவலர்தலைவன் “இருவரும் பந்த வெளிச்சத்தில் வந்து நில்லுங்கள்” என்று உரத்த குரலில் ஆணையிட அபிமன்யூவும் பிரலம்பனும் அந்தச் செந்நிற வட்டத்திற்குள் நுழைந்தனர். பிரலம்பன் புரவியிலிருந்து இறங்கி தன்னிடமிருந்த அபிமன்யூவின் கணையாழியைக்காட்டி “இவர் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து வருகிறார். இளைய பாண்டவர் அர்ஜுனரின் மைந்தர் அபிமன்யூ” என்றான்.

Ezhuthazhal _EPI_27

காவலர்கள் விராட வீரர்களாகையால் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். காவலர்தலைவன் “அபிமன்யூ மிகஇளவயதினர் அல்லவா?” என்றான். பிரலம்பன் “கதைகளில் அவ்வாறே இருப்பார். மெய்யில் வளர்ந்துகொண்டிருக்கிறார்” என்றான். அவன் சொல்வது புரியாமல் ஈட்டியுடன் காவலர்தலைவன் காவல் கோட்டத்திற்குள் நுழைந்து “மந்தரரே, எழுக…” என்றான். மந்தரன் முனகும் ஓசை கேட்டது “மந்தரரே எழுங்கள்” என்று துயிலில் இருந்த நடுஅகவைகொண்ட காவலனை எழுப்பினான். அவன் வெளிவரும்போதே மெல்லிய குரலில் ஏதோ சலிப்புரையை சொல்லிக்கொண்டு வந்தான்.

அருகே வந்து இருவரையும் மாறி மாறி நோக்கி பிரலம்பனிடம் “தாங்களா இளவரசர் அபிமன்யூ?” என்றான். “நானும்தான்… இப்போதைக்கு அவர்” என்றான் பிரலம்பன். “இளவயதில் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தேன். அப்போது கண்டிருக்கிறேன். ஆனால் என்னால் அடையாளம் கொள்ளக்கூடவில்லை” என்றான் மந்தரன். அபிமன்யூ புரவியிலிருந்து தாவி இறங்கி அருகே வந்து சினத்துடன் “கணையாழிக்கு கூடுதலாக நான் காட்ட வேண்டிய அடையாளமென்ன?” என்றான். மந்தரன் திகைத்து “ஆ… தாங்கள் இளைய பாண்டவரின் மைந்தரே. இந்த நடை போதும். இதை நான் பார்த்திருக்கிறேன். இந்தக்குரல்…” என்றான்.

காவலர்தலைவன் தலைவணங்கி “நல்வரவு இளவரசே, தங்கள் மண நிகழ்வுக்காக நகர் ஒருங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு நள்ளிரவில் வருவீர்கள் என்று எண்ணவில்லை” என்றான். அபிமன்யூ அவனுக்கு மறுமொழி சொல்லாமல் புரவியில் ஏறிக்கொண்டு உள்ளே சென்றான். “வருகிறேன் மந்தரரே” என்றபடி பிரலம்பன் இரு காவல் வீரர்களிடமும் விடைபெற்று புரவியிலேறி அவனுடன் சென்று இணைந்துகொண்டான். அபிமன்யூ வாய்க்குள் “மூடர்கள்” என்றான். பிரலம்பன் “எளியவர்கள். அவர்களுக்கு ஆளும் சொல் மட்டுமே புரிகிறது” என்றான். “சவுக்கு இன்னும் தெளிவாகப்புரியும்” என்றான் அபிமன்யூ.

எண்ணியிராக்கணத்தில் ஓர் ஒப்புமை பிரலம்பனின் உள்ளத்தில் எழுந்தது. நுண்ணிய அணிச்செதுக்குகள் கொண்ட உறையில் இடப்பட்ட கொலைவாள் இவன். மிகக்கூரியது, இரு புறமும் நா கொண்டு சுழல்வது, குருதி பட்டு ஒளி ஏற்றது. எங்குதொட்டாலும் குருதியுண்பது என்பதனாலேயே இத்தனை அழகிய வாளுறை அதற்கு தேவைப்படுகிறது. உறையுடன் அதை சிறுகுழந்தைகளுக்கு விளையாடக்கொடுக்கலாம். முகப்பறையில் அணிப்பொருளென தொங்கவிடலாம். எந்த ஆடையுடனும் அணிகளுடனும் இயல்பாக இணைந்துகொள்ளும். அவன் அதை விரித்துக்கொண்டே சென்று ஒரு கட்டத்தில் புன்னகையுடன் என்ன இது என வியந்து நிறுத்திக்கொண்டான்.

