சென்ற 23 அன்று ஊரிலிருந்து கிளம்பி இன்று அக்டோபர் 1 அன்று ஊர்வந்து சேர்ந்தேன். இன்றே மீண்டும் கிளம்பி சென்னை செல்கிறேன். இன்னொரு பெரிய திரைப்படத்தின் பணிகள். நடுவே கிடைத்த இடங்களில் அமர்ந்து வெண்முரசு வேலைகள்.
கோவையில் டி.பாலசுந்தரம் அவர்களுக்கான விருதுவிழா முடிந்ததும் சென்னை சென்றேன். அங்கிருந்து 28 கிளம்பி மதுரை. அலெக்ஸ் நினைவேந்தல் விழா. நிர்மால்யா ஊட்டியில் இருந்து வந்திருந்தார். செந்தூர் ஓட்டலில் அறை போட்டிருந்தேன். மதுரையின் பெரும்பாலான ஓட்டல்களைப்போலவே இதுவும் ஒரு பெரிய மோசடி. 3000 ரூ விலையுள்ள அறை. நேரில் பார்த்தால் நேர்பாதிகூட எவரும் அளிக்கமாட்டார்கள். இணையத்தில் இருமடங்காக விலையைக் கூட்டிவைத்திருக்கிறார்கள். இடுங்கலான ஒரு சந்து அறை. ஓர் ஏமாற்றமும் எரிச்சலும் வந்தாலும் மதுரையை எண்ணியபோது வேறேதை எதிர்பார்ப்பது என்றும் தோன்றியது.
மதுரையில் இன்றுவரை ஒரு கடையிலேனும் ,ஒரு நடைபாதைவியாபாரியேனும் ஓர் ஆட்டோரிக்ஷாக்காரரேனும் நேர்மையாக நடந்துகொண்ட அனுபவம் எனக்கில்ல்லை. ரயில்நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விடுதிக்குச் செல்ல ஆட்டோக்காரரர் நூறு ரூபாய் கேட்டார். அதிகாலையில் என்ன சண்டை என சரி என்றேன். சென்று இறங்கியதுமே ஐம்பது ரூபாய் கூடக்கேட்டார். ‘நான் நூற்றைம்பதுதான் சொன்னேன்…என்னடா? ஓத்தா டேய், ஊருக்குப்போயிருவியா?” என ஆரம்பித்தார். நூற்றைம்பது ரூபாய் கொடுத்தேன். மதுரைக்கோயிலைச் சுற்றிய விடுதிகளுக்கு ரயில்நிலையத்தில் இருந்து எவர் வந்தாலும் இதுதான் நிலைமை. எனக்கே இது மூன்றாவது அனுபவம்.
நிர்மால்யாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஸ்டாலின் ராஜாங்கம் அவருடைய நண்பர் அருணுடன் வந்தார். அருண் அம்பேத்கர் பல்கலை [டெல்லி]யில் முதுகலை மாணவர். என் நண்பரும் தமிழ்நாடு துப்புரவுத்தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான கொண்டவெள்ளை வந்தார். அவர் மகள் இலக்கியா என் செல்லம். கடலூர் சீனு அதன்பின்னர். ஜமா சேர்ந்துவிட்டமையால் இலக்கிய, அரசியல் அரட்டை
மதியம் சாப்பிட்டுவிட்டு இலக்கியாவுக்கு ஒரு சுடிதார் வாங்கச்சென்றோம். பழைய தங்கம் திரையரங்கு இப்போது சென்னை சில்க்ஸ் என்னும் மாபெரும் மால். தங்கம் திரையரங்கு போன்ற ஒன்று ஐரோப்பாவில் இருந்திருந்தால் அதை பாரம்பரியச் சொத்து என பேணியிருப்பார்கள். ஆங்கிலேயர் கட்டிய இசைக்கூடம் அது. நீள்வட்ட வடிவமானது. பல உப்பரிகைகள் கொண்டது. அதற்கிணையான இசையரங்கத்தை பின்னர் நியூயார்க்கில்தான் பார்த்தேன்
