உள்ளத்தின் நாவுகள்
அன்புள்ள ஜெ.
பலமுறை குடித்திருக்கிறேன்.. போதைமருந்தை இருமுறை உபயோகப்படுத்தி
இருக்கிறேன்.. அந்த அனுபவத்தில் நீங்கள் சொல்வது மிகவும் உண்மை..
குறிப்பாக போதைமருந்தில் என் உள்ளம் பல துகள்களாகச் சிதறி கிட்டத்தட்ட
ஒரு முடிவிலி நிலையில் வீழ்ந்தேன்.. மிக பயங்கர அனுபவம் அது… அந்த
நிலையில் என் கோலத்தை என் நண்பர்கள் வீடியோ எடுத்துக் காட்டியிருந்தால்
நானே என்னை வெறுக்க ஆரம்பித்திருப்பேன்..
இப்போது இருக்கும் சங்கராச்சாரியார் மீது எந்த மதிப்பும் எனக்கு இல்லை..
ஆனால், இந்த விஷயத்தில் அவருக்கு இழைக்கப்பட்டது மாபெரும் அநீதி என்பதில்
சந்தேகம் இல்லை..
நன்றி,
[இக்கடிதத்திற்கு மட்டும் என் பெயர் வேண்டாம்]
ஆர்
அன்புள்ள ஜெ,
நான் நீங்கள் சொல்லும் இந்த விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். உலகப்புகழ்பெற்ற ஒரு தொழிலதிபர் கொஞ்சம் தூள் ஏற்றிக்கொண்டதுமே தன்னை தோல்வியுற்றவன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று புலம்பி அழ ஆரம்பித்துவிடுவார். அவருடைய அந்த உணர்ச்சிகள் பொய் என்று அனைவருக்கும் தெரியும்
இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த புனைவுகள் மாறிக்கொண்டே இருக்கும். ஒரே புனைவு தன்னம்பிக்கையின் உச்சத்தில் ஆரம்பித்து இறங்கி இறங்கி தன்னிரக்கமாக ஆவதைக் கண்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்னால் செத்துப்போன தன் தங்கையை எண்ணி அழுவார். அவருக்கு துக்கமாக இருப்பவன் என்ற வேசம் பிடித்திருக்கிறது என நினைத்துக்கொள்வேன்
உண்மையில் போதைப்பொருட்கள் புதிதாக எதையும் செய்வதில்லை. போதையில் நிகழவன எல்லாமே சாதாரணமாக நம் மனதுள் நாம் செய்வதுதான். போதையில் அது வெளியே சிந்த விட்டுவிடுகிறோம். அதை எங்கே நிறுத்தவேண்டுமோ அங்கே நிறுத்தமுடியாமல் அடித்துச்செல்லப்படுகிறோம்
பிகு நானும் கொஞ்சம் தூள் பயன்படுத்துவேன். ஆனால் உளறிவிடுவேன் என எண்ணி மிக இறுக்கமாகவே இருப்பேன். அதை என் நண்பர்களும் சொல்லியிருக்கிறார்கள்
சந்திரசேகர்
அன்புள்ள ஜெ
நீங்கள் எழுதிய உள்ளத்தின்நாவுகள் அருமையான ஒரு திறப்பு. அதில் எல்லாமே புதிசு. ஆனால் எல்லாமே ஏற்கனவே தெரிந்ததுபோல கன்வின்ஸிங் ஆகவும் உள்ளது. ஏனென்றால் இதையெல்லாம் நானே கவனித்திருக்கிறேன். ஏன் நான் என்னை இப்படி ஃபிக்ஷனைஸ் செய்துகொள்கிறேன் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். சங்கராச்சாரியாரை மறுநாள் சொகுசாக வைத்து அவருக்கு நம்பிக்கையை அளித்திருந்தால் உலகம் மீது கருணையாக கொட்டியிருப்பார். அருள்வாக்கும் சொல்லியிருப்பார். பாவம் அதுவும் அவர் அல்ல
செந்தில்
அன்புள்ள ஜெயமோகன்,
தங்களது உள்ளத்தின் நாவுகள் படித்தேன். மனித மனத்தைக் குறித்த அற்புதமான அவதானிப்புகள் இவை. நான் என்னிடம் வைத்திருந்த சில கருதுகோள்களை தங்களின் வரிகளில் வாசித்த போது எனக்கு மெய்சிலிர்த்தது.
தற்போது வெளியான உச்சவழு தொகுதியில் இடம்பெற்றுள்ள மதம் கதை இதையே சொல்கிறது. இத்தொகுதிக்கு நான் மதிப்புரை எழுதுகையில் “மதம் கதை ஆழமான அர்த்தங்கள் நிரம்பியது. வாழ்க்கையின் இரட்டைகளில் சஞ்சரிக்காமல் ஒரு மனிதன் வாழ முடியாது என்பதை மிக சூட்சுமமாக உணர்த்தும் கதை இது. எளிமையாக தோற்றம் கொள்ளும் இக்கதை வாழ்வின் அடிப்படைகளை அசைக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தேன். அதன் நீட்சியாகவே தங்களின் உள்ளத்தின் நாவுகள் அமைந்துள்ளது.
அன்புடன்,
கேசவமணி