உள்ளத்தின் நாவுகள்
அன்புள்ள ஜெ
உள்ளத்தின் நாவுகள் மிக முக்கியமான கட்டுரை. தியான மரபிலோ இலக்கியத்திலோ கொஞ்சம் ஆழமாகச் சென்று தன் உள்ளத்தைக் கவனித்தவர்கள் இதை எளிதில் புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன். உள்ளம் என்பது உருமாறிக்கொண்டே இருப்பது. வெளிச்சூழலைப்பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி . ஆனால் அந்தக்கண்ணாடி அதற்கு முன்பு அதிலிருந்த பிம்பங்களையும் ஞாபகம் வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப நெளிந்து வளைந்துகொண்டும் இருக்கிறது. உண்மையில் கன்ஸிஸ்டென்ஸி என்ற ஒன்றை உருவாக்குவது தியானம் மூலம் மட்டுமே முடியும். அதுவும் உள்ளத்தின் இயல்பு அல்ல. தியானம் கன்ஸிஸ்டென்ஸியை கற்பிதம் செய்து மனதுக்கு அளிக்கிறது. மனம் அதை நடிக்க ஆரம்பிக்கிறது அவ்வளவுதான்
சத்யநாராயணன்
***
ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவன். அதற்கு முன்னால் ஜெயகாந்தனின் விசிறி. ஜெயகாந்தன் மறைந்தபோது நீங்கள் எழுதிய அஞ்சலிக்கட்டுரைகள் வழியாகவே நான் மீண்டும் வாசிக்க ஆரம்பித்தேன். உங்கள் தளத்தை தினமும் வாசிக்கிறேன். உள்ளத்தின் நாவுகள் கட்டுரை மிகவும் பிடித்திருந்தது. அதைப்பற்றி என் மனப்பதிவுகள் சிலவற்றைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
நான் காவல்துறையில் இருந்த காலத்தில் மூன்றாம்முறையை பயன்படுத்தி கைதிகளை விசாரிப்போம். நிறைய அடிப்போம். குறைவாக உணவு கொடுப்போம். இரண்டுமூன்றுநாட்கள் வரை தூங்க விடமாட்டோம். ஒரு புள்ளியில் கைதி உடைந்துவிடுவான். சாராயம் கொடுக்கமாட்டோம். கைதி தூங்கிவிடுவான். எலும்பில் படும்படி நாலைந்து அடி கொடுத்தால் வலிதாளாமல் விழித்திருப்பான். அதோடு அரைமணிநேரத்திற்கு ஒருமுறை எழுப்புவோம். மனம் உடைந்து மயக்கநிலை வந்தபின் வாக்குமூலம் கொடுப்பான்
அதிலே ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அவன் செய்த கொலையை அல்லது குற்றத்தைச் சொல்ல ஆரம்பிப்பான். சொல்ல ஆரம்பித்ததுமே குற்றவுணர்ச்சி அடைவான். மன்னிப்பு கேட்பான். அப்படியே ஏதேனும் ஒரு வழியில் ரொம்ப சென்றுவிடுவான். நிறைய கொலைகள் குற்றங்களைச் செய்ததாகச் சொல்லிவிடுவான். ஆரம்பத்தில் ஆகா சீரியல்கில்லரை பிடித்துவிட்டோம் என்று உற்சாகம் ஆகிவிடுவோம். அதை கேட்க மேலும் அடிப்போம். அவன் சொன்ன தடயங்களைத்தேடிப்போனால் ஒன்றுமே சிக்காது. வாரக்கணக்கில் விரயம் ஆகும். நார்மல் ஆனதும் அவன் சும்மா சொன்னதாகச் சொல்வான். அல்லது சொல்லவே இல்லை என்று சொல்வான். நம்மை அலைக்கழிக்க தந்திரமாக அதைச் சொல்கிறான் என்று தோன்றும். அதனால் மேலும் அடிப்போம். ஆனால் உண்மையில் அவன் அந்த புனைவை அவனை அறியாமலெயே நீட்டிக்கொண்டு செல்கிறான் என்று பின்னர் தெரிந்துகொண்டேன். இந்த வரி நீங்கள் சொல்லி எடுத்துக்கொண்டது. அந்த மனநிலைதான் அப்படி சொல்லவைக்கிறது என்பதே நான் புரிந்துகொண்டது
ஆச்சரியமென்னவென்றால் பெண்கள் தங்களை கற்பழித்துவிட்டதாகச் சொல்வார்கள். சின்னவயதில் கற்பழித்ததாகச் சொல்வார்கள். திருடன் வந்து கற்பழித்ததாகச் சொல்வார்கள். கதறி அழுது மயக்கமெல்லாம் போடுவார்கள். கையை கடித்துக்கிழித்துக்கொண்ட ஒரு பெண்ணையும் பர்த்தேன்.நிறையபேர் அவர்களின் அப்பாவோ அண்ணனோ தாய்மாமனோ ரேப் செய்துவிட்டதாகச் சொல்வார்கள்.அதை நம்பி அவர்கள் சொல்லும் ஆண்களை போட்டு அடிப்பது இன்றைக்கும் நடக்கும் விஷயம். ஆனால் பெரும்பாலானவர்களுக்குப் புரியாது. பெண்களுக்குச் சாமி வந்து அம்மன் வந்திருக்கேண்டா என்று சொல்வதுபோலத்தான் இதுவும் என்று நான் சொல்வதுண்டு.