பின்னர் அந்த ஒப்புமையை எவரிடமேனும் சொல்ல வேண்டுமென்று பிரலம்பன் உளம்கிளர்ந்தான். சொன்னால் இவனிடம்தான் சொல்லவேண்டும் என்று எண்ணியதுமே புன்னகையுடன் தலையை அசைத்தான். எத்தனை விரைவாக என் எல்லைகளை கண்டுகொண்டுவிட்டேன் என எண்ணியதும் வியப்புகொண்டான். எண்ணச்சரடு திசைமுறுக்கிக்கொண்டது. மானுடர் ஒருவருக்கொருவர் எல்லைகளைத்தான் முதலில் வகுத்துக்கொள்கிறார்கள் போலும். பிறர் எல்லைகளை அறியாமல் அவர்கள் தங்கள் எல்லைகளை மீறுவதேயில்லை. அவ்வெல்லைகள் ஒருவரை ஒருவர் அறிவதனூடாக உருவாகின்றவை. காட்டுபவை, பெறுபவை, வடித்துக்கொள்பவை. அவ்வாடலின் நிகர்நிலைப்புள்ளிகள். எல்லைகளுக்கு அப்பால்தான் இருக்கின்றன மெய்கள். அவை எல்லைகளால் வேலியிடப்பட்டு திரைசூட்டப்பட்டு காக்கப்படுபவை.

உபபிலாவ்ய நகரி முழுக்க நெய்ப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. முதல் காவல்கோட்டத்திலிருந்து கோட்டையை அணுகுவதற்குள்ளாகவே அவர்கள் வரும் செய்தி முழவு வழியாக வந்தடைந்திருந்தது. அத்தனை காவல்கோட்டங்களிலும் தலைவணங்கி வாழ்த்துரையும் முகமனும் கூறி அவர்களை வரவேற்றனர். கோட்டைமுகப்பில் காவலர் தலைவன் உடைவாளுடன் வந்து முகமன் உரைத்து வாளுருவி நிலம் தொட்டு வணங்கினான். எவரையும் விழிதொட்டு பேசாமல் அரைக்கண் மூடியவன்போல அபிமன்யூ புரவியின் மேல் அமர்ந்திருந்தான். பிரலம்பன் ஒவ்வொருவரிடமும் இன்சொல்லும் நகையுரையும் அளித்து உடன் சென்றான்.

நகரெங்கும் அணிவளைவுகளையும் கொடித்தோரணங்களையும் பாவட்டாக்களையும் மலர்த்தூண்களையும் அமைக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. ஏவல்சூதர்களை நூற்றுவர் உரக்கக்கூவி அழைத்து ஆணைகளை உரைத்தனர். அங்குமிங்கும் நீள்நிழல் வளைந்தாடித் தொடர ஓடியும் ஏணிகளிலும் சுவர்களிலும் ஏறியும் மரக்கிளைகள் மேல் நின்றும் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். இன்னமும் எழுப்பப்படாத அணிவளைவுகள் சாலை ஓரங்களில் வண்ணக்குவியல்களாகக் கிடந்தன. இழுத்துக் கட்டப்படாத கொடித்தோரணங்கள் குருவிச்சிறகுகளின் நிரையாக தரையில் விழுந்திருந்தன. வண்ணத்தொட்டிகள், குருத்தோலை அணிப்பொருட்கள், ஓவியப்பாய்கள், வண்ணமிடப்பட்ட மூங்கில்கள். யானை ஒன்று சலிப்புடன் கடந்து சென்றது. இரு புரவிகள் சாலையோரம் நின்றபடி துயின்றன.

