திரும்பி நோக்கி அறிவது

dr

உள்ளத்தின் நாவுகள்

அன்புள்ள ஜெ,

நலம்தானே? நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு உங்களுக்கு எழுதுகிறேன்.

நீங்கள் உள்ளத்தின் நாவுகளில் மிக ஆழமாக எழுதிய விஷயம் எனக்கு மிகவும் லேசாக, கொஞ்சம் நகைப்புக்கு உரியதாகவும் ஒரு கனவுச் சம்பவமாக சமீபத்தில் நிகழ்ந்தது.

“நம் அந்தரங்கப் பகற்கனவுகளில் நாம் யார்?”, என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.  பகற்கனவில்லாம் இல்லை; ஒரு நிஜக்கனவேதான் கண்டேன் நான்.

நேற்று முன்தினம் அதிகாலை ஒரு கனவு. அந்தக் கனவு தந்த இன்ப அதிர்ச்சியில் ஒரு வாரயிறுதியின் காலைத் தூக்கக்கத்தைத் தொலைத்துவிட்டு படுக்கையில் இருந்து எழுந்தும்

எழாமலும் நான் வாசித்தது உள்ளத்தின் நாவுகளை. இது என்ன இப்படியொரு இணைநிகழ்வு என இன்னமும் வியந்து கொண்டிருக்கிறேன்..

கனவினில் என் உறவினர் ஒருவருடன் நான் ஏதோவொரு பண்பலை வானொலியில் விவாதம் ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கலைத்துறை சார்ந்த இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் பேசும் ஒரு விஷயத்தின் பொருள் குறித்து அங்கே வானொலிக்கு வெளியே நாங்கள் இருவரும் விவாதிக்கத் துவங்குகிறோம். என் உறவினர் ஒரு விளக்கம் தருகிறார். பதிலுக்கு நான் ஒரு வியாக்கியானத்தை முன் வைக்கிறேன்.

அந்த வியாக்கியானமானது நான் நான் என நம்பிக்கொண்டிருக்கும் என் புத்திசாலித்தனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு பெரும் சிந்தனையாகத் தெரிகிறது. இப்போது யோசித்தால் அந்த வானொலி விவாதமும், அதற்கு நான் தரும் விளக்கமும் எல்லாம் புகையாகக் கரைந்து மறந்துவிட்டிருக்கிறது. ஆனால், என்னை நானே நம்பாத வண்ணம் நான் முன் வைக்கும் வியாக்கியானம் மட்டும் நிஜம்.

“டேய்! நீ இவ்ளோ புத்திசாலியாடா?”, என்று என்னை நானே நம்பாத அதிர்ச்சியில் என்னை நானே தூக்கத்திலிருந்து கலைத்து எழுப்பி விட்டிருக்கிறேன்.

ஒருவேளை இந்த ஆனந்தா அல்லது அந்த ஆனந்தா என்று பெரிய ஆள் ஆகியிருக்க வேண்டியவன் சென்னையில் பொட்டி தட்டிக் கொண்டிருக்கிறேனோ என்று என்மேல் எனக்கே சில நிமிடங்களுக்குக் கழிவிரக்கம் தோன்றியது என்றால் பாருங்கள்.

அன்புடன்,

கிரி ராமசுப்ரமணியன்

***

அன்புள்ள கிரி

கனவுகளைப்பற்றி ஒவ்வொருவருக்கும் விரிவாகச் சொல்வதற்கு இருக்கும். நான் அவதானித்தவரை கனவுகளின் ஊற்றுக்கள் இரண்டு. ஒன்று,  வழக்கமாக அறிவியலாளர்களால் விளக்கப்படுவது. அதாவது கனவுகள் என்பவை நம் உள்ளம் புறச்சூழலுக்கு அளிக்கும் எதிர்வினை.  கனவுகள் அரைத்துயிலில் நிகழ்பவை. நாம் நெடுநேரம் தூங்கினால் கனவுகள் அதிகம் வருகின்றன. நாம் களைப்படைந்திருந்தால், நோயுற்றிருந்தால். பதற்றம் கொண்டிருந்தால். அன்னியச்சூழலில் துயின்றால் கனவுகள் வருகின்றன. அந்தச்சூழலை நம் தூக்கத்தைக் கலைக்காதபடி உள்ளம் கனவுகளாக ஆக்கிக்கொள்கிறது.

ஆனால் இது ஒரு பக்கம் மட்டுமே. கனவுகளுக்கும் நம் ஆசைகள், ரகசியங்கள், ஆணவம், அச்சம், தரிசனங்கள் போன்றவற்றுடன் உள்ள உறவை, நம் ஆளுமை கனவுகளால் எப்படி வெளிப்பாட்டைக்  கண்டுகொள்கிறது என்பதை மேலே சொன்ன எளிமையான விளக்கம் எவ்வகையிலும் கண்டுகொள்வதில்லை. நுண்ணுணர்வுள்ளவர்கள், கற்பனைசெய்பவர்கள், உணர்ச்சிகரமானவர்கள் கனவுகளால் ஆனவர்கள். ஆகவே கனவுகள் இன்னும் நெடுங்காலம் மானுடம் ஆர்வத்துடன் கவனிக்கும் ஒரு ரகசியவெளியாகவே இருக்கும் என நினைக்கிறேன். மானுடப்படைப்பூக்கத்தின் வேர்கள் பரவிய நிலம் அது.

