சிதறால்- பயணத்தின் விதிமுறைகள்

1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது வலைத்தளத்தில் உங்களது பயணம் குறித்த கட்டுரைகளை விருப்பத்துடன் படிப்பேன். நாகர்கோயிலில் வசிக்க தொடங்கி பதினோரு ஆண்டுகள் ஆகி விட்டாலும், நேற்று தான் சிதறால் சென்று பார்த்தேன். காலை பத்து மணிக்கு வடசேரி பஸ் ஸ்டாண்டில் மார்த்தாண்டம் பஸ்சில் ஏறி பம்மத்தில் இறங்கி, மீண்டும் அருமனை பஸ்சில் ஏறி சிதறாலுக்கு டிக்கெட் எடுத்தேன். வழியில் ஒரு ஊரின் பெயரே ‘பயணம் ‘. அடுத்த பெரிய ஊர் ஆற்றூர், (தங்களது ஆசான் ‘ஆற்றூர் ரவிவர்மா’ ஞாபகம் வந்தது) அதிலிருந்து இடதுபுறம் பிரியும் சாலை சிதறாலுக்கு செல்கிறது. பஸ் செல்லும் வழியில் உள்ள கிராமங்கள் கேரளாவை நினைவு படுத்துகின்றன. எங்கு பார்த்தாலும் பசுமை. கடந்த ஒரு வாரமாக நாகர்கோயில் சுற்றுவட்டாரத்தில் மழை விட்டு விட்டு பெய்வது ஒரு காரணமாக இருக்கலாம்.

சிதறால் பஸ் ஸ்டாப்பில் இறங்கினேன். முதல்முறை வருவதால் கோயில் எங்கு என்று விசாரிக்க தொடங்கினேன். இரு சக்கர வாகனத்திலா வந்தீர்கள் என்று கேட்டனர், இல்லை என்றேன். அது நான் இறங்கிய நிறுத்தத்திற்கு முந்தைய நிறுத்தம் என்றும், அதிலிருந்து வலதுபுறம் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்று கூறினர். நடக்க தொடங்கினேன். சாலையின் இரு புறமும் ரப்பர் மரங்களும், தென்னையும் வாழையும் அடர்ந்து நிற்கும் வீடுகள். சாலை வளைந்து வளைந்து சென்றது. வழியில் கண்ட ஒரு சிறிய ஊரின் பெயர் ‘விஷ்ணுபுரம் ‘.

 

2

அரை மணி நேரம் நடந்த பின்பு மலை அடிவாரத்தை அடைந்தேன். அங்கிருந்து மலையை நோக்கி நடப்பதற்கே ஆனந்தமாக இருந்தது. அழகான சதுர சதுரமான கருங்கல் பாவிய பாதை. ஒரு புறம் கன்னங்கரிய பறை குன்றுகள், மறுபுறம் பச்சை பசேலென்று மரங்கள். மலையில் ஏற ஏற, நான் கண்ட நில காட்சிகள், கண் கொள்ளா காட்சி. தொலைவில் ஒரு ஆறு ஓடி கொண்டிருக்கிறது, தாமிர பரணியாக இருக்கலாம். இன்னும் கொஞ்சம் மலை ஏறலாம் என்று நினைப்பதற்குள், சிதறால் மலை கோவில் வந்து விடுகிறது. முதலில் ஏறிய உடன் நம் கண்ணுக்கு தெரிவது, பெரிய பாறை மேல் இருக்கும், சுண்ணாம்பு போன்ற ஒரு கலவையில் கட்டிய ஒரு சிறிய சதுர வடிவமான கட்டிட அமைப்பு. அதை பார்த்து விட்டு பாறைகளுக்கு ஊடாக இறங்கும் படிக்கட்டில் இறங்கினால் முதலில் நாம் அடைவது, பாறையில் செதுக்கிய சிற்பங்கள் இருக்கும் இடத்தை. புத்தர் (அ ) மகா வீரர் போன்றவர் தவம் செய்யும் சிற்பம். அருகிலேயே சிறிதும் பெரிதுமாக நிறைய சிற்பங்கள். பல நூற்றாண்டுகளாய் நிற்கும் அந்த சிற்பங்கள் நம்மை பார்ப்பது ஒரு அபூர்வ அனுபவமாக உணர்தேன். அங்கிருந்து மீண்டும் படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கினால், பாறையுடன் சேர்த்து கல் தூண்களால் கட்டப்பட்ட அழகான கோயில் மண்டபம் உள்ளது.

