சிதறால்- பயணத்தின் விதிமுறைகள்
சார் வணக்கம்,
சரவணக்குமாருக்கு நீங்கள் அளித்த பதிலைப்பார்த்து நானும் வருந்தினேன். ஆயுதபூஜை விடுமுறையில் சரண் அப்பாவின் ராணிப்பேட்டை ஃபவுண்டிரியில் பூஜைக்கு சென்றுவிட்டு அங்கிருக்கும் தொன்மையான கோவில்களைப்பார்க்கலாமென்று 2 நாட்கள் சென்று வந்தேன். இப்படித்தான் செல்லப்போகும் இடங்கள் பற்றிய எந்த தகவலும் தெரிந்துகொள்ளாமல் சென்றேன் போன இடமெல்லாம் வழிபட்டுவிட்டு தகவல்பலகைகளில் இருப்பதை வாசித்துவிட்டுவந்தேன்
2 நாட்களுக்கு முன்பு விஜயராகவன் சாரிடம் தொடர்பு கொள்கையில் திருவக்கரை வக்கரகாளியம்ம்ன் கோவிலுக்கு சென்றதைப் பற்றி சொல்லிகொண்டிருந்தேன்
அம்மன் உக்கிரமனவள், பிறந்த சிசுவை காதில் குழையாக அணிந்திருப்பாள் என்றும் சிவனின் 3 முகங்களும் லிங்கத்திலேயெ பட்டையாய் செதுக்கலில் தெரியும் என்றும் சொன்னதும் வருத்தமாகவிட்டது. இதை எதுவுமே நான் கவனிக்கவில்லை யாரும் சொல்லவுமில்லை. இனி இந்த இடத்திற்கெல்லாம் நான் செல்வது என்பது மிக அரிது. சிதறால் பயணத்தின் கடிதத்திற்கான உங்கள் பதில் ஒரு பாடம் எனக்கெல்லாம். அவசியம் இனி இப்படி பயணிக்கையில் தகவல்கள் கொஞ்சமேனும் சேகரித்துக்கொண்டுதான் செல்லப்போகிறேன்.
அன்புடன்
லோகமாதேவி
***
அன்புள்ள ஜெ
பயணத்தின் வழிமுறைகள் வாசித்து பலபேர் வெட்கப்பட்டிருப்பார்கள். நானும் வெட்கப்பட்டேன். சமீபத்தில் பதாமி சென்றிருந்தேன். போகலாம் என்று சொன்னார்கள். கிளம்பிவிட்டேன். என்னுடன் வந்தவர்களுக்கும் ஒன்றும் தெரியாது. போய்வந்தபின்னர் நானும் ஒரு பயணக்குறிப்பை எழுதினேன். ஆனால் அதை வாசித்துவிட்டு ஒரு கன்னட நண்பர் அந்த ஊரைப்பற்றிச் சொன்னார். நான் புலிகேசியைப்பற்றி சிவகாமியின் சபதம் நாவலில் இருந்தே படித்திருக்கிறேன். பதாமியும் வாதாபியும் ஒன்று என்றுகூடத் தெரியாமல் போய்வந்துவிட்டிருக்கிறேன். இந்தத்தப்பை இனிமேல் செய்யவேகூடாது என நினைத்துக்கொண்டேன்
சிவராம்
***
அன்புள்ள ஜெ
பயணத்தின் வழிமுறைகளில் ஒரு கிளாஸ் விட்டுவிட்டது. அந்தக்கோயிலில். அல்லது வரலாற்றுத்தலத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது அல்லது செய்யவேண்டும் என்பதை முன்னாடியே கேட்டுத்தெரிந்துகொண்டு செல்லவேண்டும். சில கோயில்களில் அதற்கானச் சடங்குகள் உண்டு. கேரளக்கோயிலுக்குச் செல்லும்போது ஒரு வேட்டியும் மேல்துண்டும் கொண்டுசென்றால் நல்லது.
ஜெயக்குமார்
***