ஆழமற்ற நதி கடிதங்கள்

child

ஆழமற்ற நதி [சிறுகதை]

அன்பின் ஜெ,

வணக்கம்.ஆழமற்ற நதி ‘ வாசித்து இத்தனை நாட்களான பிறகும் மனதிற்குள் நதி பெருகுகிறது.

ஏன் எதற்கென காரணங்களற்றது தான் எல்லாமும். எதற்காக “கதிர் உருவாகி தகப்பனுக்கு இதனைச் செய்ய வேண்டும்?அத்தனை பணமும் அதிகாரமும் கொண்ட குடும்பத்தில் ஏன் இது நிகழ வேணெடும்? இச்சிறுகதையைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள்.ஆனாலும் ஒரு வார்த்தையாவது எழுதிவிடத் தோன்றுகிறது.

கதிரின் அப்பா குடித்துக்கொண்டே இருந்தது எதனால்?கதிரைப்போன்ற special child அவருக்கு இருந்ததால் என்பதும் அதன் காரணமாக இருக்கலாம்.அவனை அவுட் அவுசில் போட்டு வைத்திருந்தாலும்,எல்லோர் மனதிலும் அவன் உறுத்தியபடியே தான் இருந்திருப்பான்.அந்த உணர்வை என்ன செய்துவிட முடியும்? இம்மாதிரி சிறப்புக் குழந்தைகள் உள்ள நிறைய வீடுகளில் உள்ளவர்கள் அப்படி இருப்பதை நாம் அனைவருமே பார்த்திருப்போம்.நலிவுற்ற குழந்தைகளின் தகப்பன்கள் பெரும்பான்மை குடிகாரர்களாகத் தான் இருப்பார்கள்.பணக்காரக் குடும்பங்களில் குழந்தையை ஷெட்டில் விட்டு ஆயா வைத்திருக்கிறார்கள்.நடுத்தர குடும்பமெனில் தாய் மட்டுமே அக்குழந்தையுடன் போராடிக் கொண்டிருப்பாள்.அப்பாக்களின் ஈகோ எங்கோ இடிக்கிறது என்றே நான் நிறைய நேரங்களில் எண்ணியிருக்கிறேன்.இப்படிப்பட்ட சிறப்பு குழந்தைகளுக்கு ஆசிரியையாக நான் இருந்திருப்பதால் பெற்றோருடன் நேரடி அனுபவங்களில் இதைப் பார்த்திருக்கிறேன்.

ஆறு வயது பையன் ஒருவன் இக்கதையில் உள்ள கதிரைப்போன்று இருக்கிறான்..அம்மாவுக்கு கணக்கற்ற சொத்து.அப்பா மென்பொருள் துறையில் லட்சங்களில் சம்பாதிக்கிறார்.ஒவ்வொரு மாதமும் பெங்களூரிலிருந்து வேலூருக்கு அக்குழத்தைக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களிடம் நான் கண்டது இதைத்தான்.அந்த பையனின் அப்பா அவனைப்பற்றி யாரிடமும் பேசக்கூட விரும்புவதில்லை. .பணத்தை எல்லா விதத்திலும் செலவழிக்கிறார்.மனைவியின் பக்தி கூட அவருக்கு பிடிக்கவில்லை.மொதத்தில் அக்குழந்தை விரைவில் இறந்துவிட மாட்டானா என்று மட்டும் தான் அந்த தகப்பன் நேரடியாக் கேட்கவில்லை.அவனை பெரும் அவமானமாகவே இச்சமூகத்தின் முன்பாக நினைக்கிறார்.    முப்பதுக்குள் தான் அவருக்கு வயது.பெரும் குடிகாரராக இருக்கிறார்.அது மட்டும் தான் தன்னை சமன் செய்வதாக எண்ணுகிறார்.

இத்தகைய குழந்தைகள் பெரும்பான்மை அப்பாக்களுக்கு பாரமாகவே இருக்கிறார்கள். ஒப்பிட்டுப் பார்க்கையில் அம்மாக்களுக்கு மனதின் எங்கோ ஒரு பகுதியில் தன் பிள்ளை நன்றாகி விடும் என்ற சிறு நம்பிக்கை உண்டு.ஆனால் அப்பாக்கள் எதற்காக எனக்கு இப்படிப்பட்ட பிள்ளை என்று சமூகத்திடமும்,குடும்பத்திலும் கோபங்களைக் காண்பித்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

இந்த காரணத்தினால் கூட கதிரின் அப்பா குடித்து கோமாவில் இருந்திருக்கலாம்.கதிருக்கு தன் அப்பாவின் மரணம் தெரிந்திருக்குமா?  அந்த இரத்தப்பழி தன் கைகளில் படிந்திருப்பதை அவன் அறிவானா?