உள்ளே சென்றதும், கோவில் மூன்று அறைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதலில் நமக்கு தெரிவது மகாவீரரின் சந்நிதி. அவருக்கு இடது புறம் பரசுவத நாதரும், வலது புறம் இசக்கி அம்மனும் தனி தனி அறைகளில் உள்ளனர். இச் சிலைகள் எல்லாம் சிறிய வடிவில் ஒரு பீடத்தின் மேல் உள்ளது. ஏனோ சிறிது நேரம் கண்ணை மூடி அமர வேண்டும் போல் இருந்தது. உள்ளுக்குள் அத்தனை அமைதி, குளிர்ந்த காற்று, ஏகாந்தம்.

 

5

ஒரு பத்து நிமிடம் கழித்து கண்ணை திறந்தேன், மஹாவீரரை சற்று தெளிவாக பார்க்க முடிந்தது. இங்கு ஒரு பூசாரி உள்ளார்.  பெயர் – செல்லமுத்து. அவரிடம் கேட்டு ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று பேச்சு கொடுத்தேன்.

“சாமி இங்க தான் வேலை பாக்குறீங்களா ?” ஆமாம் என்பது போல் சிரித்தார்.

“சாமிக்கு எந்த ஊர் ? ” என்றேன், திருவட்டார் என்றார்.  உள்ளே லைட் இருந்தா போடுங்களேன், ஒண்ணும் தெரிய மாட்டேங்குது, என்றேன்.

“லைட் ஒண்ணும் இல்லை, வயரெல்லாம் புடுங்கி போட்டாச்சு” என்று அறுந்த வயர் குவியல்களை காட்டினார்.

“உள்ளே இருக்கது என்ன சாமி? என்றேன்,

“அம்மை ” என்றார் மிக உரிமையுடன்.

என்ன? என்றேன் புரியாமல்.

“கன்யாமாரி அம்மைக்கு தங்கச்சி என்றார், மீண்டும் ஏதோ நினைத்தவராய் “ஆதி கேசவருக்கும் தங்கச்சி என்றார்.  அவர் பேச்சில் மஹாவீரரை “வீரபத்திரர் என்றே கூறுகிறார்.  இசக்கி அம்மனுக்கு அருகில் சுரங்கம் போன்ற பாதை ஒன்று உள்ளது, அதை சுட்டிக்காட்டி ‘நேரா கன்னியாகுமரிக்கு போகுததாக்கும் ‘ என்றார்.

6

மண்டபம், கோயில் எல்லாம் ஆயிரத்தைந்நூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது என்றார். மீண்டும் “இதையெல்லாம் டில்லிகாரன் எடுத்தாச்சு ‘ சின்ன பையனாக்கும் ஆபீசர் ‘ என்றார். அந்த காலத்துல வேத காரனுக, அம்மைக்கு சிலையோட காலை ஒடைச்சு போட்டானுக, என்றார்.

இசக்கி அம்மன் கோவிலுக்கு அருகே வெளிப்புறத்தில் சுவரை ஒட்டி புத்தர் (அ ) மஹாவீரர் தவம் செய்யும் சிலை உள்ளது.