உங்கள் கட்டுரை மிகவும் திறப்புகளை அளித்தது. கடிதத்தைப்பிரசுரிப்பதென்றால் என் பெயர் வேண்டாம்
ஆர்
***
ஜெமோ,
மிக ஆழமான உளவியல் பதிவு. உள்ளத்தின் நாவுகளும் அவ்வப்போது பேசவேண்டும். மூளையின் நாவுகள் பெரும்பாலும் நெடுங்காலமாக புனையப்பட்டதின் மொழியைத் தான் பேசும். அதிலும் ஒரு அமைப்பின் தலைமைக்கு இப்புனைவுகளே நான் எனறு நிறுவ வேண்டிய அழுத்தம் அதிகம். பல்வேறு சிந்தாங்களாலும் நம்பிக்கைகளாலும் வளர்த்தெடுக்கப்படுபவர்கள் அவர்கள்.
அப்புனைவின் புறத்தோற்றமாக நெடுங்காலமாக நீடிப்பது மிக கொடுமையான மற்றும் அவஸ்தையான ஒன்று. ஆகவே தான் பெரும் அமைப்புகளும் நிறுவனங்களும் தலைமயை குறிப்பிட்ட கால இடவேளையில் மாற்றிக் கொண்டே இருக்கும். மத அமைப்புகள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக உள்ளன. இந்நிலை மாறவேண்டும்.
இந்த தத்துவ மற்றும் அதையொட்டிப் பின்னப்பட்ட சித்தாந்தங்களின் குறைபாடுகளை உங்களின் ‘விஷ்ணுபுரம் ‘தொடங்கி ‘பின்தொடரும் நிழலின் குரல்’ வழியாக இன்றைய ‘வெண்முரசு’ வரை வெவ்வேறு தளங்களில் சுட்டிக் காண்பித்துள்ளீர்கள்.
‘சொல்வளர் காட்டில்’ வரும் தருமனின் உளச்சிக்கல்களும் அதையொட்டி
அவனுக்கு ஏற்பட்ட அறக்குழப்பங்களும் அஸ்தினாபுரத்து குடிகளுக்கு தெரிய வந்திருக்குமென்றால், பீஷ்மர் துரியோதனனை பாஞ்சாலியின் துகிலையுரிந்த குற்றத்திற்காக நொறுக்கி அள்ளியதைப்போல தருமனை இக்குடிகள் சிதைத்திருப்பார்கள். மகாபாரதமே அத்துடன் முடிவுக்கு வந்திருக்கலாம்.
உங்களின் நாவல்கள் வழியாக புரிந்து கொண்ட ஒன்றை இங்கு வெளிப்படுத்தியுள்ளேன்.
*பற்று*
எதையாவது பற்றிக்கொண்டு தான் வாழவேண்டியுள்ளது. அந்தப் பற்றுக்கு நெகிழும் தன்மை இல்லாதபோது, அது சித்தாந்தங்களாகவும், கொள்கைகளாகவும், வெற்று இலட்சியங்களாகவும் நம்முடன் பிணைக்கப்படுகிறது. நாமும் பற்றும் வெவ்வேறென்று உணரமுடிவதில்லை.
‘பற்று’ உருகி நெகிழ்ந்து கரைந்து உருமாறி இல்லாமல் ஆக வேண்டிய ஒன்று.
அன்புடன்
முத்து
***