தெரிந்தாலும்,தெரியாவிட்டாலும் அவன் அழுகை மட்டும் நிஜம்.அவன் மனதையே நான் ஆழமற்ற நதியாக எண்ணுகிறேன். ஆழமில்லாவிடினும் அது நதி தான்.பொங்கிப் பெருகி நுரைத்து சுழித்து பிரவகித்து செல்லாவிடினும் அதுவும் நதி தான்.ஒவ்வொரு துளியும் கடல்தான் என்பது போலத்தான் அவன் தன் நிலையை,அப்பாவை,அன்னையை குடும்பத்தை முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக இருந்தாலும்,அவன் அறிந்த ஏதோ ஒரு புள்ளியில்  அந்த பிணைப்பு அவனை அழ வைக்கிறது

எதற்காக இவையெல்லாம் நடக்கின்றன ?அதை யாரும் அறிந்து கொள்ள முடிவதில்லை.

இப்படிப்பட்ட பரிகாரங்கள் அவர்களை குற்ற உணர்விலிருந்து விடுவிக்குமா?பெரும்பாலும் விடுபட்டு விடுகிறார்கள்.எதற்கும் முடிவு வேண்டும் தானே.

நதியுடன் இணைந்த நினைவுகளுடன் இந்நாட்கள் செல்கின்றன.

நன்றி

மோனிகா.

***

அன்புள்ள மோனிகா

பிறழ்வுகள் உள்ள குழந்தையை கையாள்வது எவருக்கானாலும் கடினமானதே. அதை பிறர் எளிதில் ஆலோசனை சொல்லி மாற்றமுடியாது. அந்தத்தருணத்தில் அந்த மனிதர்களின் மனநிலையைச் சார்ந்தது. நம்மால் முடிவது நம் சூழலின் பார்வையை எவ்வகையேனும் மேலும் கருணைகொண்டதாக ஆக்கிக்கொள்வது மட்டுமே

ஜெ

***

பெருமதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.

ஆழமற்ற நதி சிறுகதையை இன்று காலை வாசித்தேன். தொடர்ந்து அதைப்பற்றிய சிந்தனைகள் இன்று முழுக்க. நீளமான கடிதத்துக்கு மன்னிக்கவும் – நேரமிருந்தால் மட்டும் வாசித்து தங்கள் எண்ணங்களைப்பகிரவும்.

உங்கள் கதைகள் தரும் இத்தகைய திறப்புகளே – தொடர் சிந்தனைகளே – உங்களை மேலும் மேலும் நாடிவரச்செயகிறது. நீங்கள் எல்லாருக்கும்தான் எழுதுகிறீர்கள். ஆனால் படிக்கும்போது ஒவ்வொருவரும் தனிதத்தனி. உள்ளத்துக்குள் நுழைந்து அதை உடைத்துவிட்டு, மோதி மோதி விளையாட விட்டுவிடுகிறீர்கள். அது ஏதேதோ எண்ணங்களாக வெளிப்படும்போது வரும் சிந்தனைகளை யாரிடம் பொய்சொல்ல. யாருக்குப் புரியும்? அதனால்தான் உங்களுக்கே எழுதுகிறேன்.

ஆழமற்ற நதி வாசித்தபோது கதிரைக்கட்டிலும், ஜிஸ்டிஸ் காசிநாதனின் உள்ளதோடு நான் மிகவும் பொருந்திப்போகிறேன். என்ன செய்துவிடமுடியும் அந்த நபர் பாவம் அவர். அவர் இடத்தில நான் இருந்தாலும் அதையே செய்திருப்பேன், அவரைப்போலவே பின்னரும் வருந்திக்கொண்டே இருப்பேன். இயல்பிலேயே நாம் பழிகளுக்கு அஞ்சுகிறோம். அதை துடைக்க வழிகளைத் தேடுகிறோம் – உண்மை கசப்பாக இருந்தால் பொய்களைச்சென்று சரணடைகிறோம். அது நம் தேவை. பிறரை ஏமாற்றுவது அல்ல பெரும்பாலும் நம்மையே ஏமாற்றிக்கொள்ளும் முயற்சிகள்தான்.   நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள முடியும்தான், அது நமக்கு தெரியும்வரை.  ஏமாற்றுவதை  நம் உள்ளம் தெரிந்துகொள்ளும்போது ஒரு நடுக்கம்  வந்துவிடுகிறது. இன்னும் கொஞ்சம் smart ஆக முயன்று வேறொருவகையில் நாம் ஏமாற்றிக்கொள்ளவேண்டும்.