இடுங்கலான சாலைகளில் தரைப்பலகைகளை பொருத்தும் பணி அப்போதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. தச்சர்களின் கொட்டுவடிகளின் தட்டலோசையும் உளிகளின் செதுக்கோசையும் பணிக்குரல்களும் இருளுக்கு அப்பாலிருந்து கேட்டன. பலகைப்பரப்புகளில் பூசுவதற்காக அரக்கையும் மெழுகையும் சேர்த்து உருக்கி அதில் மரத்தூளைக்கொட்டி கூழென காய்ச்சிக்கொண்டிருந்தனர். உருகும் மணமும் குமிழிகொதிக்கும் ஓசையும் அனலாட்டமும் வழியெங்குமிருந்தன. அரக்குமை ஊற்றப்பட்ட பலகைகள் மேல் மென்வண்ணச் சுண்ணத்தைப் பரப்பி மர உருளைகளால் நிரப்பாக்கினர். பெரிய மரவுரிககளால் உரசி பளபளப்பாக்கினர்.

புரவிகளில் எதிரே வந்த உபப்பிலாவ்யத்தின் காவலர்கள் அபிமன்யூவைக்கண்டு தலைவணங்கி விலகி நின்றனர். அரண்மனை முகப்புக் காவல் மாடத்தில் அபிமன்யூவுக்காக சிற்றமைச்சர் சுரேசர் காத்திருந்தார் அவனைக்கண்டதும் அருகணைந்து வணங்கி முறைமுகமன் உரைத்து “தங்களுக்காகவே நகர் மங்கலம் கொள்கிறது, இளவரசே. அரண்மனையில் தங்கள் மணமகள் ஒவ்வொரு நாளும் உளங்கனிந்துகொண்டிருக்கிறாள். இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரின் வருகையால் உபப்பிலாவ்யம் ஒளியும் புகழும் கொள்ளும். நமது கொடிவழியினரின் சொற்களில் இந்நகர் என்றும் வாழட்டும்” என்றார்.

மறுமுகமனோ வணக்கமோ கூறாமல் இறங்கிய அபிமன்யூ “நான் நீராட வேண்டும். அதன் பின் சற்று துயில்கிறேன். காலையில் அவைக்கு வருகிறேன்” என்றான். “ஆம், அனைத்தையும் ஒருக்க ஆணையிட்டிருக்கிறேன்” என்றார் சுரேசர். மறுமொழி சொல்லாமல் அபிமன்யூ படிகளில் ஏறி நடக்க பிரலம்பனிடம் தாழ்ந்த குரலில் “தாங்களும் அவருடன் இருக்கலாம், அவர் அறைக்கு அருகிலேயே தங்களுக்கு சிற்றறை ஒருக்கப்பட்டுள்ளது” என்றார். பிரலம்பன் “நாங்கள் காம்பில்யத்திலிருந்து நில்லாது வந்தோம், அமைச்சரே” என்றான். “இளவரசர் களைத்திருக்கிறார்.” சுரேசர் “ஆம், தெரிகிறது” என்றார்.

அபிமன்யூ அதற்குள் இடைநாழியில் ஏறி அங்கே அவனை எதிர்கொண்ட ஏவலனிடம் தன்னை அறைக்கு கூட்டிச் செல்லும்படி கையசைவால் ஆணையிட்டான். பிரலம்பன் “அனைத்தையும் நான் வந்து தங்களுக்கு விளக்குகிறேன், அமைச்சரே” என்றபின் அபிமன்யூவுக்குப் பின்னால் ஓடினான். படிகளில் ஏறி தன் அறை நோக்கிச் சென்ற அபிமன்யூ அவனுடன் சென்ற ஏவலனிடம் “மது” என்றான். அவன் தலைவணங்கினான். பிரலம்பன் “விடிவதற்கு இன்னும் நான்கு நாழிகைகூட இல்லை, இளவரசே” என்றான். அபிமன்யூ அதை கேட்டதாகவே தெரியவில்லை.

