அன்புள்ள ஜெ
தங்களுடைய ஈராறு கால்கொண்டெழும் புரவி படித்து ஒரு ஐந்து நாட்களுக்கு சரியான துக்கம் இல்லை ஆசான்.சொற்களின் மேலுள்ள பொருள் எனும் எடை இழக்கும் தோறும் அவை சித்தம் முழுதுவதும் ஊறிப் பரவுகின்றன,அவை மறுபடியும் சொற்கள் ஆகும் பொழுது அவற்றின் பொருண்மை கூடி நிலைப்பு கொள்கின்றன.இந்த கடிதம் சித்தத்தின் அலைவு குறைவதற்காக.
பிள்ளை ஞானமுத்தனிடம் கண்ணைதொறந்து பார்க்க சொல்லுகிறார்,ஒரு கணத்தில் ஞானமுத்தன் எல்லாவற்றையும் கண்டு கொள்கிறான்.பிள்ளை காண்பித்தது பச்சை மர நதிகளை ஞானமுத்தன் உணர்ந்ததோ புடவி எங்கும் நிறைந்துள்ள ஒருமையை;எப்போதும் விழித்திருப்பவனுக்கு அறியமுடியாமையின் ஒரு துணுக்கு கண்ணுக்குப்படுகிறது.ஞானமுத்தன் அன்றிரவு சாராயம் குடிக்கிறான்;எதிர்பாராமல் முடிவிலியை உணர்பவனின் சித்தம் நிலையழிந்துவிடுகிறது.அதை அவன் துணுக்கு என்று உணராமல் அவன் நீர் நோட்டக்காரணகிறான்.
சச்சிதானந்தப்பிள்ளையை ஒரு நாள் வெறும் தற்செயலாகத்தான் சாஸ்தான் குட்டிப்பிள்ளை சந்திக்கிறார்;ஒரு கணம் நிகழும் மின்னலில் முடிவிலியெனும் ஆலமரத்தின் விழுதுகள்தான் கண்ணுக்குப்படுகின்றன சிலர் அதை நூல் எனப்பற்றி நுனியேறுகிறார் பலர் அதை நாகம் என மால் பற்றுகின்றனர்;பிள்ளை சச்சிதானந்தப்பிள்ளையிடமிருந்து சித்தமருத்துவத்தையும்,சைவசித்தாந்தையும் கற்றுக்கொள்கிறார்.
பிள்ளைக்கு திருமணம் முடிந்து சில வருடங்களில் நாகம்மை இறந்துவிடுகிறாள்;இழப்பு அதற்கு முந்தின கணம் வரைக்கும் கற்றுகொண்டவை மற்றும் பெற்றுக்கொண்டவை பற்றி கேள்வியெழுப்புகிறது,இழப்பே தீவிரமான மெய்மையை நோக்கி நகர்த்துகிறது,இழப்பே அறிதலின் தொடக்கம்.
பிள்ளை நாடாரிடம் தன்னுடைய அகங்காரத்தை எழுப்பி தோற்று மாறச்சொல்லின் எடையை உணர்கிறார்;தேடலுடன் கூடிய அகங்காரம் அழகியது,சில இடங்களில் நெகிழ்ந்தும் சில இடங்களில் இருகியிம் இருக்கும்.பிள்ளை நாடாரிடமிருந்து வேம்புச்சுள்ளி பிடிக்க கற்றுக்கொள்கிறார்.
ஒரு நள்ளிரவில் தேங்காய் விழப்போவதை உணர்ந்து விலகுகிறார் மண்டை விலகிய இடத்தில் தேங்காய் விழுந்து தெறிக்கிறது,அந்த கணத்தில் அவர் வேம்புச்சுள்ளியுடன் ஒன்றிவிடுகிறார்;தேடும்தோறும் புலன்களுக்கு அப்பாற்பட்ட உள்ளுணர்வு கூர்மை கொள்கிறது.அறிதல் ஒரு கணத்தில்தான் நிகழ்கிறது அந்த கணத்தில் அனைத்து அறிவுகளுக்கும் உள்ள இடைவெளி உள்ளுணர்வால் நிரப்பபட்டு ஒற்றை அறிதளாகிறது.அதன் பின் அவர் அருகிலிருந்த பாண்டன் எனும் நாயின் உணர்வை புரிந்துகொள்கிறார்;அறிதல் “நான்” எனும் உணர்வை பேருருக்கொள்ளவைக்கிறது,அவருக்கும் அந்த நாயுக்கும் உள்ள திரை இல்லாமல் போகிறது.ஒரு திரை அகன்ற பின் மறு திரையை கண்டடைகிறது அகங்காரம்.
