ஆழமற்ற நதி -கடிதங்கள்

Bharathapuzha

 

 

ஆழமற்ற நதி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

தொழிற்சாலை சூழலில் இருக்கும் நான் எனது சகோதரி பணிபுரியும் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தேன்

நீதிபதி இல்லாத நேரத்திலும் அறைக்குள் செல்வதற்கு முன்பு கால்  செருப்பை கழற்றி வைத்துவிட்டு செல்வதும், நீதிபதி வருகிறார் என்றபோது அவருக்கு முன்பு இரண்டுபேர் ஆட்களை விலக்கிவிட்டுக் கொண்டே செல்வதுமாக உயர்ந்த பட்ச மரியாதையோடு,  அதிகாரமும் சேர கடவுள் போன்று நடத்தப்பட்டார்

அந்த உயரத்தில்நின்றிருக்கும்ஒருவருக்கு  “படுத்துத் தான் தலை முழுக்க முடியும்”  என்ற ஆழமற்ற நதியில் தலை முழுக்குவது கடினம் தான்

அது அவருக்கு புரிந்தாலும், அவருக்கு அவரே நீதி வழங்கி தீர்ப்பை சொல்லிக் கொண்டாலும்  அவருக்கு மனதில் ஒன்று உறுத்திக்கொண்டே இருக்கிறது

அதுவே அவரது பயம், அதுவே அவரை அங்கு வரவழைக்கிறது. ஆனாலும் அவருக்கு தலையை கீழே குனிய முடியவில்லை, மேலும் அவரது குமாஸ்தாவும் அவரது நிமிர்வை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்

இந்த கதையில் கதை மாந்தராக தேர்வு செய்யப்பட்டுள்ள நீதிபதி ஒரு குறியீடு என்றே எனக்கு படுகிறது

தின வாழ்க்கையில் ஜட்ஜையா வழங்கும் “நீதிக்கும்”  மனதிலிருக்கும்அறத்தாலான நீதிக்குமான”  வேறுபாடே இந்த கதையின் அங்கமாக எனக்கு தெரிந்தது

மற்றவர்கள் சொல்லச்சொல்ல கதை மேலும் மேலும் விரிந்துகொண்டே செல்கிறது.

நன்றி

சி. பழனிவேல்

அன்புள்ள பழனிவேல்,

பெரும்பாலான தருணங்களில் மனிதர்கள் மிகமிக எளிமையான உயிர்கள். அவர்கள் நீதியின்பாற்பட்டுச் செயல்படுவதில்லை. ஓர் இக்கட்டை எப்படியாவது கடக்கவே முயல்கிறார்கள்

ஜெ

வணக்கம்.

ஆழமற்ற நதிபடித்தேன்.

நீத்தோர் கடன் சடங்குகள் என்னவோ  வெளிப்புறமாக தெரிபவை தான்

கதையின் முடிச்சாக இருப்பது எடுத்த  முடிவுகள் மீதான விசாரணை தான் அல்லவா!

நாற்சந்தியில் நின்று எத்திசை சரி என்று  குழம்பும் மனித மனம், முதிர்வில் உணர்வது சரி தவறு என்று ஒன்றில்லை சாட்சியாய் இருப்பதே வாழ்வு என்று !.ஆனால் அனைவருக்கும் அந்நிலை வாய்ப்பதில்லை. லெளகீக சக்கரம் சுழல ஏதோ ஒரு பக்கம் நிற்பது தானே எளிது.

இந்நேரத்தில் தங்களின்பத்மவியூகம்கதையும் ஞாபகம் வந்தது. வெளியே வரும் வழியை அபிமன்யுக்கு உணர்த்த முயற்சிக்கும் சுபத்திரை அதில் இறுதியில் தோற்று நிற்கும் கணத்தில் அவள்  உணரும்  திகைப்புக்கும், கதிரின் கண்ணீருக்கும்  தூரம் அதிகமில்லை. வாசக மனம் உறைந்து நிற்கும் கணமல்லவா அது.  