மாலையில் என் நண்பரும் வங்கித் தொழிற்சங்கச் செயல்பாட்டாளருமான ரவிச்சந்திரன் வந்தார். நண்பர்களுடன் இறையியல்கல்லூரி அரங்குக்குச் சென்றேன். விழா திரண்டுகொண்டிருந்தது. சக்தி கலைக்குழுவின் பறையாட்டம், நடனம். பாடல்கள். நிகழ்ச்சி தொடங்கியது. பாரிசெழியன் வரவேற்புரை அளித்தார். அன்று காலமான இறையியல்கல்லூரியின் முன்னாள்முதல்வர் சாமுவேல் அமிர்தம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபடி _ பேச ஆரம்பித்தார். அலெக்ஸ் இறையியல் கல்லூரியில் பணியாளராக வந்தது முதல் அவருக்கும் தனக்கும் இருந்த உறவைப்பற்றிப் பேசினார்._ தலித் வரலாற்றுப் பதிவுப்பணியில் அலெக்ஸின் பங்களிப்பைப்பற்றி விவரித்தார்
தொல்.திருமாவளவன் அவர்கள் ஏழரைமணிக்கு பிறிதொரு நிகழ்ச்சிக்குப்பின் வந்தார். என்னை அடையாளம் கண்டுகொண்டார். ‘கௌதம் சன்னா நூல்வெளியீட்டுவிழாவில் சந்தித்தோம் அல்லவா ?”என்றார். நான் அவரைப்பற்றி எழுதிய ஒரு கட்டுரையை வாசித்ததாகச் சொன்னார். களைத்திருந்தார். பல ஊர்களில் பயணங்கள், தொடர்சந்திப்புகள். அவரைச்சூழ்ந்து முட்டிமோதியபடி மக்கள் வந்தனர்.
அவர் மேடையில் அமர்வதற்குள்ளாகவே வெவ்வேறு மனுக்களுடன் பல ஊர்களில் இருந்து அவரைச் சூழ்ந்துகொண்டனர். ஏதோ ஒரு ஊரில் தலித் மக்கள் வெளியே செல்லமுடியாதபடி வழிமறிக்கப்பட்டிருக்கிறது, அதையொட்டிய தகராறில் பலர் மேல் வழக்கு என ஒருவர் கிட்டத்தட்ட கண்ணீருடன் திருமாவளவனிடம் சொல்ல அவர் “பாப்போம், அங்க யாரு போலீஸ் ஆபீசர்?” என்று கேட்டபடி அந்த மனுவை அங்கேயே வாசித்து அதன் விளிம்பில் ஏதோ குறித்துக்கொண்டார். தலித்துக்கள் கோயிலுக்கு வேண்டிக்கொள்வதை உயர்சாதியினர் தடுப்பது குறித்து இன்னொரு மனு. அதையும் அங்கேயே வாசித்து குறிப்பு எழுதினார்.
அந்த மக்களின் முகங்களையே நோக்கினேன். கண்ணீர், ஆதங்கம், கோபம். இத்தனை ஆண்டுகளில் அவர்கள் நம்பி முறையிட, நீதிக்காகப் பேச ஒரு மக்கள்தலைவர் முதன்முறையாக எழுந்து வந்திருக்கிறார். எதை நம்பி இந்த மனுக்கள் அவரிடம் அளிக்கப்படுகின்றன? அவரிடம் இருக்கும் அதிகாரம் என்ன? அவர் அவர்களின் பிரதிநிதி என்ற அதிகாரம் மட்டுமே. அவர் உண்மையிலேயே தீவிரத்துடன், அறச்சீற்றத்துடன் அவற்றில் ஈடுபடுவார் என்பது அளிக்கும் ஆற்றல் மட்டுமே.
இங்கே ஓர் அரசியல்கட்சியாகச் செயல்படுவதற்கான முதன்மைநியாயம் கொண்ட கட்சி விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே என நான் பலமுறை எழுதியிருக்கிறேன். இப்போதும் அதையே உணர்ந்தேன். தமிழக அரசியல்வாதிகளில் உண்மையான நீதியுணர்வும், அறிவார்ந்த விஷயங்களில் ஈடுபாடும், அரவணைத்துச்செல்லும் தன்மையும் கொண்ட, அதாவது தலைமைப்பண்பு கொண்ட ஒரே தலைவர் திருமாவளவன் மட்டுமே.