நாடார் பிள்ளையிடம் “இஞ்ச பாரும் வே. ஒரோ பிராயத்துக்கும் உலகம் ஓரோண்ணாக்கும்.ஒருவயசுக் குட்டிக்கு உள்ள உலகமில்லே ரெண்டு வயசுக் குட்டிக்கு.கரஞ்சு விளிச்சா கஞ்சி வந்துடுமுண்ணு குட்டிக நெனைக்கும், நீரு நெனைக்க முடியுமா வேய் ? உம்ம உலகம் மாறியாச்சு. நடந்து வந்திட்டேரு.. இனி நீரு பொறகால போக முடியாது பாத்துக்கிடும்”;முடிவிலி எனும் விசும்பிலிருந்து சொட்டும் மழைத்துளியே அறிவு;மழைத்துளியை பார்த்தபின் வானத்தை பார்க்காமல் பின்செல்ல இயலாது.வேப்பங்குச்சியாலையே நீராலான உலகத்தை அறிய முற்படுகிறார் பிள்ளை.
ஒரு நாள் பொற்றையடி மலை மீது சடைமுடிச்சாமியாரை பிள்ளை சந்திக்கிறார்,சாமி உப்பு கேட்கிறார்,பிள்ளை இல்லை என்கிறார் பிறகு வியர்வையை துடைக்கும்போது உப்பை உணர்கிறார்;அதன் பின் பிள்ளை தன்னிலுள்ள குச்சியை உணர்கிறார்;எல்லாத்தையும் கைவிட்டு தவம் புரிகிறார்.
சாமி ஒரு மாம்பழத்தை பிள்ளைக்கு கொடுக்கிறார் பிள்ளை வாங்கிய அக்கணமே அதன் ருசியை உணர்கிறார். சாமி சொல்கிறார் “ருசிச்சது உம்ம பசி அய்யா”;நீரனே அறிவதெல்லாம் விடாயே,தேடுதலே மெய்மையை அனைத்திலும் காண்கிறது.
சாமி அங்கு ஒரு மாங்கொட்டையை விட்டுச்செல்கிறார்;துவர்ப்பு,புளிப்பு,இனிப்பு அனைத்தும் கனிந்து சுவைத்தபின் எஞ்சுவது “நான்” எனும் விழைவுகொண்ட மாங்கொட்டை அதை ஈரத்தில் நட்டி அந்த விழைவுக்கு உயிரூட்டுகிறார்.பல வருடங்களுக்கும் பிறகும் பூவும் பிஞ்சும் விடாமல் மலட்டு பேரழகுடன் நின்றது மாமரம்;உச்சியில் ஒங்க வேண்டும் ஞானம் ஆனால் வெறும் விழைவு மட்டுங்கொண்டு வளர்ந்த மாமரத்தை பார்த்து வெறுமையை உணர்கிறார்.
பிள்ளை ஞானமுத்தன் வீட்டுக்கு சென்று அங்கு தங்குகிறார்.ஞானமுத்தன் நீரில போகற வித்து மாதிரி நீரோட்டம் எனும் ஒரு வழியை மட்டும் பின்பற்றி மகிழ்ச்சியாக இருக்கிறார். ”எதிரே கவிழ்த்துப்போட்ட பழைய உரலொன்றில் அமர்ந்தவனாக இருந்தும் இல்லையென வான்நோக்கி அமர்ந்திருந்த ஞானமுத்தனைக் கண்டார்”;ஞானமுத்தன் அகங்காரமற்ற வழியில் மெய்மையை அடைகிறார்.
பிள்ளை இறக்கும் தருவாயில் ஜென்ஸி தண்ணீர் குடுக்கிறாள் அவள் மென் முலை மெத்தென்று தொட்டு செல்கிறது;பிள்ளை ஜென்ஸி வழியாக தன்னோட அன்னையை,அன்னை வழியாக நாகம்மையை கண்டடைந்து இறுதி மெய்மையை அடைகிறார்.பிள்ளை தன் வாழ் முழுவதும் நாகம்மை எனும் அன்னையின் இழப்பை ஈடுசெய்யும் மெய்மையை தான் தேடினார் அதை அவர் ஜென்ஸி வழியாக அடைந்தார்,மாமரமும் கனி காய்த்தாது.
ஞானமுத்தன் மற்றும் பிள்ளை இருவருமே மெய்மையை அடைகிறார்கள் ஆனால் அடையும் முறை மாறுபடுகிறது.நான் பிள்ளையுடன் அணுக்கமாக உணர்கிறேன்;அகங்காரத்துடன் கூடிய தேடுதல்.அம்புகள் தொட முடியாத இலக்குகளை அறிவதேற்க்கே!விழைவே இலக்குகளை வகுக்கிறது,அகங்காரமே அறிய முடியாத இலக்குகளை குறியாக்குகிறது;நிறைவடைதல் இல்லை வாழ்க்கை,நிறைவை நோக்கி நகர்தலே வாழ்க்கை எனக்கொள்கிறேன்.என் மரத்தில் கனிகள் இல்லாமல் போகலாம் ஆனால் என் தோட்டத்தில் பூக்கள் பூக்கின்றன.
ஈராறு கால்கொண்டெழும் புரவி நிலத்தில் ஓடுவதில்லை,வானத்தில் பறக்கின்றன,நில்லாமல் பறத்தலுக்கே அதன் கால்கள்.
இப்படிக்கு உங்கள் மாணவன்
தி.ஜினுராஜ்.
ஈராறுகால்கொண்டெழும் புரவி- விமர்சனம்
கால்கொண்டெழுவது… கடிதம்
புரவி-கடிதம்