iravu-jayamohan-tamiini-14127

​அன்புடன் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

“ஒரு சாமனியனின் வாழ்க்கையில் உக்கிரமான தருணங்களென்று அவன் சொல்வதெல்ல்லாமேஇந்த ஆழத்திற்கு அவன் வந்து மீண்டதைத்தான்” – இரவு நாவலில்…..

இடைவெளியின்றிப் படித்தேன். சில தினங்களுக்கு என் மீது கவிந்திருந்த இரவை ஒரு இனியஅனுபவமாக கடந்துசென்றேன்.  என் இருபதுகளில் இரவு வாழ்க்கையின்  துலக்கத்தைஉணரத்தொடங்கியிருக்கிறேன்.  ஆழத்திற்குப் போனேனோ இல்லையோ தெரியாது ஆனால்அவை உக்கிரமென்றில்லாவிட்டாலும் உன்னதமான தருணங்கள். வருடங்கள் கடந்தஇடைவெளிக்குப் பிறகு ‘இரவை’ப் படித்தபோது அத்தருணங்களை மீட்டெடுக்க முடிந்தது. கடற்கரையில் (அப்போதெல்லாம் காவல்துறை கெடுபிடி அவ்வளவாகக் கிடையாது) பின்னிரவுவரை வெறும் அலையோசையைக்கேட்டவாறே கழித்திருக்கிறேன்.  கொஞ்ச நேரத்திலேயேஅதன் தாளம் மனதைக்கட்டிவிடும்.  திரும்பத்திரும்ப வரும் அலைகள் ஒன்றுபோலிருந்தாலும்ஒன்றாக இருக்காத ஒரு அலுக்காத அதிசயம் அது. இரவில் தெருக்களின் அழகைக் கவனித்ததும்அப்போதுதான்.  பின்னிரவுகளில் நிரந்தர சிவப்புப் புள்ளிகள் ஒளிர நீண்ட கரும்இருப்புப்பாதைகளை  தூரத்தில் தெரியும் கல்லறையும் அதன் மேல் நிழல் கோடுகளாகசிலுவையும் பார்த்தபடி கடந்ததுண்டு.

இக்கதையைப் படித்ததும்,  நீலக் கணையாழியின் அட்டையில் உங்கள்  டார்த்தீனியம் ஞாபகம்வந்தது.  அக்கதையின் நீட்சியென இதை உணர்ந்தது என் மனது.  மொட்டைமாடியில் மேசைவிளக்குக்கென இணைப்பைக் கொடுத்து இரவில் புத்தகம் படிக்கும் பழக்கமொன்று எனக்குஇருந்தது.  உங்களின் டார்த்தீனியம் படித்ததும் அப்படித்தான்.  கொஞ்ச நேரத்திலேயே விளக்குவெளிச்சத்தின் விளிம்பிற்கப்பால் இருட்டில் ஆடும் மர இலைகளின் உலோகக்  கரும்பச்சைஒருவித பயங்கலந்த வசீகரத்தை அளித்தது நிஜம்.  அந்தக் கதை எனக்களித்த அனுபவத்தைஅதற்கு முன் நான் எந்தப்புத்தகத்தின் மூலமாகவும் பெற்றதில்லை.  இத்தனை வருடஇடைவெளிக்குப்பின் ‘இரவும்’ அதன் நீட்சியென்று என்னை ஆட்கொண்டது.

டார்த்தீனியத்தைப் போலவே சரவணனுள் வேகமாகப் பரந்துவிரிகிறது இரவு என்றுதோன்றியது.  கதாபாத்திரங்களைத் தாண்டி எனக்களித்த நுண்ணுணர்வுத் தருணங்கள்  ‘இரவி’ல்மிக அதிகம். பீமனின் பாதாளப் பயணமும், அர்ஜுனனின் கிராதத்தில் வரும் வேற்றுலகவர்ணனைகளும் என்னையும் கூட சக பயணியாக அழைத்துச் சென்றிருக்கின்றன.  அதில் ஒருகுதூகலம் இருந்தது.  ஆனால்  ‘இரவி’ல் ஒரு அமானுஷ்ய பயம் கலந்த வசீகரம்,  பாம்பைமுகத்தருகில் பார்த்ததுபோல்…. ஒருமுறை கனவில் கண்டிருக்கிறேன்… அதன் மூச்சை உணர்ந்துதிடுக்கிட்டு வியர்த்து எழுந்த இரவொன்று எனக்கு இருக்கிறது.

