இந்திய சினிமா -முளைக்காத விதைகள்

ray

அன்புள்ள ஜெஅவர்களுக்கு,

 

இணைய தொழில்நுட்பம் வளர்ந்ததால் எல்லாவற்றையும் உடனே தெரிந்துக் கொள்ளமுடிகிறது.உலகத்தில் கிடைக்கும் அனைத்தும் உடனே தமிழில் கிடைத்துவிடுகிறதுதகவல்கள்தங்குதடையின்றி வந்துவிடுகின்றனநவீன இலக்கியம் எல்லோருக்கும் கிடைக்கும்படிசெய்துவிட்டதுஇசையின் அனைத்து வகைமைகளையும் கேட்க முடிகிறதுசினிமாகூத்து என்றுஎல்லாவற்றையும் பார்க்கவும் முடிகிறது.

 

இணையத்தின் வளர்ச்சியால்,வெகுஜன இலக்கியத்தை தாண்டி  நவீன இலக்கியத்தை அனைவரும் அறியும்படி செய்ததுஅதனால் புதிய நாவல்கள்சிறுகதைகள் தோன்றி அதன்போக்கை வாசிக்கும் திறனை மாற்றியமைத்திருக்கிறது.

 

ஆனால் மற்ற கலைகளான இசைநாடகம்சினிமா போன்றவைகள் பரவலாக சென்றுசேர்ந்தாலும்அதிலிருந்து புதுமையான நவீன‌ ஆக்கங்கள் உருவாகவில்லைகுறிப்பாக சினிமாநிச்சயம் நவீனமாற்று சினிமாவை கண்டிருக்க வேண்டும்சில மாற்றங்கள் தெரிந்தாலும்பெரியளவில் மாறவில்லைமாறாக கதாநாயக வழிபாடுகள் மூலமாக பெரிய  பொருளியல்வெற்றிகளைதான் அடைந்திருக்கிறதுமலையாள சினிமா பெற்றதுபோல் காட்சி அழகியல்கள்,சிறந்த கதைகள்நுட்பங்கள் என்று எதையுமே இன்னும் பெறவில்லை.

 

அதிலும் சினிமாவின் ரசனை இன்னும் மாறவில்லைஇணையத்தால் சினிமா முன்னைவிடகேளிக்கையாக மாறிவிட்டதாதமிழ் இலக்கியம் கண்டதுபோலஉலகளாவிய சினிமா பற்றியபுரிதல்களை தமிழ் பார்வையாளன் பெறமுடியவில்லையே?

 

வெகுஜன வாசகர்கள் சினிமாசீரியல் என்று போய்விட்டது ஒரு காரணமாக இருக்கலாம்ஆனால்முன்பிருந்த தமிழ் சினிமா பார்வையாளர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் அடைந்திருக்கவேண்டிய இடம் காலியாகதானே இருக்கிறதுநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

 

நன்றி.

கே.ஜே.அசோக்குமார்

adoor-gopalakrishnan-says-he-makes-not-9987

அன்புள்ள கே.ஜே.அசோக்குமார்

 

நலம்தானே?

 

சென்ற சென்னை பயணத்தின்போது ஒரு நண்பர் கேட்டார், இணையத்தின் ஓர் உலகசினிமா அலைஇருந்ததே அது எங்கே போயிற்று என்று. எனக்கே ஆச்சரியம்தான். பத்தாண்டுகளுக்கு முன்னால் டிவிடிக்கள் ஏராளமாகக் கிடைக்க ஆரம்பித்தன. அத்தனைபேரும் மிகையுற்சாகத்துடன் நாளுக்கொரு ‘உலகசினிமா’ பார்த்து கட்டுரைகள் எழுதித்தள்ளினர்.  ஏதோ சினிமா மறுமலர்ச்சி நிகழவிருக்கிறது என்றே தோன்றியது. நானேகூட தமிழ்மக்களின் காட்சியூடக மோகமும் நல்ல சினிமாக்கள் எளிதாகக் கிடைப்பதும் இணைந்து ஓர் அலையை உருவாக்கக்கூடும் என்றே எண்ணினேன்

 

