துவாரபாலகன்:கடிதங்கள்

அன்புள்ள ஜெ
இம்மாதிரி ஒரு அண்ணன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்! இப்பொதெல்லாம் இந்த மாதிரி மனிதர்கள் இருக்கிரார்களா என்பது சந்தேகமே! ஒரு சாதரண குடும்ப வரலாறு இவ்வளவு உன்னதமாக இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்
சேதுராமன்
88

அன்பு ஜெ சார். கருணை என்னும் பதம் எப்போதும் சொன்னவுடன் கண்ணீர் வரும் – பல சமயங்களில் அது காண அரிதாக இருப்பதாலும், அந்த மழை கிடைக்கும்போது காய்ந்து வறண்ட அடிவேர்கள் உயிர்த்து சிலிர்ப்பதாலும். எத்தகைய பெரும் கருணையால் உங்கள் அண்ணன் உங்கள் வாயில்காப்பாளனாய், வளம் சேர்ப்பவனாய் ஆனார்? நீங்கள் கொடுத்து வைத்தவர். வாழ்க்கையில் ஜெயிக்க வஞ்சகம் வேண்டும், அது குறைந்தவர்கள் பாடு திண்டாட்டம் எனும் மன நிலையில், இளமையில் மிகவும் பயந்த போதெல்லாம், என் சுகமான கற்பனைகள் பெரிய செல்வந்தர் வீட்டு எளிய வேலையாளாய் இருப்பதும், முதலாளி நம் எல்லா தேவைகளையும் கவனித்துக்கொள்வதும்தான் (படிக்காத மேதை சிவாஜி-ரங்காராவ் போல்). வளர்ந்து, என் உள்ளேயே ஒளிந்து கிடந்த வஞ்சகங்களெல்லாம் சமயம் பார்த்து வெளி வந்து, நானே வியக்கும் வண்ணம் ஒரு நிலை பெற்றபின் பயம் ஒழிந்தது ஆனால் இன்னும்!
அநத எளிய பணியாள் மோகம் நீறு பூத்துக்கிடக்கும். உங்கள் அண்ணன் போல் வலிய கைப்பிடியின் பாதுகாப்பில் சுகமாய் வளரும் வாய்ப்பு எல்லா தம்பிகளுக்கும் கிட்ட கருவறையின் உள்ளே நிற்கும் தெய்வமும், வெளியே நிற்கும் பெரிய தெய்வமும் கருணை புரிய வேண்டும்.
அன்புடன் ரகுநாதன்
888
அன்புள்ள ஜெமோ

உங்கள் குடும்பத்தைப்பற்றிய கட்டுரைகளை மிகுந்த ஈடுபாட்டுடன் நானும் என் குடும்பமும் வாசித்துவருகிறோம். உங்கள் அண்ணாவைப்பற்றி எழுதிய கட்டுரையும் மிகச்சிறப்பாக இருந்தது. சம்பந்தமில்லாத இடத்தில் தொடங்கி எளிதாக ‘லேண்ட்’ ஆகி அபப்டியே வந்து சரியாக முடித்துவிட்டீர்கள். காவல்தெய்வம் என்ற அந்த கருத்துக்கு நிகராக ஏதும் இல்லை. கருவறை தெய்வத்தைவிட காவல்தெய்வம் மேலானதுதான். சந்தேகமே இல்லை. மனம் கனிந்த வாழ்த்துக்கள்

சந்துரு
வணக்கம் குரு.,
அண்ணனின் மேல் நீங்கள் வைத்திருக்கும் மரியாதை கலந்த பணிவு மிகவும் வியப்பளிக்கிறது,ஓராண்டு மட்டுமே வயதில் மூத்தவரை அப்பாவின் ஸ்தானத்தில் வைத்து, கட்டுப்பட்டும் வருகிறீர்கள் என்று நினைக்கும் போது அது மரியாதை நிமித்தமாக மட்டுமல்ல, தாயின் கருவில் பாதுகாப்பாக இருப்பது போன்ற ஒரு உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.
என் அண்ணா கிட்டதட்ட அப்பாவைபோல் தான் 18வருடம் மூத்தவர்,அப்பா இறப்பதற்க்கு முன்பு கூட மகனைபோல் தான் என்னை பாவிப்பார் ஆனால் நான் எதற்க்கும் கட்டுப்படுவது கிடையாது.
பெரும்பான்மையான சகோதரர்களில் ஒத்த வயதிருந்தும் ஏன் நண்பர்களை போல் எந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளமுடிவதில்லையே? அதுபோலவே தந்தை-மகன் உறவுகளிலும் ஒரு பெரும் இடைவெளி காணப்படுகிறது. தனது பேரக்குழந்தைகளிடம் கொஞ்சி விளையாடுபவர்கள், ஏன் தனது குழந்தையிடம் அப்படி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துவதில்லை? ஒரு அதிகாரியை போல் கட்டளையிடுவதும்,சிறு தவறுகளையும் பொருக்க மாட்டாமல் தண்டனையளிப்பதும் பல குடும்பங்களில் நாம் காண்கிறோம். அதே செயல்களை தனது பேரக்குழந்தைகள் செய்யும்பொழுது பெரிதும் அதை ரசிக்கிறார்கள் இல்லையா? வயது ஒரு காரணமாக இருக்குமா?
பணிவன்புடன் மகிழவன்.

துவாரபாலகன் http://jeyamohan.in/?p=872

முந்தைய கட்டுரைஅவலாஞ்சி, பங்கித்தபால்
அடுத்த கட்டுரைரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு