ஆழமற்ற நதி – கடிதங்கள்

134569_thumb

ஆழமற்ற நதி [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன்,

“ஆழமற்ற நதி”யை இவ்வாறு தொகுத்துக் கொள்கிறேன்.

பல குறியீடுகள் விரவிக் கிடக்கும் இக்கதை எனக்கு ஒரு நல்ல வாசிப்புப் பயிற்சி.

பார்வைக்கு ஆழமற்ற நதிதான் – ஆனால் அதுதான் பாவம் களைகிறது. தேவை செய்த பெரும்பாவத்தின் சுமை தரும் பணிவு. ஜஸ்டிஸ் ஆனாலும், ஆடியிலும் என்டேவியரிலும் வந்தாலும் – இங்கே படுத்துத்தான் தலைமுழுக முடியும்.

கதிரும் அப்படியே – எல்லோரின் பார்வையிலும் – காசிநாதன் குடும்பத்தார், பணியாட்கள், நம்பூதிரி  எல்லோரிடமும் அதே பார்வை.

நேர்கொண்டு பார்க்க விழைவதில்லை அவனை. ஆனால் அவன்மீதுதான் அவர்களின் பாவ மூட்டைகளை சுமத்துகிறார்கள் –  அவனுக்கு அது புரியாது என்ற நினைப்பில்.

கதிர், தன் விசும்பலின் மூலம் ஒரு சிறு ஒளியை வீசுகிறான். இருட்டிலேயே உழலும் அனைவரும் – சுந்தரேசன் உட்பட – அதை அஞ்சி ஓடுகின்றனர்.

கதிர் முன்னரே புரிந்துதான் செய்தானா?  தன்னைப் போல் இன்னொரு ஜடம் வேண்டாமென்று.  இல்லை  சொற்கள் தொடமுடியாத அம்மனம் –  தொல் குறியீடுகளும் முத்திரைகளுமான சடங்கினால் திறக்கிறதா?

இக்கேள்வியின் விடையே அவ்விசும்பல் யாருக்காக என்பதை தீர்மானிக்கிறது.

நன்றி!

என்றென்றும் அன்புடன்,

மூர்த்தி ஜி

டல்லஸ்

***

அன்புள்ள ஆசானுக்கு,

ஆழமற்ற நதி வெறுமனே மேலோட்டமானது. கால் மட்டுமென்றால் கால், அன்றி முழுவதும் முழுகவேண்டுமென்றால் அப்படியே; அது நதியின் கையில் இல்லை மாறாக நனைபவரின் முடிவு. ஆனால், ஆழமான நதி தன்னுள் அனைத்தையும் கரைக்க வல்லது. மட்டுமல்ல, முழுவதும் தன் கட்டுப்பாட்டில் எடுக்கவல்லது. கதையில் நீதிமான் துவங்கி நம்பூதிரிகள் வரை தங்கள் சொற்களால் செயல்களால் காட்டிக்கொண்டிருப்பது தாங்கள் ஆழமற்றவர்கள் என்பதை. மாறாக, கதிர் தன்னுள் போடப்படும் எதையும் உள்ளிழுத்துக்கொள்ளும் ஆழமான நதியைப் போன்றவன். கதிர் என்றால் கதிர், நீர் என்றால் நீர். எதுவாயினும் உச்சம்.

கதையை வாசிக்கும்போது மகாபாரதம் பற்றிய உங்களுடைய உரை நினைவுக்கு வந்தது. அதில் ஒரு இடத்தில், மகனை இழந்த தகப்பனின் துயர் ஒரு தாயின் துயரை விடவும் மேலானது என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பீர்கள். தகப்பன் தன் நீட்சியாக நம்பிக்கொண்டிருந்த ஒன்றை முற்றிலும் இழக்கும் துயர் அது. அத்தகைய துயரைக் காட்டிலும் கொடுமையானது குற்றவுணர்ச்சி. அந்த குற்றவுணர்ச்சியில் இருந்து, தன்னைக் காத்துக்கொள்ள தேவைபடுவது ஒரு கேடயம்; சங்கரன் விசயத்தில் கதிர் அந்தக் கேடயம். அப்படியானால், ஒன்றுமறியாத கதிரின் தலையில் அந்தப் பாவத்தை இறக்கிவைத்த குற்றவுணர்வை மறைக்கும் கேடயம் அந்த சடங்குகள். பல நினைவுகளை, பல தளங்களில் விரித்தெடுத்துக் கொள்ள உதவியது “ஆழமற்ற நதி”.

வணக்கங்களுடன்,

காளீஸ்வரன்.

***

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32
அடுத்த கட்டுரைஅறிதலென்னும் பயிற்சி