ஆனால் நுரையடங்குவது போல அந்த அலை இல்லாமலாகியது.  இன்று அக்கட்டுரைகளைத் திரும்பிப்பார்க்கையில் அவற்றில் இருப்பது ஒரு மேலோட்டமான உற்சாகம் மட்டுமே என தெரிகிறது. எந்தப்படத்திற்கும் கதைச்ச்சுருக்கம், காட்சியமைப்பு பற்றிய ஒரு பரவசம் மட்டுமே காணக்கிடைக்கிறது. அந்த சினிமாவிலிருந்து முன்னகர்ந்து தனக்கென ஒருவரியை எழுதியவர்கள் மிகமிகக் குறைவு

ஒரு தரப்பில் இருந்து உலக சினிமாவை அறிமுகம் செய்யும் முயற்ச்சிகள் சலிக்காமல் நடந்து கொண்டிருக்கின்றன.பல நூல்களை நானே அறிமுகம் செய்திருக்கிறேன்.ஆனால் அவை ஒட்டுமொத்தமாக என்ன விளைவை உருவாக்கியிருக்கின்றன என்றால் வருத்தமே.அறிமுகம் என்பது ஒரு தொடக்கமே.அப்படங்கள் பார்க்கப்படவேண்டும்.அவற்றைப்பற்றி விவாதம் நிகழவேண்டும்.அது நிகழ்வதில்லை.

சினிமா என்பது நுண்கலை அல்ல. அது இயல்கலை. அதில் அரசியல், வரலாறு, தத்துவம் ,பண்பாட்டுச்சூழல் உள்ளது. அதையெல்லாம் எவ்வகையிலும் அறியாமல் சினிமாவை மட்டும் எப்படிப்பார்க்கமுடியும்? நானே இதை பதினைந்தாண்டுகளுக்கு முன் இணையத்தில் எழுதியிருக்கிறேன். அதாவது வாசிப்புடன் இணைத்துக்கொள்ளாமல்  சினிமாவை மட்டுமே பார்ப்பதைப்போல அசட்டுத்தனம் வேறில்லை. இங்கே சினிமா பார்ப்பவர்களுக்கு உண்மையில் வேறெதிலும் அடிப்படை அறிமுகமே இல்லை. ஆகவே கதைச்சுருக்கமும் ஓர் ஆகாவும் அன்றி அவர்களால் சொல்லக்கூடுவது ஏதுமில்லை

 

இன்னொன்று , எந்தக்கலையையும் அக்கலையின் மரபை அறியாமல் அணுக முடியாது. உலகசினிமா பற்றிப்பேசியவர்கள்  அவர்களின் சமகாலச் சினிமாவுக்குள் நேரடியாக நுழைந்தனர். அங்கே கண்டதைப்பற்றி பரவசமடைந்தனர். முன்னால் சென்று அந்த மரபை அறிந்து பேசவில்லை.

 

நான் சினிமாவை பெரிய ஈடுபாட்டுடன் பார்ப்பவன் அல்ல. ஆகவே அதைப்பற்றி எழுதுபவனும் அல்ல. ஆனால் கேரள சினிமா இயக்கத்துடன் [காசர்கோடு ஃபிலிம் சொசைட்டியுடன் குறிப்பாக] கொண்ட ஈடுபாடு காரணமாக முன்னோடி சினிமாமேதைகளின் பல படைப்புகளை கண்டு தொகுத்துக்கொண்டிருக்கிறேன். பல படைப்புகளைப்பற்றி தமிழில் எவரும் எதுவும் எழுதியதில்லை. எந்த விவாதமும் நிகழ்ந்ததில்லை. வெறும் விக்கிப்பீடியா குறிப்புகளே சிகுகின்றன

 

இன்னொரு பக்கம் இந்தியாவின் மாற்றுசினிமாவின் இயக்கத்தின் தொடர்ச்சியே தமிழில் உணரப்படவில்லை. ரே, கடக் இருவரைப்பற்றியும் ஒரு சின்ன வட்டத்திற்குள் பேச்சு உண்டு. வேறெந்த சினிமா குறித்தும் பேசப்பட்டதில்லை.

 

மேலே சொன்ன இரு தொடர்ச்சிகளையும் உணர்பவன், அதை கற்று மதிப்பிட்டு முன்செல்பவனே இங்கே புதியசினிமாவின் ஆர்வலனாகவும் படைப்பாளியாகவும் இருக்கமுடியும். 