அந்தப் பெருச்சாளியின் கண்கள்…. நான் கண்டிருக்கிறேன்.  மிகக்கூரிய மினுக்கும்விழிகள்,..நிழல் அசைவுகள்… அதை முதலில் ஒரு பின்னிரவில் தேநீர்க்கடையின் பின்புறம்எதேச்சையாக  பார்த்திருக்கிறேன்.  அந்தக் காட்சியை எதனுடனும் என்னால் அப்போது இணைத்துப் பார்க்கமுடியவில்லை. ஆனால் அந்த எலிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதை உங்கள் எழுத்தில் படித்தபோது ஒரு திகைப்புடன் மீண்டும் எண்ணத்தில் கொண்டுவரமுடிந்தது.என் இரவுகளின், மிகச்சில தருணங்களே ஆனாலும் , ஆங்காங்கே அவற்றை நிழல் நிகழ்வுகளாக’இரவில்’ கண்டது ஒரு பேரனுபவம்.  அது கதைக்குள் மேலும் மேலுமென மீளாது என்னைத் தள்ளிக்கொண்டிருந்தது. நீங்கள்  எழுதியதுபோல் கர்ப்பக்கிருகத்தின் கதவிடுக்கு ஒளியெனஇரவின்  அந்தப் பக்கம் இருக்கும்  ஆழ்மனதின் நுண்ணுணர்வுகள் வெளிப்படுத்தும்  விஸ்வரூபதரிசனம் எல்லோருக்குமானதில்லை என்றுதான் தோன்றுகிறது.  இரவின் நெகிழ்வில் மனிதமனம் கொள்ளும் சகிக்கமுடியாத ஆழங்களையும் அதே நேரம் அவற்றின் எளிதில் விலக்கமுடியாத ஈர்ப்பையும் நலங்கு மாப்பிள்ளைக்குக் காட்டும் கண்ணாடிபோல் வாசகருக்கேகாட்டியிருகிறீர்கள்.  அற்புதம்.


சற்றேனும் நுண்ணுணர்வுடைய வாசகனின் வாழ்க்கை அனுபவங்களை அவனுக்கே புதிதாகவும்அதே சமயம் மீண்டும் நினைவிலிருந்து கண்டெடுக்கும்  ஒன்றாகவும் ஆக்கி, கனவுக்கும்நனவுக்கும் இடைப்பட்டு திகைத்து நிற்கும் கணங்களை அளித்து மீண்டும் அணைத்துஅமிழவைக்கும் நீங்கள் ஒரு எழுத்து யட்சியேதான்!

அத்தகைய அனுபவத்தை எழுத்தின் மூலம் தந்த உங்களுக்கு நன்றி என்பது ஒரு நிறையற்ற சொல்மட்டுமே. இருந்தாலும் நன்றி!

இறை உங்களுக்கு எல்லா நலத்தையும் அருளட்டும்,

நன்றியுடன்

நா. சந்திரசேகரன்

இரவுப் படங்கள் பெரும்பாலும் கதைக்கு ஒன்றியிருந்தன.  அற்புதம் அந்த மலையடிவாரநீர்நிலையும், கவிந்திருந்த மேகங்களும், விளிம்பில் சூரிய வெளிச்சம் நீர்ப்பரப்பில் சற்றுத்தள்ளிவிழுந்திருந்ததும்..வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்..கதைல் குறிப்பிடப்பட்டிருந்தாலும் துறைமுகப்படங்கள் ஒரு சிறு குறையாகத் தெரிந்ததெனக்கு.

 

*

 

அன்புடன் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

தொடர்ச்சிக்கு மன்னிக்கவும்.  மேலதிக ஆர்வத்தினால் இந்தத் தொடர் கேள்வியும் மின்னஞ்சலும்….

ஒரு வகையில் சரவணனின் மேலோட்ட உணர்வுப் பெருக்கின் புறவெளிப்பாடாக கட்டஞ்சாயா போடும் உளச்சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாத எளிய  பங்கஜமும், சற்றே உள்ளுணர்வாக மேனன், கமலா மற்றும் பிற பாத்திரங்களும், ஆழ்மனதின் பிரியமும் வெறுப்பும் எதிரெதிர் முனைகளாக இறுகக்கட்டிய நாணாக நீலிமாவும் எனக்குத் தோன்றுகிறார்கள்.  எனவேதான் அனைவரும் ஒரு கட்டத்தில் பிரிந்து செல்கையில் பிரிக்கமுடியா ஆழ்மனதாக நீலிமா கதையின் முடிவுவரை வருகிறாளோ?  ஒருவகையில் எல்லோருக்கும் அகம் வெளிப்படும் தருணத்தைக் கண்டடைவது இப்படித்தான் இருக்குமா?  இக்கதையின் குறியீடாக இப்படிப் புரிந்துகொள்வது சரியா?
நன்றியுடன்
நா. சந்திரசேகரன்.

அன்புள்ள சந்திரசேகரன்
ஒருவகையில் இந்த வகையான ஆழ்ந்த பயணங்களுக்கு எழுத்தாளன் பொறுப்பல்ல. அவன் உருவாக்கும் உலகின் குறியீடுகளும் உணர்வுகளும் அவன் உத்தேசித்த பொருளைமட்டும் கொண்டவை அல்ல. அவை வாசகனை மேலும் மேலும் தன் சொந்த ஆழத்திற்கே கொண்டுசெல்கின்றன. அங்கே அவன் எதையெல்லாம் கண்டுகொள்கிறான் என்பது அவனுடைய நுண்மையையும் விசையையும் பொறுத்தது மட்டுமே. அந்த அகப்பயணம் சாத்தியமானதென்றால் எல்லா வாசிப்புகளும் பொருத்தமானவையே
இரவு இருவகை மனிதர்களால் ஆனது. ஒன்று ஆழ்மனதில் வாழ்பவர்கள்.அல்லது ஆழ்மனதை அறியாமல் அதன் மேல்பூச்சான அன்றாடத்தில் வாழ்பவர்கள். ஆழ்மனதைத்திறந்து நோக்குவது ஆபத்தான பயணம். ஒரு சாகசம்
ஜெ