கதிர் மீது பொறுப்பைக்கொடுத்து காசிநாதன் செய்துகொண்டது அத்தகைய ஏமாற்றைத்தான். அது அவருக்குத் தேவை. ஆனால் கதிர் அழுது, அதை காசிநாதன் பார்த்து நடுக்கமடைந்த கணத்தில் கதை முடிகிறது – மிக மிக momentary தருணம். இதற்குமேல் காசிநாதன் என்ன செய்வார் என்பது சிந்தனைக்குரியது.

என்வரையில் அவர் இந்த நடுக்கத்தில் இருந்து மீள சிலநாட்களாகும்.  கதிர் இருந்ததால், வசதியாக இறக்கிவைக்கப்பட்டிருந்த குற்ற உணர்வு  மீண்டும் காசிநாதன் மீது ஏறிக்கொள்ளும் – அனால் கொஞ்சநாளிலேயே அவர் அதிலிருந்து விடுபட வேறேதாவது பாவனையைக் கண்டடைவார். பொய்யாகவேனும். அதன் பின் இந்த கனம் கடந்துவிடும். அந்த நடுக்கத்தருணம் மட்டும் ஆழ்மனதில் போய் உட்கார்ந்துகொள்ளும் எப்போதாவது அந்த எண்ணம் அவரை அலைக்கழிக்கலாம். அனால் பெரும்பாலும் இயல்புவாழ்க்கையே.

காசிநாதனுக்கு மட்டுமல்ல – அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். குடும்பத்தலைவர் என்பதால் காசித்னாதனுக்கு கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் அவ்வளவே.

**********************************************

என் சொந்த அனுபவம் சார்ந்தே இதை அவதானிக்கிறேன் –

என் தாயார் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இறக்கும்போது அவளுக்கு  அறுபது  வயது. இந்த கால சராசரிப்படி கொஞ்சம் சீக்கிரம்தான். அவள் இறந்ததைப்பற்றி சொல்லும் முன்னால் அவளைப்பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும்.

என் அம்மா மிகவும் குள்ளமானவள் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவள். SSLC தான் படுத்திருந்தாள் அதுவும் தமிழ் வழியில். எனக்கு முந்திய தலைமுறைக்காரிதான் என்றாலும் இன்னும் ஒரு தலைமுறை முன்னால் வாழ்பவர்கள் போன்ற குணங்களைக் கொண்டவள். வாழ்ந்த அறுபது ஆண்டுகளில் பெரும்பகுதி சமையலறையிலேயே கழித்துவிட்டவள்.  நான் வளர்த்தந்து கூட்டுக்கும்பத்தில். எங்கள் தாத்தா பாட்டி இருந்தவீட்டில் (அவர்கள் இருந்தபோதும் சில வருடங்களுக்கு அவர்கள் இறந்தபின்னும் கூட) அப்பா, அம்மா நான், என் தங்கை தவிர என் இரண்டு சித்தப்பாக்கள் குடும்பங்களும் இணைந்தே ஒரு வீட்டிலியேயே இருந்தோம். என் அம்மாவின் வாழ்வு பெருமளவு கழிந்தது அந்த  வீட்டில்தான். என் அம்மா எல்லோருக்கும் அன்பானவள், அன்பு மட்டுமே காட்டத்தெரிந்தவள். யாரையும் அதிர்த்துகூட ஒரு வார்த்தைக்கூறியதில்லை. வீட்டு வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வாள். யாரிடமும் ஒரு பணியும் சொல்லமாட்டாள், என்னிடம் கூட.  அம்மா இருந்தவரை எங்கள் வீட்டில் வேலைக்காரிகூட கிடையாது  எங்கள் எல்லோருக்கும் உழைப்பதற்காகவே பிறவி எடுத்தவள்போல் வாழ்ந்தவள்.

ஆனால் அவளுக்கு இன்னொரு முகமும் உண்டு. குழந்தைத்தனமானவள் மட்டுமல்ல குழந்தைப்போன்ற தேடலும் கொண்டவள். பெரிய இலக்கியம் எல்லாம் வாசித்து அறிந்தவள் அல்ல ஆனால் வணிக கதைகளை ஆர்வமாக படிப்பவன்.விகடன் , குமுதம், கல்கி போன்ற வாரப்பத்திரிக்கைகளில் வரும் கதைகளை கிழித்து தனியே எடுத்து வைத்திருப்பாள் (bind செய்வதற்கு என்பாள் அனால் செய்வதில்லை) – கல்கி, சாண்டில்யன் தொடங்கி  – சுஜாதா, இந்திரா சௌந்தர்ராஜன், ரமணிச்சந்திரன், பாலகுமாரன், ராஜேஷ்குமார் வரை வாசித்துத் தள்ளிவிடுவாள் (literally)  – அனால் நினைவில் ஒன்றும் தங்கியிருக்காது.  பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களை ஒரே நாளில் வாசித்து முடித்ததெல்லாம் உண்டு. என் தம்பி  (சித்தப்பா மகன்) அவளுக்கு எந்திரன் என்று பெயர் வைத்தான்  (எந்திரன் ரஜினி போல அதிவேகமாக வாசித்துத்தள்ளுவதால்).