அதன்பின்னர் பாரிசெழியன் அளித்த ஆல்பம் ஒன்றை புரட்டினார். தலித் பேந்தர்ஸ் ஆப் இந்தியா என்றபேரில் 1990 வாக்கில் விடுதலைச்சிறுத்தைகளாக பின்னர் உருவான இயக்கத்தின் தொடக்கச்செயல்பாடுகள் அடங்கிய புகைப்படங்கள். அடர்ந்த முடியுடன் சிறுவனைப்போன்ற தோற்றத்துடன் திருமாவளவன். சிலபுகைப்படங்களில் இளமையான வே.அலெக்ஸ்.
நான் அலெக்ஸுக்கு அஞ்சலி செலுத்தி பேசினேன். அலெக்ஸை நான் முதன்முதலில் சந்தித்தது 1998ல் மதுரை புத்தகக் கண்காட்சியில். அவர் அப்போது நண்பர்களுடன் தரமான சினிமாக்களுக்கான ஒரு கடை வைத்திருந்தார். அன்றுமுதல் அவருடன் இருந்த உறவைப்பற்றி பேசினேன். ஆனால் மேடையில் நின்றபோது அவருக்கும் எனக்கும் ஏறத்தாழ ஒரே வயது, என் நண்பர் என்பதே மேலெழுந்து நின்றது. சமூகப்பணி, அறிவியக்கப்பணி என்பதெல்லாம் பெரிதாக பொருளுடையதல்ல என்றுகூடத் தோன்றியது. மூச்சு இறுகி சொற்கள் நெஞ்சில் அடைத்துக்கொண்டே இருந்தன.
திருமாவளவனின் உரையை பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் எப்போதுமே அவையின் இயல்புக்கு இயைய பேசுபவர். அறிவார்ந்த மேடையில் எப்போதுமே அதற்குரிய உயரத்தை அவருடைய பேச்சு அடைவதுண்டு. அதோடு தமிழகத்தின் மேடைப்பேச்சில் உள்ள புகழ்பெற்ற தோரணை, அடுக்குமொழி, தேய்வழக்குகள் அவரிடமிருக்காது. அன்றும் உள்ளத்திலிருந்து நேரடியாகப் பேசினார்.
திருமாவளவனின் பேச்சு இரு மைய அழுத்தங்கள் கொண்டது. ஒன்று இந்தியா என்னும் நாடு, இந்தியா என்னும் பண்பாட்டு அமைப்பு வலுவுறவேண்டுமென்றால் தலித்துக்கள் விடுதலையும் முன்னேற்றமும் அடையவேண்டும். அவர்களின் பண்பாட்டுச்சரடு அதில் முக்கியமான இடத்தை அடையவேண்டும். இரண்டு, ஆவணப்படுத்துதல் மொழிப்பதிவாக ஆக்குதல் ஆகியவையே இன்று தலித் இயக்கத்தில் குறையக்கூடிய முதன்மைச்செயல்கள். ஆவணப்படுத்தாமையால் இருக்கவேயில்லை என்னும் நிலை உருவாகிறது. இல்லாத வரலாறுகளை உருவாக்கி எழுதிப்பதிவுசெய்துகொண்டு இருக்கின்றன சாதிகள். இருக்கும் வரலாற்றை தலித்துக்கள் இழந்துகொண்டிருக்கிறார்கள்.
விழாவுக்கு விஷ்ணுபுரம் குழுமத்தின் பல நண்பர்கள் வந்திருந்தனர். மயிலாடுதுறையில் இருந்து பிரபு, சென்னையிலிருந்து டாக்டர் வேணு வெட்ராயன், சக்தி கிருஷ்ணன் போன்றவர்கள் இந்நிகழ்ச்சிக்காகவே வந்தனர். அவர்கள் அனைவருக்குமே திருமாவளவனின் பேச்சு அழுத்தமானதாகத் தோன்றியது.