fire-iconநீராடிவந்து குழல் கற்றைகள் உலர்வதற்கு உள்ளாகவே மூன்றுகோப்பை யவனமதுவை அருந்தி ஊனுணவை உண்டு எழுந்து மஞ்சத்தில் விழுந்து அபிமன்யூ துயிலத்தொடங்கினான். தொலைவுப்பயணம் அவன் உடலின் தசைகளை தளரச் செய்திருந்தது. எப்போதும் அவனைச் சுழற்றி இழுத்துக்கொள்ளும் அப்பெருஞ்சுழிக்குள் சென்றான். மிக ஆழத்தில் அணுகும்தோறும் அகலும் தொலைவில் ஒளிப்புள்ளி ஒன்று தெரிந்தது. அதுவொரு வாயில். அந்த வாயிலுக்கு அப்பால் வண்ணத்தின் அசைவென ஒரு முகம். முகம் அல்ல, பிறிதொன்று. முகமென மட்டுமே பெறப்படுவது, முகமல்ல என்று உணரப்படுவது.

அவன் விழித்துக்கொண்டபோது புலரிப்பறவைகளின் ஒலி அறையை சூழ்ந்திருந்தது. எழுந்தமர்ந்து தன் கனவை எண்ணத்தில் ஓட்ட முயன்றான். அவன் எழுந்த ஒலிகேட்டு வந்து வணங்கிய காவலனிடம் “நீராட்டறை” என்றான். இடைநாழியினூடாக நடந்து சென்றபோதுதான் அம்மாளிகை எத்தனை சிறியதென்று தெரிந்தது. உபப்பிலாவ்யமே மிகச்சிறிய ஊர். கோட்டை, தெருக்கள், காவல்மாடங்கள் அனைத்துமே சிறியவை. பெரியவர்களின் கருவிகளை குழந்தைகளுக்கான பாவைகளாக ஆக்கியதுபோல. ஆனால் முந்தையநாள் இரவில் இருட்டில் அது தெரியவில்லை. இருட்டில் அளவுகள் மறைந்துவிடுகின்றன. இருட்டுக்கு எல்லாமே நிகர்தான்.

மிகக்குறுகிய நீராட்டறைக்குள் தலைகுனிந்து நுழைந்தான். ஒருவர் மட்டுமே நின்று நீராடும் அளவுக்கு இடுங்கியது. நறுமணத் தைலமிட்ட வெந்நீர் அவனுக்காக காத்திருந்தது. நீராட்டறை ஏவலன் நறுமணச் சுண்ணங்களும் லேபனங்களும் எண்ணைகளும் கொண்ட பெட்டியுடன் நின்றிருந்தான். அபிமன்யூ ஒன்றும் சொல்லாமல் குறுபீடத்தில் அமர்ந்தான். ஏவலன் அவனை நீராட்டத்தொடங்கியபோது ஒரு திடுக்கிடல் ஏற்பட்டது அது ஏன் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். எதையோ கண்டேன். இந்த இடைநாழியினூடாக வரும்போது, அல்லது எனது அறையில், அல்லது நகருக்கு வரும் நீண்ட காட்டுவழியில். எதையோ…

வெந்நீராட்டு முடிந்து, ஈரம் போக துடைத்து, நறுஞ்சுண்ணமிட்டு அவனை நீராட்டறை ஏவலன் ஒருக்கினான். என்ன அது? எங்கு கண்டேன்? அவன் உள்ளம் நாக்கு நுனியென ஒவ்வொன்றாக தொட்டுத் தொட்டுத் தவித்து நெளிந்து சுழன்றுகொண்டிருந்தது. அணியறைக்குச் சென்றபோது அவனுக்கான அரச உடைகளுடன் ஏவலர் காத்து நின்றனர். ஆடி முன் அவன் அமர்ந்ததும் அவர்கள் அவனை ஒருக்கத் தொடங்கினர். ஓர் ஆணிலி அவன் நகங்களுக்கிடையே இருந்த அழுக்குகளை நீக்கினான். இருபது நகங்களையும் மிக விரைவிலேயே சீர்படுத்தி மெருகிட்டு புலி விழிகளென ஒளிரச்செய்தான் அவன் குழலை சிறு சுழித்திரிகளாக்கி தோளில் பரப்பினான் ஒருவன். அவன் காலில் இருந்து தலைவரை பொன்னணிகளும் மணியாரங்களும் வளைகளும் கணையாழிகளும் அணிவிக்கப்பட்டன.

பட்டுச் சால்வையை தோளிலிட்டபடி அவன் இடைநாழிக்கு வந்தபோது காத்து நின்றிருந்த ஏவலன் “அவைக்கு அல்லவா, அரசே?” என்றான். அதுவரை எங்கு செல்வது என்ற எண்ணமே இல்லாமல் தன்னில் அமிழ்ந்திருந்த அபிமன்யூ “அல்ல. நான் விராட இளவரசியை பார்க்க வேண்டும்” என்று சொன்னான். “இந்தப்பொழுதில் அவர்கள் சித்தமாக இருக்கிறார்களா என்று தெரியாது….” என்று ஏவலன் சொல்ல அபிமன்யூ சினத்துடன் விழிதூக்கி “இது ஏவல், நான் அவள் மாளிகைக்குச் செல்கிறேன். அங்கு அவள் என்னை சந்திக்கவேண்டும்” என்றான்.  ”ஆணை” என்று அவன் தலைவணங்கினான். பின்னர் பாய்ந்து படிகளிலிறங்கி இடைநாழியினூடாக ஓடி முற்றத்திற்குச் சென்றான்.

இரு ஏவலர்கள் வந்து ஓசையிலாது வணங்கி அபிமன்யூவை அழைத்துச் சென்றனர். குறடுகள் மரத்தரையில் ஒலிக்க நடந்து அந்த மாளிகையில் இருந்து அருகிருந்த அடுத்த மாளிகைக்குச் செல்லும் கூரையிடப்பட்ட இடைநாழியில் நடந்தான். அது சற்று முன்னர்தான் அமைக்கப்பட்டிருந்தது, மரச்சட்டங்களிலிருந்து அரக்குவாடை எழுந்தது. ஏவலனின் வேல்தாழ்த்தல்களும் வணக்கங்களும் முகமன் உரைகளும் அவனை வந்தடையவில்லை. அவன் அனுப்பிய ஏவலன் துணைக்கோட்டத்து வாயிலில் வந்து நின்றான். “இளவரசி தங்களை சிறுகூடத்தில் சந்திப்பதாக சொன்னார்” என்றான். அவன் தலையசைக்க தலைவணங்கி அவனை அழைத்துச்சென்று சிறுகூடத்தில் இருந்த பீடத்தில் அமரவைத்தான்.

ஐந்துபேர்கூட அமர முடியாத அளவுக்கு சிறிய உட்கூடம். கூரை தாழ்ந்து கைநீட்டினால் தொட்டுவிடலாம் போலிருந்தது. சாளரத்தினூடாக அப்பாலிருந்த தோட்டத்திலிருந்து செடிகள் வளர்ந்து உள்ளே தலை நீட்டியிருந்தன. “இந்த அறையை செம்மை செய்வது வழக்கமில்லையா?” என்று ஏவலனிடம் கேட்டான். ஏவலன் தலைவணங்கி “இது மிகப்பழைய இல்லம், இளவரசே. இங்கு இந்நகரத்தின் கணக்கர் ஒருவர் தங்கியிருந்தார். இதை ஓரளவே செம்மை செய்ய முடியும்” என்றான். அபிமன்யூவின் நோக்கை சந்தித்து பின் “தழைகள் உள்ளே வருவதை வெட்டுவது இங்கே வழக்கமில்லை. அது ஓர் அழகென்றே கொள்ளப்படுகிறது” என்றான்.

அவன் செல்லலாம் என்று கைகாட்டியபின் அபிமன்யூ கைகளை மார்பில் கட்டிக்கொண்டு தலை குனிந்தபோது குழல் புரிகள் சரிந்து விழுந்து முகத்தை மறைத்து ஆடின. அவன் விடாய் கொண்டிருப்பவனாக உணர்ந்தான். உடனே மதுவுக்காக உள்ளம் எழுந்தது. வலக்காலால் தரையை மெல்ல தட்டிக்கொண்டிருந்தான். அந்த ஓசை அவனை அமைதியிழக்கச் செய்தது. அமைதியிழப்பு அந்த ஓசையினால்தான் என்று சற்று பிந்தியே புரிந்து கால்களை அசையாமல் வைத்தான். ஆனால் அந்த்த் தாளம் உள்ளத்தில் தொடர்ந்து ஒலித்தது.