கோவிலில் இருந்து வெளியே வந்தால் காற்று நம்மை அள்ளிச்செல்கிறது. கோவிலுக்கு நேர் எதிரில் முக்கோண வடிவில் பாறைகளுக்கு இடையில் சிறிய தடாகம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. நான் மழை தண்ணீரா? என்றேன். பூசாரி சிரித்து “கன்யமாரி தண்ணியாக்கும்” என்றார். சிறிது நேரம் அவருடன் பேசி விட்டு, பத்து ரூபாய் கொடுத்தேன், சந்தோசமாக வாங்கி கொண்டார். பூசாரியிடம் விடை பெற்று வெளியே வந்தேன், ஒரு பெரிய ஆல மரம் குடை போல் அந்த இடத்தையே அடைத்து நிழல் தந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து விட்டு, மலையிலிருந்து இறங்க தொடங்கினேன். சில மலையாளி குடும்பங்கள் வந்திருந்தனர். காதலர்கள் பாறை மறைவிலும், மர மறைவிலும் பேசிக்கொண்டு சூழ் நிலையை ரம்மியமாக்கி கொண்டிருந்தனர்.

அருமையான, புராதனமான, ஒரு சிற்ப கோயிலை இயற்கையின் எழில் சூழ காணமுடிந்தது, நல்ல ஆனந்த அனுபவமாக இருந்தது.

ஏனோ இந்த பயணத்தை உங்களிடம் பகிர வேண்டும் போல் தோன்றியது, அதனால் இது.

அன்புடன்

பா. சரவணகுமார்

நாகர்கோவில்.

***

 

8

அன்புள்ள சரவணக்குமார்,

சிதறால் மலைக்கு நீங்கள் சென்றது மகிழ்வளிக்கிறது. தொடர் பயணங்களுக்கான தொடக்கமாக இது அமைக.

ஆனால் நீங்கள் பயணம் செய்த முறையில் பல பிழைகள் உள்ளன. பலரும் இப்படித்தான் பயணம் செய்கிறார்கள். இத்தகைய பயணங்களில் ஒரு தோராயமான அனுபவமே அமைகிறது. பயணம் மூலம் நாம் எவ்வகையிலும் மேலதிக நகர்வு கொள்வதில்லை

பயணம் செய்வதற்கு முன்பு முதலில் பயணம் செய்யும் இடம் பற்றி முடிந்தவரைச் செய்திகளை தொகுத்துக்கொள்வது அவசியம். அவை ஒரு இடத்தை மிக விரிவானதாக ஆக்குவதைக் காணலாம். அங்கே நீங்கள் காணும் சின்னச்சின்ன விஷயங்கள் கூட மிகப்பெரிய வரலாற்று அர்த்தம் கொள்ளும். குறியீடுகளாக விரியும்

சிதறால் மலையில் கிமு இரண்டாம்நூற்றாண்டுமுதல் ஒரு சமணக் கல்விநிலையம் இருந்துள்ளது. அங்குள்ள குடைவரைக்கோயில் தமிழகத்தின் தொன்மையான சமண ஆலயங்களில் ஒன்று. கிபி பத்தாம் நூற்றாண்டு வாக்கில் அது கைவிடப்பட்டது. முந்நூறு ஆண்டுகளுக்குப்பின் 13 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் அது துர்க்கை ஆலயமாக ஆக்கப்பட்டது.சிதறாலம்மா என்று அம்மனுக்குப் பெயர். ஆனால் இரு பக்கவாட்டுக்கருவறைகளில் பார்ஸ்வநாதரும் வர்த்தமானரும் வழிபடப்பட்டனர். இன்றும் தூண்களில் சமண தெய்வங்கள் உள்ளன.

சிதறால் மலையில் நீங்கள் கண்ட அந்தக்கல்வெட்டு தமிழகத்தின் மிகமிகத் தொன்மையான கல்வெட்டுகளில் ஒன்று .குறத்தியறையார் என்னும் அரசி சமண முனிவரான நாகநந்தி அடிகளுக்கு கொடையளித்த செய்தியைச் சொல்வது. தமிழ்பிராமி லிபியில் அமைந்தது. அங்குள்ள மூன்று குளங்களை பாபநாசினிகள் என்று சொல்கிறார்கள்.. இச்செய்திகளை அறிந்திருந்தால் அந்த இடம் மேலும் அழுத்தமான உளப்பதிவாக அமைந்திருக்கும்

