ஆழமற்ற நதி [சிறுகதை]
தங்களின் “ஆழமற்ற நதி” நிகழ்வில் வரும் பாரதப்புழாவின் இறுதி சடங்கு
நடைபெரும் இடம்” ஐவர்மடம்” எனும் படித்துறை.
கேசவன்ஶ்ரீனிவாசன்.
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
மீண்டும் ஆழமற்ற நதியின் கரையிலேயே மனம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. வாசகர்கள் தாங்களே தொடர்ந்து புனைந்து கொள்ள விடப்பட்டு விட்ட வெளியில், மனம் உருவாக்கும் மிகுபுனைவுகளை தவிர்த்து பார்த்தால், உள்ளே ஒன்றும் போகாது என்று சொல்லப்பட்டாலும் அக்குழந்தையின் உள்ளுணர்வு தன் தந்தை இறந்து விட்டதை அறிந்து கொண்டது, தன் தந்தைக்காக கண்ணீர் விடுகிறது என்று கொள்வதே தர்க்க ரீதியாக அதிகம் ஏற்புடையது என்று கருதுகிறேன். ஆனால் இவையெல்லாமே கதையின் முடிச்சினை அவிழ்க்கும் மூளையின் அல்லது தன் முனைப்பின் முயற்சி தானே தவிர, முதலில் கதை வாசிக்கும் போது கதிரின் விசும்பல் கண்டு அதன் அர்த்தம் என்ன என்று தெரியாமலே கண்களில் மல்கும் நீர், அது தான் இதயப் பூர்வமானது. அர்த்தம் அற்றது என்று கருதத்தக்கது என்றாலும் அறிந்திரா பேராற்றல் இயற்கையின் முன்னம் கண்ணீர் சிந்துவது, வியந்து நிற்பது, அஞ்சி நிற்பது இவை மட்டுமே நாம் செய்யத்தக்கது, மற்றவை நமக்கு அப்பாற்பட்டது என்றே தோன்றுகிறது.
அன்புடன்
விக்ரம்
அன்புள்ள ஜெ
ஆழமற்ற நதி பற்றி பலகோணஙளில் வாசிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. உண்மையில் இந்த வாசிப்புகள் வாசிப்புக்கான பயிற்சியாகவே இருக்கின்றன. ஒவ்வொருவரும் எவ்வாறெல்லாம் இக்கதையை வாசிக்கிறார்க்ள் என்பது எப்படியெல்லாம் கதையை வாசிக்கலாம் என்பதற்கான ஆதாரம். கூடவே மனிதமனம் எப்படியெல்லாம் செல்கிறது என்பதையும் காட்டுவது
ஆனால் இந்தக்கதை எனக்கு குழந்தைப்பருவம் பற்றிய ஒரு கதையாகவே தோன்றியது. கதிர் குழந்தை. குழந்தையின் மனதுக்குள் நாம் நம் பண்பாட்டில் உள்ள எல்லா குற்றவுணர்ச்சியையும் பாவ உணர்ச்சியையும் போட்டுவிடுகிறோம். அதை மீட்கவே முடியாது
ஒரு பெந்தெகொஸ்தே நிகழ்சியில் 6 வயது பெண்குழந்தை பாவம் செய்துவிட்டேன் பெரிய பாவம் செய்துவிட்டேன் நான் பாவி என்றெல்லாம் சொல்லி கதறி அழுவதை கண்டேன். அதுதான் ஞாபகம் வந்துவிட்டது. 6 வயதில் என்ன பாவம் செய்யமுடியும்? நாம் நம் பாவத்தை அக்குழந்தைமேல் ஏற்றுகிறோம் இல்லையா?
நாம் நம் பள்ளிக்கூடங்களிலும் கோயில்களிலும் செய்வது இதைத்தானே?
ராபர்ட் ஜென்ஸன்