அதேபோல பயங்களுக்கும் ஒரு குழந்தைபோல எப்போதும் ஆவலோடே இருப்பாள்  – எங்கு செல்வதென்றாலும் ஜன்னலோர இருக்கை வேண்டும் என்று அடம் பிடிப்பாள். வேடிக்கை பார்த்துக்கொண்டே வர. வெளியே உணவு உண்பதென்றால் அலாதிப் பிரியம். சிறு சிறு விஷயங்களைக்கூட ரசித்து வாழ்ந்தவள். நான் பணிக்குச் சேர்ந்தபின்னல் ஒருமுறை ஜப்பான் அழைத்துச் சென்றேன் – தன பயண அனுபவங்களை கட்டுரையாக எழுதி வைத்துக்கொண்டாள். அதை வாசித்துப்பார்த்தால் சென்ற இடங்களின் பெயர்களோ தேதிகளோ எதுவும் இருக்காது. அவை அவளுக்கு ஒரு பொருட்டே அல்ல. சின்ன சின்ன விஷயங்களை பெரிதாக விவரித்திருப்பாள், உதாரணத்திக்கிற்கு விமானத்தில் பார்த்த ஜன்னல் வழி வானம்,  அங்கு பரிமாறப்பட்ட உணவு, விமான பணிப்பெண்   பேசிய ஆங்கிலம், ஜப்பானிய ஷிண்டோ – புத்த கோயில்களில் குத்தப்பட்டிருக்கும் ஊதுவத்திகள்  இவைதான் அவளுக்கு முக்கியம். இறுதி வருடங்களில் பெரும்பாலும் தொலைக்காட்சி தொடரகளிலேயே மூழ்கிப்போனாள்   (வணிக இலக்கியங்களின் நேரடி தொடர்ச்சி என்று இப்போது எண்ணிக்கொள்கிறேன்) தொலைக்காட்சி தொடர்கள் வந்தபின் அவள் நூல்களைக் குறைத்துக்கொண்டாள்.

அவளுக்கு கொஞ்சம் நரம்புத்தளர்ச்சி உண்டு. திடீர் என வலிப்பு வந்துவிடும். வந்தால் ஒருமணி நேரம் படுத்துவிடுவாள். ஆனால் மீண்டும் சட்டென எழுந்து பணியைத் தொடர்வாள். ஒவ்வொரு கணமும் அந்த கணத்தில் மட்டுமே வாழ்ந்தவள்.

இதையெல்லாம் ஏன் உங்களுக்கு எழுதுகிறேன் என்றால் – இதைக்கொண்டு என் அம்மாவின் வாழ்வு அவளுக்கு நிறைவானதா இல்லையா என்று என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. அதனாலேயே ஓரிரு வரிகளில் விளக்கிவிடவும் முடியவில்லை. அவள் வாழ்வுமுழுக்க எங்களுக்காக உழைத்து கஷ்டப்பட்டவள், இறப்பு அவளுக்கு ஒய்வு என்று ஒருகணம் தோன்றும். மறுகணம் யோசித்தால் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்ந்தவள் வாழ்க்கை இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாமோ என்றும் தோன்றும்.

இப்போதும் அவள் உயிரோடு இருந்தால் எங்களுக்காக வீட்டில் உழைத்துக்கொட்டிக்கொண்டிருப்பாள். அதே நேரம் கிடைக்கும் இடைவெளியில் தன ரசனைகளும் மகிழிந்துகொண்டிருப்பாள். இன்று இரண்டுமே இல்லை.

இப்படிப்பட்ட என் அம்மா இறந்தது திடீர் என வந்த மாரடைப்பால். என் தோளின்மேல் சாய்ந்துகொண்டு. ஒரே நொடி, இன்னும் குறைவாகவும் இருக்கலாம். காரில் பின்சீட்டில் நானும் அவளும் அருகில் அமர்ந்திருந்தபோது. என் காதுகளுக்கு மிகஅருகில் அவள் முகம், மூச்சு சத்தம் இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்த காற்றின் அதிர்வு, அது சட்டென நின்ற கணநேரத்தில் அவள் என் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தாள். அந்த மூச்சொலி நின்ற அந்த ஒரு நொடியை இப்போதும் எண்ணிக்கொள்கிறேன்.