 

 அது ஒரு தனிமனிதப் பணியும் அல்ல.கூட்டாக நிகழவேண்டிய அறிவியக்கம். உலகசினிமா உண்மையில் நிகழ்த்திய மாற்றம் என்னவென்றால் சினிமாத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைத்தான். இன்றைய ஒளிப்பதிவு, படத்தொகுப்பு கலைகள் பலமடங்கு வளர்ச்சி அடைந்தவை.  மிகக்குறைந்த கருவிகள், மிகக்குறைவான முதலீட்டில் சர்வதேசத்தரத்தை அளிப்பவர்கள் இன்று உள்ளனர்.

 

கடைசியாக ஒன்று, இந்த உலகசினிமா ரசனை எல்லாம் மிகச்சிலருக்குள் மட்டுமே. தமிழ் ரசிகனின் பொது ரசனை என்பது இன்றும் மிகச்சாதாரணமானதே. இங்கே நல்ல சினிமாவுக்கு அதிகபட்சம் ஐந்தாயிரம் பேர்தான் ரசிகர்கள் இருக்கமுடியும். அவர்களால் ஒரு சினிமாவுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரைத்தான் வசூலை அளிக்க முடியும். அதைக்கொண்டு குறும்படங்கள் கூட எடுக்க முடியாது. சினிமா என்பது முடலீடு தேவையாகும் கலை. ஆகவே நல்ல சினிமாவுக்கு தமிழில் இன்று இயல்பான சூழல் இல்லை

 

மறுபக்கம் கேரளம்போல அரசு உதவி இங்கே இல்லை. கேரள அரசு கலைப்படங்களுக்கு நிதி அளிக்கிறது. பரிசுகள் அளிக்கிறது. உலக சினிமா விழாக்களுக்கு கொண்டுசெல்கிறது. உள்ளூரில் அரசு திரையரங்குகளில் வெளியிடவும் செய்கிறது.

 

ஆயினும்கூட தீவிரசினிமாவின் அலை ஓய்ந்து விட்டது. தொண்ணூறுகள் வரைக்கூட அவ்வப்போது வந்துகொண்டிருந்த முக்கியமான கலைப்படங்கள் இன்று வரவில்லை. அன்றைய சினிமா முன்னோடிகள் பெரும்பாலும் அமைதியாகிவிட்டனர். இந்திய கலைப்பட இயக்கம் அழிந்துவிட்டது.  அதற்கான காரணங்கள் என்ன என்று ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும்

 

முதன்மையான காரணம் என்பது மத்திய அரசு அனைத்து உதவிகளையும் நிறுத்திவிட்டதே என்கிறார்கள். தேசியத்திரைப்பட நிறுவனம் கலைப்படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டது. அவர்கள் வட்டிக்குத்தான் பணம் கொடுக்கிறார்கள் இன்று. தேசிய திரைப்பட நிறுவனம்  படங்களை வாங்குவதில்லை. திரைவிழாக்களைக்கூட பாலிவுட் நட்சத்திரங்களைக்கொண்டு நடத்துகிறார்கள். அரசின்  தொலைக்காட்சிகளில் கூட நல்லபடங்கள் திரையிடுவதில்லை.

 

தேசிய திரைப்பட நிறுவனம் போன்ற அமைப்புக்கள் சொந்த நிதியின் பலத்தில் நிலைகொள்ளவேண்டும் என சென்ற நரசிம்மராவ் காலகட்டத்தில் அரசு ஆணையிட்டது. வணிகரீதியாக லாபம்  வேண்டும் என்றால் வணிகசினிமாதான் தயாரிக்கவேண்டும். அதைத்தான்   பாலிவுட்டும் கோலிவுட்டும் செய்கின்றனவே. நல்ல கலையை வணிகக்கட்டாயங்களில் இருந்து பேணும்பொருட்டு நேரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புகளும் வணிகமயமாக்கப்பட்டு செயலற்றுவிட்டன இன்று . அதன் உச்சகட்ட சீரழிவுநிலையில் இருக்கிறது தேசிய திரைப்பட நிறுவனம். அதன் வீழ்ச்சி இந்திய சினிமாவை அழித்துவிட்டது

 

ஜெ

 

முந்தைய கட்டுரைநதியின் ஆழம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 18