கோவையின் பண்பாட்டுமுகம்

777
பாலசுந்தரம்

டி.பாலசுந்தரம் கோவையில் நான் மிக மதிக்கும் ஆளுமைகளில் ஒருவர். இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவே அவரை எண்ணுகிறேன். கோவையின் நன்னெறிக்கழகம் தமிழ்நெறிச்செம்மல் விருதை அவருக்கு அளிக்கும் செய்தியைச் சொன்ன நண்பர் நடராஜன் நான் அவரை வாழ்த்திப்பேசவேண்டும் என கோரியபோது அதை ஒரு கௌரவமாகவே எடுத்துக்கொண்டேன்.

பொதுவாக என் இயல்பில் பெரியமனிதர்களுடனான உறவைத் தவிர்ப்பேன். என் உள்ளம் இயங்கும்தளத்தில் இல்லாதவர்களுடன் சம்பிரதாயமான உறவை மேற்கொள்வது எனக்கு மிகக்கடினம். என் ஆணவமும் ஒரு காரணமாக இருக்கலாம், நான் என்னை மையமாக்கி சிந்திப்பவன். ஆணவம் எழுத்தாளனைப்பொறுத்தவரை ஒரு படைப்பூக்க ஊற்று என நினைக்கிறேன்.எங்கும் வளையாமல் இதுவரை வந்தாகிவிட்டது.

viza1

வளைவதிலொன்றும் பிழை இல்லை. அகங்காரத்தைக் கடந்து வளைவதற்குரிய இடங்கள் அமைதல் பெரிய பேறு. ஆனால் தமிழகத்தின் மனநிலைகள் நிலப்பிரபுத்துவ காலகட்டத்தைச் சேர்ந்தவை. செல்வந்தர்கள் தங்களை வள்ளல்களாகவும் இலக்கியவாதிகளையும் கலைஞர்களையும் பாடிப்புகழ்ந்து பரிசில்வாழ்க்கை வாழ்பவர்களாகவும் நினைக்கிறார்கள். சென்ற இடங்களிலெல்லாம் செல்வத்தின் பொருட்டே சிறப்பை எதிர்பார்க்கிறார்கள்.

மறுபக்கம் இங்கே பல தலைமுறைகளாக எழுத்தாளர்கள், மேடைப்பேச்சாளர்கள், கலைஞர்கள் தங்களை பணிந்து குழைந்து நிற்பவர்களாகவே வெளிக்காட்டி ஒரு மரபை உருவாக்கியிருக்கிறார்கள். எழுத்தாளனுக்குரிய ஆணவம் இங்கே வெற்றுச்சீண்டலாகவே கொள்ளப்படும். நான் ஆணவத்தை ஆளுமையெனப் பயின்ற மாபெரும் மலையாள எழுத்தாளர்களை இவ்வகையில் என் முன்னோடிகளாகக் கொண்டவன்.

viza5
வானவராயர் பெற்றுக்கொள்ள சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் வேலுமணி நரசிம்ம சதகத்தை வெளியிடுகிறார்

இக்காரணத்தால் கோவையில் விஷ்ணுபுரம் விருது விழா ஒருங்கிணைக்கப்பட்டபோது கோவையின் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியமான எவரையும் நாடவில்லை. பொதுவான அழைப்பாளர்களாக மட்டுமே அவர்களை அணுகியிருந்தோம். முழுக்கமுழுக்க விஷ்ணுபுரம் நண்பர்களின் நிதியுதவியால்தான் விழாக்கள் நடந்தன. மெல்ல கோவையில் நிகழும் முக்கியமான கலாச்சார நிகழ்வுகளிலொன்ன்றாக விஷ்ணுபுரம் விருது ஆகியது.

சில ஆண்டுகளுக்கு முன் விஷ்ணுபுரம் விருதுவிழாவை ஒட்டி நிகழ்ந்த இலக்கிய விவாத அரங்கில் பார்வையாளராகக் கலந்துகொள்ள டி.பாலசுந்தரம் நண்பர் நடராஜனுடன் வந்தார். அவரை நடராஜன் அறிமுகம் செய்தபோது ஆச்சரியமாக இருந்தாலும் அவருக்காக சிறப்பாக எந்தக்கவனிப்பும், அறிமுகமும் செய்யவில்லை. அறிவுசார் அவையில் ஒருவர் அவருடைய அறிவால் மட்டுமே அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதே என் எண்ணம். அவர் அவையில் அமர்ந்து விவாதங்களை கவனித்தார். பின்னர் தனிப்பட்ட முறையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அவருக்கான இடம் அறிவார்ந்த அவையில் எளிதில் இயல்பாகவே உருவாகிவிடும் என்பதைக் கண்டேன்.

viza6
இயககோ சுப்ரமணியம் விருதுவழங்குகிறார்

மிகவிரைவிலேயே இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் மதிப்பிற்குரிய அறிவார்ந்த முன்னோடிகளில் ஒருவராக அவர் ஆனார்.  முக்கியமான காரணம் அவருடைய விரிவான வாசிப்பு மற்றும் நிதானம். வைணவம் சார்ந்த மரபிலக்கியம், நவீன இலக்கியம், தொழில்துறை, பொருளியல் சார்ந்த அவருடைய அறிதல் வியப்பூட்டுவது. இன்றைய இளைய இலக்கியவாசகர்களின் சூழலில் இந்தத்தளங்களில் விரிவான அறிதலுடையவர்கள் மிக அரிது. எங்கள் அவைகளில் அவருடைய குரலுக்கு என்றும் முதன்மை மதிப்பு உண்டு.