நெஞ்சுவலி என்று அருகில் இருந்த சிறு கிளினிக்குக்கு அழைத்துச்சென்றபோதோ. அங்கிருந்து யாரோ முகம்தெரியாத ஒரு புதுமணத்தம்பதியர் எங்களை தங்கள் காரில் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போதோ, ஒரு நொடியும் எண்ணியதில்லை அவள் எங்களைவிட்டு, என்னருகே அவள் உடல் மட்டும் விட்டுவிட்டு போய்விடுவாள் என்று. அவளுக்கும் என்மீது நம்பிக்கை அதிகம். நான் பெரிய ஆளாய் வருவேன் என்று, ஏதாவது சாதிப்பேன் என்று. நெஞ்சுவலி வந்த அன்றும் என்னை நம்பித்தான் இருப்பாள், எப்படியாவது அவளைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்துச்சென்றுவிடுவேன் என்று. நான்தான் ஏமாற்றிவிட்டேனோ என்று கூட தோன்றும். என்ன செய்துவிட்டிருக்கமுடியும் நான்.

அம்மா இறந்ததாளன்று, நான் எண்ணிக்கொண்டது – அவள் ஓய்வெடுக்கட்டும்.   வீட்டுக்கு உள்ளேயே  உழைத்து உழைத்து களைத்தவளுக்கு இதற்கு மேல் என்ன விடுதலை கிடைத்துவிடும் என்று. அன்று நான் அழவில்லை வருந்தவும் இல்லை, அம்மா இறந்ததை துக்கமாக என்னவும் இல்லை – இரண்டு நாட்கள் கழித்து எங்கள் வீட்டுக்கு “துக்கம்” விசாரிக்க வந்த ஒரு தூரத்து உறவினர் என்னைப்பார்த்து “தாயில்லா பிள்ளையாய் போய்டேயேடா!” என்று (வருந்தியோ அல்லது ரசித்தோ) சொன்னபோதுவரை. அப்போது வந்ததது ஒரு சோகம், எனக்கு தாய் இனி இல்லையே என்ற சோகம். அன்று முழுக்க வருத்தத்தோடு படுத்து தூங்கிவிட்டேன்.

மீண்டும் அடுத்தநாள் தோன்றியது – எதற்காக வருந்துகிறேன். ஏன் வருந்துகிறேன்? – என் அம்மா இறந்ததர்காக அல்ல. அவகுக்காக அல்ல . எனக்கு அம்மா இல்லை என்பதற்க்காக. எபாசாங்கு ன்ன ஒரு சுயநலம். சட்டென ஒரு எண்ணம் விழித்துக்கொண்டது. இந்த சுயநலம் தான் என் அடிப்படை இயல்பு என்றால் (எல்லோருக்கும் அப்படித்தானா?), அன்பு பாசம் எல்லாம் இந்த சுயநலத்தைப் பேணிக்கொள்ள நான் செய்துகொள்ளும் முயற்சிகள்தான் எனும்போது வாழ்க்கையில் எதைத்தான் கண்டு வருந்தவேண்டும்.  ஒரு நிகழ்வால் நம் அன்றாட நலம் பாதிக்கப்படுமென்றால் வருந்துகிரோம், பதறுகிறோம், ஐயோ போச்சே என்கிறோம்  – கொஞ்சநாள் போனால் வேறு சுகங்களைத்தேடி, நலன்களைத்தேடி சென்றுவிடுகிறோம். நெருங்கியவர்களின் இறப்பின்போதே இது அப்பட்டமாக தெரிகிறது.

இரண்டுவகை எண்ணங்கள் எழும் – ஒன்று  நாம் அவரை இழந்துவிட்டோமே என்னும் எண்ணம் – இது கொஞ்சநாள் இருக்கும். பிறகு அகன்றுவிடும். அவர்கள் இல்லாமலும் நம் வாழ்க்கை செல்லும் என்ற உண்மை மெல்ல மெல்ல தெரியும்போது.

இன்னொன்று காப்பாற்றாமல் விட்டுவிட்டது நம் குற்றம் (இதை யாரவது நம்மைப்பற்றி சொல்லக்கூடும்) என்ற எண்ணம் அதனினும் கொடியது – அதில் நம்மைப்பற்றிய மற்றவரின் மதிப்பீடுகள் பாதிக்கப்படக்கூடும்

என்னும் கூறு இருப்பதால், நம் மனம் இரு மடங்கு மூர்க்கமாக அதை எதிர்க்கிறது – அதை மறைக்க எதையாவது தேடி கண்டடைந்துவிடுகிறது. அப்படிசெய்தால்தான் நாம் அதில் இருந்து விடுபடமுடியும் பொய்யாகவேனும்.

“என்ன விட்டுட்டு போய்டேயே” என்பது போன்ற அழுகைகளையும், “என் கனவுல தெனம் தெனம் வர்றாரு” என்பது போன்ற பாவனளையும் – மனித மனம் செய்த்க்கொள்ளும் ஒருவித பாசாங்கு என்றே எண்ணச்செயகிறது.

