ஆழம் -கடிதங்கள்

Bharathapuzha

ஆழமற்ற நதி [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

 

“மனசறிஞ்சு செய்தாத்தான் பாபமும் புண்ணியமும்” என்றார் நம்பூதிரி “பிராயச்சித்தமும் மனசறிஞ்சு செய்யணும்” கதிர் மனம் அறிந்து தானே இருக்கிறது,

 

ஆனால் இது அவன் செய்தது இல்லை, இந்த சடங்குகள் அனைத்தும் அந்த கொலையை திட்டமிட்ட மற்ற அனைவருக்கும் தான். முத்துசாமி மூக்கு பொடி கேட்டதும் சுந்தரேசன் முகம் மலர்ந்து விடுகிறார், அவர் மட்டும் அல்ல பொதுவாக போதை பொருள் ஒருவர் கேட்டால் உடனே மகிழ்ச்சியாக அவர்களையும் அந்த வட்டத்திற்குள் இழுத்து விடுகிறார்கள் ஏன் அப்படி?. மற்ற எதையும் அவ்வளவு எளிதில் பெற்று விட முடிவதில்லை.

 

உண்மையில் கதிர் போல தான் நாம் எல்லோரும் கார் ஸ்செட்டில் தான் இருக்கிறோம், தேவைகள் எழும்போது தான் குருதி வழி சொந்தங்கள் தேவையாகிறது.

கதிர் ஆழமற்ற அகம் என நினைத்த அனைவருக்கும் ஒரு துளி கண்ணீர் பேரிடி கொடுத்கிறது, ஆழமற்றது நதி அல்ல சராசரி மனித மனம் தான். இந்த மன்னனில் நெளியும் உயிர்கள் அனைத்தும் சுய பிரஞ்சையோடு தான் இருக்கிறது நமக்கு தான் எதுவும் புரிவதில்லை. நமது வீடு ஜன்னல்கள் திறந்து இருந்து என்ன பயன்?

 

 

ஏழுமலை

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

தங்களுடைய சமீபத்திய சிறுகதை ‘ஆழமற்ற நதி ‘ படித்தேன் .  நீண்ட நேரம் மனது அக் கதையையே சுற்றி வந்தது .  தனக்கென்று வந்து விட்டால் பின் எல்லாமே இரண்டாம் பட்சம் தான் .  பாபம் புண்ணியத்தை பற்றிய பெரும் சர்ச்சையை எனக்குள் எழுப்பியது இக் கதை .  மகனை மரண வேதனையில் கோமாவில் உயிருடன் வைத்திருப்பது புண்ணியமா ?  அல்லது சிகிட்சையை நிறுத்தி விடுவது பாவமா ?.  மனைவியும் மகனுமே பொறுப்பேற்க முன்வரவில்லை, மறுக்கவும் செய்கிறார்கள் .  தந்தையை கொன்ற பாவத்தை, பரப்ரம்மம் போன்ற,  பிறவியிலேயே ஏதுமறியாத அந்த மூளை வளர்ச்சியற்ற வாலிபனை ஏற்க வைக்கிறார்கள் .  காசிநாதன் தன் மகனை தன் கையால் கொன்றிருந்தால் கூட இவ்வளவு பெரிய பாவத்தை அடைந்திருக்க மாட்டார்.  நீதிபதிக்கு தன் பாவ, புண்ணியங்களையே நிறுத்து பார்க்க முடியவில்லை.  புற காரணிகள் எதுவுமே தீண்ட முடியாத கதிரை அழ வைத்த சக்தி எது ?  எதற்காக அழுதான் ?  பிராயச்சித்தம் செய்வதையே பாவமாக்கி கொள்வதற்கு மனிதர்களால்  மட்டும் தான் முடியும் போல் .

