வாசகர் கடிதம், சுஜாதா, இலக்கியவிமர்சனம்

sujatha

சுஜாதா அறிமுகம்

வணக்கம்

“உண்மையான வாசகர் எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதிகொண்டிருப்பதில்லை” இந்த வரி ஒரு எழுத்தாளரின் கருத்து. இந்த விடயத்தை பொருத்தவரை உங்கள் கருத்து என்ன?

நன்றி

அனிதா

***

அன்புள்ள அனிதா

அது  சுஜாதா ஒருமுறை சொன்னது. உண்மையான சுஜாதா வாசகர் சுஜாதாவுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பதில்லை என்றுதான் அந்த வரிக்கு உண்மையான அர்த்தம்.

யோசித்துப்பாருங்கள், க.நா.சுவுக்கு சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறார். அழகிரிசாமி புதுமைப்பித்தனுக்கு எழுதியிரு க்கிறார். கி.ராஜநாராயணன் எல்லாருக்குமே எழுதியிருக்கிறார். நான் சுந்தர ராமசாமி முதல் வண்ணதாசன் வரை அனைவருக்குமே எழுதியிருக்கிறேன். நாங்கள் எல்லாம் இலக்கியவாசகர்கள் அல்லவா?

சுஜாதாவுக்கு ஒருமுறை எனக்கு வந்த வாசகர் கடிதம் ஒன்றைக் காட்டினேன். டார்த்தீனியம் குறித்து வந்த எட்டு பக்க கடிதம்.  அந்த வாசகர் மிக அபூர்வமான ஒரு நிகழ்வைச் சொல்லியிருந்தார் அதை வாசிக்க கையில் வாங்கியதுமே ‘இப்டி எல்லாம் எழுதுறாங்களா” என்று அவர் கேட்டார்.  வாசித்துவிட்டு ‘இதை நான் எழுதறேன்’ என்றார். கதையாக பின்னர் எழுதினார்.

சுஜாதாவுக்கு அத்தகைய வாசகர்கடிதங்கள் மிக அரிதாகவே வந்தன. அவருடைய எழுத்து சுவாரசியமானது, ஆனால் நுண்ணுணர்வுள்ள எவரையும் அது தீவிரமாகப் பாதிப்பதில்லை. நாட்கணக்கில் அலைக்கழியச்செய்து அவரிடம் எதையாவது சொல்லிவிடவேண்டும் என உந்துவதில்லை.

அவர் அதிகமாக எழுதிய வணிக இதழ்களின் சூழலில் வாசகர்கடிதம் என்பது ஒரு வகையாக மானசீகமாக வரையறை செய்யப்பட்டிருந்தது. ஏழெட்டு வரிகள். ‘அய்யா மாதவியைக் கொன்றுவிடாதீர்கள்’ என்ற வகை வெறும் உணர்ச்சிகள். ‘கொலையுதிர்காலம் சூப்பர்.  அது தலையுதிர்காலம் !!!’ என்பதுபோன்ற பஞ்ச்லைன்கள். இத்தகைய கடிதங்கள் எழுதுபவர்களுக்கு ஆத்மார்த்தமாக ஒன்றும் சொல்வதற்கில்லை. தங்களை தாங்களே கண்ணாடியில் பார்த்துக்கொள்வதுபோன்ற கடிதங்கள் அவை.

தீவிர இலக்கியத்திற்கும் சுஜாதா எழுத்திற்கும் ஆதாரமான வேறுபாடு உண்டு. [உண்மையிலேயே அந்த வேறுபாடு ஒருவருக்குப்புரியவில்லை என்றால் அவருக்கு மேற்கொண்டு இலக்கியம் சார்ந்த எதையுமே எவ்வகையிலும் எவராலும் புரியவைக்க முடியாது]. சுஜாதாவின் கதைகள் வாசகனின் புத்திசாலித்தனத்துடன் விளையாடுபவை, அவனை தூண்டுபவை. இலக்கியம் வாசகனின் புத்திசாலித்தனத்தை ஒரு தடையாக, ஒரு தேவையில்லாத உறுப்பாகவே கருதும்.  அது விழிப்புமனம் சார்ந்தது. இலக்கியம் ஆழ்மனதுடன் தொடர்பாட முயலும் கலை.

மெல்லிய விளையாட்டு ஒன்றின் வழியாக வாசகனை நம்பவைத்து அவன் விழிப்புமனதை விலகிநிற்கச்செய்து  வாசகனுக்குள் புகுந்து அவன் கனவுகளுடன் ஆழத்து உணர்வுகளுடன் பேசுகிறது இலக்கியம். அவன் அறவுணர்வை நோக்கி, அவன் வாழ்க்கைத்தரிசனத்தை நோக்கி அது ஊடுருவிச்செல்கிறது. அவனை நிலைகுலையச் செய்கிறது.

பெரும்பாலான வாசகர்கடிதங்கள்  ஆழ்ந்த வாசிப்பின் ஒரு படிநிலை மட்டுமே. புனைவு உருவாக்கும் அந்த நிலைகுலைவை திரும்ப சமன்செய்துகொள்ளும் முயற்சியையே வாசிப்பு என்கிறோம். யோசித்து, நமக்குள்ளே வாதிட்டு, கதையை உடைத்து மீண்டும் தொகுத்து நாம் நம்மை மீட்டுக்கொள்கிறோம். அதன் ஒருபகுதியாக அவ்வனுபவத்தை எழுதுகிறோம்  அல்லது எவரிடமேனும் சொல்கிறோம். வாசகர்கடிதமும் அதன் ஒரு பகுதிதான். ஆசிரியரிடமே பேசலாம் என தோன்றும்போது எழுதுகிறோம்.

வாசகர் கடிதம் என்பது வாசகரின் ‘கருத்து’ அல்ல. அது பாராட்டோ மதிப் பீடோ கூட அல்ல. அது வாசகர் படைப்பை உள்வாங்கிக்கொள்ள முயலும் ‘செரிமானச் செயல்பாடு’ அது. எப்படியெல்லாம் ஒரு படைப்பு வாசிக்கப்பட இயலும் என அவை காட்டுகின்றன. ஒவ்வொரு மானுட உள்ளமும் ஒவ்வொன்று என்பதனால் வாசிப்புகள் முடிவிலாதவை. மேலும் மேலுமென வாசிப்புகளை உருவாக்குவதே நல்ல படைப்பின் இயல்பு. பன்முகவாசிப்புத்தன்மை என அதை  நவீன இலக்கியவிமர்சனத்தில் சொல்வார்கள்.

படைப்பில் உள்ள மானுடத்தருணம், அதன் பண்பாட்டு உட்குறிப்புகள் ஆகியவை வாசகனின் ஆழ்மனதை பாதிப்பதன் வழியாக நிகழ்கிறது இந்த வாசிப்புவிரிவு. எந்த புனைவும் ஒருவகையில் ஓர் உரையாடலே. அவ்வுரையாடலின் நீட்சிகளே விவாதங்கள் விமர்சனங்கள் கடிதங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஆழம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 17