**********************************************

மீண்டும் கதையைப்பற்றி.  மய்யக்கருத்தை தாண்டி என்னை சிந்திக்கச்செய்தவை –

“எல்லோரைப்போலவும்தான் அவரும் என்றாலும் கண்டபடி அலைந்து கைநீட்டமாட்டார்” – இந்த விவரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு நீதிபதி என்ற கதாபாத்திரத்தை அதைத்தாண்டி நல்லதாகவோ கெட்டதாகவோ  சிந்திக்கவைக்காமல் (வாசகர் எந்த நிலை எடுத்தாலும் கதையின் மெய்யொட்டதை அது பாதித்துவிடலாம்) ஆனால் அழகாக அந்த பாத்திரத்தைப்பற்றி சொல்லிச் சென்றுவிட்டீர்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

பாராதபுழா நதியைப்பற்றி நான் இந்தக்கதைக்குப் பின்னாலேயே தேடி தேடிந்துகொண்டேன். அதன் ஆழமற்ற தன்மை (அதை குறியீடு ஆக்குவதில் நீங்கள் வல்லவர்தான் என்று தெரியும் – so ஆசிரியமில்லை) – இந்த கதைமாந்தர்களுக்கு பலவகையில் பொருள்தரலாம். என் வரையில் அதை இப்படி எடுத்துக்கொள்கிறேன்.  அது ஆழமற்றது ஆனால் கண்டது, ஓடிக்கொண்டே இருப்பது – அதில் நடக்கும் பரிகாலச்சடங்குகள் அதிலேயே கலக்கின்றன. பாவங்களை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் அதை ஏற்று அந்த நதி அதை ஆழத்தில் மூழ்கடித்துகொண்டிவிடவில்லை. மாறாக தள்ளிக்கொண்டு போய்விடுகிறது. விட்டுவிட்டு முன்னே செல் என்று சொல்லாமல் சொல்கிறது.

கேரளச்சடங்குகளை நான் அதிகம் பார்த்ததில்லை. ஒரே ஒருமுறை என் மாமா ஒருவர் அவர் வியாபாரப் போட்டிகளை (எதிர்கொள்ளவா  இல்லை அழித்திவிடவா என்று தெரியவில்லை) சரிசெய்ய பாலக்காடு அருகே பள்ளசானா என்ற ஊரில் செய்த சடங்கை சிறுவனாக இருக்கும்போது பார்த்திருக்கிறேன். பார்க்க கொஞ்சம் மிரட்சியாக இருக்கும், ஆனால் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டால் மிகவும் சிரத்தையாக செய்யப்படும். அதைக்கொஞ்சம் தொட்டு காட்டியிருந்தீர்கள்.

அதர்வவேத சடங்கு நடக்கும் இடமாக கயாவையும் குறித்திருந்தீர்கள் – கயாவுக்கு நான் போனதில்லை. ஆனால் என் மாமா (மேலே சொன்ன அதே மாமா) அங்கும் போய்வருத்திருக்கிறார். மூத்தோர் கடன் செய்ய. அவர் சொல்லி கேள்விப்பட்டது, அங்கிருக்கும் பால்குன நதியும் ஆழமற்றதுதான் என்று.வெறும் மணல்திட்டுகளாக இருக்கும் என்று. இதற்கும், பாரதப்புழாவுக்கும் ஆழமற்ற தன்மையில் என்ன ஒரு பொருத்தம் என்று எண்ணிக்கொண்டேன்.

இந்த மாமாவைக்குறிக்க காரணம். அவரும் காசிநாதனைப்போலத்தான் – பெரிய குடும்பத்தின் தலைவர். வசதியானவர். நீதிபதியல்ல – வியாபாரி. ஆனால் அவர் புழங்கும் வட்டத்தில் அதிகாரம் மிக்கவர். பெரும் முடிவுகள் எடுக்கும் பொறுப்பிலிருப்பவர். அவர் சடங்குகளின் மீது கொண்ட பற்று (கேரள சடங்குகளாலோ, கயாவோ) தற்செயலல்ல என்று இப்போது தோன்றுகிறது. உள்ளத்தின் பெரும் சுமைகளை சடங்குகள் நீக்குகின்றன.

