குழந்தையிலக்கிய அட்டவணை
அன்புள்ள ஜெ,
நேற்று நானும் நம் குழும நண்பர்களும் சோளிங்கர் சென்றிருந்தோம். சிங்கமலைக்கும் குரங்குமலைக்கும் செல்லப்போகிறேன் என்று சொன்னதும் ஏதோ ட்ரெக்கிங் போகிறேன் என நினைத்து தானும் வருவதாக சொல்லி ஜீன்ஸ் பேண்ட்டும் டீசர்ட்டுமாக வந்த அண்ணன் சிறில் அலெக்ஸ் தலைமையில் இந்த பயணம். இன்னொரு சிங்கவேற்குன்றமாகிய அஹோபிலத்திற்கு மூன்று வருடங்கள் முன்பு சென்றிருந்தேன். அங்கு முதலாம் ஜீயர் சமாதி மேற்கொண்ட அஹோபில நரசிம்மரின் சந்நிதிக்கு முன் சேவல்களாக பலியிட்டுக்கொண்டிருந்தனர். அப்படியே ஓடைகளைத் தாண்டி வராஹ நரசிம்மரைக் கடந்து பாவன நரசிம்மரை ஏறக்குறைய எட்டு கிமி நடந்து அடையலாம். அங்கும் சேவல் பலிகள், ஆடு பலி கொடுப்பதாக சொன்னார்கள். நான் காணவில்லை. அதன்பின் ஒவ்வொருமுறை சோளிங்கர் போகும் போதும் தோன்றும்…
நாலு பட்டர்கள் சுமந்து வந்த அண்டாவில் இருந்த புளியோதரையை பார்த்து “ஆருக்கு? எனக்கா” என கதறியபின் யோகத்தில் ஆழந்திருப்பார் இந்த மாடனும் என. நிற்க. நான் எழுத உத்தேசித்தது சிறார் இலக்கியம் பற்றி நேற்று வந்திருந்த உங்கள் பதில் கடிதம் பற்றி. விஷ்ணுபுரம் சரவணன் யுமாவாசுகியை சிறார் இலக்கியம் குறித்து பேட்டி எடுத்திருக்கிறார். விகடன் தீபாவளி மலர் 2017 ல் வந்திருக்கிறது. நூற்றியைம்பது ரூபாய், இந்த பேட்டிக்கும் எங்கேயோ இப்ப மூணுமணி என்ற அ.முத்துலிங்கம் சிறுகதைக்கும் சரியாகப்போனது. இனி படிப்பதெல்லாம் போனஸ்தான். இந்த பேட்டியில் நித்ய சைதன்ய யதி சிறார் கதை எழுதியிருப்பது பற்றி கூறியதை படிக்கையில் ஆச்சரியமாக இருந்தது. அந்த பேட்டியை போட்டோ எடுத்து பிடிஎஃப் ஆக்கி இணைத்துள்ளேன். பலருக்கு உதவியாக இருக்கும். விகடன் கார்ர்கள் சட்டையை பிடிக்கமாட்டார்கள் என நம்புகிறேன். தளத்தின் பதிப்பாளர் சிறில் அண்ணா மீது வழக்கு தொடுக்கவும் வாய்ப்பில்லை எனவும் நம்புகிறேன் :-)))
இந்த பேட்டியில் நீங்களும் சிறார்கதை எழுத வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். என் மகளுக்கு வெண்முரசை கதையாக சொல்வதுண்டு. கட்டக் கடைசியாக சொன்னது கசன் புலிகளின் வயிற்றிலுருந்நு மீண்டு வந்தது. சுக்ர்ர் மீண்டும் அந்த மந்திரத்தை சொல்லி ஏன் புலிளை உயிர்த்தெழ வைக்கவில்லை என்ற கோபம் அவளுக்கு இன்னும் தீரவில்லை. அது உங்கள் மீதான கோபமாகவும் மாறக்கூடும் என அஞ்சுகிறேன். ஆகவே, ஒரு சின்ன கதையாவது ப்ளீஸ்… பனி மனிதனும் வெள்ளிநிலமும் பத்தாவது வருவதற்குள் படித்துவிடுவாள். அதையும் கதையாகத்தான் சொல்லி வருகிறேன். இப்போது தோன்றுவது என்னவெனில் யுமாசாரின் அழகான அம்மா, ஓநாயும் சிறுமியும் போன்ற சிறார்கதை தொகுப்புகளையும் பனிமனிதன் வெள்ளிநிலம் ஆகியவைகளையும் வாசித்து அப்படியே எடிட் செய்யாமல் குழந்தைகளுக்கு சொல்லமுடியும். ரேடியோவில் தில்லானா மோகனாம்பாளை ஒருவர் வாசித்தது ஞாபகம் வருகிறது. அதுபோல வாசிக்கலாம். அவைகள் அந்தளவு குழந்தைகளுக்கான நடையில் உள்ளன.
( இதுபற்றி இதற்கு முன் எழுதிய கடிதம்
http://www.jeyamohan.in/92671#.WdmlY2nhXqA )
ஆனால் குழந்தைகள் தமிழில் படிக்க முயல்வதில்லை. ஆங்கிலம் இயல்பாக புரிகிறது. ICE என்பதை ஜஸ் என வாசிக்கிறாள் ஆனால் தமிழில் அய்ய்… இஸ்ஸ்.. ஐஸ்.. அப்படின்னா என்னப்பா என கேட்கிறாள். காமிக்ஸ் வடிவில் சித்திரக்கதைகளை தமிழில் கொண்டு வர வேண்டும். பழைய பூந்தளிர் இதழ்களையாவது மறுபடி அச்சிடலாம். டிங்கிள் சுப்பாண்டி சாகசம் மற்றும் அமர்சித்ரா கதைகள் தமிழில் கிடைக்கின்றன.
இந்த விகடன் பேட்டியைப் பற்றி இன்னொன்று சொல்லவேண்டும். மிக அருமையான அழகான புகைப்படங்கள். முன்பொருமுறை, “ஒரு சோட்டா கவர்மெண்ட்க்காக ஒருவன் நாவல் எழுதுவானா” என்ற தலைப்பிற்கு மண்வாசனை ரேவதிபோல ஒரு பக்க முகத்தை உள்ளங்கையால் மூடிய போட்டோவை ஊர்முழுக்க ஒட்டியிருந்தது ஞாபகம் வருகிறது. அநியாயம்
அன்புடன்,
காளிப்ரஸாத்