டி பாலசுந்தரம் கோவையின் பாரம்பரியம் மிக்க தொழிற்குடும்பங்கள் ஒன்றை சேர்ந்தவர். பொறியியல் கற்றவர். நியூயார்க்கில் வணிகநிர்வாகம் கற்றவர். இன்று கோவையின் முதலீட்டு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். பல பொது அமைப்புகளில் தலைமைப்பதவி வகிப்பவர். கூடவே மரபிலக்கிய ஆர்வலர். நவீன இலக்கிய சிந்தனைளுடன் அணுக்கமான உறவுள்ளவர்.

ஒருவகையில் இத்தகைய முன்னோடிகள் கோவையில் இருந்திருக்கிறார்கள். தொழில்துறையிலும் அறிவுத்துறையிலும் ஒரேசமயம் முன்னோடிகளாக மைந்தவர்களின் நிரையில் முதல்பெயர் சேலம் பகடால நரசிம்மலுநாயுடு. கோவையின் மில்தொழிலின் முன்னோடி. கூடவே பிரம்மசமாஜத்தின் தமிழகத்தலைவர். இதழியல் முன்னோடி. இனவரைவியலாளர். பயண இலக்கிய முன்னோடி. பூ.சா.கோ கல்விநிறுவனங்களின் நிறுவனரான ஜி.ஆர்.தாமோதரன். டி.பி.அவர்களை அந்த நிரையில்தான் வைப்பேன்.

viza9
இயககோ சுப்ரமணியம் பேசுகிறார்

டி.பாலசுந்தரம் கோவையின் பெரும்பாலான பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையமாக இருக்கிறார்- இறுதியாக கோவை புத்தகக் கண்காட்சி வரை. இன்று கோவை ஒரு பண்பாட்டு மையமாகத்திரண்டு வந்துள்ளதற்குப்பின்னால் அவரைப்போன்ற சிலருடைய பண்பாட்டு ஆர்வம் முக்கியமான காரணம்.

கோவையில் நேற்று [24- 9-2017] நிகழ்ந்த விழாவில் அவருக்கு நன்னெறிக்கழகம் அளிக்கும் தமிழ்நெறிச்செம்மல் விருது வழங்கப்பட்டது. நா. மகாலிங்கம்,மா.ரா.பொ.குருசாமி போன்றவர்கள் செயல்பட்ட அமைப்பு இது. தமிழாய்வாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பதற்காகத் தொடங்கப்பட்டது. பின்னர் அனைத்துத் தளங்களுக்கும் செயல்பாடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

viza2

மிகையான பாராட்டுரைகளும் செயற்கையான சம்பிரதாயங்களும் இல்லாத சுருக்கமான விழாவில் கொடிஷியா அமைப்பின் நிறுவனரான டாக்டர் வரதராஜன் அவர்களும் இயககோ சுப்ரமணியம் அவர்களும் டி.பாலசுந்தரம் பற்றிப் பேசினர். பேரா.இருசுப்பிள்ளை அவர்கள் வாழ்த்துரை வாசித்தார்.

டி.பாலசுந்தரம் அவர்கள் பழைய தமிழிலக்கியங்களில் இருந்து தொடங்கி நவீனச்சூழல் வரை வந்து சேர்ந்த ரசனையும் நகைச்சுவையும் முயங்கிய உரை ஒன்றை வழங்கினார். அந்தச்சிற்றுரைக்குள் இயல்பாக வந்தமைந்த வெவ்வேறு வகையான நூல்களின் வரிசை அவருடைய ஆளுமையை வெளிக்காட்டுவது. எப்போதுமே அவரிடம் காண்பது இது மிக மாறுபட்ட அசலான கோணத்தில் நூல்களைச் சென்று தொட்டுத்திறக்கும் பார்வை.

8

நான் தொழிலதிபர்களின் சமூகப்பொறுப்பு என்னும் தலைப்பில் டி.பாலசுந்தரம் அவர்களை முன்னுதாரணமாக முன்வைத்துப்பேசினேன். மரபார்ந்த தளங்களில் நம் பெருவணிகர்களும் செல்வந்தர்களும் செய்துவந்த பங்களிப்புகள் இன்று எவ்வாறு வெறும் ஆடம்பரங்களோ சம்பிரதாயங்களோ ஆக மாறிவிட்டன என்றும் இன்றையசூழலில் செய்யக்கூடுவன என்ன என்பதும் என் உரையின் சாரம்.

விழாவில் சேஷப்ப கவியின் நரசிம்ம சதகம் என்னும் தெலுங்கு நூலை டி பாலசுந்தரம் தமிழாக்கம் செய்திருந்தார். அந்நூல் விழாவில் வெளியிடப்பட்டது

மனதுக்கிசைந்த பெரியவர்களை வாழ்த்தும் வாய்ப்பு என்பது ஒரு பேறு. இந்நாள் அதனூடாக நிறைவுற்றது.

முந்தைய கட்டுரைநாவுகள் – கடிதம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13