நதிகள் ஆழமற்றிருந்தாலும் – உண்மையில் அதுதானா என்ன? ஆழமற்ற தன்மை என்று நாம் எண்ணுவது அதன் நீருக்கடியில் சேர்த்திருக்கும் மன்பரப்பை/மணல் பரப்பை  பார்த்து அல்லவோ? ஆனால் உண்மையில் நதியோடும் நிலத்தில் நிலத்தடிநீர் இன்னும் ஆழத்தில் எத்தனையோ தூரம் வரை இருக்கலாம். மணல் மூடியதால் அல்லவோ அதன் ஆழம் நமக்கு தெரியவில்லை. பெரும் பொறுப்பைச் சுமப்பவர்கள் கூட இந்த நதியைப்போலத்தான். அவர்கள் பொறுப்புகளே உள்ளத்தில் மணல்போல படிந்து அவர்களை ஆழமற்றவர்களாக்குகிறது. அதன்பொருட்டே அவர்கள் ஓடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. ஆனால் அவர்கள் உள்ளத்தின் ஆழம் என்பது மணல்மூடிய நதியைப்போல (அதன் நிலத்தடி நீரைப்போல) உள்ளதுதான், மிகவும் இருண்டுபோய். அதனாலேயே அச்சம் தருவது.

கதிர் கதாபாத்திரம் படிப்பவர்களுக்கு ஒரு சிம்பதியைத் தரலாம். கதைசொல்லியின் பார்வையிலும், கார் ஓட்டுனர்களின் பார்வையிலும் அதுவே இருந்தது. அதுவே பொது எண்ணமாகவும் இருக்கும். ஆனால் எனக்கு அந்த கதாபாத்திரம் ஒரு கருவியாக மட்டுமே ஏனோ தோன்றுகிறது. பிற குடும்ப உறுப்பினர்களின் குற்ற உணர்வுகளை இறக்கிவைக்கும் கருவி. அதுவும் இறுதியில் பயனற்று போகிறது – கதிர் அழுதபோது.

கதிர் அழுகை முழுக்க தற்செயலானதாக இருக்கலாம் – ஒன்றுமே தெரியாதவனனின் அழுகைக்கு மட்டும் என்ன அர்த்தம் இருந்துவிடும். ஆனால் அவன் குடும்ப உரவுகளோ அல்லது பிறரோ அதை அப்படி புரிந்துகொள்ளப்போவதில்லை. அப்படி அவர்களால் புரிந்துகொள்ளவும் முடியாது.ஏன் என்றால் அவர்கள் கதிரை பார்ப்பது தங்கள் குற்ற உணர்வுள்ள மனங்களோடு. அந்த கணமும் முக்கியம். அந்த கணம் அவர்களை வேறு எந்தவகையிலும் சிந்திக்க விடாது.

காசிநாதன தவிர பிற குடும்ப உறுப்பினர்களின் சித்தரிப்பு மிக மிக இயல்பாக ரசனையாக வந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். இறந்தவரின் மனைவி மற்றும் மகள் மட்டும் கொஞ்சம் சோகமாக (ஆனால அதை மறைத்துக்கொள்பவர்களாக) அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் – பெண்கள் அப்படிதான் இருப்பார்கள்.

பிற குடும்ப உறவுகளுக்கு இறப்பில் பெரிய துக்கமில்லை (இறந்தவரின் மூத்த மகனுக்கு கூட ) குற்ற உணர்வு மட்டும் கொஞ்சமாக இருக்கலாம்.

ஆறுமுகத்தின் மனைவி இதில் முழுக்க அந்நியமானவள்தான், அவள் அப்படித்தான் இருக்க முடியும். அவளின் “ஐஸ் த வாட்டர் சோ டர்ட்டி?” போன்ற கேள்விகள் அதை மிக மிக அழகாக காட்டுகிறது – நான் மிகவும் ரசித்தது இந்த கதாபாத்திரச் சித்தரிப்பையே. அவளுக்கும் இந்த சடங்குக்கும் பெரிய  சம்பந்தம் இல்லை. ஒரே குடும்பம் என்பதால் வந்திருப்பாள். அவளுக்கு மாற்று கருத்துக்கள் கூட இருக்கலாம். ஆனால் அங்கே நாகரீகம் கருதி பேசமுடியாது. அதுவே நீரின் சுத்தத்தன்மை போன்ற பொதுவான விஷயங்களைப் பற்றி பேசவைக்கிறது. ஆறுமுகம் அவளை கொஞ்சம் அந்த இடத்தில ignore செய்வதும் அதன் பொருட்டே. நம் வாழ்க்கையில் அனுதினமும் இயல்பாக நடக்கும் இத்தகைய நூறு விஷயங்களைக் கடந்துபோகிறோம். எப்படி ஐயா இவ்வளவு ஆழமான கதைக்களத்திலும், இத்தனை இயல்பாக  சிந்திக்கிறீர்கள்.

மொத்தத்தில் இந்தக்கதை என்னை  மிக மிக அலைக்கழிக்கிறது என்பதில் ஐயமில்லை.