நான் இரவே நண்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டு சக்தி கிருஷ்ணனின் காரில் ஈரோட்டுக்கு கிளம்பினேன். அலெக்ஸ் நிகழ்ச்சிக்குப்பின் அப்படியே ஊர் திரும்பினால் என்னால் நிதானமாக இருக்கமுடியாதென்று உணர்ந்திருந்தேன். ஈரோடு வரை கடலூர் சீனுவும் வந்தார். அவர்மட்டும் கோவை செல்ல நாங்கள் காஞ்சிகோயில் அருகே வழக்கறிஞர் செந்திலின் பண்ணைவீட்டுக்குச் சென்றோம். அங்கே இரவு தங்கினோம். அங்கே செல்வேந்திரன், நரேன், கதிர்முருகன் மூவரும் கோவையிலிருந்து வந்திருந்தனர். நான் தூங்கும்போது இரவு இரண்டு மணி.
காலை ஐந்து மணிக்கு எழுந்து கிளம்பினோம். கிருஷ்ணன், ஈஸ்வர மூர்த்தி, ஈரோடு சிவா, பாரி ஆகியோர் வந்து சேர்ந்துகொண்டனர். திம்பம் காட்டுப்பாதை வழியாக ஒரு சுற்று என்பது திட்டம். வனப்பகுதியில் செல்ல அனுமதி வாங்கியிருந்தோம். புலிகள் சரணாலயம் வழியாக வரும்போது ஒரு யானையாவது கண்ணுக்குப்படலாம் என்பது எதிர்பார்ப்பு. ஈஸ்வரமூர்த்தி புலியை எதிர்கொள்ளவே சித்தமாக இருந்ததாகச் சொன்னார்கள்
விலங்குகள் எதுவும் தென்படவில்லை. ஒரேஒரு கீரி, அதை விலங்கு என்று சொன்னால் அதுவே வருத்தப்படும். ஆனால் இளமழை. அற்புதமான மென்வெயில். பச்சைப்பரப்பாக காடு, நடுவே வயல்வெளிகள். கடம்பூர் வழியாகச் சுற்றி கோபி வழியாக ஈரோட்டுக்கு மாலை ஏழு மணிக்குத் திரும்பி வந்தோம்
இப்பகுதியில் எங்குமே வறுமை கிடையாது. அழகிய சிறுவீடுகள், பசுமைச்சூழல். பெரும்பாலான வீடுகளில் இருசக்கரவாகனங்கள். அந்த வளமே ஒரு மனமலர்ச்சியை உருவாக்கிவிடும். மதுரையைச்சூழ்ந்தோ தஞ்சைப்பகுதியிலோ இருக்கும் கடும் வறுமைச்சூழல் உருவாக்கும் சோர்வுடன் இதை ஒப்பிட்டால் இது உண்மையிலேயே ஒரு மகிழ்வுலா
சிரிப்பும் அரட்டையும் ஆங்காங்கே டீயும் பரோட்டாவுமாக ஒரு நாள். நாகர்கோயிலுக்கு ஒன்பது மணிக்கு ரயிலேறினேன். ரயிலிலேயே அடுத்த சென்னைப் பயணத்துக்கான பயணச்சீட்டு வந்துவிட்டது. மேலேறி கம்பிளியை விரித்துப் படுத்ததும் இனிய களைப்புடன் தூக்கம்.
அலெக்ஸ் பற்றிய உரையை இப்படி முடித்தேன். உடலில் பெரும்பாலான பகுதிகள் நோயுற்றால் தங்களை உயிர்ப்பித்துக்கொள்பவை. ஈரல் போன்றவை புதிதாக வளரவும் செய்யும். இதயம் அப்படி அல்ல. அதன் தசைகள் நோயுற்றால் இறந்துவிடுகின்றன. எஞ்சிய பகுதியைக்கொண்டே வாழவேண்டும். ஐம்பது வயதுக்குமேல் நண்பர்களின் இறப்பு இதயத்தின் ஒருபகுதி அழிவதைப்போல.