இளமை முதலே நான் நிகழ்வாழ்க்கை அளவுக்கே கனவுகளிலும் வாழ்பவன். பொதுவாகவே சற்று அதிகமாகத் தூங்குபவன். இன்றும் இரவிலும் பகலிலுமாக மொத்தம்  எட்டு ஒன்பது மணிநேரம் தூங்குகிறேன். ஆகவே கனவுகள் அதிகம். கனவு இல்லாத நாளே மிகக்குறைவு. என் கனவில் மிக இனியவை நிலக்காட்சிகள். நான் சென்றே இராத இடங்கள். எவ்வகையிலும் அறிந்திராத மலைகள், ஆறுகள், பாலைவனங்கள்… நான் பயணம் செய்வதே கனவுகளுக்கு இந்த பிம்பங்களை அளிப்பதற்காகத்தான்.

சிலகனவுகள் அடிக்கடி வருகின்றன. நீரில் மூழ்கிப்போய் ஒரு புராதன நகரைப்பார்ப்பது. நீரில் கிடக்கும் அதிபிரம்மாண்டமான சிலை. இவை கொற்றவை முதல் பல நாவல்களில் வந்துள்ளன. மண்ணுக்கு அடியில் வேர்களால் பின்னப்பட்டு கிடக்கும் பலநூறு சிலைகள். மண்ணுக்கு அடியில் சிதல்புற்று போன்ற நகரங்கள். இக்கனவுகள் என் மிக இளமையிலேயே வந்துவிட்டன

கனவுகள் தொடர்ச்சியாக வருவது எனக்கு.  ஒருமுறை வந்த கனவு சற்று மாறி மறுநாளும் வரும். ஒருமுறை கண்ட கனவின் நீட்சி தொடர்கதைபோல பல கனவுகளாக வந்துகொண்டே இருக்கும்.  விஷ்ணுபுரம் நாவலின் பல பகுதிகள் நேரடியாக கனவுகளை எழுதி வைத்தவை. அர்த்தபூர்வமாக இணைக்கக்கூட நான் முயலவில்லை. கொற்றவை, வெண்முரசில் எல்லாம் என் கனவுகள் உண்டு

ஆச்சரியமான பல உண்டு. கதை எழுதி அனுப்பவேண்டிய கட்டாயம். கனவில் எனக்கு அந்த இதழ் தபாலில் வரும். அதில் படத்துடன் முழுமையாகவே என் கதை பிரசுரமாகியிருக்கும். விழித்தெழுந்து ஏறத்தாழ அதே கனவை எழுதிவிடுவேன். பலகதைகள் அப்படி முழுமையாகவே கனவிலெழுந்தவை. எழுதியகதைகள் மீண்டும் புதியவையாக கனவில் பிரசுரமாவதும் உண்டு

உண்மைமனிதர்கள், உண்மைநிகழ்வுகள் கனவில் வருவது மிகக்குறைவு. ஆனால் விலங்குகள் அதே கண்களுடன் கனவில் வரும். பசுக்கள் நாய்கள். தெருநாய்கள்கூட! அம்மா அவ்வப்போது கனவில் வந்து சிலநாட்களை அலைக்கழியச்செய்துவிட்டு மறைந்துவிடுவாள். அவை கொடுமையான நாட்கள். நித்யா முழு உருவுடன் கனவில் வருவதே இல்லை. அவருடைய காலடிகள் ,கைகள் ,அவர் எழுதிய பக்கங்கள், அவருடைய குரல் கனவில் எழுவது அடிக்கடி நிகழ்வது.

என்னை கைக்குழந்தையாக நான் உணரும் கனவுகள் பல வந்துகொண்டிருக்கின்றன சமீபகாலமாக. சிறு குழந்தையாக என்னை அம்மாவோ அக்காவோ தூக்கிக்கொண்டு செல்வதுபோல.  பாலியல் கனவுகள் இன்று அனேகமாக இல்லை.

ஆனால் ஆச்சரியமாக எனக்குக் கொடுங்கனவுகள் மிகமிகக்குறைவு. உடல்நலமில்லை என்றால் மட்டும் விழுவதுபோன்ற கனவுகள்.  மிக அபூர்வமாக துரத்தப்படுவது போல, ஆடையில்லாமலா கிவிடுவதுபோலக் கனவுகள்.

கனவுகள் இருப்பதுவரை புனைவு எழுத எந்த மொழி – நிகழ்வு பஞ்சமும் வராது என நினைக்கிறேன். ஆகவே உங்கள் கனவுகளை கவனியுங்கள். அதைத்தொடர்ந்து செல்லுங்கள். வெளியே நீங்கள் அறிந்துகொள்ள பெரிதாக ஏதுமில்லை

ஜெ.

முந்தைய கட்டுரைஆழமற்ற நதி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 16