**********************************************

ஆனால்  ஒன்றே ஒன்று குறிப்பிடவேண்டும் என்று எண்ணுகிறேன் –

அந்த டிரைவர் பேசும் “அது வாசல் ஜன்னல் எதுவும்  இல்லம ஆறு பக்கமும் மூடின  வீடு மாதிரி சார் …..” இந்த வசனம் கண்டிப்பாக பரவலாக கவனிக்கப்படும் என்று எண்ணுகிறேன். ஆனால் எனக்குத் தோன்றியது அது எப்படி ஒரு டிரைவர் போன்ற சாமானிய கதாபாத்திரம் இத்தனை தத்த்துவர்த்தமாக திடீர் என்று பேசிவிடுகிறது என்று.

இந்த கதையில் என்று இல்லை – நான் முன்னால் படித்த முடிவின்மைக்கு அப்பால் கதையில் கூட – கதை சொல்லி ஒரு கலைப்பொருள் விற்பனையாளன்தான் ஆனால் போகிற போக்கில் அவன் – ” ஒவ்வொருவருக்கும்  ஒரு பகுத்தறிவு தர்க்க எல்லை உள்ளது ……” போன்ற “மலைவாதை அப்பச்சிக்கு உங்க இயேசு என்ன உறவு?…..அவள் சிரிக்கவில்லை இந்த கேள்வி அவள் சிறு மூளைக்கு அப்பாற்பட்டது” போன்ற வரிகளை அவன் (கதைசொல்லி) உதிர்த்துச்செல்வதை காணமுடியும்.

வேறு சில கதைகளிலும் (அறம் தொகுதியில் சில, அறிவியல் கதைகளில் சில ) இது போல சாமானிய பாத்திரங்கள் சட்டென்று தத்துவார்த்தமான வசனம் பேசும் இடங்களைப் பார்த்திருக்கிறேன். வெண்முரசில் கூட பல இடங்களில் சூத பெண்கள் கூட போகிற போக்கில் தத்துவார்த்தமாக பேசிவிடுவார்கள்.

உங்கள் கதைகளில் வரும் சில கதாபாத்திரங்கள் உங்கள் அளவுக்கே சுமார் smart ஆகிவிடுகிறார்கள் – திடீர் என்று.  பின்பு இயல்பான நிலைக்கு திரும்பிவிடுவார்கள்.

அனால் இத்தகைய இயல்பு மீறிய வசனங்கள் அந்த கதாபாத்திர பாவனைக்கு நியாயம் செயகின்றனவா?  சில நேரம் கதாபாத்திரங்களையும் மீறி ஜெயமோகன் என்ற  அறிவுச்சுடர் வெளித்தெரிந்துவிடுகிறதா?

ஒருவேளை வாசகர்களாகிய எங்கள் மீது உங்களுக்கு உள்ள அவநம்பிக்கையா? இதை எல்லாம் இவர்கள் கதையைக்கொண்டு தாங்களாக உணர மாட்டார்கள். நாமே நேராக சொல்லிவிடுவோம் என்ற   எண்ணமா?

இது  உங்கள் style என்று எடுத்துக்கொள்வேன். ஆனாலும் நீங்கள் கறாரான இலக்கிய விமர்சகரும் ஆதலால் உங்களிடம் கேட்டுத்தான் பார்ப்போமே என்றுதான் கேட்கிறேன். தவறாக எண்ணிக்கொள்ள மாடீர்கள் என்று எண்ணுகிறேன்

பணிவுடன்,

கணேஷ்

***

அன்புள்ள கணேஷ்,

உங்கள் கடிதம் படித்தேன். அதிலிருப்பது நேரடியான வாழ்க்கையின் ஒரு பதிவு. அது ஆழமற்ற நதி கதையால் தூண்டப்பட்டுள்ளது. உண்மையில் நாம் அனைவருமே வாழ்க்கையின் முடிவில்லா சாத்தியங்களால் சூழப்பட்டுள்ளோம். என்ன நிகழ்கிறதென்று நம்மால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. பலவகையான ‘பரிகாரங்கள்’ வழியாகவே நாம் வாழ்கிறோம். ஆகவே அவை பிழை அல்ல. உயிர்வாழ்தலுக்கான வழிகள். ஆனால் அவற்றில் பிறரைச் சுரண்டுவது அமைகையிலேயே பிழையும் பாவமும் ஆகிறது. ஆனால் இன்னொரு நோக்கில் அதையும் தடுத்துவிடமுடியாது. நாம் நம் குழந்தைகளின் உள்ளத்தில் எதைச் செலுத்துகிறோம் என நமக்கு எப்படி முழுமையாகத்தெரியும்?

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 23
அடுத்த கட்டுரைகுழந்தையிலக்கிய அட்டவணை