எழுந்து அறைக்குள் உலாவ எண்ணினான். ஆனால் அது ஒரு நேர்வெளிப்பாடு எனத்தோன்றியது. எங்கும் நிலைக்காத உள்ளத்துடன் உடலை ஓரிடத்தில் அமரச்செய்வது எவ்வளவு கடினமானதென்று உணர்ந்தான். அணுகி வரும் காலடியோசையைக் கேட்டதுமே அவள் என்று அபிமன்யூ உணர்ந்து அறியாமல் எழமுயன்று மீண்டும் அமர்ந்துகொண்டான். முதற்கணம் எழுந்த ஒவ்வாமையைக் கடக்க  இருகைகளையும் விரல்கோத்து மடியில் வைத்துக்கொண்டு உடலை இறுக்கி கால்களைச் சேர்த்து அமர்ந்தான். மூச்சை இழுத்திருக்கிறோம் என்று உணர்ந்தபின்னர் அதை வெளிவிட்டான்.

கைவளைகளின் ஒலியும் காற்சிலம்பின் சிணுக்கமும் ஆடையுரசும் ஓசையும் தனித்தனியாக கேட்டன. அவள் நடக்கும்போது ஒருகாலை நிலத்தில் கட்டைவிரல் உரச சற்று இழுத்து வைக்கிறாள் என்று தோன்றியது. அறைவாயிலில் அவளுடைய வண்ண அசைவு தோன்றியதுமே அறியாது திரும்பி நோக்கிவிட்டு விழிவிலக்கி சாளரத்தினூடாகத் தெரிந்த தோட்டத்தை பார்த்தான். அவள் அருகே வந்து “இந்திரப்பிரஸ்தத்தின் இளவரசரை வணங்குகிறேன்”  என்றாள். அவன் தலைதிருப்பி அவளை நோக்கி “அமர்க!” என்றான். அவள் அமர்ந்தபோது ஆடையணி ஓசையுடன் மூச்சொலியும் மெல்லிய பெண்மணமும் வந்து அவனை அறியா உளக்கிளர்ச்சி அடையச்செய்தன. முதற்கணத்து ஒவ்வாமை முற்றிலும் விலக உடல் எளிதாகி அவன் அவளை நேர்விழிகொண்டு நோக்கினான்.

அவள் அரசமுறைப்படி அணிசெய்துகொண்டிருக்கவில்லை. குழலை பெரிய கொண்டையாக முடிந்து அதன்மேல் முத்துச்சரமிட்டு சுற்றியிருந்தாள். அகத்தளத்தில் அணியும் எளிய வெண்பட்டாடை. அன்றாட அணிகள். அவள் தோள்களும் கழுத்தும் மிக நொய்மை கொண்டிருந்தன. தோள் கைகளை சந்திக்கும் இடத்திலும் கழுத்திலும் இருந்த வெண்ணிறக் கோடுகள் அவள் விரைவாக மெலிந்துகொண்டிருந்தாள் என்பதை காட்டின. அவன் பார்ப்பதை உணர்ந்தபின் அவள் உடல் தன்னுணர்வு கொள்வது கழுத்தில் எழுந்த மெல்லிய மெய்ப்பால் தெரிந்தது. இமை சரித்து விழிகளை பக்கவாட்டில் திருப்பி சுட்டுவிரலால் பீடத்தின் கைப்பிடியை மெல்ல நெருடியபடி அமர்ந்திருந்தாள்.

காதோரக்குறுங்குழல் காற்றில் அசைய அதன் நிழல் கன்னத்தில் விழுந்து ஆடியது. உதடுகள் மெல்ல பிரிந்த ஓசையைக்கூட அவன் கேட்டான். என்ன சொல் தேர்வது  என்று அவன் உள்ளம் தயங்கிக்கொண்டிருக்க அதற்கு மிக அருகிலேயே கட்டுக்கடங்காத சொற்பெருக்கொன்று அனைத்தையும் இடித்துச் சரித்தபடி சுழன்று சென்றுகொண்டிருந்தது. அவள் “இளையபாண்டவரும் உடன் பிறந்தாரும் நாளை மறுநாள்தான் இங்கு திரும்பி வருவார்கள் என்று செய்தி வந்தது” என்றாள். அவன் திடுக்கிட்டு அவளை நோக்கி “ஆம், அவர்கள் அங்கிருந்து கிளம்புவதற்கும் இங்கு நுழைவதற்கும் அரச முறைமைகள் உள்ளன” என்றான்.

