மத்தகம்:மேலும் கடிதங்கள்

அன்புள்ள சேட்டா, வணக்கம். மத்தகம் கதை படித்தேன். யானை பற்றிய நுன் விவரிப்புகள் விஷ்னுபுரத்தில் வரும் யானை விவரிப்பையும், ஆசானும், மற்ற இருவரும் வெள்ளத்தில் யானையை தேடி ஓடும் பகுதி, காடு நாவலில் கிரிதரன் மருந்து வாங்க மலையில் இருந்து கீழே வருதல், மற்றும் அதில் வரும் பல காட்சிகளையும் அப்பொது அடைந்த அனுபவத்தையும் ஆழ் மனதில் இருந்து மீட்டு எடுத்து விவரிக்க முடியாத ஒரு மனோநிலைக்கு கொண்டு சென்றது. ஒருவிதமான பரவசம் என்றும் சொல்லலாம். உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும். எனக்கு ஒரு சந்தேகம், இந்த அருமையான கதையில், மனதை தொடும் மனித-விலங்கு அன்பில், நுன் உணர்வு பரிமாற்றத்தில் ஒரு தாசியின் உடல் பற்றிய விவரனைகளும், அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் ரக உறவு மீறல்களும் இந்தக் கதையின் தளத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் தினிக்கப் பட்டது போலுள்ளது. விஷ்னுபுரத்திலோ, காட்டிலோ அதற்கு ஒரு நியாயம் இருந்தது, அதன் மூலம் மனித மன சலனங்களின், காதலின், காமத்தின் அதன் வழி உண்டாகும் குற்ற உணர்ச்சியின், ஞான தேடலின் மூலகாரணியாக அது இருந்தது. பிங்கலனின் வழியாக நான் என்னையே கண்டேன். எல்லா கதையிலும் இந்த மாதிரி எதையாவது கோர்த்து விட்டால் அது தான் நவீன இலக்கியம் என்று எங்கள் அருமை ஜெயமோகனும் நினைக்கிறாரா? நீங்கள் “நீ என்னைப் புணரும் போது” என்று அப்பப்ப சேத்துக்கிட்டா, பரபரப்பாக பேசப்படும் பெண்ணியவாத கவிஞராயிரலாம் என்று “முலை கவிதாயினிகளை” கிண்டலடித்தது தான் ஞாபகம் வருகிறது. நான் 15 வயதில் பாலகுமாரனின் மெர்குரி பூக்கள் நாவலை கையில் எடுத்த போது, என் தந்தை பாலகுமாரன் நாவல், பாக்யராஜ் படம் பாக்குறதுக்கு எல்லாம் இன்னும் வயசு வரட்டும்பா என்று சொன்னதையே, இன்று ஒரு 15 வயது, ஆன்மிக தேடல் உள்ள பையனுக்கு இந்த கதைக்கும் சொல்ல வேண்டி வருமோ என்று அஞ்சுகிறேன். என் விருப்பம் உங்களை இளம் வயதிலேயே படிக்க ஆரம்பித்தால் இன்னும் நிறைய, நுணுக்கமாக வாழ்வை புரிந்து கொண்டு நிறைவாக வாழலாம் என்பது. நீங்கள் “ஓம், அவ்வாறே ஆகுக” என்று மொழிந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.
6:27 PM அன்புடன் தம்பி, ப்ரகாஷ்

அன்புள்ள பிரகாஷ்

மத்தகம் கதையிலும் சரி பிற கதைகளிலும் சரி ‘சும்மா’ எழுதிச்சேர்க்கபப்ட்ட எதுவுமே இல்லை என்றுதான் சொல்வேன். என்னைப்பொறுத்தவரை எழுத்து என்பது சமையல் அல்ல. ஆகவே நான் போதபூர்வமாக எதையுமே சேர்ப்பதில்லை. அப்படிச்சேர்க்குமெ ழுத்து செயற்கையானது என்பது என் எண்ணம். எனுடைய எழுத்துமுறை தன்னிச்சையானது. ஒரு மையப்படிமம் அல்லது ஒரு மொழிச்சுழிப்பு என்னைத்தூண்டும்போது நான் எதுத ஆரம்பிக்கிறேன். அப்படியே எழுதித்தள்ளிவிடுவேன். கீழே கொட்டிய நீர் அதுவாகவே ஒரு வடிவத்தை எடுக்கிறதே அதுபோல. பெரும்பாலும் நான் அவற்றை சரிசெய்வதும் இல்லை. என் மனைவியும் வசந்தகுமாரும் சற்று சீர்ப்படுத்துவார்கள். ஆனால் இப்படி வரும் கதைகள் அனைத்திலுமே ஒரு சரியான வடிவ அமைதி இருப்பதை நான் பிறகு கண்டிருக்கிறேன். இப்படி ஒரே வீச்சாக வராத எழுத்துக்களில் அந்த வடிவ அமைதி நிகழ்வதில்லை. அந்தக்கதைகள்தான் திருதி தராமல் இருக்கும். அவற்றை நான் அச்சுக்கே கொடுப்பதில்லை.