கடைசியாக, இம்மாதிரி இடங்களுக்குச் சென்று அங்கே இருப்பவர்களிடம் ‘தகவல்களை’ சேகரிப்பது பெரிய பிழை. பெரும்பாலும் சிற்பங்களின் மேல் ஓணான்கள் தான் அமர்ந்திருக்கும். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதுடன் தவறான செய்திகளையும் சொல்லிவிடுவார்கள். உங்களுக்குச் செய்தி சொன்னவரை நான் அறிவேன் அவர் பூசாரி அல்ல. வாட்ச்மேன், அங்கு பூசாரி துளு பிராமணர். [போற்றி என்போம்] கீழே இருந்து காலை மட்டும் வந்து விளக்கேற்றிவிட்டுச் செல்வார்.தேவை என்றால் கூட்டிவரலாம்

வாட்ச்மேன் சொன்ன செய்தி பெரிய பொய். சிதறால் சமணச்சிலைகள் கிறித்தவர்களால் ஊறுசெய்யப்படவில்லை. இத்தனைக்கும் அப்பகுதி நெடுங்காலம் கிறித்தவர்களால் கையகப்படுத்தப்பட்டு வேளாண்மை செய்யப்பட்டது. நான் படித்த பள்ளி அங்கிருந்து குறுக்கு வழியில் இரண்டு கிமீ தூரம்தான். நான் அனேகமாக மாதம் ஒருமுறை அங்கே நண்பர்களுடன் செல்வதுண்டு. அன்றெல்லாம் பார்ஸ்வநாதரும் பத்மாவதியும் நன்றாகவே இருந்தனர். ஞானக்கண் நாடார் ‘காவல் தெய்வமாக்கும். தொடப்பிடாது’ என எங்களைத் துரத்துவார்

பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழகச் சுற்றுலாத்துறை சிதறாலை ‘மேம்படுத்தியது’. அப்போதுதான் படிகள் கட்டப்பட்டன. மேலே இருந்த செங்கல் கோபுரம் சிமிண்ட்பூச்சு அளிக்கப்பட்டது. அன்று கொத்தனார்களாலோ பிறராலோ சிற்பங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதையும் இதே தளத்தில் நான் பதிவுசெய்துள்ளேன்

தோராயமாக பயணத்துக்கான சில விதிமுறைகளைச் சொல்கிறேன்

1 ஒரு பயணத்தில் உங்கள் இயல்புக்கு ஒவ்வாத எவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டாம். அவர்கள் மொத்தப்பயணத்தையும் சீரழித்துவிடக்கூடும்

2 பயணம்செய்யும் இடத்தைப்பற்றிய வரலாற்று, கலை, பண்பாட்டுச் செய்திகளை முன்னரே சேர்த்துக்கொள்ளுங்கள்

3 இந்தியாவின் கோயில்கள், வரலாற்றுத்தலங்களைப் பராமரிப்பவர்கள் ,வழிகாட்டிகள் சொல்லும் செய்திகள் பெரும்பாலும் அரைகுறையானவையோ பிழையானவையோதான். பலசமயம் சாதாரணமான கட்டுக்கதைகள் அவை. மிக அபூர்வமாகவே சரியான செய்திகளைச் சொல்பவர்கள் அமைகிறார்கள். ஆகவே அவர்களிடம் பேசுங்கள். ஆனால் பரிசீலனை இல்லாமல் ஏற்றுக்கொள்ளவேண்டாம்

4 பயணம் முடிந்தபின்னரே பயண அனுபவத்தைக் குறித்துக்கொள்ளவும். ஏனென்றால் பயண அனுபவம் ஓர் உச்சநிலையில் நிகழ்கிறது மிக எளிதில் அந்த மனநிலை மாறிவிடும். குறிப்பு நம்மில் அந்த பயண அனுபவத்தை எப்போது வேண்டுமென்றாலும் எழுப்புவது

ஜெ

***

சிற்பப் படுகொலைகள்…

முஞ்சிறை, பார்த்திபசேகரபுரம்

ஒருநாள்

 

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22