எத்தனை விரைவாக அவள் பேசத்தொடங்கிவிட்டாள் என அவன் அகம் வியந்தது. மிக எளிய நடைமுறைச்செய்தி ஒன்றைத் தொடங்கியதுபோல பொருத்தமான ஒன்று வேறில்லை. அவன் அவளை வென்று கடக்க உளமெழுந்தான். “நான் முறைமை மீறி உன்னை பார்க்கும்பொருட்டு இங்கு வந்தேன்” என்றான். அவள் அவன் விழிகளை சந்தித்து “நான் முன்னரே உங்களை எதிர்பார்த்தேன்” என்றாள். அபிமன்யூ திடுக்கிட்டு நெஞ்சு ஓசையிட “இல்லை, நான் எந்தையின் ஆணைப்படியே வந்தேன்” என்றான். அவள் தலைசாய்த்து “நன்று” என்றாள்.

அவள் தன்னைவிட உள்ளத்தால் மிகமூத்தவள் என அவன் அறிந்தான். அதுவே அவனை சீண்டியது, அவள்மேல் உளவெற்றியை அடைந்தாகவேண்டும் என எண்ணி அவன் அகம் சொல்துழாவியது. “ஆம், இங்கு பணிகள் இருக்கும். அரசகுலத்தவர் ஒருவர் இருந்து அவற்றை நடத்தியாகவேண்டும்” என்றாள். மேலும் எளிதாக அதை அவள் ஆக்கியபோது அவனுடைய உணர்ச்சிகள் பொருளிழந்தன. தன் பதற்றமும் கிளர்ச்சியும் கேலிக்குரியவை என்று தோன்ற அவன் தளார்ந்தான். மூச்சு எழுந்தமைய, உடல்மேல் மெல்லிய நீராவியென வியர்வை குளிரத்தொடங்க, புகை படிந்த சித்தத்துடன் அவன் அப்படியே அமர்ந்திருந்தான்.

அவள் முகத்தையும் தோள்களையும் உளவிலக்குடன் பார்த்தான். மெலிந்த மென்மையான உடல். அதில் அகவை எப்படி வெளிப்படுகிறது? கன்னங்கள் சற்று ஒட்டி எலும்புகள் புடைத்திருந்தன. கண்களுக்குக் கீழே கண்மை கலங்கி வழிந்ததுபோல் கருமை. உதடுகளைச்சுற்றி இருகோடுகள். அவளை நோக்கலாகாது என தன் விழிகளை இழுத்துத் திருப்பி அருகிருந்த தூணைப்பார்த்தபடி “தந்தையின் ஆணை நான் மீறமுடியாத ஒன்று” என்றான். அச்சொல் மேலும் எங்கோ சென்று தொட அவள் பெருமூச்சுவிட்டாள்.

அவன் அச்சொல் மிகப்பிழையாக புரிந்துகொள்ளப்படக்கூடும் என்ற உணர்வை அடைந்து “நான் எதையும் என் விருப்பப்படியே செய்யக்கூடியவன். கட்டற்றவனாகவும் திரும்பிப் பார்க்காதவனாகவும் மட்டுமே இதுவரை இருந்திருக்கிறேன்” என்றான். அவள் “ஆம், அதற்கே வாய்ப்பு” என்றாள். என்ன சொல்கிறாள் என்று புருவம் சுருக்கினான். “அன்னையால் வளர்க்கப்பட்ட ஆண்கள் எங்கும் தயங்கும் கோழைகளாகவோ எங்கும் தயங்காத விசைகொண்டவர்களாகவோதான் இருப்பார்கள்” என்றாள். அபிமன்யூ “நான் தந்தையை எண்ணி வளர்ந்தவன்” என்று சினத்துடன் சொன்னான்.