மத்தகம் கதையை நீங்கள் யானையின் கதை என்ற ஒரே சரடில் வாசித்தமையால் வந்த கோணம் அது. அதை அதிகாரத்தின், அதிகாரக் கைமாற்றத்தின் கதை என்று எடுத்துக்கொண்டால் நீங்கள் சொன்ன எல்லா பகுதிகளும் மையக்கதையின் கருவுக்கு பங்களிப்பாற்றுவதைக் காணமுடியும். நடைமுறையில் உள்ள இன்னொரு விஷயம், யானைப்பாகன்களின் வாழ்க்கை பெரும்பாலும் மிருக இச்சைகளினால் மட்டுமே ஆனது. இது நான் அவதானித்தது, சரியாக விளக்க முடியாத ஒன்று இது. அவர்கள் மரணத்தின் விளிம்பில் வாழ்வதனால் இருக்கலாம்
ஜெ

அன்புள்ள சேட்டா,
என் கேள்விக்கு உங்கள் Justification  என்னவாக இருக்குமென்று ஓரளவு ஊகித்து, ஆர்வமாக காத்திருந்தேன். வழக்கம் போல் ‘வாம்மா, மின்னல்!’ என்று வந்த பதிலுக்கு அநேக நன்றிகள். எனக்கே அதை ஒரு “யானை கதை” மாதிரி படித்து எழுதி விட்டோமோ என்று ஐயம் இருந்தது, அதை கண்ணாடி மாதிரி துல்லியமாக ப்ரதிபலித்து விட்டீர்கள். 25, 26 வயதிற்கு மேற்பட்டவர்க்கு இந்த கதையில் எந்த குற்றமும் இல்லை, மிக அருமையான கதை. அஜிதன் மாதிரி புத்திசாலியான பதின்பருவ பையன்களுக்கும் உங்கள் எழுத்து எந்தவித திரிபுகளையும் மனதில் உண்டாக்காமல் போய்ச் சேர்ந்து, மேலும் சிந்திக்க தூண்ட வேண்டும் என்கிற ஆதங்கமேயன்றி, குற்றமேதும் கூறவில்லை. பெரும்பாலும் இந்த வயது சிந்தனையாளர்களுக்கு சின்ன விஷயங்கள் பெரிய தூண்டுதலாக மாறும் – நீங்கள் அறிந்ததே! மற்றும், உங்கள் எழுத்தின் நேர்மை, தானாய் வடிவெடுக்கும் விதம் இரண்டுமே உங்களை படிப்பவர்களுக்கு தெரியும், அதனாலேயே மேலும், மேலும் படித்து விவாதிக்கிறோம்.
மறுபடியும் நன்றிகள்.
அன்புள்ள தம்பி
பிரகாஷ்

அன்புள்ள பிரகாஷ்

புத்தகம் வாசிக்கும் பழக்கம் வரை வந்துவிட்ட பதின்பருவ பையனுக்கு இதையெல்லாம் புரிந்துகொள்ளவும் திராணி இருக்கும்– அஜிதனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. மேலும் அஜிதனைப்போன்ற பையன்களின் வாழ்க்கையில் இப்போதெல்லாம் எட்டாம் வகுப்பிலேயே  தீவிரமான பாலியல் படங்கள்- எழுத்துக்களை சக மாணவர்களே காட்டிவிடுகிறார்கள். ‘சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை’ என்பதுபோல பையன்களைப்பற்றியும் எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.
ஜெ
***
சகோதரர் ஜெயமோகன் !

தங்களது “மத்தகம்’ குறுநாவல் தொடர்ந்து ஒரே வீச்சில் படித்து முடித்தேன்.

படிக்கும்போது ஏற்பட்ட வாசிப்பு அனுபவம் பதற்றமான மனநிலையை ஏற்படுத்தியது.

பாகன்களோடு பாகன்களாக நெருங்கி இருந்து நிகழ்பவைகளை உணர்ந்தது போல் இருந்தது. குறுநாவலை வாசித்த பின் “கேசவன்” மனம் முழுமையும் நிறைந்திருந்தது. படிக்கும்போது பல கலவையான எண்ணங்களை தூண்டிவிட்ட அனுபவம் முடிவில் வெறுமையான மனநிலையை ஏற்படுத்தியது.