ஆழமற்ற நதியும் பத்ம வியூகமும் எது உண்மையில்

இதைப்  போன்றதொரு சடங்கு சார்ந்த கதையான திரு. திலீப்குமாரின்மூங்கில் குருத்துஎனக்கு பிடித்தமானது.

கதையின் முடிவில்  குஜராத்தி இளைஞன் தன் தாயிடம் இயலாமையில்   ‘வாடிய  மூங்கில் குருத்தை நீயே குப்பையில் போட்டு விடுஎன்று சொல்லும் போது வரும் உணர்வும் மேலே உள்ள கதைகளுக்கு ஒத்தது தானே.

இக்கட்டும் அது தரும் இயலாமையும் களம் வேறு எனினும் ஒன்றல்லவா!    

நதியும், வியூகமும், மூங்கில் குருத்தும் எங்கோ ஓர் புள்ளியில் இணைகிறதாகவே உணர்கிறேன்.

வாசிப்பில் குறை இருப்பின் உணர்த்தவும்.  

நன்றி ஜெ.

பண்டிகை கால வாழ்த்துக்கள்

ரமணா சந்துரு

அன்புள்ள ரமணா சந்துரு

அப்படி ஓர் இணைப்பு இருந்தாகவேண்டுமென அவசியமில்லை. அது வாசகர் தரப்பில் நிகழ்வது. அவ்வாறுதான் நாம் அனைத்தையும் நினைவில் வளர்த்துக்கொள்கிறோம். ஒவ்வொன்றையும் பிறிதுசிலவற்றுடன் இணைத்துக்கொண்டு விரிவாக்கம் செயுதபடியும் தொகுத்துக்கொண்டபடியும் இருக்கிறோம். அது மிக அந்தரங்கமானது

ஜெ

மூத்தவருக்கு என் வணக்கம்.

ஆழமற்ற நதி வாசித்தபின் என்னுள் உழலும் என் எண்ணங்கள்.

இக்கதையின் ஒரு பாத்திரமாய் என்னுள் நான் நடித்து பார்க்கையில் எட்டு மாதங்களாய் நினைவே திரும்பா உடலை செயற்கை முறையில் இயங்க செய்வதை விட, இறப்பையே தெரிவு செய்பவனாக, அதனால் எந்த குற்ற உணர்ச்சியையும் அடையாதவனாக இருக்க விரும்புகிறேன்.இவ்வாறு என் நிலையை இருத்திக் கொண்டபின் மற்ற அனைவருமே ஓரிரு படிகள் கீழாக, அவர்களின் குறைகள் தெளிவாகின்றன. உலகியல் இழப்பு கூட இல்லை, ஆன்மீகமான பாவம் மட்டுமே. அதை செய்வதால் பயனுறுவது மகனோ, கணவனோ, தந்தையோ ஆனாலும், அதை தான் ஏற்க தயங்கும் அனைவரின் சுயநலம். அதை சிந்திக்க இயலா ஒரு பிறவியின் தலையில் சுமத்தி காரியம் ஆனபின் எதற்காக இந்த பிராயசித்தம். பழியை இடம் மாற்றிய  குற்ற உணர்ச்சியா? மூக்குப் பொடி தணிக்கும் பதற்றம் போலும்  இந்த ஆழமற்ற குற்ற உணர்ச்சி. காசிநாதன், கதிர் என பெயர்களும் கதையோடு பின்னலிட்டு நிற்கின்றன.

அன்புடன் இரா. தேவர்பிரான்

அன்புள்ள தேவர்பிரான்,

உலக இலக்கியத்தில் குற்றவுணர்ச்சி குறித்த படைப்புகள் மிகுதி. அது நீதியுணர்ச்சியும் மனிதனின் இயலாமையும்  சந்திக்கும் புள்ளி. மனிதனின் விழைவும் மானுடத்தின் ஒத்திசைவும் கொள்ளும் சமரப்புள்ளியும்கூட

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 18
அடுத்த கட்டுரைஅலெக்ஸ் நினைவுகளும் பசுமைக்காடுகளும்