அவள் உதடுகள் இழுபட, கன்னம் மடிய புன்னகைத்து “அதை நான் மறுக்கவில்லை. தந்தையுடன் இருந்திருந்தால் மேலும் நிகர்நிலை கொண்டவனாக இருந்திருப்பீர்கள்” என்றாள். அபிமன்யூ “நாம் ஏன் அவரைப்பற்றி பேச வேண்டும்?” என்று எரிச்சலுடன் சொன்னபின் என்றபின் நினைவுகூர்ந்து “நீ என்னிடம் பேசிய முதற்சொல்லே அவரைப்பற்றித்தான்” என்றான். அவள் “ஆம் அவர்தான் பாண்டவர்களில் எனக்குத் தெரிந்தவர். என்னை மணக்கொடையாகப் பெற்றவர் அவருடைய பிறிது வடிவமாகவே உங்களை நான் பார்க்கிறேன்” என்றாள்.

அப்படி அவள் நேர்விழியுடன் சொல்வாள் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் முழுமையாக தளர்ந்தான். எழுந்து விலகி நெடுந்தொலைவு சென்றுவிடவேண்டும் என்று விழைந்தான். எவ்வகையிலோ அவள் பேரரசி குந்தியை நினைவுறுத்தினாள். குந்தி எப்போதுமே முதலில் நினைவில் எழுகையில் அவனிடம் ஓர் ஒவ்வாமையைத்தான் உருவாக்கினாள். அதை கடக்கும்பொருட்டே அவன் சிறுவன்போல் மிகையாக விளையாட்டை நடித்தான். குந்தியிடம் அவனுக்குப் பிடிக்காதது என்ன என்று அவன் அகம் துழாவியது. மெலிந்த, முதுமை கனிந்த பெண். பாரதவர்ஷமெங்கும் அவள் மேல் ஓர் இரக்கம் அனைவருக்கும் உள்ளது. எதையும் அடையாதவள், ஒவ்வொன்றும் வந்தணைந்து வாயிலிலே திரும்பிச்செல்லும் ஊழ் கொண்டவள். எண்ணும்போது அவனும் உளநெகிழ்வுக்கு உள்ளாவது உண்டு. ஆனால் எண்ணத்தில் அவள் எழும்போது முதலில் தோன்றுவன அவள் விழிகள். அவற்றில் அவன் விழையாத ஏதோ ஒன்று இருந்தது.

அபிமன்யூ “நன்று, நான் கிளம்புகிறேன். இங்கு அனைத்தையும் நானே ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது” என்றான். “அவ்வாறே ஆகுக!” என்று அவளும் எழுந்துகொண்டாள். “நீ நடக்கையில் காலை சற்று இழுத்து வைக்கிறாய்” என்றான். “இல்லையே” என்று அவள் சொன்னாள். “இயல்பாகத்தான் நடக்கிறேன். ஏன் சொல்கிறீர்கள்?” “இல்லை, வெறுமனே தோன்றியது” என்றான். “நான் உன்னை முறைமையின்படித்தான் சந்திக்க விழைந்தேன்” என்றான்.

அதுவும் பிழைபொருள் அளிக்குமே என்றுணர்ந்து பிழைபொருள் அளிக்காத ஒன்றை சொல்லவே இல்லை என்று எண்ணி புன்னகைத்தான். அப்புன்னகையாலேயே அதுவரை இருந்த உள இறுக்கம் மறைய அவளிடம் “நீ இனியவள். உன்னை விரும்புகிறேன் என்று சொல்லும்பொருட்டே வந்தேன். அதையன்றி பிற அனைத்தையும் சொல்லிவிட்டேன் போலும்” என்றான். அவள் கூரிய முள்ளொன்றால் குத்தப்பட்டதுபோன்ற முக மாற்றத்தை அடைந்தாள். “பேறு பெற்றேன்” என்று நிலத்தைப்பார்த்தபடி முணுமுணுத்தாள். அபிமன்யூ “நன்று சூழ்க!” என்றபடி எழுந்து வெளியே சென்றான்.

முந்தைய கட்டுரைமெல்லிய நூல் (சிறுகதை)
அடுத்த கட்டுரைசோளிங்கர் பயணமும் குழந்தையிலக்கியமும்-கடிதம்