நீங்கள் ஒரே மூச்சில் இதை எழுதி முடித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இந்த படைப்புக்காக முன் தயாரிப்பு எவ்வளவு காலம் செய்தீர்கள் சார்? இக்கதை புனைவுதானா? அல்லது நிஜமா? அல்லது பாகன்களோடு நீங்கள் பேசி நீங்கள் கேட்ட அனுபவத்தை படைத்தீர்களா? இப்படி எத்தனையோ கேள்விகள் தொடர்ந்து மனதில் எழுகின்றன.

உங்களின் “மத்தகம்” ஆக்கம் தொடர்ந்து நினைவுகளைத் தீண்டி துரத்திக் கொண்டேயிருக்கிறது.

தங்களது ஒவ்வொரு படைப்பும் ஏற்படுத்தும் அதிர்வுகள், அனுபவங்கள் அலாதியானவை. தினமும்(!), தொடர்ந்து தங்களை இணையதளம் மூலமாக படிப்பதினால் தங்களை எனக்கு மிக நெருக்கமானவராகவே உணர்கிறேன்.

இம்முறை மதுரை 3வது புத்தககண்காட்சியில் வழக்கம் போல் “தமிழினி” ஸ்டாலில் உங்களைத் தேடிய பொழுது, தாங்கள் இல்லை.

சினிமா இணையபக்கங்களில் தொடர்ந்து “நான் கடவுள்” பொங்கலுக்கு வெளிவரும் என்ற செய்திகள் வந்தவன்ணம் உள்ளது. மற்றொரு முறை “அகண்ட திரையில்” தங்களின் வசனத்தில் வெளிவர இருக்கும் “அஹம் பிரஹ்மாஸ்மி”, வேறு விதமான அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதி. ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தங்களிடம் கேட்பதற்கு கேள்விகள் பல என்னிடம் உள்ளன. அடுத்த மின் மடலில் எழுதுகிறேன்.

தொடர்ந்து வரும் தங்கள் “இலக்கியப் படைப்புக்களுக்கு” எனது வாழ்த்துக்கள் சார் !

பேரன்புடன்

இரா. அனந்த்
அன்புள்ள ஆனந்த்
நன்றி. மத்தகம் குறுநாவலுக்கான விதை என் இளமைபப்ருவத்தில் நான் கண்ட அனுபவங்களில் உள்ளது. யானைப்பாகன்களின் வாழ்க்கை. அவர்களிடையே உள்ள குரு-சீட உறவு. அதற்குள் உள்ள வன்முறை. இதற்கிணையான உறவை இப்போது சினிமா ஸ்டண்ட் மேன்களிடம் பார்க்கிறேன். மனித மனம் அதிகாரத்தை எதிர்கொள்ளும் விதம் குறித்து விஷ்ணுபுரம் முதல் மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிரேன். இதுவும் அதில் ஒன்று
அன்புடன் ஜெ

**
அன்புள்ள ஜெ

மத்தகம் குறுநாவலை அச்சு எடுத்து நிதானமாகப் படித்தேன். ஊமைச்செந்நாய் படித்தபோது அதுதான் உங்களுடைய மிகச்சிறந்த கதை என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது மத்தகம் அதைத்தாண்டிவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்டது. காமம் வன்முறை இரண்டையும் இரு கைகளாக வைத்திருக்கிறது அதிகாரம் இல்லையா? ஒவ்வொருவரும் இன்னொருவரை அழித்து தங்கள் இடத்தை அடைகிறார்கள். வழக்கமாக தங்கள் கதைகளில் மன ஓட்டங்கள் மிகுந்திருக்கும். இந்தக்கதைகளில் நேரடியான விறுவிறுப்பான சம்பவங்கள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக வருகின்றன. அவை எல்லாம் சேர்ந்து ஒரு நல்ல திரில்லர் கதையைப் படித்த வேகத்தை அளிக்கின்றன. அர்த்தங்கள் எல்லாம் அதன்பின்னர்தான் வருகின்றன. ஒரு போதை, கிறுகிறுப்பு. எங்கேயே போய்விட்டு வந்தது போல இருந்தது. என் மனைவி நாமே யானையாக மாறிவிட்டதுபோல இருக்கிறது என்று சொன்னாள். வாழ்த்துக்கள்
சுதாகர் திருமுருகன்

மத்தகம் [குறுநாவல்] அத் 1,2 http://jeyamohan.in/?p=927

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைசாங்கிய யோகம் (54 – 59) : செயலே விடுதலை