 

அன்புடன்

 

பா .சரவணகுமார்

நாகர்கோவில்

 

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

பாவத்திற்கு அப்பாற்பட்ட ஒருவன் கதிர்.  அவன் விசும்பல்-அழுகை அவனுடையது அல்ல. அவனுக்கு தான் இழைத்து விட்ட அநீதிக்காக இறந்த அவன் தந்தை அழும் அழுகை.  அதிகம் பரிகாரம் தேட வேண்டிய நிலையில் உள்ளவர் அவரே, அவனுக்கு அநீதி இழைக்கும் சிறுமை கொண்ட நீதிபதியும் உறவினரும்.  இக்கரையில் உறவினர் கொள்ளும் குற்றவுணர்வு அக்கரையில் இறந்து போனவரின் குற்றவுணர்வு இரண்டுக்கும் இடையே இருக்கும் குற்றமற்ற ஆழமற்ற நதி போன்றவன் கதிர்.  முதலில் கதிரின் விசும்பல் கண்டு அழுகை வந்தது, அது அவனுடையது அல்ல என்ற எண்ணம் தோன்ற மனம் லேசாகிவிட்டது.  எந்த சடங்கையும் விட அறம் வல்லது, அதன் விசையில் அது செயல் புரிவது.

அன்புடன்,
விக்ரம்அன்புள்ள ஜெயமோகன்,

 

ஆழமற்ற நதி சிறுகதையை நவீனத்துவ அழகியலின் சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம். அதன் ஆரவாரமில்லா மொழிநடையும் அது ஏற்படுத்தும் உணர்வுநிலையும் அசோகமித்திரனின் சிறுகதைகளை நினைவூட்டிக்கொண்டே இருந்தது.

 

சுருக்கமாகச் சொன்னால் இக்கதை சில காட்சிகளை முன்வைத்து விலகி விடுகிறது. அதன் மூலம் வாசகன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தரிசனத்திற்கு  தேவையான குறைந்தபட்ச குறிப்புகளை மட்டும் அளிக்கிறது.

 

கதை படித்து முடித்தவுடன் எனக்கு இரு காட்சிகள் மட்டும் மீண்டும் மீண்டும் வந்து நின்றது. கதிரின் கையைப் பிடித்து கைரேகை வைப்பதும் அதற்கு சமானமாக அவனை பிராயச்சித்தம் செய்ய வைப்பதும்.

 

அதேபோல் அந்த ஆழமற்ற அகன்ற நதியில் மறைந்து கொள்ள முனைவது போல் அக்குடும்பம் முழுகி எழுவதும் அறுபக்கமும் அடைபட்ட கதிரின் ஆழத்திலிருந்து எழும் கண்ணீரும்.

 

ஆனால் இக்ககதை மறைத்து வைத்ததை கண்டுபிடிக்கும் எளிய விளையாட்டாக மாறாமல் ஓர் இலக்கியமாக மாறுவது இதன் இயற்கைச் சித்தரிப்பால். அதுகொள்ளும் கவித்துவத்தால். குறிப்பாக ஆரம்பத்தில் காட்டப்படும் கரிய நதியும், இறுதியில் தோன்றும் கதிரின் ஒளியால் மின்னும் நதியும் அதன்மூலம் உயிர்பெறும் கரையோரத்து இலைகளும். இக்காட்சி கதிரின் பெயரோடு இணைத்த விதத்தால் அவனை ஓர் எளிய பரிதாமிக்க உயிராக அல்லாமல் நாம் அனைவரும் உயர்ந்து நோக்கும் குணநலங்கள் பெற்ற மனிதனாக மாற்றுகிறது.

 

இதன்மூலம் அவனது உடல் குறைபாடுகள் குறியீட்டு அர்த்தம் பெற்று வேறொரு தளத்திற்கு நகர்கிறது. உண்மையில் உள்ளிருக்கும் ஆன்மா வறண்டு போகாமல் உயிர்ப்புடனிருக்க சில சுவர்களை எழுப்ப வேண்டியதிருக்கிறது. பணத்தாலும், அதிகாரத்தாலும், சுயநலத்தாலும் நிரப்பட்டு நம் அறவுணர்வின் ஆழம் குறைந்து கொண்டே வறுகிறது. நம் குற்றவுணர்வை அச்சிறிய ஆழத்தில் விழுந்து புரண்டு நம் பாவத்தை கழுவிக்கொள்ளவோ நம்மை மறைத்துக் கொள்ளவோ முனைகிறோம்.

 

அன்புடன்,

பாலாஜி பிருத்விராஜ்
கோவை

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 16
அடுத்த கட்டுரைவாசகர் கடிதம், சுஜாதா, இலக்கியவிமர்சனம்