டான்ஸ் இந்தியா -கடிதம்

அன்புள்ள ஜெ

 

star

டான்ஸ் இந்தியா, டான்ஸ்!

டான்ஸ் இந்தியா டான்ஸ் ஒரு அழகிய கட்டுரை. முக்கியமாக அதன் நடை. உங்களுக்கென ஒரு நடை உண்டு என எண்ணவே முடியவில்லை. வெண்முரசின் தமிழ்நடை வேறு. கட்டுரைகளில் உள்ள நடை வேறு. இந்த நடை நுட்பமான அப்சர்வேஷன்களுடன் பலவகையான உள்வெட்டுகளுடன் நகைச்சுவையுடன் அமைந்திருந்தது. குறைவான சொற்களில் அந்தச்சூழலையே கொடுத்துவிட்டீர்கள். எனக்கும் இது பழகியதுதான். இதை நான் ஒரு நடிப்பு என்றே எடுத்துக்கொள்வேன். குறைந்தபட்சம் இந்த ஓட்டல்களைப்போல வீடுகளின் அறைகளை அமைப்பதற்கே லட்சக்கணக்காகச் செலவாகும். என் நண்பர் ஒருவர் 35 லட்சம் ரூ செலவில் ஃப்ளாட்டை இண்டீரியர் டெகரேசன் செய்தார். அது ஐந்து வருடங்கள்தான் இருந்தது. மறுபடியும் செய்யவேண்டும். அதாவது ஆண்டுக்கு ஏழு லட்சம். மாதம் அறுபதாயிரம் ரூபாய். நாளுக்கு இரண்டாயிரம் ரூபாய். சொந்தவீட்டில் தங்குவதற்கான வாடகை இது. அவரிடம்பேசிக்கொண்டிருந்தபோது வேடிக்கையாக இருந்தது. உடகார்ந்து கணக்குபோட்டோம். ஏஸிக்கான மின்சாரம் எல்லாம் கணக்குப்போட்டபோது நாளொன்றுக்கு நாலாயிரம் வந்தது.

ஆனால் இப்படித்தான் வாழ்க்கை இருக்கும். எல்லா காலகட்டத்திலும் நம்மைவிட மேலே இருப்பவர்களைப்போல வாழ்வதற்காகவே நாம் வாழ்க்கையின் பெரும்பகுதியில் உழைப்பையும் பணத்தையும் செலவிட்டுவருகிறோம்

 

எஸ்.மகாதேவன்

 

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் ‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ பதிவைப் படித்ததும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். சென்னையின் நட்சத்திர தங்கும் விடுதிகள் குறித்த துல்லியமான கட்டுரை.
கட்டுரையில் நீங்கள் சொல்வது போல நானும் ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து படித்து இந்த நகரத்துக்கு வந்தவன்தான். அந்தப் பின்னணியிலிருந்து விடுபட்டு சிறகடித்து எழுந்து விட்டதான பாவனையில் இருந்தவன்தான். உங்கள் எழுத்துக்களின் அறிமுகத்தின் பின்பே என்னுள் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் ஒரு பெரிய திறப்பு. பின்பு இன்றைய காந்தி. வாசிப்பு தொடர்கிறது.
நீங்கள் சொல்லும் நட்சத்திர விடுதிகளில் உள்ள இசையோடு கூடிய மதுக் கூடங்களில் நள்ளிரவில் இளம் பெண்கள் குடித்து விட்டு நிலைகுலைந்து விழுவதைப் பார்த்திருக்கிறேன். இவர்களையெல்லாம் வீட்டில் யாரும் தேட மாட்டார்களா எனத்தோன்றும். உண்மையில் அவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கே வேலைக்கு வந்தவர்கள், என்னை போலவே. ஆண்கள் குடித்துவிட்டு விழ முழு உரிமை உள்ள நாட்டில் கண்டிப்பாக பெண்களுக்கும் அந்த உரிமை உண்டு தானே. ஆனால் இந்தக் கடிதம் அது குறித்ததல்ல.
நீங்கள் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள, உடம்பெங்கும் தூண்டிலாக, யோகியைப்போல எண்ணம் வேறேதுமில்லாமல், அமர்ந்திருக்கும் இளந்தொழிலதிபர்கள். சட்டென வெற்றி சிறுகதையின் நமச்சிவாயத்தை நினைத்துக்கொண்டேன். அந்தச்சிறுகதை குறித்த விவாதங்களின் போதே எழுத வேண்டுமென நினைத்து ஏதோ
தயக்கத்தால் தவிர்த்துவிட்டேன். எனது வாசிப்பின் படி அந்த வெற்றி நமச்சிவாயத்தினுடையதே. கிளப்பில் நமச்சிவாயத்தின் தூண்டிலில் சிக்கிக்கொண்ட ரங்கப்பர் உண்மையில் அந்த பந்தயத்தினால் அடைந்தது ஒன்றும் புதிதல்ல. பலமுறை இது போன்ற பந்தயங்களை அவர் வென்றிருக்கிறார். ஆனால் நமச்சிவாயத்துக்கு அது வறண்ட நிலத்தில் வாராது வந்த மழை. விலை மதிப்பில்லாதது. கதை முழுக்க நமச்சிவாயம் அந்த மழைக்காக தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இளக்கிக்கொள்கிறார். உள்ளூர ஆனந்தம் கொள்கிறார். இல்லையெனில் தன் மனைவி வேறொருவனுடன் இருந்த செய்தியை அவரால் மற்றவர்களுடன் இயல்பாக பகிர்ந்து கொள்ள முடியுமா, போதையில் இருந்தாலும் கூட, தனக்கு தள்ளாத வயதானாலும் கூட. ரங்கப்பரும் லதாவும் இணைந்தார்களா என்பது முக்கியமல்ல. ஆனால் தன் கணவன் கட்டிய பந்தயம் குறித்து ரங்கப்பர் மூலம் அறிந்த லதா உண்மையிலேயே உள்ளுக்குள் இறந்திருப்பாள். அந்த உண்மை தந்த விலக்கமும் ஞானமுமே அவளின் முகத்தில் வரும் பொலிவும் அழகும். அது வாழ்க்கையின் வெறுமையை, உயிரின் தனிமையை அவள் உணர்ந்து கொண்ட தருணம். தன் மரணத்தருவாயில் அதுநாள் வரை சுமந்த குற்ற உணர்ச்சியையும் இறக்கி வைத்து விட்டு அவள் முழுமையடைகிறாள்.

அன்புடன்
மாலையப்பன் சரவணன்

முந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11
அடுத்த கட்டுரைஆழமற்ற நதி [சிறுகதை]